சி.வி.ஸ்ரீதர் 1967ல் இயக்கிய இந்திப்படம் நயா ரோஷ்னி. புதிய வெளிச்சம் என்று பொருள் வரும். இதன் மூலவடிவம் ஒரு வங்க நாவல். நிஹார் ரஞ்சன் குப்தா எழுதியது. நாடகங்கள், நாவல்கள் எழுதிக்குவித்த வங்காள வணிக எழுத்தாளர்
நயா ரோஷ்னி வங்காள மொழியிலும் சினிமாவாக வெளிவந்தது.மலையாளத்தில் இந்நாவல் அந்நாளில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒரு வார இதழில் தொடராக வெளிவந்தது.
அம்மாவுக்கு அந்நாவல் கொஞ்சம் பிடிக்கும். முழுக்கமுழுக்க பெண்களின் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை விவரிக்கும் காகிதக்கூழ் இலக்கியம். பிரைட் ஆண்ட் பிரஜுடிஸ், சென்ஸ் ஆண்ட் சென்ஸிபிலிடி வகையான நாவல்கள் அன்றெல்லாம் உலகமெங்கும் புகழ்பெற்றவை.
அந்நாவலை வாசு மேனன் என்ற மலையாளி இந்தியில் படமாக எடுத்தார். பாம்பே ரவி இசையில் எல்லா பாடல்களுமே பெருவெற்றி. படமும் ஒரு வெற்றிப்படம்.
அதன் தமிழாக்கம் பூவும் பொட்டும். வாசு மேனனே எடுத்தார். தாதா மிராஸி இயக்குநர். இந்தியில் நடிப்பு இயல்பாக இருந்தது. தமிழில் நடித்துக் குவித்துவிட்டனர். ஆனால் கோவர்தனம் இசையில் ‘நாதஸ்வர ஓசையிலே’ ’எண்ணம் போல கண்ணன் வந்தான்’ போன்ற பாடல்கள் புகழ்பெற்றவை.
இப்பாடலில் ரஃபி சாகிபின் குரல் உருகி வழிகிறது. காதல் தவிப்பு எல்லாமே மிகமிக மென்மையாக ஒழுகிச்செல்கின்றன. மாபெரும் கஸல் மரபில் இருந்து உருவான பாடல். ரவி எப்போதுமே கஸலில் இருந்து முளைத்தெழுபவர்.