பிறிதொரு உலகம் – தன்யா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஏழாம் உலகம் படித்தேன். உருப்படிகள் உலகத்தை விட பண்டாரத்தின் உலகமே திகைக்க வைப்பதாக இருந்தது. அவர் செய்யும் செயலில் எந்த குற்றமும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. ஏன், அவர் குடும்பமோ, சொந்தங்களோ நண்பர்களோ யாருக்குமே அது தவறாக தெரியவில்லை. தொழில் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள். எப்படியோ பணம் சம்பாதிக்கிறான் என்றே எண்ணுகிறார்கள். ஆனால், ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை வைத்து ஏளனமாக அல்லது புண்படும்படி பேசுகிறார்கள். அதில் எந்த அறவுணர்வும் இல்லை. ஒருவருக்கொருவர் நோட்டம் விட்டுக்கொண்டு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்றே பார்க்கிறார்கள். அவருடைய குழந்தைகளும் கூட. அவரை பார்த்து வேறு என்ன கற்றுக்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது.

சர்வ சாதாரணமாக ஒரு பச்சிளம் குழந்தையை வெயிலில் போட்டு பணம் பார்க்கும் பண்டாரம், கடத்திவரப்பட்டு அமிலம் ஊற்றி உருமாற்றப்பட்ட குழந்தைகளை கண்டு மட்டும் கொஞ்சம் அதிகமாக திகைக்கிறார். ஏதோ ஒன்று அவரை துரத்துவதாக தோன்றுகிறது. ஆனால் அதையும் கூட,’ ரிஸ்க்கு ஜாஸ்தி’ என்று யோசிப்பதாக கூறி பின் ஒருவாறு அதற்கும் சரி என்றே சொல்கிறார். இது ஒருவகையில், மாற்றுத் திறனாளிகளை வேறுபடுத்திப்பார்க்கும் பொது மனநிலையை சிந்திக்க வைப்பதாக இருந்தது. அவர்களுக்கு ஆத்மா இல்லை என்று கூறுவதாக வரும் இடம், மனதை எவ்வளவு எளிமையாக ஏமாற்றிக்கொள்ளலாம் என்று தோன்ற வைத்தது. எத்தகைய தவறுக்கும் இப்படி ஒரு காரணம் கண்டுபிடிக்கலாம்.

இதற்கு மாறாக ‘உருப்படிகள்’ சிறு சிறு மகிழ்ச்சிகளை தேடிக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் உறவுகளை தேடிக் கொள்கிறார்கள். எந்த பெரிய துன்பமானாலும் அது நீண்ட காலம் நீடிப்பதில்லை அவர்களுக்கு. மாங்காடி சாமியின் இந்த வரிகள் நிச்சயமாக ஏதேனும் ஒரு கணமாவது பெண்களால் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

பெற்ற தாய் உறவோ
பெண்ணுக்கு இல்லையடி
உற்ற தந்தை உறவும்
உதவாமப் போகுமடீ
கற்ற வித்தையெல்லாம்
காசுக்கு ஆகாதடீ
வற்றாத கண்ணீரல்லோ
வாய்ச்ச துணையடியோ

ஆனால், கோயில்களுக்கு வரும் மக்களை அவர்கள் கிண்டல் செய்கிறார்கள். வெவ்வேறு வகையில் சீண்டிப் பார்க்கிறார்கள். பொதுவாக அனைவருமே இதை அனுபவித்திருப்போம். அவர்களுக்கு பணம் தரும் சமயம் பெரும் கொடையாளியாக ஒரு கணம் நம் மனம் நினைக்கும். ஆனால் ஒருவேளை பணம் அளிக்கவில்லை என்றால் வசைபாடுவதோ ஏதோ ஒன்று நடக்கும். ஏன்? ஒருவேளை அவர்கள் வியக்க அல்லது அந்த நிலையில் இருந்து மாற விரும்பும் எதுவும் ‘இந்த’ உலகத்தில் அவர்களுக்கு தெரியவில்லை…அல்லது அவர்களுக்கு அது வழங்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

இந்த நாவலுக்கு நன்றி.

அன்புடன்,
தன்யா.

அன்புள்ள தன்யா

ஏழாம் உலகம் மின்னூல் வாங்க

ஏழாம் உலகம் வாங்க

The Abyss வாங்க

வாசிப்புக்கு நன்றி

நம் அன்றாட உலகில் வைத்து நாம் அடிப்படைகளை விவாதிக்க முடியாது. அவை எப்படியோ இயல்பாக்கம் செய்யப்பட்டிருக்கும்.Normalizing என்பது நம் வாழ்வில் ஒவ்வொரு கணமும் நடைபெறுவது. அநீதிகள், கொடுமைகள், ஒவ்வாமைகள் எல்லாமே மழுங்கிவிடுகின்றன. ஆகவேதான் கலை எப்போதுமே அன்றாடத்துக்கு அப்பாலுள்ள வாழ்க்கையை நோக்கிச் செல்கிறது. அது புராணமோ, அறிவியல் புனைவோ, அறியப்படாத வாழ்க்கைக் களமோ…

ஏழாம் உலகம் பேசும் பிரச்சினைகள் நம் உலகைச் சேர்ந்தவைதான். அவர்களின் வாழ்வல்ல அது, நம் வாழ்வுதான். நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைமறைஞானத்தின் கதைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைக.சீ.சிவக்குமார்