யோகம், வகுப்புகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

தங்களது வலைப்பூவில் யோகா முகாம் பற்றிய அறிவிப்பு கண்டு இன்று முன்பதிவு செய்ய விவரங்கள் அனுப்பலாம் என்று அறிவிப்பை மீண்டும் தேடினேன், ஆனால் அந்த அறிவிப்பையே என்னால் பார்க்க முடியவில்லை. அதற்குள் அணைத்து இடங்களும் முன்பதிவு ஆகி விட்டதா என்ன அல்லது வேறேதும் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டு விட்டதா. தாங்கள் இது பற்றி பதிலோ அல்லது ஒரு அறிவிப்போ தெறிவிக்க முடியுமா.

இந்த முகாமிற்கு முன் பதிவு செய்ய முடியாதது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஏனெனில் நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டேன். தாங்கள் வெகு சீக்கிரம் இதே யோக முகாம் முதல் பகுதியை மீண்டும் அறிவிக்க முடியுமா.

அன்புடன்

சிவசுப்ரமணியம்

*

அன்புள்ள சிவசுப்ரமணியம்,

மன்னிக்கவும், இந்த முறை இடம் நிறைந்துவிட்டது. அடுத்தமுறை பார்க்கலாம்

யோகம், தியானம் முதலிய பயிற்சிகளில் நாங்கள் பங்கேற்பவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான நேரடி உறவையும் முக்கியமாக நினைப்பதனால் 30 பேர் வரைக்குமே அனுமதிக்கிறோம். இடங்கள் பெரும்பாலும் இரண்டு நாட்களில் நிறைந்துவிடுகின்றன.ஆகவே அறிவிப்பைக் கண்டதுமே இடம் முன்னரே பதிவுசெய்வது அவசியம்.
ஜெ

அன்புள்ள ஜெ,

நீங்கள் அளிக்கும் பயிற்சிகளில் கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை கேட்பதற்கான பயிற்சியை ஏன் அளிக்கக்கூடாது? இந்திய கலைகளை ரசிப்பதை கற்றுக்கொள்வதுதான் கடினமாக உள்ளது. கதகளி ரசிப்பதற்கான பயிற்சியையும் அளிக்கலாம்.

நா. முருகேசன்

*

அன்புள்ள முருகேசன்,

அப்படி பல பயிற்சிகளை அளிக்கலாம். இசை சார்ந்த அறிமுகம் என்பது தொடர்ச்சியாக சில அரங்குகள் வழியாகவே நிகழ முடியும். ஆர்வமுள்ளவர் எவ்வளவுபேர் இருப்பார்கள் என தெரியவில்லை. சரியான ஆசிரியர்களையும் கண்டடையவேண்டும்.

முக்கியமாக சிலவற்றை அறிமுகம் செய்யலாமென நினைக்கிறேன். ஒன்று, ஆயுர்வேதம். ஆயுர்வேதம் என்றால் என்ன, மரபான நாட்டுமருத்துவத்திற்கும் அதற்கும் உள்ள வேறுபாடு என்ன, அது எதை குணப்படுத்தும் எதை குணப்படுத்தாது, எதுவரை நம்பலாம் என பொதுவாக மக்களுக்கு தெரிவதில்லை. அதற்கு ஒரு வகுப்பு நடத்த எண்ணமுண்டு.

நம் மக்களுக்கு இந்தியச் சட்டங்கள் பற்றிய அறிவே இல்லை. திரைப்படங்கள் உள்ளிட்ட கலைவடிவங்களில் காட்டப்படும் சட்டநடவடிக்கைகள் மிகப்பிழையானவை. ஒரு சாமானியக் குடிமகனுக்கு தேவையான சிவில் கிரிமினல் சட்டங்களை எளிமையாக அறிமுகம் செய்யலாமென்று தோன்றுகிறது. இது சிந்திப்பவர் அனைவருக்கும் உதவுவது.

இரண்டுக்கும் ஆசிரியர்கள் இருப்பதனால் வகுப்புகளை அமைக்கலாமென்பது திட்டம்

ஜெ

*

முந்தைய கட்டுரைஜூலை மாத கவிதைகள் இதழ்
அடுத்த கட்டுரைஎன்.கே.ரகுநாதன்