நமக்கிங்கே தொழில் காதல் செய்தல்- பெருந்தேவி

பெருந்தேன் நட்பு வாங்க

(அருண்மொழி நங்கை எழுதி விஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ள பெருந்தேன் நட்பு நூலுக்கு பெருந்தேவி எழுதிய முன்னுரை)

அருண்மொழி நங்கையின் இந்நூல் பல வகைகளில் தன்னை வாசகர்கள் முன் நிறுத்திக்கொள்கிறது. ஒரு வகையில் இது பரவசமும் பதற்றமும் ஒன்று சேர இருந்த நாட்களைப் பற்றிய அந்தரங்கமான நாட்குறிப்பு ஒன்றை நிகழ்காலத்தில் மீட்டெழுதுவதாக இருக்கிறது. இன்னொரு வகையில் காதலர் இருவரில் ஒருவர் தங்கள் காதலைப் பற்றி வரையும்  முடிவுபெறாத நினைவுச் சித்திரமாக வளர்கிறது. அடுத்ததாக, உறவின் விதை முளைத்து துளிர்த்து அரும்பிப் பூத்துக் குலுங்குவதன் அடுத்தடுத்த முப்பரிமாணக் காட்சிகளை நம் கண்முன் நிகழ்த்துகிறது.

மீட்டெழுதுதலில் தனி அனுபவமும் பொதுவான உணர்வும் அருண்மொழியின் எழுத்தில் லயத்தோடு இணைகின்றன. ஜெயமோகன் தன் காதலை வெளிப்படுத்திய கணத்தில் ”ஒரு இனிமை உடல், மனம் முழுவதையும் தழுவிச் செல்வதை உணர்ந்தேன்…. விரல்நுனி வரை பரவும் இனிமை. நிரம்பி வழிந்து என்னால் தாள முடியாமல் ஆகியது,” என்றெழுதும் அருண்மொழி காதலை உணரும் மனங்களில் ஒரு முகம் மட்டும்.  ஒவ்வொரு காலையிலும் ”முதல் எண்ணமாக”த் துலங்குகிறது என எழுதுகிறார். பின்னர் இன்னொரு இடத்தில் ”மனிதனுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட தேன். அதைப் பருகாதவர்கள் துரதிருஷ்டசாலிகள்” என்று அந்த இனிமையின் பொதுத்தன்மையைக் குறிப்பிடும்போது வாசிப்பவர் மனமும் தான் பருகிய தேனின் இனிமையில் தோய்கிறது.

காதலைப் பற்றிய சித்திரத்தை எந்த எழுத்தாளரும் எழுத முடியும் என்றாலும் காதலர்கள் எழுத்தாளர்களாகவும் இலக்கியத்தையும் கலையையும் நேசிப்பவர்களாக இருக்கும்போது அந்தச் சித்திரத்தின் வண்ணங்கள் மேலும் செழுமை பெறுகின்றன.  அருண்மொழியின் பெயர் தந்த உணர்வெழுச்சியை ஜெயமோகன் வெளிப்படுத்த ”நிலவிலிருந்திறங்கி / என்மீது சொரியும் ஓர் / ரத்தப் பெருக்கு” என்று பிரமிளின் கவிதை அவருக்கு உதவுகிறது. அருண்மொழியும் தன் பங்குக்கு சங்கக் கவிதைகள் போட்ட பாதையில் கவிதைகளை எழுதிக் குவிக்கிறார். தன் காதலியின் நிறத்தைப் பாராட்ட ஜெயமோகனுக்கு கபிலனும் கம்பனும் கிளாட் மோனேயும் துணைக்கு வருகிறார்கள்.  இந்நூலின் பின்னிணைப்பாக ஜெயமோகன் அருண்மொழிக்காக எழுதிய கவிதைகளும் சில கடிதங்களும் தரப்பட்டிருக்கின்றன. ஒரு கடிதத்தில் வருகிற வரிகள் இவை: ”நிரந்தரமாக, சாஸ்வதமாக உன் துணை வேண்டும் என்ற முடிவை மனம் அடைந்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம். கூண்டில் அடைப்பட்ட மிருகம் இண்டு இடுக்கையெல்லாம் முகர்ந்து முகர்ந்து தவிப்பது போலவே மனமும் தவிக்கிறது. காற்று படாதபடி மனசை மூடிவைத்துவிடுவது எளிய விஷயம் அல்ல. அந்நிய பெண் என இப்போது இருக்கும் சிறு தடைகளையும் மீறி முற்றிலும் விடுபட்டவனாக உன் முன் வெளிப்பட வேண்டும் என்ற உத்வேகமும் கூடத்தான்.”

இலக்கியப் பிரதியில் இடம்பெறக்கூடிய, தாபமுற்றுக் கடிதமெழுதுகிற கதாபாத்திரத்தின் வாக்கியங்கள் அல்லவா இவை? மயக்கத்தின் அதீதம் நோயாகத் தங்கிவிடக் கூடாதென்றால் கலையாக அது மாற வேண்டும். அதுதான் நடக்கிறது. இருவருக்கும் இடையே நடக்கும் காதல் உரையாடல்களில் சங்கக் கவிதையும் எரிக் ஃப்ராமும் ஷெல்லியும் எலியட்டும் கிராம்ஷியும் சு.ரா.வும் ஆற்றூர் ரவிவர்மாவும் இன்னும் பல படைப்பாளிகளும் இதழ்களும் தவறாமல் இணைந்துகொள்கிறார்கள். கலைஞர்களும் தத்துவவாதிகளும் காதலர்களின் உரையாடல்களில் இடம்பெறும்போது உரையாடுபவர்களால் வாழ்நாள் முழுதும் நேசிக்கப்படுவார்கள். அருண்மொழியையும் ஜெயமோகனையும் போலத் திருமணத்தில் இணைந்தவர்களானாலும் சரி, அல்லது காலப்போக்கில் பிரிந்து சென்றவர்களானாலும் சரி. இதை எழுதும்போது என்னுடைய காதல்களை ஒட்டி என் இதயத்தில் முளைத்த சிம்மாசனங்களில் நீட்ஷேவும் ஃபூக்கோவும் மாத்திரமல்ல, அரு. இராமநாதனும் கூடவே மார்க் செகாலும் அமர்ந்திருப்பதை எண்ணிச் சிரித்துக்கொள்கிறேன். தத்துவ நிலைப்பாடுகளாகட்டும், கலை இலக்கியத் தேர்வுகளாகட்டும், காதல் உச்சத்தில் உள்ளபோது காதலர்களிடையிலான பரிமாற்றங்களின் வழி அவர்களிடம் ஏற்படும் சார்புகள் காதலின் அற்ப ஆயுளைத் தாண்டி வாழ்நாள் முழுதும் நீடிக்கக்கூடியவை.

சங்கப் பாடல்களைப் போலவே இருவருக்கும் காதல் அரும்பிய நாட்களின் வசந்தம் காட்சிகளாக அடுக்கப்படுகிறது. ”மஞ்சள் கொன்றைகள்  பூத்துக் குலுங்கின.   பெரிய கருங்கற்கள் வெளித் தெரிய கட்டப் பட்ட  அழகிய ஸ்டாஃப்  குவார்ட்டர்ஸ் வீடுகள் ஒருபுறம், மறுபுறம் விரிந்த வயல்வெளிகள். அதை ஒட்டியே செல்லும் சிறிய கால்வாயில் சலசலக்கும் நீர். ஏதோ கனவில் நடப்பதுபோல் நடந்தோம்” என்கிறார் அருண்மொழி. ”எனக்கு சஞ்சலத்தில் தவித்து நேரம் உருகி வழிகிறது. என் முற்றத்தில் ஓசையே இல்லாமல் காந்தள் மலர்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருக்கின்றன. இரத்தம் போல சிவந்தவை. நிமிடங்கள் இல்லை நொடிகள் அவை,” என்று போகிறது ஜெயமோகனின் ஒரு கடிதம். சங்கப் பாடல் மரபைப் போலவே காதலுக்குச் சாட்சியமாகிறது இயற்கை. தன்னைக் காதலர்களோடு அடையாளப்படுத்திக்கொள்கிறது. காலத்துக்கு அப்பாலான காதலின் அகவிழி ஒன்றுக்குள் இருவர்.  ராஜீவ் காந்தி படுகொலை போன்ற புறச் சம்பவங்களை அருண்மொழி ஆங்காங்கே சுட்டியிருந்தாலும், காதலின் அகவிழியே நகரும் ஒளியாக இந்த நூலின் பாதையைச் சமைக்கிறது. கசப்பான ஊடல்கள், சந்தேகம் போன்ற இருட்புள்ளிகள் இந்தப் பாதையில் இல்லாதது வியப்பளிக்கிறது.

தல்ஸ்தோய் சோஃபியாவுக்கு எழுதிய முதல் காதல் கடிதத்தில் “உண்மையைச் சொல், என்னுடைய மனைவியாக விரும்புகிறாயா?” என்று தவிப்புடன் கேட்கும் அதே தொனி ஜெயமோகன் அருண்மொழிக்கு எழுதிய முதல் கடிதத்திலும். அதற்குப் பதிலெழுதும் அருண்மொழி அவரைத் தன் குருவாகவும் நேசனாகவும் கருதுவதைத் தெரிவிக்கிறார். அருண்மொழிக்கே உரித்தான இளமைத் துள்ளலை இந்நூலில் பல இடங்களில் காண்கிறோம்.  ஜெயமோகனைப் பொறுத்தவரையில் அவரது புனைகதைகளிலும் அல்புனைவு எழுத்துகளிலும் தென்படாத அவரது ஆளுமையின் வேறு பக்கங்களையும் அறிகின்ற வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணமாக இரண்டு இடங்களைக் குறிப்பிட நினைக்கிறேன்.

ஒன்று, அருண்மொழிக்கும் ஜெயமோகனுக்கும் நிகழும் முதல் சந்திப்பு. பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களுக்கும் அவர்களது வாசகர்களாக இருந்து காதலர்களாக மாறுபவர்களுக்கும் ஏற்படும் முதல் சந்திப்புகள் சுவாரசியமானவை. சில சமயம் எழுத்தாளர்-வாசகர் என்ற உறவு மாறக்கூடிய சாத்தியங்களையும் காட்டுபவை அவை. தஸ்தயேவ்ஸ்கியும் அவரது மனைவி அன்னாவுக்குமான முதல் சந்திப்புகளைப் பற்றிய குறிப்புகள் என் நினைவிலாடுகின்றன.  ”சூதாடி” நாவலைத் தஸ்தயேவ்ஸ்கி எழுதும்போது அவரிடம் சுருக்கெழுத்தாளராக வேலைக்குச் சேர்கின்ற அன்னா, தஸ்தயேவ்ஸ்கியை முதன்முதலில்  சந்தித்ததைப் பற்றி எழுதுகிறார். நைந்துபோன நீலநிற கோட்டுடன் செம்பழுப்பு நிறத்தில் விக் வைத்ததைப் போல இருந்த தலைமுடியுடன் தளர்ந்த அன்பற்ற முகத்துடன் தஸ்தயேவ்ஸ்கி காட்சியளித்ததைக் குறிப்பிடுகிறார் (பார்க்க: Anna Dostoevsky, Dostoevsky: Reminiscences, 1975).  ”மறதிகொண்ட, கவனமற்ற, நிராதரவான, தனிமையும் சிடுமூஞ்சித்தனமும் கூடிய” மனிதராக தஸ்தயேவ்ஸ்கியைப் பற்றி வர்ணிக்கிறார் அன்னா. துரதிர்ஷ்டங்களைச் சந்தித்திருந்த அவரால் முகத்தைப் பார்த்துப் பேசுவதோ கோர்வையாக உரையாடுவதோகூட முடியாமலிருந்தது என எழுதுகிறார் (பார்க்க: Leonid Grossman, Dostoevsky, 1965). ஆனால், பிறகு அன்று மாலையில் இயல்பாகவும் பாசாங்கற்று வெளிப்படையாகவும் பேசும் தஸ்தயேவ்ஸ்கியை அவருக்குப் பிடித்துப்போகிறது.

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது அருண்மொழிக்கு ஜெயமோகனுடனான முதல் சந்திப்பு. அவரை முதல் பார்வையிலேயே கவர்ந்துவிடுகிறார் ஜெயமோகன்.  ”பார்த்தால் வாசலில் கருப்பு கூலிங்கிளாஸ் அணிந்து ஸ்டைலாக நின்றுகொண்டிருந்தார். லைட் வயலட் நிற உயர்தர சட்டை, பிஸ்கட் நிற பேண்ட் அணிந்து அழகாக இன் செய்து, உயர்தர காலணிகளுடன், செக்கச்சிவந்த நிறத்தில் ஏதோ மலையாள நடிகர் சாயலில் இருந்தார். கலைந்த தலையும், ஜோல்னாப் பையும், ஒருவாரத் தாடியுமாய் இருப்பார் என்று எண்ணிய எனக்கு அதிர்ச்சி” என எழுதுகிறார் அருண்மொழி. இப்படியான தோற்றத்தில் ஜெயமோகனைக் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. எனக்கும் அதிர்ச்சிதான்.  நான் கற்பனை செய்துவைத்திருக்கும் ஜெயமோகனுக்கும் இவருக்கும்தான் எவ்வளவு வித்யாசம்!

ஜெயமோகனைப் பற்றி அவர் எழுத்திலிருந்தும் அவருடைய நண்பர்கள், வாசகர்கள் தெரிவிப்பதிலிருந்தும் உண்டாகும் மனப்பதிவு அவருக்கும் திட்டமிடுதலுக்கும் பல ஒளி மைல்கள் தூரம் என்பது. ஜெயமோகன் எப்படி சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு வரக் கவனமாகத் ‘திட்டமிட்டு,’ இருபத்தி நான்கு மணிநேரம் பயணம் செய்து வேறொரு நாட்டில் இறங்கி ஏறி கடைசியில் வந்து சேர்ந்தார் என்பது சிங்கப்பூரில் உலவுகின்ற நாட்டார் கதை. ஆனால், தங்கள் திருமணத்துக்கு முன் ஜெயமோகன் எப்படியெல்லாம் திட்டமிட்டார் என்று சொல்கிறார் அருண்மொழி. குக்கர், மிக்சி, மின்விசிறி, திருமணப் புடவை வாங்குவதிலிருந்து சீட்டு கட்டுவது வரையில் அத்தனையும் முன்கூட்டியே பொறுப்பாகச் செய்தார் என்று எழுதுகிறார் அருண்மொழி. நம்பக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது.

ஒருவேளை திருமணத்துக்குப் பின் ஜெயமோகன் மாறிவிட்டிருப்பாரோ? உலக இலக்கிய வரலாறு நெடுகிலும் உளரீதியான துணைக்கும் சரி,  நடைமுறையில் உதவிக்கும் சரி, ஆண் எழுத்தாளர்கள் பெரிதும் தங்கள் மனைவிகளைச் சார்ந்திருந்ததை, சார்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தல்ஸ்தோயின் “போரும் அமைதியும்” நாவலைத் தங்கள் குழந்தை என்றே சோஃபியா அழைக்கிறார். தல்ஸ்தோயின் மகத்தான படைப்புகள், நாவல்கள் சோஃபியாவின் எழுத்துருவாக்க உதவியின்றி வெளிவந்திருக்க வாய்ப்பில்லை. கவிஞர் ஓசிப் மெண்டல்ஸ்டாமின் மனைவி நடேஷ்டா, மெண்டல்ஸ்டாமின் எதிரொலியாகத் தான் அறியப்படுவதில் பெருமைப்பட்டவர். அலெக்சாண்டர் சோல்ஷெனிட்ஸினின் மனைவி நடால்யா கணிதத்தில் புலமை பெற்றவர்; ஆனால் தன்னுடைய இணையின் இலக்கியப் பணியிலும் கம்யூனிச அரசு எதிர்ப்பிலும் உறுதுணையாக நிற்பதற்காகத் தன்னுடைய துறையில் அவர் ஈடுபாடு காட்டவில்லை. யோசித்துப் பார்த்தால்,  கலைஞர்களைப் பொறுத்தவரை அவர்களது அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்ல, ஏன் சமயத்தில் சுமந்து செல்ல நெருக்கமான இணை இல்லாவிட்டால் கலையும் வாழ்க்கையும் ஒருசேர உருக்குலைந்துவிடும் சாத்தியம் அதிகம். சார்லஸ் புக்கோவ்ஸ்கி ஒரு கவிதையில் கூறுவதைப் போல, கவிஞரோ கலைஞரோ இடையறாது தன்னை வெட்டித் தந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. எந்தக் கலையாக இருந்தாலும் அதன் கோரிக்கைகள் அத்தகையவை. ஏந்திக்கொள்ள மற்றொருவர் இல்லாமல் வெட்டித் தந்துகொண்டே இருக்க முடியாது.

அருண்மொழி-ஜெயமோகன் திருமணம் வரையில் நடந்தவற்றை விவரிக்கும் நூல் இது என்பதால் திருமணத்துக்குப் பின் இருவரது படைப்புத் தருணங்களிலும் அன்றாடத்திலும் ஒருவர் மற்றவருக்காக அளித்த பங்களிப்பைத்  தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அருண்மொழியின் நினைவுகூர்தல் இந்த நூலுடன் மாத்திரமே நிற்கப்போவதில்லை. தவிர, நான் வாசித்தவரை அருண்மொழி ஜெயமோகனின் வாழ்க்கை வரலாற்றிலும் தமிழிலக்கிய வரலாற்றிலும் சில இடங்களில் வருகிற ஒரு பெயராக மட்டும் தங்கிவிடக்கூடியவர் அல்ல. தன்னுடைய நினைவுகூர்தல்களுடன் கூடவே தொடர்ந்து வேறு படைப்புகளையும் அளிக்கக் கூடியவர்.

ஜெயமோகனுக்கு (”ஜெயனுக்கு”) சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ஒரு பரிசாக, அகத்தின் சைகையாக. ஏற்கெனவே தந்ததை நினைவூட்டும்  தருதலாக. வாசகர்களின் முன் தருதல் நடக்கிறது. பரிமாற்றத்தின் ஒரு சுற்று முடிய எதிர்த் தரப்பிலிருந்து இனி தரப்பட வேண்டும். இந்த நூலுக்கு இணையாக, ஜெயமோகனின் எண்ணற்ற நூல்வரிசையில் இன்னொரு நூலை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறது என் மனப் பட்சி.

முந்தைய கட்டுரைசி. மாசிலாமணி
அடுத்த கட்டுரைகோவை கொடீஷியா விருதுகள்