காதலின் தேன்

காதலைப்பற்றி  எழுதுவது மிகப்பெரிய சவால்.அதில் இரு சாத்தியங்களே உள்ளன. ஒன்று முழுவெற்றி அல்லது படுதோல்வி. சுமார், பரவாயில்லை, தேறிவிடும் என்று சொல்வதற்கு அங்கு வேலையேயில்லை. ஏனென்றால் எல்லா காதலும் ஒன்றுதான். அவரவர் உணர்வுநிலைகள் மட்டுமே வேறுபாடு. அந்த நுண்ணிய அகவயமான வேறுபாட்டை எழுதினால் மட்டுமே அதற்கு மதிப்பு.  இதை மனதில்கொண்டு தான் நான் எழுதவே உட்கார்ந்தேன்.

ஆறே மாதங்கள்தான் எனினும் எங்கள் காதல் நாட்கள் உத்வேகம், உணர்ச்சிகரம், பரவசம், கொந்தளிப்பு எல்லாமே அடங்கியவை. பிறருக்கு அவை சாதாரணமானவையாக இருக்கலாம், என்னைப்பொறுத்தவரை அதில் சாதாரணம் என்று சொல்லக்கூடிய தருணங்களே மிக குறைவு. ஆகவே என்னால் அப்போதைய நிகழ்வுகளை, உரையாடல்களை, உணர்வுகளை இப்போது என்பதுபோல் அருகில் கண்டுவிடமுடியும். கல்லில் உறைந்த சிற்பம்போல் எனக்குள் அவை என்றுமிருப்பவை. ஆனால் அதை பொதுவெளியில் வைக்க  ஆரம்ப காலங்களில் ஒரு கூச்சம் இருந்தது. இன்றுள்ள எழுத்தார்வமும், நான் வந்தடைந்த  வயது அளிக்கும் சுதந்திரமும்தான் அதை சொல்லலாம், சொல்லவேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தின.

முதல் தூண்டுதல் நண்பர் சுனில் கிருஷ்ணன். ‘நீங்கள் கண்டிப்பாக ஜெ -60 மலரில் ஒரு கட்டுரை எழுதவேண்டும் அக்கா’ என்றார். அது புத்தக விமர்சனம் போல் அல்லாமல் சுய அனுபவமாக இருந்தால் நல்லது என்றார். இரண்டாவது தூண்டுதல் எழுத்தாளர் முத்துலிங்கம். அவரிடம் 2011 ல் நாங்கள் கனடா சென்றபோது எங்கள் காதல்கதையை தனிப்பட்ட முறையில் சொன்னேன். அவர் ஆவலுடன் கேட்டுக் கொண்டதன் பேரில். முதல் சந்திப்பு வரை மட்டுமே (ஜெயன் எங்களை விடுதியில் வந்து சந்திப்பது வரை) அவரிடம் சொன்னேன். அவர் அப்போதே நீங்கள் இதை எப்போதாவது எழுதவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிறகு என் நெருங்கிய நண்பர்கள் பலர் பல தருணங்களில் கேட்டுக் கொண்டிருந்தனர். நண்பர் வழக்கறிஞர் செந்தில் ‘நீங்கள் எழுதினால் அது செல்லம்மா பாரதியைப் பற்றி எழுதியதற்கு நிகராக இருக்கும்’ என்றார். பெண்ணின் பார்வையில் காதல் அனுபவங்கள் குறைவாகவே எழுதப் படுவதால் அதற்கு தனி மதிப்பு இருக்கும் என்றனர் நண்பர்கள். நண்பர் பி.கு. என்னுடைய ‘பனி உருகுவதில்லை’ நூலின் விமர்சனக் கூட்ட மேடையில் இந்த வேண்டுகோளை பகிரங்கமாக விடுத்தார். உண்மையில் அந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு சில நாட்கள் முன்பே ஏப்ரல் முதல் வாரத்தில் இதை எழுத தொடங்கிவிட்டேன்.

எழுத உட்கார்ந்த அன்று வீட்டில் முழுத் தனிமையில் இருந்தேன். ஜெயன் அப்போது சில திரைப்பட வேலைகளுக்காக சென்னை, மும்பை, ஹைதராபாத் என்று பறந்து கொண்டிருந்தார். அஜி எங்கள் மலைத்தங்குமிடத்தில் , சைது சென்னையில். நான் வீட்டினர் யாரிடமும் எழுத நினைத்திருப்பதை சொல்லவில்லை. யாராவது ஒருவர் ‘அதைப் போய் ஏன் எழுதுகிறாய்?’ என்று ஒருவார்த்தை சொல்லியிருந்தால் என் அலைகளின் நுரை அடங்கிவிடும் என்று பயந்தேன். அந்த உணர்வுகளின்  உச்சம்தான்  அந்த மனநிலையில் நம்மை நிறுத்துகிறது, அதை எழுத வைக்கிறது.

அந்த 21 வயதிற்குள் நான் மீண்டும் புக விரும்பினேன்.  உணர்ச்சி மிகுந்த, பரபரப்பு நிறைந்த, காதலையும் ஆசையையும் மனம் முழுவதும் தேக்கிவைத்த அந்த பழைய அரைவேக்காட்டுத்தனமான வாசகியாகவும் ஆர்வம் மிகுந்த மாணவியாகவும் மாற விழைந்தேன். என் சேகரிப்பில் உள்ள கடிதங்களை படித்தேன். மெல்ல எனது அழகிய வேளாண் கல்லூரி வளாகம், சிட்டன்குளமும், பூத்த கொன்றை நிரம்பிய சாலைகளும் மனதை நிறைத்தன. அந்த அருண்மொழி வந்து என்னில் அமர்ந்துகொண்டாள். சாமியாடும் பெண்களில் தெய்வ சான்னித்தியம் வந்து அகல்வதுபோல் முடிக்கும்போது அகன்று சென்றுவிட்டாள்.

முடித்தவுடன் சுனிலுக்கும், முத்துலிங்கம் சாருக்கும் அனுப்பினேன். இருவரின் பாராட்டும் மிக உச்சபட்சமான பாராட்டாக இருந்தன. பிறகே எனக்கு நம்பிக்கை வந்தது. ஜெயனின் 60 வது வயது பிறந்த நாளில் (ஏப்ரல் 22, 2022) என் ஆகச் சிறந்த பிறந்தநாள் பரிசாக இது வெளியானது. மூன்று நாட்களாக வந்த இந்த காதல் அனுபவக்கதை பெருவாரியான வாசகர்களால் வாசிக்கப் பட்டது. அந்த மூன்று நாட்களும் என் அலைபேசி இசைத்தபடியே இருந்தது. நான் மேகங்களில் மிதப்பதுபோல் உணர்ந்தேன். அறிமுகமே இல்லாத எழுத்தாளர்கள் எல்லாம் அழைத்து பாராட்டினர்.

அப்போது கவிஞர் பெருந்தேவி அமெரிக்காவில் இருந்து அழைத்து வெகுநேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போதே இதை பிரசுரித்தால் அவரிடம் தான் முன்னுரை வாங்க வேண்டும் என்று தீர்மானித்தேன். காதல் அனுபவக் கதைக்கு பாயிரம் எழுத கவிஞரன்றி யார்  சிறந்தவர்? அவர் தன் பல்கலைகழகப் பணிகள் நிறைந்த இந்த காலகட்டத்திலும் எனக்காக சிரத்தையும் அக்கறையும் கொண்டு அளித்த அழகிய முன்னுரைக்கு நன்றி.

இக்கட்டுரைக்கு தலைப்பு செவ்வியல் கவித்துவத்துடன் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து என் பிரியத்திற்குரிய  கவிஞர் அபியிடம் கேட்டேன். அவர் குறுந்தொகையின் இந்தப் பாடலை அனுப்பி வைத்தார். இதன்  சாரத்துக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. கவிஞர் அபி அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்.

கட்டுரையை செப்பனிட உதவிய நண்பன் ஜி.எஸ்.எஸ்.வி.நவீனுக்கு என் அன்பு. வெளிவந்தபோது இதை கொண்டாடிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றியும், அன்பும்.

நேர்த்தியுடன் கூடிய அழகிய பதிப்பாக இதை வெளியிடும் பதிப்பாசிரியர் திரு. செந்தில்குமார் அவர்களுக்கும், மீனாம்பிகை அவர்களுக்கும், விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என் அன்பும், நன்றியும். அழகிய அட்டைப்படம் வடிவமைத்த நண்பர் அழிசி சீனிவாச கோபாலனுக்கு நன்றி.

அருண்மொழி நங்கை

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் பெருந்தேன் நட்பு நூலின் முன்னுரை)

முந்தைய கட்டுரைமுருகபூபதி
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி- தூரன் விருதுவிழா நிறைவு