இசையினூடாக அறிதல் -கடிதம்

தூரன் விருது- இசை நிகழ்வு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

தூரன் விருது இசை நிகழ்வு அறிவிப்பு (தூரன் விருது- இசை நிகழ்வு)  மகிழ்வளித்தது. நிகழ்வுக்கு வரும்முன் வீட்டுப் பாடமாய் சில கீர்த்தனைகளை கேட்டு வரும்படி இருந்ததை அறிவிப்பு வந்த அன்று சரியாய் கவனிக்கவில்லை.

இன்று அந்த பதிவை திரும்பப் படிக்கும்போது அந்த பட்டியலில் இருந்த கீர்த்தனைகள் ஆச்சரியம் அளித்தன.

பல பிரபலமான கீர்த்தனைகள் அந்த பட்டியலில் இருந்தன.

தாயே திரிபுர சுந்தரி…

கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்…

முரளிதர கோபாலா…

எங்கு நான் செல்வேனய்யா.. நீ தள்ளினால்…

(பாம்பே ஜெயஶ்ரீயின் குரலில் இந்த பாடலில் நான் பித்தாய் கிடந்திருக்கிறேன்)

இவற்றை எல்லாம் திரு. பெரியசாமி தூரன் அவர்கள் எழுதியது என்று எனக்கு தெரிந்திருக்கவே இல்லை. (தெரிந்து கொள்ள முயற்சியும் செய்யவில்லை என்பதே உண்மை)

தற்போதைய நிலையை ஒப்பிடுகையில்,கொங்கு மண்டலத்தில் இந்த அளவு இசையும், தமிழும் வாழ்ந்திருந்தது என்பதை நினைக்க ஆச்சரியமாக உள்ளது. கொங்கு மண்டலம் தற்போதைய பொருளாதார வளர்ச்சியுடன், நுண் ரசனைகளை மேம்படுத்தும் செயல்களிலும் ஈடுபட்டால் அற்புதமாய் இருக்கும்.

இவற்றை சுட்டிக்காட்டும் விதத்தில் தூரன் விருது விழாவில் அருகி வரும் நாதஸ்வர, தவில் கச்சேரியில் இந்த கீர்த்தனைகளை படைப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது.

குடும்பத்துடன் விழாவிற்கு வர விருப்பமாய் உள்ளேன். அமைந்தால் மகிழ்வேன்.

நன்றி,

அன்புடன்

கீதா செந்தில்குமார்

*

அன்புள்ள கீதா,

வருக.

இசைநிகழ்வு எண்ணம் தற்செயலாக அமைந்தது. எங்கள் பொருளியல் இதற்கு உகப்பது அல்ல. இந்த விழா நண்பர் செந்தில்குமார், வழக்கறிஞர் அவர்களின் திருமணமண்டபம் இலவசமாகக் கிடைப்பதனால் ஈரோட்டில் நிகழ்கிறது. (ஆகவே ஆடிமாதத்திலேயே நிகழ்த்தமுடியும்) நண்பர் சதீஷ்குமார் நிதியுதவியால் இந்த இசைநிகழ்வு அரங்கேறுகிறது. வரும் ஆண்டுகளில் இதை தொடர எண்ணம்.

இசை ஒருவருடன் இறுதிவரை தொடர்ந்துவரும் ஓர் இனிமை. சினிமா இசை மிகப்பெரிய ஒரு வெளி. ஆனால் அதற்கு எல்லை உண்டு. அது எளிதில் கடந்தகால ஏக்கங்களுக்கு கொண்டுசெல்லும். மரபிசைக்கு இருக்கும் ஆழம் அதற்கில்லை.

மரபிசை எதுவானாலும் ஓர் அறிமுகம் இன்றி உள்ளே செல்ல முடியாது. அறிமுகம் என்றால் அறிவார்ந்து தெரிந்துகொள்வது அல்ல. நம் அகத்திற்கு அது பழக்கமாவது. அதற்கான ஒரு தருணம் இந்த இசைநிகழ்வு.

பலர் இசையை பல வகையில் கேட்கிறார்கள். எப்படியாயினும் குரலிசையே முதன்மையானது. அதற்கு மாற்றே இல்லை. ஆனால் கருவியிசை குரல் அளிக்காத சில தளங்களை திறப்பது. ஏனென்றால் அது குரல் அளிக்கும் ‘அர்த்தம்’ என்னும் மேலதிகச் சுமை இல்லாத தூய இசை. அறிந்த சினிமாப்பாடல்களையே கருவியிசையில் கேட்டுப்பாருங்கள். அவை இன்னும் sublime ஆகியிருப்பதை உணரலாம்.

அவற்றிலும் ஒவ்வொரு மரபுக்கும் அதற்கான இசை உண்டு. ஐரோப்பிய இசைக்கு பியானோ. ஆனால் அமெரிக்க இசை என நான் உணர்ந்ததே அவர்களின் காற்றுவாத்தியங்களில்தான். டிரம்பட்.அஜிதன் எழுதிய மைத்ரி நாவலில் பேக்பைப்பர் எப்படி இமையமலையின் இசையென ஆகியது என்னும் சித்திரம் ஒருவகையில் இமையமலையை ஆன்மிகமாகப் புரிந்துகொள்ளச் செய்வது.

தமிழகத்தின் இசைக்கருவி நாதஸ்வரம் – தவில்தான். தமிழின் பல பண்கள், ராகங்கள் நாதஸ்வரம் வழியாகவே மிகச்சிறப்பாக வெளிப்படுகின்றன. குறிப்பாக எனக்கு மிகப்பிடித்த ராகமான ஆபேரி நாதஸ்வரத்திலேயே உச்சம் கொள்கிறது என்பது என் அனுபவம்

ஜெ

முந்தைய கட்டுரைநகுலன் இலக்கியவாதியா?
அடுத்த கட்டுரைமு.இளங்கோவன் நூல்கள்