தேன்வரந்தை- தென்னக பிம்பேத்கா

தேன்வரந்தை அடிவாரம்

ஜூலை 4 ல் குருபூர்ணிமா முடிந்த மறுநாள்தான் நான் சென்னை செல்வதாக இருந்தது. ஐந்தாம் தேதி பகல் முழுக்க சும்மா இருப்பது சரியில்லை என்று கிருஷ்ணன் கருத்து தெரிவித்தார். உடுமலைப்பேட்டை அருகே, அமராவதி அணையின் பின்பக்கம் தேன்வரந்தை என்னுமிடத்தில் புதியதாகச் சில குகை ஓவியங்கள் கண்டடையப்பட்டிருப்பதாகவும், அங்கே சென்று பார்க்கலாமென்றும் சொன்னார்.

ஜூலை 4 அன்று இரவு குருபூர்ணிமா இணைய உரையாடல் ஈரோட்டில் ஒரு விடுதியில் நடைபெற்றது. உடன் ஈஸ்வரமூர்த்தி, பாரி, மணவாளன், சந்திரசேகர் உள்ளிட்ட ஈரோட்டு நண்பர்களும் ; கோவையிலிருந்து கதிர் முருகனும் இருந்தனர். நிகழ்வு முடிய பதினொரு மணி. அதன்பின் அனைவரும் பிரிய 12 மணி. கும்பல் அதற்குப்பிறகு சாப்பிடச்சென்றது.

நான் இரவுணவு பழங்கள். அதிலும் இப்போதெல்லாம் இரவு 7 மணிக்கு முன் அதை சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலை 9 மணிக்கே அடுத்த உணவு. Intermittent fasting. நூறு சதவீதம் சீனியும் இல்லை. எடையை 78ல் இருந்து 69 ஆக்கிவிட்டேன்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கே கிளம்ப திட்டம். ஆனால் ஆறுமணிக்குத்தான் கிளம்ப முடிந்தது. ஈரோட்டிலிருந்து நான், கிருஷ்ணன், முருகன் மற்றும் ஈஸ்வர மூர்த்தி. செல்லும் வழியில் திருப்பூரில் அனந்தகுமார். இன்னொரு லிங்கராஜ் மற்றும் தீபன் ஆகியோரை சேர்த்துக் கொண்டோம்.

வழியில் பல்லடம் தாண்டி ஓர் உணவகத்தில் சாப்பிட்டோம். பொதுவாக கொங்குநாட்டில், கோவை ஈரோட்டுக்கு வெளியே உணவு சுவையாக இருக்க வாய்ப்பில்லை, குமட்டலெடுக்காதபடி அமைந்தால் மகிழவேண்டியதுதான். அந்த மகிழ்ச்சி அன்று அருந்திய காலையுணவில் மட்டும் இருந்தது. மதிய உணவை உண்ட கணக்கம்பாளையம் பகுதிகளில் சமையற்கலை இன்னும் அறிமுகமாகியிருக்கவில்லை என நினைத்துக்கொண்டேன்.

கணக்கம்பாளையத்தில் தென்கொங்கு பகுதிகளில் தொல்லியல் ஆய்வு செய்துவரும் கொங்கு சதாசிவத்தை உடன் சேர்த்துக்கொண்டோம். சதாசிவம் மரவேலை செய்பவர். முறையான வரலாற்று – தொல்லியல் கல்வி இல்லாதவர். சாண்டில்யனின் கதைகளை இளமையில் படித்து வரலாற்றார்வம் கொண்டார். அதன் பின் தமிழக வரலாற்றாய்வின் முன்னோடிகளான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார், ராசமாணிக்கனார், மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோரை பயின்றார். கொங்குசோழர்கள் பற்றிய ஆர்வம் உருவாகவே உள்ளூர் ஆலயங்களின் கல்வெட்டுகளைச் சென்று பார்க்கவும், தனக்காக படியெடுத்துக்கொள்ளவும் தொடங்கினார். சில கல்வெட்டுகளை முதல்முறையாக படியெடுத்தார்.

கொங்கு சதாசிவம்

அந்த ஆர்வம் குடைவரை ஆலயங்கள் சார்ந்து திரும்பியது. குடைவரை ஆலயங்களைப் பார்க்க தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் பகுதிகளில் விரிவாகப்பயணம் செய்துள்ளார். தமிழகத்திலுள்ள எல்லா குடைவரைகளையும் பார்த்துவிடுவது அவருடைய திட்டம். தென் மாவட்டங்களின் சில குடைவரைகளே எஞ்சியுள்ளன.

அவ்வழியே கொங்கு சதாசிவம் பழைய குகை ஓவியங்கள் சார்ந்த ஆர்வத்தை அடைந்தார். அப்படியே வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் சார்ந்த ஆர்வம் உருவானது.  அமராவதி பகுதியில் கல்வட்டங்கள், பெருங்கற்கள் உட்பட பல கற்காலத் தொல்லியல் தடையங்களை முதல்முறையாகக் கண்டடைந்து பதிவு செய்துள்ளார். கொங்கு சதாசிவத்தின் வழிமுறை கண்டடையும் தகவல்களை முறையாக தொல்லியல் துறைக்குத் தெரிவிப்பதும், அவர்கள் அவற்றை ஆவணப்படுத்த உதவுவதும் மட்டுமே. அதுவே அந்த தடையங்களை பாதுகாக்கும் வழி என நினைக்கிறார். அவற்றை கண்டடைந்தமைக்கான தனிப்பெருமையை நாடுவதில்லை. தன் ஆர்வத்துக்காகவே இத்தேடலில் இருக்கிறார்.

முதல்குகை

தமிழகத்தில் வரலாற்றாய்வும், தொல்லியலாய்வும் மிக மிக வருத்தமுறச் செய்யும் நிலையில் உள்ளன. தமிழகத்துக்கு வெளியே உள்ள தொல்லியல் ஆய்வாளர்களுடன் உரையாட நேர்பவர்கள் அவர்கள் நம் தொல்லியலாய்வுகள் பற்றி கொண்டிருக்கும் இகழ்ச்சியை கண்டு கூசிப்போக நேரிடும்.

தொல்லியலின் முறைமைகள் இங்கே அனேகமாக எவராலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. எந்த தொல்லியல் சான்று கிடைத்தாலும் அடுத்த கணமே முடிவுக்குப் பாய்ந்துவிடுகிறார்கள். அந்த முடிவுகள் எல்லாமே தமிழகத்திலுள்ள போலிப்பெருமை தேடும் முதிரா உள்ளங்களையும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியலாளர்களையும் மகிழச்செய்வனவாக கட்டமைக்கப்பட்டவையாக இருக்கும். கேட்டால் அது ஒன்றே ஆய்வு கவனிக்கப்படவும் நிதி கிடைக்கவும் ஒரே வழி என்கிறார்கள்.

யானையூர்தல்

தொல்சான்றுகளை திருத்தவும், பொய்யாக உருவாக்கவும் தயங்குவதில்லை. தமிழகத்தில் பதிவுசெய்யப்பட்ட கல்வெட்டுகள் பல ஆய்வாளர்களால் திருத்தங்கள் செய்யப்பட்டவை என்னும் கருத்து இந்திய அளவில் தொல்லியலாளர் நடுவே ஓடிக்கொண்டிருக்கிறது. கிண்ணிமங்கலம் உள்ளிட்ட வேறெங்கும் நிகழவே வாய்ப்பில்லாத, நம்பவே முடியாத பல அபத்தங்கள் இங்கே நிகழ்ந்துகொண்டுள்ளன.

அதிலும் ‘பயில்முறை’ வரலாற்றாய்வாளர்களின் ஆதிக்கம் தமிழக வரலாற்றாய்வை இருட்டில் தள்ளிக்கொண்டுள்ளது. அவர்களுக்கு முறையான கல்வி இல்லை. ஆகவே முறைமைகள் தெரியாது. அதேசமயம் சாதி, மதம், இனம், மொழி, வட்டாரம் சார்ந்த பற்றுகளும் முன்முடிவுகளும் மிகுதி. அவற்றை ஐயப்படும் மெய்யான வரலாற்றாய்வாளர்கள் அவர்களுக்கு எதிரிகளாக ஆகிவிடுவர். சாதி, இன, மொழி விரோதிகளாக முத்திரையடிக்கப்பட்டு வசைபாடப்படுவர். ஆகவே ஆய்வாளர் எவரும் வாயே திறப்பதில்லை.

யானையூர்தல்

இன்னொரு பக்கம் எந்த அடிப்படை அறிவும் இல்லாத கும்பல் யூடியூப் வழியாக பொய்யும் புளுகும் அள்ளி வைத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் பேசுவதே நம் பாமரர்களுக்கு புரிகிறது, பிடித்துமிருக்கிறது. ஏனென்றால் அவர்களின் முன்முடிவுகளை அவ்வுரைகள் வளர்க்கின்றன, செயற்கையான மிகையுணர்ச்சியும் வம்புத்தன்மையும் கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் ஓய்வுபெற்ற உயரதிகாரிகள் தங்கள் அதிகாரம், தொடர்புகள் மற்றும் பணத்தை பயன்படுத்தி முதன்மையான ஆய்வாளர்களாக தங்களை காட்டிக்கொள்கிறார்கள். மெய்யான ஆய்வாளர்களை மக்கள் அறிவதை தடுத்தும் விடுகிறார்கள்.

பூசாரி நடனம்

கொங்கு சதாசிவம் என்னை வியப்பிலாழ்த்தியது அவருடைய நேர்மையால். அவர் முன்முடிவுகளே அற்றவராக இருந்தார். போலிப்பெருமிதங்கள் எதுவுமே இல்லை. தன் கண்டடைதல்களைப் பற்றிக்கூட அவர் மிகையுணர்ச்சி கொள்ளவில்லை. தொல்லியல் முறைமைகளை மிகக்கறராராக கடைப்பிடிப்பவராக தெரிந்தார். ஆகவே எப்போதும் மெய்யான வரலாற்றை நோக்கியே சென்றார். வரலாற்றில் பத்து பக்கம் படித்ததுமே வரலாற்றை ‘உருவாக்க’ ஆரம்பித்துவிடுபவர்கள் மண்டிய தமிழ்ச்சூழலில் சதாசிவம் போன்றவர்கள் உள்ளடங்கிச் செயல்படும் உண்மையான சக்திகள்.

எட்டாண்டுகளுக்கு முன்புதான் அமராவதி அருகே மதகடிப்புதூர் என்னுமிடத்தில் தொல்மனிதர்களின் குகை ஓவியங்கள் கண்டடையப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. அவற்றை கண்டடைவதிலும் கொங்கு சதாசிவம் பங்களிப்பாற்றியிருந்தார். மேலும் குகை ஓவியங்கள் அப்பகுதிகளிலுண்டு என ஆடு மேய்ப்பவர்கள் வழியாக அறிந்துகொண்டு தனியாகவே அலைந்து அவர் கண்டடைந்த இரண்டாவது குகை முதல் குகைக்கு நேர் பின்னால் இருக்கிறது.

நடனப்பெண்

காலை பத்தரை மணிக்கு மதகடிப்புதூர் மலைப்பகுதிக்குச் சென்றுவிட்டோம். தேன்வரந்தை என அந்த மலை அழைக்கப்படுகிறது. உயர்ந்த பாறைகளில் பன்றியின் அகிடுகள் போல தொங்கும் மலைத்தேன்கூடுகள் காரணமாக அமைந்த பெயர். மலைத்தேனீ கொட்டி ஓர் ஆய்வாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆறுமாதம் சிகிழ்ச்சையில் இருந்ததை சதாசிவம் சொன்னார். மிகமிக கவனமாகச் செல்லவேண்டிய இடம் அது.

தென்னகத்திற்கு, குறிப்பாகத் தமிழகத்திற்கு உரிய மாபெரும் ஒற்றைக்கல் மலைகள். அவற்றில் நீர் வழிந்தோடிய வரிகளும் மடிப்புகளும். பாறைகளில் இருந்து ஊறிய ஜிப்சம், இரும்புத்தாது, கந்தகம் ஆகியவை பாறைகள் மேல் உருவாக்கிய வெண்மை, காவி, மஞ்சள் நிற வண்ணத்தீற்றல்கள். பாறையிடுக்குகளின் கையளவு மண்ணில் வேரூன்றி வளர்ந்த புதர்மரங்கள். அவை விரோதம் மிக்கவை, இலையே இல்லாமல் முள் செறிந்தவை.

கை விரல்

இப்பகுதியில் வழக்கமாக காலை பத்து மணிக்குமேல் செல்வது கடினம். பாறைகள் அனல்கொண்டுவிட்டிருக்கும். குடிநீர் நிறைய கொண்டுசெல்லவேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் சென்றபோது கோவைப் பகுதியில் நல்ல மழை. இங்கே ஈரக்காற்று இருந்தது. சாரல் மழை ஒருமுறை வீசி அமைந்தது. ஆகவே இனிய மலையேற்றம். முதல் குகையைச் சுற்றிக்கொண்டு புதிய குகைக்கு முதலில் சென்றோம்.

தேன்வரந்தையின் இரண்டாம் குகையின் மேலிருந்த பெரும்பாறை விளிம்பு உடைந்து சரிந்திருக்கிறது. சரிந்து சில ஆயிரமாண்டுகள் ஆகியிருக்கலாம். குகை என்னும் சொல் ஒரு பேச்சுக்குத்தான். குகையோவியங்கள் என்று காணக்கிடைப்பவை எல்லாமே பாறையின் ஆழமான மடிப்புகள்தான். மழை நனையாமல் ஒதுங்குமிடங்கள். கற்கால மானுடர் மழையின்போது அங்கே தங்கியிருக்கலாம். பின்னர் அவர்கள் குடில்கள் கட்ட கற்றுக்கொண்டபோது அவை வழிபாட்டிடங்களாக ஆகியிருக்கலாம். இந்த ஓவியங்கள் அவ்விடங்கள் வழிபாட்டிடங்களாக ஆனபின் உருவானவை.

புலி

உலகம் முழுக்கவே குகைமனிதர்களின் ஓவியத்துக்கு பல பொதுத்தன்மைகளுண்டு. பெரும்பாலும் வேட்டைக்குரிய விலங்குகள், வளர்ப்பு விலங்குகள் வரையப்பட்டிருக்கும். அவற்றில்தான் வடிவங்கள் நுணுக்கமாக இருக்கும். கொலைவிலங்குகள் பொதுவாக அரிது. மனிதர்கள் குச்சிகுச்சியாக வரையப்பட்டிருப்பார்கள். இல்லங்கள் அல்லது குடில்கள் அனேகமாக எங்குமே காணக்கிடைப்பதில்லை.

இவை மதச்சடங்குகளுக்காக வரையப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன. ஏனென்றால் எல்லா ஓவியங்களிலும் தவறாது இடம்பெறும் உருவம் பூசாரி. கூடவே வேட்டை, மற்றும் கூட்டுநடனங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. வேட்டைவிலங்குகள் உரிக்கப்பட்டு எலும்புகள் தெரிய, ஆனால் மேய்ந்துகொண்டிருக்கும் நிலையில், பல ஓவியங்களில் காணப்படுகின்றன. இதிலிருந்து இந்த ஓவியங்கள் பழைய மக்களின் கனவுகளின் சித்தரிப்புகள் என்னும் கொள்கை பொதுவாக உள்ளது.

யானை

குகை ஓவியங்கள் எனும்போது அவற்றை இன்றைய ஓவியங்களாக எடுத்துக்கொள்ளலாகாது. மானுடம் குழந்தை நிலையில் இருந்தபோது வரையப்பட்டவை அவை. ஆகவே குழந்தை கிறுக்கல்கள் போலத்தான் அவை இருக்கும். மிகச்சிறிய அளவிலும் காணப்படும். (விதிவிலக்கு பிரான்ஸின் ஓவியங்கள்).

இவற்றில் வெண்ணிறச் சுண்ணத்தாலானவை பழைய ஓவியங்கள். செங்காவி நிறத்திலானவை இன்னும் சற்று காலத்துக்கு பிந்தையவை. கரியவண்ணத்தாலானவை அடுத்தகட்டம். இதுவும்கூட ஒரு கொள்கைதானே ஒழிய நிரூபிக்க முடியாது. பொதுவாக பாறைப் பரப்பில் வண்ணக்கற்களால் வரையப்பட்டவை. பாறையின் சிலிகாவுடன் அந்த வண்ணக்கல்லின் ரசாயனம் ஊடுருவி வேதிமாறுதலாக ஆகிவிடுவதனால் இவை பல ஆயிரமாண்டுகளாக அழியாமல் உள்ளன. அந்த வேதிவினை நிகழ்ந்த ஓவியங்கள் மட்டுமே இன்றுள்ளன. தாவரவண்ணங்கள் அழிந்துவிட்டிருக்கலாம்.

இணையர்

குகை ஓவியங்களை பல ஆண்டுகளாகப் பயணம் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். திரும்பத் திரும்ப வரும் கருக்கள் சில உண்டு. நடனமிடும் பூசாரி, (அன்று பூசாரியே குடித்தலைவனாகவும் இருந்திருக்கலாம்) வேட்டைக் காட்சிகள், கைகோத்து ஆடும் நடனக் காட்சி, பல்வேறு சிறு சடங்குகளின் காட்சிகள். அவை இங்கும் உள்ளன. நடனமிடும் பூசாரியின் தோற்றம் இன்றைய நடராஜர் சிலைக்கு அணுக்கமானது. பிம்பேத்காவில் திரிசூலத்துடன் நடனமாடுகிறார்.

அதன் பொருள் நடராஜர் அன்றே வழிபடப்பட்டிருக்கிறார் என்பதல்ல. நடனமிடும் பூசாரியின் உருவம் தொன்று தொட்டு வழிபடப்பட்டு, பின்னர் சைவத்துள் புகுந்து, அலகிலா நடனமிடும் ஆடவல்லானாக உருவம் அடைந்து, தத்துவ விளக்கமும் பெற்றிருக்கலாம் என்பதே. இந்த குகை ஓவியங்கள் பற்றி நம்மால் செய்யப்படும் எந்த ஊகமும் என்றும் ஊகமாகவே நிலைகொள்ளுமே ஒழிய கொள்கையென நிரூபிக்கவே முடியாது.

இக்குகைகளில் கவனத்தைக் கவரும்படி இல்லாமல் இருப்பது சூரிய வட்டம். பெரும்பாலான குகைகளில் சூரிய-சந்திர வட்டங்கள் உள்ளன. அவை அக்கால காலக்கணிப்புக்கு உதவியிருக்கலாம். இங்கே இரு குகைகளிலும் இல்லை. இங்கே இருக்கும் மூன்று தனித்தன்மைகள் கவனத்திற்குரியவை. ஒன்று, ஒப்புநோக்க கூடுதலாகவே கொலைவிலங்குகள் உள்ளன. பிம்பேட்காவில் ஒரே ஒரு புலிதான் உள்ளது. இங்கே பல புலிகள். இரண்டு, குகை ஓவியங்களில் அடிக்கடி காணப்படும் கை ஓவியம் இங்கே பெரிய அளவில் வரையப்பட்டுள்ளது. அனேகமாக இதுவே இந்திய அளவில் பெரியதாக இருக்கும்.

மூன்றாவதாக, இங்குள்ள இணையர் படம். (மிதுனம்) தமிழகத்தில் கிடைத்துள்ள சங்ககால நாணயங்களிலேயே இணையர் வடிவம் உள்ளது. தமிழகத்தில் இவ்வடிவம் வளச்சின்னமாக தொல்காலம் முதலே நீடித்திருக்கலாம். இன்றைய அம்மையப்பன் முதல் மாதொருபாகன் வரை இதன் நீட்சியாக இருக்கலாம்.

தேன்வரந்தை குகைகளில் யானைகள் பல வடிவுகளிலுள்ளன. யானைகள்மேல் ஊர்வதுபோன்ற ஓவியங்களும் உள்ளன. பிம்பேட்காவிலேயே பழக்கப்படுத்தப்பட்ட யானைகளின் படங்கள் உள்ளன. கற்காலத்திலேயே யானைகளை பழக்கப்படுத்திவிட்டார்கள் என தெரிகிறது. குட்டிகளை கொண்டுவந்து வளர்த்து பழக்கப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

இந்த ஓவியங்களின் காலக்கணிப்பு, உள்ளடக்கக் கணிப்பு ஆகியவை சர்வதேச அளவிலேயே செய்யப்பட முடியும். ஏனென்றால் இவை வரையப்பட்ட காலத்தில் மனிதர்கள் பெரும்பாலும் இன்றைய மொழிகளின் முன்வடிவாகிய தொல்மொழிகளைப் பேசியிருக்கலாம். அவை சைகைகளுடன் இணைந்த ஒலிக்குறிப்புகள் மட்டுமே. பண்பாடு என நாம் இன்று சொல்லும் எவையும் உருவாகியிருக்க வாய்ப்பில்லை.

இவை ஐந்தாயிரம் ஆண்டிலிருந்து இருபதாயிரமாண்டு வரை தொன்மையானவை. பொதுவாக மேலைநாட்டு ஆய்வாளர்கள் ஆசிய குகை ஓவியங்களின் காலத்தை மிகமிகக் குறைக்கவும் அதற்கு எதிர்வினையாக இந்திய, ஆசிரிய ஆய்வாளர்கள் அக்காலத்தை மிகவும் கூட்டிச்சொல்லவும் முயல்கிறார்கள். எல்லாமே ஊகங்கள் மட்டுமே.

தேன்வரந்தையின் முதற்குகை நெடுங்காலம் ஆட்டுப்பட்டியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்காக அமைத்த முள்வேலி மரங்களாக வளர்ந்துள்ளது. அது மழைநீர் செல்லும்பாதையாக மாறியிருப்பதனால் ஏழெட்டு அடி உயரத்துக்கு வண்டல் அங்கே படிந்திருக்கலாம். அதை அகற்றினால் அடியில்கூட ஓவியங்கள் இருக்க வாய்ப்புண்டு.

அப்பகுதி முழுக்க தொன்மையான கல்லாயுதங்கள் கிடைத்துள்ளன. கற்களை தீட்டி கூராக்கிய இடங்கள் அந்த தேய்வுடன் காணக்கிடைக்கின்றன. புதுக்கற்காலத்தில் அங்கே வேட்டைச்சமூகம் ஒன்று தழைத்திருந்தது என்பதற்கான சான்று அது. பொதுவாக கொஞ்சம் வறண்ட நிலத்திலேயே வேட்டைச்சமூகம் வாழமுடியும். ஏனென்றால் அவர்களிடம் உலோகம் இருக்கவில்லை. மரங்களை வெட்டவோ பெரிய விலங்குகளுடன் போராடவோ முடியாது. பெரிய விலங்குகள் ஏறி வரமுடியாத உச்சிப்பாறைகளில் வாழ்வதே அவர்களுக்குப் பாதுகாப்பானது.

மழைச்சாரல் வீசியது. மழை கோவை நோக்கி மலைகளை மூடியபடி செல்வதை மேலிருந்து கண்டோம். தொலைவில் அமராவதி அணைக்கட்டின் பின்நீர் ஒளியுடன் தெரிந்தது. முட்கிளைகள் காற்றில் வீசி வீசி மூச்சிளைத்தன. குகைபகுதியில் பெருமழை பெய்தால் சட்டென்று விசையுடன் நீர்ப்பெருக்கு உருவாகும் என சதாசிவம் சொன்னார். மதிய உணவுக்கு முன் கீழிறங்கினோம்.

தேன்வரந்தை தமிழகத்தின் பெரிய குகையோவியப் பரப்புகளில் ஒன்று. மத்தியப்பிரதேசத்தின் பிம்பேத்கா குகை ஓவியங்களே இந்தியாவில் பெரியவை. அவற்றை கண்டடைந்து, தொடர்ச்சியாக எழுதி உலக அளவில் நிறுவியவர் V. S. Wakankar. அதைப்போல இக்குகைகளையும் நிறுவவேண்டும். இவற்றை யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்பு பாதுகாப்புக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் சில ஆண்டுகளிலேயே இவை அழியவும் கூடும். தமிழகத்தின் பல குகை ஓவியங்கள் நெருப்பிட்டு சமைத்தல், மேலே பெயர் எழுதுதல் போன்றவற்றால் சிதைந்துகொண்டிருக்கின்றன.

காலக்குகை

இன்றைய பண்பாட்டின் முன்தொடர்ச்சி இக்குகை ஓவியங்களில் இல்லை. ஆனால் நம் பண்பாடு கருவடிவில் இவற்றில் உள்ளதைக் கண்டுகொள்ள முடியும். உதாரணமாக கைகோத்து நின்றிருக்கும் மனிதர்கள். கைகோத்துச் செல்வதைப் பற்றி, அதன் வழியாக தங்களை ஒரு குழுவாக, அதாவது கூட்டு உடலாக, உணர்வதைப் பற்றி எகிப்திய, மெசபடோமிய, பாபிலோனிய தொல்நூல்கள் பாடுகின்றன. ரிக்வேதத்தின் பல பாடல்களில் அந்த உருவகம் உள்ளது.

ஒட்டுமொத்தமான ஒரு மானுடவரலாற்றுப் பரிணாமச் சித்திரம் நம்மிடம் இருந்தாலொழிய இவற்றை புரிந்துகொள்ள முடியாது. ஓர் ஓவியத்தை பார்த்ததுமே நாமறிந்த வரலாறு அல்லது பண்பாட்டுடன் உடனடியாக பொருத்திக்கொண்டு அறுதியாக வகுத்துரைப்பதே பெரும்பிழை. ஆனால் அதுவே மிகுதியும் நடைபெறுகிறது.

மையநிலப்பயணம் பிம்பேத்கா

இக்குகை ஓவியங்கள் காட்டும் சித்திரம் மானுடப்பரிணாமத்தில் வேட்டை வகித்த பெரும் பங்களிப்பு குறித்தது. வேட்டைச்சமூகங்களே தங்கிவாழ்ந்துள்ளன. அவர்களே நிலம் பற்றிய அறிவுடையவர்களாகவும், போர்வீரர்களாகவும், நல்ல புரோட்டீன் உணவு உண்பவர்களாகவும், மிகுதியான ஓய்வுப்பொழுது கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர். குகை ஓவியங்கள் வேட்டையையே கலையாக, வழிபாடாக மானுட இனம் மாற்றிக்கொள்ளும் வளர்ச்சியை காட்டுகின்றன.

மானுடப்பரிணாமத்தில் பூசாரி என்பவன் (அரசன், சோதிடன், மந்திரவாதி, அறிஞன், சான்றோன், பாடகன், நடனக்கலைஞன், ஓவியன் என அனைத்தும் ஒன்றான ஆளுமை) வகிக்கும் பங்குக்கும் இவை சான்று. அவனில் இருந்தே இன்றுள்ள அறிவியக்கமே ஆரம்பித்திருக்க வேண்டும். நடனமாடும் அந்தப் பூசாரியில் இருந்து ஐன்ஸ்டீன் வரை ஒரு மாபெரும் வளர்ச்சிக்கோடு உள்ளது. அந்தச் சிறு ஓவியம் அளிக்கும் மெய்ப்பு என்பது அந்த மாபெரும் தாவலை ஒரே கணமென நாம் உணர்வதனால் உருவாவது.

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி- தூரன் விருதுகள் விழா, ஆகஸ்ட் 5,6
அடுத்த கட்டுரைஓர் அன்னையின் பயணம் -கடிதம்