குருபூர்ணிமா, கடிதம்

அன்புள்ள ஆசிரியர்க்கு

வணக்கம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் உள்ள கடுவெளி சித்தர் ஆலயத்தில் பூஜை செய்யும் பெரியவர் ஒருவர் என்னை உற்று பார்த்துவிட்டு வள்ளி மலைக்கு சென்று வர சொன்னார். ஆனால் என் காதில் படு சுத்தமாக வெள்ளிமலை என்றே விழுந்தது. உடன் வந்தவர்கள் வள்ளி மலை என்றுதான் அவர் சொன்னதாக கூறினார்கள் குழப்பத்துடன் அங்கிருந்து நகர்ந்து விட்டேன் இன்று வரை வள்ளி மலைக்கும் செல்லவில்லை. குரு பூர்ணிமாவுக்கு வெள்ளிமலை வர நினைத்ததும் இந்நிகழ்வு தான் நினைவிற்கு வந்து புன்னகையை ஏற்படுத்தியது அங்கே நான் வந்தது இதுவே முதல் முறை காட்டையோ மலைக்கிராமங்களையோ அறிந்தவள் அல்ல. வனத்துறையின் செக் போஸ்ட்டை கடந்த சிறிது நேரத்திலேயே சாலை ஓரம் மான்களை பார்த்தோம் அதில் ஒன்று பெரிய கொம்புகளை கொண்டது. பாதை வளைந்து மேலே ஏற துவங்கியதும் விழிகளை விலக்கவே இல்லை. மூங்கில்கள் செறிந்த பெரிய மரங்கள் நின்று இருந்த இடத்தில் காட்டின் ஒலியை முதன்முதலில் கேட்டேன் அங்கே உணர துவங்கிய ஆழ்ந்த அமைதி நித்யவனத்தில் இருந்து திரும்பும் வரை மனதில் இருந்தது.

இதுவரை தியானமோ ஊழ்கமோ அமைந்ததில்லை. அங்கிருந்த நாட்களில் சில மணித்துளிகளாவது அவ்வண்ணம் அமைந்தது. பாறையில் வெறுமனே அமர்ந்து மலைகளை பார்த்துக் கொண்டிருந்தோம் ஒரு சொல்லும் இல்லை உள்ளேயும் வெளியேயும். இங்கே அனைத்துமாகிய ஒன்று அங்கே மலை என்று நின்றிருந்தது. எம்.எஸ். அம்மாவின் மதுரம் பாடலை மீள மீள கேட்டோம் “மதுராதிபதே ரகிலம் மதுரம்” என்று முடியும் பொழுது ஆம் என்று எண்ணினோம். இருத்தல் என்பது இத்தனை இனிமையானதா? துயரங்கள் வலிகள் இழப்புகள் இருக்கலாம் ஆனாலும் மானுடர்க்கு மதுரம் அருளப்பட்டுள்ளது அளவுகள் மாறுபடலாம் ஒரு துளி மதுரம் இல்லாமல் ஆவதில்லை.

மேலும் குரு பூர்ணிமாவுக்கு வந்திருந்த அத்தனை பெண்களும் உணர்ந்த ஒன்று விடுதலை இனிய சுதந்திரம். கற்றலும் அறிதலும் மட்டுமேயான நேரங்கள். காட்டிற்கு நடுவில் இருந்தாலும் துளி அச்சமில்லை. நள்ளிரவு தாண்டியும் பேச்சுக்கள் வெடிச் சிரிப்புகள். முழுநிலவு நாளில் மழை இருந்ததால் நிலவை காண முடியவில்லை. இருந்தாலும் நிலவு வரும்வரை காத்திருந்து இரவு ஒரு மணிக்கு மேல் மேகங்களுக்கிடையே தெரிந்த நிலவை பார்த்துவிட்டே உறங்கினோம். ஊரில் என்றால் இதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. இரவு ஒன்பது மணிக்கு மேலே வெளியே வருவது என்பதே லேசான பதட்டத்தை தருவது. நடு இரவில் இங்கேயும் நிலவை பார்த்ததுண்டு கதவுகளை திறக்காமல் கிரில் கேட்டின் இடைவெளியில் தெரியும் துண்டு நிலவை. வெட்டவெளியில் துளியும் சுற்றுப்புற உணர்வு இல்லாமல் குளிரில் நிலவும் நாங்களும் மட்டுமே இருந்தோம்.

மூன்று நாட்களின் அத்தனை அமர்வுகளும் வெண்முரசு கலந்துரையாடலும் சிறப்பாக நிகழ்ந்தது. ஒத்த சிந்தனை உள்ள நண்பர்கள் ஒரே இடத்தில் சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. இறுதியில் நீங்கள் ஆற்றிய நித்யவனம் பற்றிய உங்களின் கனவுகள் மீதான உரை உணர்வெழுச்சி தரக்கூடியது. உண்மையில் அதை பற்றி அங்கே அதிகம் யோசிக்கவில்லை வீடு வந்து சேர்ந்ததும் தம்பியிடம் அதை பகிர்ந்துக் கொண்டபோது நெஞ்சு விம்மி கண்ணீர் வந்துவிட்டது. ஒரு ஆசிரியராக உங்களுக்கு செலுத்த வேண்டியது கூடிக்கொண்டே போகிறது. இறையருள் என்றும் உங்களுடன் நிற்க பிராத்திக்கின்றேன்.  நன்றி.

மிக்க அன்புடன்

தேவி. க

ஆவடி.

முந்தைய கட்டுரைஎந்த வழியில் நீ?
அடுத்த கட்டுரைதேவேந்திர பூபதி