தனியிடத்தில் நிகழ்பவை- கடிதங்கள்

துணைவன்: மின்னூல் வாங்க

துணைவன் நூல் வாங்க 

பெரும் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் உங்களின் புதிய வாசகன். ஒரு நடிகருக்கு நான் ரசிகன் என்பதை விட ஒரு எழுத்தாளருக்கு நான் வாசகன் என்பது எனக்கு பெருமை.அந்தப் பெருமை என் அறிவாற்றலையும், சிந்தனைத்திறனையும் வளர்க்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

சில மாதங்களாக நீங்கள் என் கவனத்தை சிந்தனை, எழுத்து, பேச்சுக்கள் மூலம் மிக வீரியமாக ஈர்த்துள்ளீர்கள்.

இன்று உங்களின் துணைவன் சிறுகதை தொகுப்பில் உள்ள “ஒரு தனி இடம்” என்ற கதையை படித்தேன். விடுதலையைப் போல இந்த கதையை ஒரு உலக தரத்தில் நிச்சயமாக திரைப்படமாக எடுக்க முடியும்.

வயிறு காய்ந்து உயிர் போகப் போற நிலையில்தான் மனிதனுக்கு உலகத்தில் இல்லாத அன்பு,கருணை,பச்சாதாபம் என அனைத்து நல்லெண்ணமும் பிரவேசிக்கத் தொடங்கும். கடவுள் குறித்த சிந்தனையும் எழும். ஆனால் வயிறு நிறைந்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் அவனது அற்ப புத்திகளாலும், பைத்தியக்காரதனங்களாலும் தான் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இழிசெயலுக்கும் தனக்குத்தானே ஒரு நியாயத்தை கற்பித்துக்கொண்டிருப்பான். ஆனால் அதற்கு இயற்கை சரியாக தன் பரிசை வழங்கி விடும்.

இந்தக் கதையின் களத்தில் மனித உள்ளத்தில் ஊடுருவி சப்த நாடிகளிலும் புகுந்து அவன் வேஷத்தை கலைத்திருக்கிறீர்கள்.நிச்சயம் நீங்கள் எழுத்தாளர் மட்டுமல்ல ஞானி ஆகவும் இருக்கக்கூடும்.

என்றும் பிரியமுடன்,

உங்கள் அன்பு வாசகன்,

மு.கோட்டைராஜ்

அன்புள்ள ஜெ,

துணைவன் சிறுகதை தொகுதியின் ஒரு தனி இடம் என்னை உலுக்கிய சிறுகதை. ஒரு முழு திரைப்படமாகவே அதை எடுக்க முடியும். அந்த ஒரு குடிலில் இருவரும் சந்திக்கும் காட்சி மட்டும் கிளைமாக்ஸ் ஆக இருந்தால்போதும். என்ன ஒரு வலுவான கதை. 136 கதைகளை வாசித்தபோது இனிமேல் என்ன இவர் எழுதிவிடமுடியும் என நினைத்தேன். இந்தக் கதை முழுக்கமுழுக்க புதிய கதை. இதுவரை தமிழிலே எழுதப்படாத கதையும்கூட

ஆனந்த்ராஜ்

முந்தைய கட்டுரைவேணுகோபால் -கடிதம்
அடுத்த கட்டுரைசனாதனம், கடிதங்கள்