கதையில் நாயகன் தற்கொலை செய்து கொண்டு விட்டான். கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. புத்தகத்தை மூடிவைத்து கண்களைத் துடைத்தான்.
எத்தனையோ முறை வாசித்திருக்கிறான். மறுபடி மறுபடி வாசிக்கிறான், ஒவ்வொரு முறையும் அழுகிறான். எப்படி ஒரு நாவல் இவ்வளவு சோகத்தை கொடுக்கிறது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அவன் அவனுக்காகவே எழுதிக் கொண்ட நாவல் அது. கிட்டத்தட்ட அவன் கதையும் கூட. அப்படியென்றால் அவனுடைய முடிவும் அதுதான் என்று மனம் நினைத்துக்கொள்கிறதோ.
குடும்பத்தோடு இருக்கும் மத்தியகிழக்கு வெளிநாட்டு வாழ்க்கை. ஒப்புநோக்க நல்ல வாழும் சூழல். ஆனால் சில காலமாக எதையோ தவறவிட்ட எண்ணம். எதையோ இழந்துவிட்ட பரிதவிப்பு அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்தது.
அப்படி என்னதான் நடந்தது.
முந்தய வாரம் அதிகாரிகளுடன் நேர்முகம் முடிந்திருந்தது. வழக்கம் போலவே வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். வழக்கம் போல தோற்றம், ஊர், மொழி, மதம் போன்ற சிறுமைகள் முந்திச் சென்று இடம் பிடித்திருந்தன. வழக்கம் போல நீ மிக முக்கியமானவன் நீ இல்லையென்றால் எங்களுக்கு வேலை நடக்காது அடுத்த முறை கண்டிப்பாக பதவி உயர்வு கிடைக்கும் என்றார்கள். காரணங்கள் அடுக்கப்பட்டன.
பொய்யை மறைக்க எத்தனை அழகான, இனிமையான, மனதை மறைக்கும் திரைகள் தேவைப்படுகின்றன. குப்பையை மூடி மறைக்கும் அழகிய துணிகள். அதை மறைத்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சிறு மனங்கள். X- Ray கதிருக்கு சதைகளைத் தாண்டி பார்க்கும் பார்வை இருக்கிறது என்று தெரியாத அற்பர்கள். சிறுமையில் உழலும் சிறுமைகள்.
கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை என்பதை விட அதிலிருந்த நடிப்பும், அற்ப மேட்டிமைத்தனமும் அவனை கொந்தளிக்க வைத்தது. இனி ஒரு கணமும் அங்கிருக்க கூடாது என்று நினைத்த அக்கணமே குழந்தைகளின் படிப்பும், அந்த பணியால் கிடைக்கும் உலகியலும் முகத்தில் அறைந்தன.
தீக்கங்குகளை மண்ணிட்டு மூடுவது போல, உலகியலால் மூடினான்.
***
இரண்டு நாட்கள் கழித்து, அமைதியாக யோசித்தபோது, எப்போதும் இல்லாமல் சிறு நிகழ்வுகளை ஊதிப் பெருக்கி அதிகமான உணர்ச்சிவசப் படுவதாக தோன்றியது.
வேறு எதுவோ உள்ளுக்குள் நிகழ்கிறது என்றும் தோன்றியது. நாட்கள் நகர்ந்தன.
குளிர் கால தொடக்கத்தின் ஒரு மாலை நேரம் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. மருத்துவமனை சென்றான். வெப்ப மாறுபட்டினால் ஏற்படும் பிரசினை, கவலைகொள்ள தேவையில்லை என்று சோதனைகளுக்கு பிறகு சொன்னார்கள்.
மறுபடியும் நாவல் நினைவுகளில் படிந்தது. ஏனென்றால், அப்படித்தான் நாவலிலும் இருந்தது.
அதுதான் தலைவிதியா, அப்படித்தான் நடந்தாக வேண்டுமா? இல்லை, அதைத் தாண்டும் வழி கண்டிப்பாக இருக்கும். கண்டடைவேன். என்று நடு இரவில் கண்விழித்து, கண்மூடி அமர்ந்திருந்தான்.
காலையில், பெங்களூருவிலிருந்து நண்பன் பேசினான். “என்ன செய்கிறாய் சிறிது நாட்கள் இங்கு வந்து விட்டு போ” என்று அழைத்தான். கிளம்பிச் சென்றான்.
நண்பன் அவனை தியான வகுப்பில் சேர்த்துவிட்டான். மூன்று நாட்கள் கைபேசி இல்லாத, வெளியுல தொடர்பு இல்லாத வேறொரு சூழல். கண்கள் மூடி மறுபடி மறுபடி உள்ளே உள்ளே என்று செல்லச் சொன்னார்கள். அவனுக்கு தூங்கித் தூங்கி எழுந்தது போலிருந்தது.
தியான வகுப்பு முடிந்ததும் ஆயுர்வேத மருத்துவமனையில் கை பிடித்து பார்த்த மருத்துவர், “என்ன வேலை செய்கிறீர்கள் இப்படி பித்தம் ஏறிக் கிடக்கிறது” என்று கேட்டார். உடனடியாக மூன்று நாட்களுக்கான “பஞ்சகர்மா” சிகிழ்ச்சையை ஆரம்பித்தார்.
மருத்துவமனை பெங்களூரு நகரின் மேற்கு மலைத்தொடரின் சரிவில், நகரின் இரைச்சல்கள் தாண்டி, தோட்டங்கள் நடுவே அமைக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு அருகில் ஒரு சிறிய குடும்பம் தன் மாடுகளோடு காட்டுக்கு நடுவே குடில் அமைத்து தங்கியிருந்தது. நாளின் மாலைகள் தூறல்களை விசிறியடித்த பிறகு மறைந்தன. காலை எட்டு மணிக்கு சிகிழ்ச்சை மற்ற நேரமெல்லாம் ஓய்வு, வாசிப்பு என்று கழிந்தது. மூன்றாவது நாள் மாலை பால்கனியில் அமர்ந்து விஷ்ணுபுரம் நாவல் வாசித்துக் கொண்டிருந்தான்.
அந்தி வெளிச்சம் மலைகளின் ஊடாக மரங்களுக்குள் புகுந்து தரையில் எதையோ தேடியது. ஒரு விவசாயி தெளிப்பு நீரை திறந்துவிட்டு, ஆடுகளை மேயவிட்டுக் கொண்டிருந்தார். ஓரிடத்தில் தெளித்து முடிந்ததும் வேறிடம் மாற்றி வைத்தார்.
தெளிப்பான் மறுபடி மறுபடி தனக்குள் சுற்றி சீத் சீத் என்ற சத்தத்துடன் நீண்ட குதிரை வால் போல தண்ணீரை செடிகளுக்கு தெளித்துக் கொண்டிருந்தது. சட்டென ஒரு கவனத்தில், மலையிலிருந்து சாய்வாக விழுந்த சூரியக்கதிரில் தெளிநீர்த் துளிகள் வானவில் நிறம் கொண்டன. ஒரு கணம், இரண்டு கணம் அவ்வளவுதான். இடம் மாறி வண்ணங்கள் மறைந்தன.
பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சாரல் சூழ்ந்தது. சூரியக்கதிர் மழையாக பொழிந்து மண்ணுக்குள் இறங்கி மறைந்தது.
ஈசல்கள் பறந்து தொல்லை கொடுத்தன. அறைக் கதவை மூடி அறைக்குள் வந்து அமர்ந்தான். கதவின் கீழிருந்து இறகை உதிர்த்த ஈசல்கள் எறும்புபோல ஊர்ந்து வந்தன.
என்ன உயிர்கள் இவை. மண்ணில் உழன்று மண்ணிலேயே மறைந்து போகும் சிதல் கூட்டத்தால், மண்ணை விட்டு, மேலெழுந்து வானம் பார்க்க படைக்கப்பட்ட பறவைகள், சிறகுகளை ஏன் உதிர்க்கின்றன. பறவைகள் உண்ணும் வரை, பறந்து பறந்து இறகு ஒடிந்து விழுவது வரை, வாழ்வின் எல்லை தொடும் முடிவின் வரை பறந்து செல்ல வேண்டியது தானே. சிறு கொசுவும், ஈயும் கூட சாகும் வரை தன் சிறகை வைத்துக்கொள்கிறதே. என்ன வாழ்க்கை வாழ்கின்றன இந்த சிற்றுயிர்கள். மகத்தான, கிடைத்தற்கு அறிய சிறகுகளை ஏன் உதிர்க்கின்றன.
இரண்டு ஈசல்கள், சுவரை ஒட்டியபடியே வந்தன, படுக்கையின் அடியில் சென்று மறைந்தன. அப்போதுதான் ஒன்று உரைத்தது. அவை இரண்டும் தனக்கான மண்ணைத் தேடுகின்றன. மண்ணில் இறங்கி இனத்தை பெருக்கி மண்ணில் மக்கிப் போக இடம் தேடுகின்றன.
அப்படியென்றால் வாழ்க்கை முழுதும் உண்டு கழித்து பெருங்கனவுடன் பெற்ற அவற்றின் சிறகுகள் பறப்பதற்கானவை அல்ல, இடப்பெயர்வுக்கானவை.
பறக்கும் தோறும் அவை உண்ணப் படலாம், பிற உயிர்களால் மிதித்து கொல்லப்படலாம், அது இறங்கும் இடம் மண்ணாக இல்லாமல், அதனால் நுழையமுடியாத கான்கிரீட்டாக இருக்கலாம். ஆனால் அந்த உயிர்கள் மண்ணிற்கு என படைக்கப்பட்டவை. அதன் தேடல் மண்ணை நோக்கியே இருக்கும். மண்ணில் மக்கிப் போகவே படைக்கப்பட்டவை.
நான்கு சிறகுகள். குடும்பமும் அதன் சமூகமும் கொடுத்த ஒன்று. கடந்தகால பதிவுகளை சுமந்த ஒன்று, உறவுகளை சுமந்த ஒன்று, தான் கண்டுவந்த கனவுகளால் ஆன ஒன்று.நான்கு சிறகுகளையும் ஒவ்வொன்றாக உதிர்த்து அது தன் மண்ணை கண்டடைய முயற்சிக்கிறது.
மண்ணில்தான் அதன் வாழ்வு. பறந்தாலும் அது மண்ணையே நினைக்கிறது. மண்ணையே பார்க்கிறது. வானம் அதற்கான இன்ப வெளி கிடையாது, சிறிது பறந்ததும் அதன் ஆன்மாவில் சிறகுகள் கனக்க ஆரம்பிக்கிறன. வானம் அதற்கு பாதையாக மட்டுமே இருக்கிறது. தூரம் கடந்ததும் சிறகுகள் பாரமாகின்றன.
சிறகுகள் சுமையாகும் தருணத்தை கண்டடையும் தருணம் அதற்கு தோன்றுகிறது. அப்போது, அதை உதிர்த்து மண்ணை நோக்கிய தன் பயணத்தை தொடர்கிறது.
அது விழும் இடம் கான்கிரீட் ஆக இருக்கலாம். எறும்புகளால் உண்ணப் படலாம், காலில் மிதிபட்டு நசுங்கலாம் ஆனால் அது மண்ணை தேடி ஆகவேண்டும். அதுவே அதன் ஆன்மாவின் பதிவு. அதுவே அது செல்ல வேண்டிய பாதை.
படுக்கைக்குள் ஊர்ந்து கொண்டிருந்த ஈசல்களை பிடித்து ஜன்னல் வழியாக தோட்டத்தில் எறிந்தான். விடுமுறை முடிந்து மறுபடியும் வேலையில் சேர்ந்தான். நாவலில் நாயகன் தற்கொலை செய்துகொண்டான். நாவல் நாவலாகவே இருந்தது.
இரண்டு மாதங்கள் கழிந்தன. குரு பூர்ணிமா வெண்முரசு கூட்டத்தில் கலந்து கொண்டான். மறுநாள் காலை தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து வந்தான்.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.