வெண்முரசு நாள் உரையாடல்

குருபூர்ணிமா 2023 அன்று வெண்முரசு நாள் கொண்டாடப்பட்டது. வியாசனை, உலகமெங்குமுள்ள ஆசிரியர் நிலையிலுள்ள ஆளுமைகளை நினைவுகூரவும் போற்றவும் அந்நாளை பயன்படுத்திக் கொண்டோம். இம்முறை இது நான்குநாள் விழா.

ஜூலை 1 அன்று காலை முதல் ஜூலை 4 மாலை வரை. ஜூன் 1 காலையில் நான் குருபூர்ணிமையை ஒரு அறிவுவணக்க நாளாக கொண்டாடுவது பற்றி உரையாற்றினேன். மாலையில் அந்தியூர் மணி சைவ மரபில் திருவுந்தியார் – திருக்களிற்றுப்படியார் நூல்களின் ஆசிரியர்களின் குருமரபு பற்றி பேசினார். ஜெயராம் ஓவியத்தில் அவருக்கு ஆசிரியராக அமைந்த கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி பற்றி பேசினார்

குருபூர்ணிமா நிலவு 3 ஜூலை 2023

ஜூலை 2 காலையில் நான்  வியாசர்- பிரகஸ்பதி (குரு) என்னும் இரண்டு மெய்யியல் மரபுகளின் முரணியக்கமாக இந்திய சிந்தனை முறை உருவாகியிருப்பதைப் பற்றிப் பேசினேன். மாலையில் விஜயபாரதி ஈரோடு ஜீவானந்தம் பற்றி பேசினார். ஶ்ரீனிவாஸ் கம்பன் என்னும் ஆசிரியன் பற்றிப் பேசினார்.

ஜூலை 3 காலையில் அஜிதன் மேலைத் தத்துவத்தில் ஹ்யூம்- காண்ட்- ஷோபனோவர் என்னும் ஓர் ஆசிரிய – மாணவ வரிசை உண்டு என்று விரிவாக பேசினார். அவர்கள் நேர்மாணவர்கள் அல்ல, ஒருவர் சிந்தனையை இன்னொருவர் முரண்பட்டு, விரிவாக்கி வளர்த்தனர். அவர்களின் தத்துவநோக்கு குறித்து சுருக்கமான அறிமுகம் அளித்தார்.

மாலையில் தில்லை செந்தில் பிரபு குருவணக்கச் சடங்குகளைச் செய்தார். வெண்முரசு பற்றிய கேள்விபதில் மூன்று மணி நேரம் கொட்டும் மழையில் நடைபெற்றது. அதன்பின் இரவில் குளிரில் குருபூர்ணிமா உரை நிகழ்ந்தது.

ஜூலை நான்கு காலை கிளம்பி ஈரோடு வந்தேன். ஈரோடு விடுதியில் தங்கியிருந்தேன். நண்பர்கள் உடனிருந்தனர். மாலையில் உலகமெங்குமுள்ள வெண்முரசு வாசகர்களுடன் சூம் செயலி வழியாக ஓர் உரையாடல். இன்னொரு இனிய நிகழ்வுத்தொடர்.

இவ்வாண்டு வெண்முரசு வாசிக்கத் தொடங்கியவர்களின் எண்ணிக்கை மகிழ்வூட்டுகிறது. இந்நிகழ்வின் நோக்கமே புதிய வாசகர்கள் உள்ளே வருவதுதான். வெண்முரசு தொடங்குவதற்கு ஒரு மலைப்பை அளிக்கும் பெரிய நூல் நிரை. ஆனால் தொடங்கியவர்கள் பெரும்பாலும்  அதை வாசித்து முடித்துள்ளனர். ஒரு வாழ்நாள் அனுபவமாக அதை நிகழ்த்தினர். பலர் மீண்டு வராமல் அதிலேயே நீடிக்கவும் செய்கிறார்கள்.

முந்தைய கட்டுரைஒளிப்படக்கலைஞர் கே.ஜெயராம் : அஞ்சலி
அடுத்த கட்டுரைமரபிசை, கிறிஸ்தவ பாடல்கள்