கிறிஸ்தவப்பாடல்கள், கடிதம்
அன்புள்ள ஜெ.,
நான் படித்த நிலக்கோட்டை நாடார் நடுநிலைப்பள்ளியில் இறைவணக்கப்பாடல்கள் ‘சர்வலோகாதிப நமஸ்காரம்‘ மற்றும் ‘பாடுங்கள் இறைவனுக்கு…’.ஆசிரியர்கள் பெயரும் ஜெர்மன், வயலெட், ஜார்ஜ், கோமதி பெர்னதெத் இப்பிடித்தான். இரண்டாவது பாடலில் ‘எக்காளத் தொனியுடனே யாழிசை மீட்டிடப் பாடுங்கள்‘ என்ற வரியில் வரும் ‘எக்காளம்‘ Carole என்கிற களிகூறும் பாடல் வடிவத்திற்கு சரியான தமிழ் வார்த்தை. எங்கள் வீட்டுக்கு முன் கிறிஸ்துமஸ் ‘கெரோல்‘ வரும்போது ஒவ்வொரு வருடமும் ‘பிறந்தார் பிறந்தார்‘ பாடலைப் பாடச்சொல்வார் அம்மா. ஊரில் இரண்டு சர்ச் உண்டு. கிறித்துவ நண்பர்களும் உண்டு. எனவே கிறித்தவ கீதங்களுக்கு காது திறந்திருந்தது.
பள்ளிக்கூடம் சேர அன்றெல்லாம் ஆறுவயது வரை காத்திருக்கவேண்டும். அப்பிடி தண்டமாக வீட்டைச்சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் இருபத்தேழு நட்சத்திரங்களின் பெயர்கள், திதிகளின் பெயர்கள், தமிழ், ஆங்கில மாதங்களின் பெயர்கள், சில தமிழ், சமஸ்க்ருத சுலோகங்கள், இவற்றோடு அம்மா பாத்திமா கல்லூரியில் படித்த இறைவணக்கப் பாடலான First I must honour God ஐ யும் தலையில் ஏற்றி ஒருமாதிரி என்னைச் செதுக்கிக்கொண்டிருந்த காலகட்டம். 1970 களின் இறுதியில் அன்றைக்கெல்லாம் திருச்சி, கோவை மற்றும் சற்றே கொரகொரப்பான சென்னை வானொலி இவைதான். நல்ல தெளிவான இலங்கை வானொலி கூடுதலாக. காலையில் துதிப்பாடல்களில் மூன்றுமதப் பாடல்களும் போடுவார்கள். கிறித்துவத்திற்கு ஜிக்கி, இஸ்லாத்திற்கு நாகூர் ஹனிபா கட்டாயம் உண்டு. ஜிக்கி லீவி‘ல் போயிருந்தபோது ஜெயச்சந்திரனும், ஜேசுதாசும் பாடிய பாடல்கள் இவை.
‘எனக்கொரு நண்பன் உண்டு‘ கானடா ராகத்தில் ஜெயச்சந்திரன் பாடியது. இளநுங்கை நினைவுறுத்தும் ஜெயச்சந்திரனின் குரல் இப்படித்தான் அறிமுகம் என்று இப்போது தோன்றுகிறது.
https://www.youtube.com/watch?v=pVWeejx5SQU
எனக்கொரு நண்பன் உண்டு
அவன் தனக்கென வாழாத்
தலைவன் தலைவன்
நண்பனின் நாமம் இயேசு
என் மனமே அவனுடன் பேசு பேசு
எனக்கொரு நண்பன் உண்டு
மனப்போர் நிலவும் நாளில்
எனக்கோர் உறவு என்று
வருவான் எனது நண்பன்
தருவான் என்னிடம் தன்னை
ஏழையின் வேடம் தன்னில்
என்முன் வருவான் நண்பன்
ஏந்தும் கைகளில் எல்லாம்
எடுத்துத் தருவேன் என்னை
முகிழ்ந்த உறவால் இன்று
மகிழ்ந்து நின்ற இதயம்
உலகின் படைப்பில் எல்லாம்
காண்பேன் அவன் உருவம்
“உனையன்றி எனைக் காக்க” ஜேசுதாஸ் பாடியது. இன்ன ராகம் என்று பின்னூட்டத்தில் இல்லாததால் அம்மாவிடம் கேட்டேன். அவர் இந்தப் பாடலின் தொடர்ச்சியாக ‘ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாசனேஸ்வரி‘ மற்றும் ‘மீரா‘ வின் ‘எனது உள்ளமே..’ பாடி செஞ்சுருட்டி என்றார்.
https://www.youtube.com/watch?v=tR-C_zykw8s
உனையன்றி எனைக் காக்க
உலகினில் யார் உளர்
மரித்தாயின் புதல்வா தேவா
தினம் கோடி பக்தர்கள்
தொழுதேத்திப் புகழ் பாடும்
இடைவிடா சகாயத் தாயின்
திருக்குமரா திருக்குமரா
வினைதீர்க்க வந்தாய் நீயே
வெந்து உளம்நொந்து மடிந்தாய் நீயே
எனைமீட்க துயர் தனைப்போக்க
உந்தன் உயிர்தந்து உயிர் காத்த
இடைவிடா சகாயத் தாயின்
திருக்குமரா திருக்குமரா
கருணைக்கடல் நீயன்றோ
அன்னைக்கனிவுள்ள சுனையும் அன்றோ
பரிவுள்ள அன்புச் செறிவுள்ள
உந்தன் பதம்போற்றி நிதம் தேடும்
இடைவிடா சகாயத் தாயின்
திருக்குமரா திருக்குமரா
இந்த மென்பாகுக்குரலோன் ‘அன்னைக்கனிவுள்ள சுனையும்‘ என்ற வரியில் வரும் சுனையை ஷுனை என்று பாடும்போது ‘ஷிப்பி போன்ற இதழ்கள்‘ என்றும், ‘ஷேர்ந்த பல்லின் வரிசை‘ என்றும் பின்னாளில் அவர் பாடிய ‘ராஜ பார்வை‘ பாடல் நினைவுக்கு வருகிறது.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்