குழந்தைக்கு ஜுரம்- தி.ஜானகிராமன்
அன்புள்ள ஜெ
தி.ஜானகிராமன் எழுதிய குழந்தைக்கு ஜுரம் என்னும் சிறுகதையை வாசித்திருப்பீர்கள். அதில் சரவண வாத்தியார் பாடநூல்கள் எழுதுபவர். பஞ்சாபகேசன் என்னும் பதிப்பாளரிடம் ஒரு புத்தகத்துக்கு ஊதியம் 50 ரூபாய் என்னும் கணக்கில் 20 நூல்கள் எழுதிக்கொடுக்கிறார். கையொடிய எழுதிக்கொடுத்த நூல்களுக்கான ராயல்டியில் எல்லா பணமும் கொடுத்தாகிவிட்டது என பஞ்சாபகேசன் ஒரேயடியாக சொல்லி ஏமாற்றிவிடுகிறார். மனமொடிந்த வாத்தியார் அந்நேர ஆவேசத்தில் இனி உன் படி மிதிக்கமாட்டேன் என்று சூளுரைத்துவிட்டு கண்ணீருடன் வந்துவிடுகிறார். எழுதிக்கொடுத்து இன்னும் அச்சிடாத நூலைக்கூட திரும்ப வாங்கவில்லை.
வாத்தியாரின் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. மருந்து வாங்க பணமில்லாமல் பரிதவிக்கிறார். மனைவி பலமுறை வற்புறுத்தியதனால் பஞ்சாபகேசனை போய் பார்க்கிறார். பஞ்சாபகேசனின் மனைவிக்கு அப்போது ஏதோ நோய் வந்து வலிப்பு வருகிறது. துணைக்கு ஆளில்லை. வாத்தியார் அங்குமிங்கும் ஓடி ஒரு ஜட்கா பிடித்துவந்து அவளை ஏற்றி கொண்டுசென்று தனக்குத்தெரிந்த பராங்குசம் என்னும் டாக்டரிடம் காட்டுகிறார். நோய் பெரிதாக ஒன்றுமில்லை என்று சொல்லி பராங்குசம் மருந்து கொடுக்கிறார். ரிக்ஷாவுக்கு வாத்தியார் தன்னிடமிருந்த சொற்பக்காசை கொடுத்துவிடுகிறார்.வாத்தியாரின் குழந்தைக்கும் மருந்துகொடுத்து பணம் அப்புறம் வாங்கிக்கொள்வதாகச் சொல்கிறார்.
கதை இப்படி முடிகிறது. “ ஹிஹிஹிஹி என்று யாரோ இருளில் சிரித்தார்கள். பாதி பயத்திலும், பிரமையிலும் ற்றுப் பார்த்தார் அவர். ஜட்கா ஸ்டான்ட் குதிரை ! புல் தின்கிற சவடாலில் அது கனைத்தது. சரவணத்திற்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. வீடு போகிற வரையில் சிரித்துக் கொண்டே போனார். நிலவு எழுந்ததைக் கண்டு பொழுது புலர்ந்த திகைப்பில் நாலைந்து நார்த்தங் குருவிகள் தோப்பில் சிரித்துக் கொண்டிருந்தன”
அறம் வாங்க
அறம் மின்னூல் வாங்க
கதை சுமாரான ஒன்றுதான். ‘அரேஞ்ச்ட்’ என்று சொல்லத்தக்க நிகழ்ச்சிகள். வாத்தியார் போகும்போது பணக்காரரான பஞ்சு மனைவி நோயுற்று, உதவிக்கு ஆளில்லாமல் பரிதவிப்பதும் சரி: பராங்குசம் நினைவு குழந்தைக்காக மருந்துக்குப் பணம்தேடி அலைமோதும்போது வாத்தியாருக்கு ஞாபகமே வராமல் போவதும் சரி இன்றைக்கு வாசிக்கும்போது பழைய விகடன் கதைகள் போலத்தான் உள்ளன. திஜாவின் கணிசமான கதைகள் இதேபோல ஜோடனைகளாகவும், உரையாடல் வழியாக சொகுசாக கொண்டுபோகப்பட்டவையாகவும்தான் இருக்கின்றன என் வாசிப்பில்.
கதையிலுள்ள மையம் வழக்கமான ’பகைவனுக்கருள்வாய்’ ஐடியாதான். ஆனால் இந்தக் கதை எனக்கு நீங்கள் எழுதிய அறம் கதையை நினைவுபடுத்துகிறது. தி.ஜானகிராமன் எம்.வி.வெங்கட்ராமுக்கு நெருக்கமானவர். இந்த இரண்டு கதைகளும் ஒரே சம்பவத்தை வைத்து எழுதப்பட்டவையா? எனக்கு அந்த பதிப்பாளர் மனைவி கதாபாத்திரம் சுவாரசியமாக இருந்தது. எவ்வளவு வேறுபாடு என நினைத்துக் கொண்டேன்.
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,
நான் இந்தக்கதையை வாசித்திருக்கவில்லை. தி.ஜாவின் பெரும்பாலும் எல்லா கதைகளையும் வாசித்திருக்கிறேன். இக்கதை எவராலும் எங்கும் பெரிதாகச் சொல்லப்படாதது காரணமாக இருக்கலாம்.
தி.ஜானகிராமனுக்கு பள்ளி ஆசிரியர் வாழ்க்கைமேல் ஒருவகை கவற்சியும் கூடவே மதிப்பின்மையும் இருந்துள்ளது. அவர் ஆசிரியராக இருந்தவர். அன்று ஆசிரியர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே அளிக்கப்பட்டது. மிகமிக எளிய வாழ்வே இயன்றது. அத்துடன் கடுமையான சமூகக் கண்காணிப்பு வேறு. ஆகவே ஒருவகை ஆசார வாழ்க்கையை மட்டுமே வாழமுடியும்.
தி.ஜா ஆசிரியர் வாழ்வில் இருந்து தப்பி டெல்லி சென்று மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றினார். வெளிநாட்டுப் பயணங்கள், உயர் இடத் தொடர்புகள் அமைந்தன. குடும்பச்சூழ்நிலை மேம்பட்டது. ஆனால் அவர் கடைசிவரை டெல்லியுடன் ஒட்டவில்லை. அவர் கதைகளில் டெல்லி கசப்புடனும் எள்ளலுடனும்தான் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மாறாக ஏக்கத்துடன் மட்டுமே அவர் காவேரிக்கரையை சித்தரித்துள்ளார். கும்பகோணம் புழுதியைச் சொல்லும்போதுகூட அந்த ஏக்கம் காணப்படுகிறது. அந்த ஏக்கமே அவரை எழுதச் செய்தது என்றுகூடப் படுகிறது. அவர் எழுதிய கும்பகோணம் அவர் மாணவனாக, இளைஞனாக வாழ்ந்த பழைய நினைவுகளிலுள்ள கும்பகோணம்தான்.
சுந்தர ராமசாமி ஒருமுறை பேசும்போது சொன்னார். “தி.ஜா கும்பகோணத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் இன்னும் நிறைய எழுதியிருப்பார். இன்னும் நன்றாகவும் எழுதியிருக்கக்கூடும்” எனக்கு அது உண்மை எனப் படவில்லை. அவருடன் இருந்த, ஆசிரியர்களாக பணியாற்றிய, கரிச்சான்குஞ்சு போன்றவர்கள் எழுதாமலேயே ஆனார்கள் என்பதே யதார்த்தம். தி.ஜாவை வறுமை அரித்திருக்கும். கும்பகோணத்தின் தேக்கநிலை அவரை ஆசாரவாதம் நோக்கி கொண்டுசென்றாலும் வியப்பில்லை – சுவாமிநாத ஆத்ரேயன் அப்படி தேங்கிவிட்டார்.
எம்.வி.வெங்கட்ராமின் கதை ஒன்றும் ரகசியமல்ல. அவரே என்னிடம் சொன்னதுதான். தி.ஜா அதை நன்கறிந்திருப்பார். அவர் எம்.வி.வியின் நண்பர். அந்தக்கதையை அவர் நன்கறிந்த ஆசிரியரின் வறுமை மற்றும் ஆசிரியரின் அறக்கட்டாயங்கள் ஆகியவற்றுடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்
ஜெ