வீழ்ச்சியும் மீள்வும்

பின்தொடரும் நிழலின் குரல் வாங்க

பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க 

இபா ஒரு கதையில் அமெரிக்க வாழ்க்கையில் ஒருவன் ஹிப்பியாவதும் இந்திய வாழ்க்கையில் ஒருவன் கம்யூனிஸ்டாவதும் யோக்கியமான காரியங்கள் என்பார். 90களுக்கு முற்பட்ட இந்தியாவில் பலருக்கு கம்யூனிஸம் பற்றி இருந்த அபிமானம் கலந்த பிரமிப்பு எனக்கும் வெகு காலம் இருந்தது.

91ல் ரஷ்யாவின் சிதறல் எனக்கு ஏதோ ஒரு விதத்தில் தனிப்பட்ட மன வருத்தம் தந்தது.அப்போதைய சமகால இந்திய கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் அதை எப்படி ஏற்றுக்கொண்டிருந்திருப்பார்கள் என்ற கேள்வி வெகுகாலம் என் மனதில் எழுந்ததில்லை. நான் பார்க்கும் காலத்திலேயே கம்யூனிஸ்ட்கள் ஜனநாயக வழிக்கு வந்த ‘திரிபுவாதிகள்’தாம். அதற்கு முந்தைய புரட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்து பாராளுமன்ற ஜனநாயகம் என்கிற அமைப்புக்குள் வந்தது எப்படி நிகழ்ந்திருக்கும் என்பது பற்றியோ எனக்குக் கற்பனையே இருந்ததில்லை. அது பற்றிய (கிட்டத்தட்ட ஒரு 70ஆண்டு கால) வரலாற்றைப் புனைவு வழியாக அணுகுவது என்ற முறையில் பின் தொடரும் நிழலின் குரல் ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

கம்யூனிஸம் இதில் ஒரு பேசுபொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறதே தவிர அதன் வெற்றி தோல்வியுடன் இந்த ஆக்கம் முடிந்து விடவில்லை. அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு உலகில் ஆட்சி, அதிகாரம் முதலியவை தோன்றிய காலம் முதல் நடந்தது, நடப்பது எல்லாவற்றையும் பற்றிய பிரம்மாண்டமான பார்வை இதில் எனக்குக் கிடைத்தது. ஆனாலும் 710 சொச்சம் பக்கங்களைப் படித்து முடித்தபின்னும் இன்னும் இந்த நாவல் சொல்லாமல் விட்டவற்றை மனதால் உய்த்தறிய முயன்றால் முட்டிமோதிக்கொண்டு மனதில் பீறிடும் எண்ணங்களை எழுத்தில் பதிய முயன்றால் அவை ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு விரியக்கூடும்.

கண் தெரியாதவர்கள் யானையைப் பார்ப்பது பற்றிக் கதை கேள்விப்பட்டிருக்கிறோம். கண் தெரிந்தாலும் மனிதர்களால் யானையை முழுதும் அறிந்துகொள்ள முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது. அதுபோல வரலாற்றை நாம் தகவல்களாக எவ்வளவுதான் படித்தறிந்தாலும் அதை முழுதாக நம்முள் இறக்கிக்கொள்ள முடியாது. இது போன்ற புனைவின் வழியாக வரலாற்றை அணுகும்போது கிடைக்கும் மனவிரிவு மனதை மேலும் மேலும் திறந்துவைக்கிறது.

சித்தாந்தவாதிகளுக்கும் செயல்வீரர்களுக்கும் தொடர்ந்து நடக்கும் மோதலே இந்தக் கதையின் மைய இழை. வரலாற்றை முன் நகர்த்திச் செல்ல இருவருமே தேவைப்படுகிறார்கள். ஆனால் இருவருக்குமே மற்றவர் மீது அச்சம் இருக்கிறது. ஒருவர் தோளில் ஒருவர் ஏறி நிற்கிறார்கள் தாங்குகிறவர்கள் எப்போது காலை வாரிவிடுவார்களோ என்ற பதற்றம் நிரந்தரமாக இருக்கிறது.

சித்தாந்தவாதிகள் அறிவின் துணைகொண்டு எதையும் தர்க்கரீதியாக நிறுவி நியாயப்படுத்தும் முயற்சியில் அந்த சித்தாந்தத்தையே பொருளற்றதாகச் செய்துவிடக்கூடிய ஒரு வறட்டுத்தனத்தைத் தங்கள் தோலாகச் செய்து சுயநலத்தை அதற்குள் மூடிக்கொள்கிறார்கள். செயல்வீரர்கள் மக்களுடன் தொடர்புகொண்டு மக்கள் மொழியில் பேசி உணர்ச்சிபூர்வமாக அணுகுகின்றனர். அவர்களிடம் வறட்டு தர்க்கம் இல்லாவிட்டாலும் செயல்வீரர்களாக இருப்பதன் காரணமாகவே கள நடைமுறை பல சமரசங்களை செய்துகொள்ள வேண்டிய சூழலை உருவாக்குகிறது. வரலாற்றின் களத்தில் இருதரப்பினருமே மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் பலியிட்டுக்கொள்கிறார்கள். அதற்கான நியாயங்கள் இரு தரப்பிடமும் இருக்கின்றன. ஆழ்ந்து யோசித்தால் இந்த மோதல் கம்யூனிசம் மட்டுமல்ல, எந்த ஒரு சித்தாந்தம் அல்லது அமைப்புக்கும் (மதங்கள் உட்பட) பொருந்திவரும். மதஅடிப்படைவாதிகள் தங்கள் மதம் போதிக்கிற அறங்களை மீறியே தங்கள் மதம் காட்டுகிற பொன்னுலகத்தை ஸ்தாபிக்க வேண்டியுள்ளது என்பது இந்த நாவலைப் படிக்கும்போது மீண்டும் மீண்டும் என் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. அப்போது சமாதானங்கள் செய்துகொள்ள வாகாக மீறல்களை நியாயப்படுத்த வேண்டிய விதிகளை அவர்களே எழுதச் செய்கின்றனர். கேகேஎம்முக்கு வீர்பத்ரபிள்ளை, ஸ்டாலினுக்கு ட்ராட்ஸ்கி அருணாசலத்துக்குக் கதிர்….. இந்த இணைகளின் சங்கிலி முடிவற்றது.

இந்த சித்தாந்தப் போராட்டங்களையும் விட ஆழமாக ஒரு இழை நாவல் முழுக்க விரவி ஓடுகிறது. அது நீதியின் சரடு. வரலாற்றில் நீதிக்கு இடமுள்ளதா என்ற கேள்வி நாவலால் அணுகப்பட்டுள்ள ஒவ்வொரு தரப்பாலும் நம் முகத்தில் அறைந்து கேட்கப்படுகிறது. நீதி என்ற ஒன்றே இல்லையோ என்ற பதற்றம் பல இடங்களில் எழுகிறது. புகாரின் அல்லது வீர்பத்திர பிள்ளை வரலாற்றிலிருந்து தூக்கி எறியப்படும்போது….. அன்னாவோ அருணாசலமோ பல்லாண்டுகளுக்குப்பின் அவர்களுக்கென்று எதையோ செய்ய முயல்வதுகூட சற்றே அபத்தமானதாகத் தோன்றுகிறது. காலங்கடந்த நீதியால் என்ன பயன் என்று சலிப்பு உண்டாகிறது. ஆனால் கினியாழ்வின் என்ற சிறுகதை (க்ளைமேக்ஸ்) சற்றே அந்தச் சலிப்பை நீக்குகிறது.

வேண்டுமானால் இப்படிக்கொள்ளலாம். தனி மனிதர்களுக்கு நீதி கிடைக்கலாம், கிடைக்காமலேயும் போகலாம். (அதாவது பாதிக்கப்பட்டவரின் வாழ்வு முடிந்துபோவதால் கிடைத்துப் பயனில்லை என்ற நிலை வரலாம்.) ஆனால் மொத்த மனித சமூகம் என்று கொள்ளும்போது வரலாறு அல்லது இயற்கை ஒவ்வொரு அநீதிக்கும் ஒரு தீர்ப்பைத் தயாராக வைத்துக்கொண்டு காத்திருக்கிறது. ஏனெனில் தனிமனித வாழ்வுபோல் காலம் தாழ்த்தப்படுவது என்ற ஒன்று இங்கு இல்லை.

இந்த இடத்தில் பத்மவியூகம் என்ற சிறுகதை நினைவு வருகிறது. அபிமன்யுவின் மறுபிறப்பு, அதில் அவன் பிறக்கும் முன்பே அவனது எதிரியின் மறுபிறப்பைப் பற்றி அறிந்துகொண்டு அதைத் தடுப்பதற்குள் தாமரை மூடிக்கொள்வது. அதனால் அவனது மறுபிறப்புக்கும்முன்பே அப்பிறப்பின் பகை என்ற சுழல் உண்டாகும் விதி. அதுபோல் எவ்வளவு தூய மனிதாபிமானத்திலிருந்தும் கருணையிலிருந்தும் பிறந்த சித்தாந்தமும் அதன் அழிவுக்கான அதைப் பகைப்பவர்களுக்கான நியாயத்தை உண்டாக்கியபடியேதான் தன்னை உருவாக்கி நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனாலேயே ஒரு அநீதி இழைக்கப்படும்போதே அதற்கான பரிகாரம் அல்லது நீதிக்கான சரடும் கூடவே உருவாகித் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது.

விஷ்ணுபுரத்தை ஒரே வாரத்தில் படிக்க முடிந்தது. இதற்கு ஏறத்தாழ மூன்று மாதங்கள். 700 பக்கங்களுக்கு இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளக் காரணம் மனதில் தோன்றிய சோர்வும் கனமும். சில இடங்களைப் படிக்க முடியாமல் சில நாட்கள் புத்தகத்தைத் தொடாமலே இருக்கவும் நேர்ந்தது. நூல் துவக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்ட குறள் இதை வாசித்துக்கொண்டிருந்த காலம் முழுக்க, முடித்தபின்னும் கூட என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.

அல்லல்பட்டு ஆற்றா தழுத கண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

இது வெறும் நீதி போதனையல்ல, பல காலமாக, பல தேசங்களில் நீதிக்காகக் காத்திருக்கும் பல்வேறு மனிதர்கள் நீதியின் மேல் கொள்ள வேண்டிய நம்பிக்கைக்கு உரம் தர வல்ல உறுதிமொழி.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

என்று கீதை தரும் நம்பிக்கையும் இதுவேதான்.

வித்யா ஆனந்த்

முந்தைய கட்டுரைதுளிமலர்கள் – பூபதி துரைசாமி
அடுத்த கட்டுரைகுருபூர்ணிமா சந்திப்பு- கடிதம்