இன்று தளத்தில் தமிழ் விக்கியின் ’’மர்ரே ராஜம்’’ குறித்த பதிவை வாசித்தேன். மர்ரே பதிப்பில் வெளியான ஒரு நூலையேனும் கையில் ஏந்தி கண்களால் நோக்கிய எவராலும் அந்நூல் எத்தனை அரிய ஒன்று என்பதை உணர முடியும். ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வாக்கியத்திலும் நேர்த்தி வெளிப்படும் நூல்கள் அவை. நேர்த்தியாக வெளியிடப்படும் நூல்கள் வாசகனை அந்த பிரதியுடன் மேலும் மேலும் உணர்வுபூர்வமாகப் பிணைக்கின்றன.
தமிழ் விக்கி பதிவில் அளித்திருந்த இணைப்பிற்குச் சென்று தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பதிவேற்றம் செய்துள்ள நூல்களைக் கண்டேன். ’’நீதிக்களஞ்சியம்’’ எனத் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள் தமிழ் மொழியைப் பயிலத் தொடங்கும் சிறு குழந்தைகளுக்கு மொழியின் வசீகரத்தைக் காட்டக் கூடியவை.
‘’சாசன மாலை’’ நூல் தமிழில் கிடைக்கப்பெற்ற எல்லா சாசனங்களையும் வாசகன் முன்வைக்கிறது. தமிழ் வரலாற்றினுள் நுழையும் ஆரம்ப வாசகனுக்கு ஒரு நல்ல துவக்கமாக அமையக்கூடிய நூல்.
’’ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம்’’ எல்லா இலக்கிய வாசகர்களும் வாழ்வில் ஒருமுறையேனும் முழுமையாக வாசிக்க வேண்டிய நூல். தாங்கள் கூறுவது போல மேஜை மேல் வைத்திருந்து தினம் ஓரிரண்டு பாடல்களையேனும் வாசிக்க வேண்டிய நூல்.
மர்ரே ராஜம் வெளியிட்ட நூல்கள் முழுமையாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனில் அது மிகவும் முக்கியமான பணியாக அமையும்.
அன்புடன்,
பிரபு மயிலாடுதுறை
மர்ரே ராஜம்
அன்புள்ள ஜே
தமிழ் விக்கியில் ஆளுமைகள் பற்றி வரும் பதிவுகள் மிக விரிவானவை. கேள்விப்பட்டே இராதவர்கள் பலர். மர்ரே ராஜம் என கேள்விப்பட்டிருந்தாலும் இப்போதுதான் அவர் படத்தையே பார்க்கிறேன். கட்டுரைகள் ஒன்றோடொன்று அற்புதமாக தொடுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ மிஷனரிகள் ஆற்றிய அரும்பணிகள் பற்றிய தகவல்கள் மிக முக்கியமானவை
ராஜ்குமார்