எல்லா மதங்களிலும் குறியீடுகளும், ஆசாரங்களும், நம்பிக்கைகளும் உண்டு. மதம் செயல்படுவதே அவற்றின் வழியாகத்தான். ஆனால் இயற்கைமதங்களின் சிறப்பு என்னவென்றால் அவை மிகத்தொன்மையான காலத்துடன் நம்மை ஆன்மிகமாக இணைக்கின்றன என்பதுதான். ஐம்பதாயிரம் அல்லது லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் ஆன்மிகமும் நம் ஆன்மிகமும் ஒன்றாக இணைகின்றது.
அவ்வாறு நம்மை இணைக்கும் ஒன்று சாதாரணமானது அல்ல. அழிவற்ற ஒரு பிரபஞ்ச உண்மையானது மொழியே உருவாகாத தொல்மனிதன் முதல் இன்று வரை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்றால் அதுதானே தெய்வத்தின் தோற்றம்? அப்படி இருந்தால்தானே அதற்கு மாறாத மதிப்பு உள்ளது?
அந்த மெய்ஞானத்தை இன்றைக்கு நமக்கு கிடைக்கும் எளிமையான பள்ளிக் கல்வி அல்லது அறிவியல்கல்வியை வைத்துப் புரிந்துகொள்ள முடியுமா? அதற்கு முயன்றால் நாம் அந்த மெய்ஞானத்தை சிறுமைப்படுத்தி விடுவோம்.
சிவலிங்கத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் Y வடிவமான ஒரு கோட்டு வரைவு இருக்கும். அது ஆண்குறி என்பதற்கான அடையாளம். அகழ்வாய்வில் கிடைக்கும் பழைய சிவலிங்கங்கள் எல்லாமே நேரடியாகவே ஆண்குறி வடிவில், முனையில் மொட்டுடன் இருக்கும். அதைத்தான் பிற்காலத்தில் இப்படி ஆக்கியிருக்கிறார்கள்.
அதைப்பார்த்ததுமே ஒருவனுக்கு அருவருப்பு உருவாகிறது என்று கொள்வோம். சீச்சீ ஆண்குறியை வழிபடுவதா என்று அவன் நினைக்கிறான் என்று கொள்வோம். அவன் மனநிலை என்ன? அவன் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ்காரர்கள் இங்கே அறிமுகம் செய்த விக்டோரியா கால ஒழுக்கமுறையை (Victorian Morality) யை நம்புகிறான், அவ்வளவுதான்.
விக்டோரியா கால ஒழுக்கமுறையில் பெண்கள் பொது இடத்தில் மொத்த தோளையும், முக்கால்வாசி மார்பகங்களையும் திறந்துபோடலாம். ஆனால் சிற்பங்களில் மார்பகங்களே இருக்கக்கூடாது. ஆண்கள் ஆண்குறியின் அளவு புடைப்பாகத் தெரியும்படி இறுக்கமான கால்சட்டைகள் அணிவது ‘பேஷன்’ ஆனால் அதை படத்தில் வரைவது அசிங்கம்.
அந்த பிரிட்டிஷார்தான் நம் தெய்வச்சிற்பங்களை ஆபாசமானவை என்றனர். அந்த மனநிலையைத்தான் சிவலிங்கத்தைக் கண்டு அருவருப்படையும் அறிவிலியும் கொண்டிருக்கிறான். அவன் இந்துமத நம்பிக்கை கொண்டவன் என்றால் சிவலிங்கத்திற்கு வேறேதும் அர்த்தம் அளிக்க முயல்கிறான். சிலர் சாதாரணமான அறிவியல் அர்த்தங்களை கற்பிதம் செய்கிறார்கள்.
நான் அமெரிக்காவில் ஒருமுறை அதிதிறன் நுண்ணோக்கி வழியாக நுண்ணுயிரி ஒன்றை பார்த்தேன். அது இன்னொன்றுடன் இணைசேர துடித்துடித்துக் கொண்டிருந்தது. சட்டென்று எனக்கு அந்த துடிப்பு பிரபஞ்சத்தின் துடிப்பு என்று தோன்றி மெய் சிலிர்த்துவிட்டது.
இங்கே ஒவ்வொரு உயிரும் மேலும் மேலும் பெருகும் பொருட்டு துடிக்கிறது. மனிதனில் உள்ள காமம் என்பது அந்த துடிப்புதான். அதன் பிரம்மாண்டம் நமக்கு தெரியும். அந்த துடிப்பு எங்கும் உள்ளது. உயிர்களில் மட்டுமல்ல பொருட்களிலும் உள்ளது. ஒவ்வொரு பொருளும் இன்னொன்றாக ஆகிக்கொண்டே இருக்கிறது. சூரியன் கோள்களாகின்றது. நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறி மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கின்றன. எலக்ட்ரான்கள் போன்ற நுண்ணிய துகள்களும் பெருகுவதற்கு துடித்தபடியே உள்ளன.
பிரபஞ்சம் முழுக்க இருக்கும் இந்த துடிப்பை என்றோ எப்படியோ ஒரு தொல்மூதாதை உணர்ந்தான். அவன் ஓர் அரைக்குரங்காகக்கூட இருக்கலாம். அதை விளக்க அவன் ஆண்குறியை அடையாளமாக ஆக்கினான்.
அந்த தரிசனம் அதன்பின் பெருகிப்பெருகி வந்தது. அதில் மாபெரும் ஞானிகள் இணைந்தனர். கவிஞர்கள் இணைந்தனர். அது மிகமிக விரிவான தத்துவவிளக்கம் பெற்றது. சிற்பவடிவம் ஆகி நம் முன் அமர்ந்திருக்கிறது. அதை சிவலிங்கம் என்கிறோம்.
இன்று அதை ஒரு தத்துவஞானி இப்படி விளக்கக்கூடும். இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே சக்தி (energy) தான். அந்த சக்தி செயலூக்கம் கொள்ளும்போது பொருள் ஆகிறது. நட்சத்திரங்களும் கோள்களும் ஆகி பிரபஞ்சம் ஆகிறது. அப்படி அந்த சக்தியை செயல்படச் செய்யும் துடிப்புதான் சிவம். சிவம் என்றால் ஒழுங்கு, திட்டம், உறுப்பாடு என்றெல்லாம்கூட விளக்குவார்கள். அதுவே பிரபஞ்சத்தின் முதன்மைக்காரணம்.
அந்த காரணத்தைத்தான் ஆதிமனிதன் அவன் அறிந்த ஒரு குறியீடாக உருவகம் செய்துள்ளான்.அதை தியானிப்பது வழியாக அந்த மாபெரும் தரிசனத்தை நாம் அடைய முடியும். இயற்கை மதங்களின் ஆற்றல் அதுதான்.
ஆன்மிக தரிசனம் என்பது மிக நுட்பமான ஒன்று. மனிதனின் அறியாத ஆழத்தில் நிகழ்வது. தியானம் வழியாக மட்டுமே செல்லத்தக்க ஆழம் அது. அங்கே நிகழ்வதை நாம் உருவகங்கள் வழியாகவே சொல்லமுடியும். அந்த உருவகங்கள் மிகமிகத் தொன்மையானவையாகவே இருக்கும். ஏனென்றால் எப்போது மனிதனுக்கு மனம் உருவாகியதோ அப்போதே அவையும் உருவாகியிருக்கும்.