மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.
சமீபத்தில் “செயற்கை நுண்ணறிவும் கலையும்” என்ற பதிவில், “தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை” என்ற கதைக்கான இணைப்பைக் கொடுத்திருந்தீர்கள்.
இந்தக் கதை முதல் அத்தியாயம் படிக்கையில் கொஞ்சம் அலுப்பாக இருந்தது. இருந்தாலும், உடையாள் கதை மூலம், உங்கள் அறிவியல் புனைவு எந்த அளவுக்கு ஏறியும் இறங்கியும் அடிக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்ததனால், இரண்டாவது அத்தியாயத்தை வாசித்தேன்.
“இரண்டாயிரத்து நாற்பதுகளில் தமிழில் அச்சு ஊடகம் முற்றிலும் இல்லாமலாகியது.” – இந்த வரியை வாசித்ததும், அடி வயிறு கூச்சமெடுக்க ஆரம்பித்தது … ராட்டிணத்தில் கீழே இறங்கும்போது உணர்வதைப் போல. “ரைட்டு, தலைவரு கியர மாத்திட்டாரு” என்று இருக்கையை இறுக்கப் பிடித்ததுக்கொண்டு, மேற்கொண்டு வாசிக்க வாசிக்க … வயிற்றுக் கூச்சம் கூடுகிறதே ஒழிய இறுதிவரை குறையவேயில்லை.
இறுதிப் பத்தியில் “அத்தேவை இருக்கும் வரை இலக்கியம் இருந்தபடியேதான் இருக்கும் — மனிதகுலம் உள்ளவரை” என்று வாசித்து முடிக்கையில், மனம் மிகவும் கனமாக ஆகிவிட்டிருந்தது. கொஞ்சநேரம் மனதுக்குள் ஆழ்ந்த அமைதி. பூமியை விட்டு எங்கோ, திரும்பா இடத்துக்குச் சென்றுவிட்டதுபோன்ற மிக ஆழமான ஏக்கஉணர்வு. கொஞ்ச நேரம் அப்படியே. மீண்டு பார்க்கும்போது … அதே பூமி … நீண்ட பெருமூச்சு. இன்டர்ஸ்டெல்லார் படம் பார்த்து முடிக்கையில் கிட்டத்தட்ட இந்த உணர்வு கிடைத்த ஞாபகம்.
உங்கள் எழுத்துக்களின் வழியாக, மிகவும் சிக்கலான, ஆனால் அவசியம் புரிந்துகொள்ளவேண்டிய சில அடிப்படைக் கட்டமைப்புகள் புரிந்து கொள்ள முடிந்தது. அவற்றில் நான் மிக முக்கியமாகக் கருதும் சில, பின்வருமாறு.
உடையாள் கதையில், எவ்வாறு பல ஒருசெல் உயிரிகள் இணைந்து பலசெல் உயிரி உண்டானது, எத்தகைய தகவமைவுப் பலனை அவை அடைந்ததால் அவை அவ்வாறு இணைந்து நீடித்தன என்று, மிக நுட்பமான ஒரு விசயத்தை, எளிதில் புரிந்துகொள்ளச் செய்தீர்கள்.
அதற்குப் பல ஆண்டுகளுக்கு முந்தைய மற்றுமொரு கட்டுரையில், ஒளியின் காரணமாக, எவ்வாறு கண் என்ற உறுப்பு மெதுமெதுவாக உருவாகி வந்தது என்று விளக்கியிருந்தீர்கள்.
இந்த அதிநுட்பமான விளக்கங்கள், விஞ்ஞானியில்லாத என்னைப் போன்றவனுக்கு, மொத்த உயிரிப் பரிணாம வரலாற்றையும் புரிந்துகொள்வதில் உள்ள பல மனத்தடைகளை, குழப்பங்களை நீக்கிப் பாதையமைத்துக் கொடுக்கின்றன. இன்னும் இன்னும் என்று தெரிந்துகொள்ளத் தூண்டுகின்றன.
இந்தத் “தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை” கதையில், ஆக்சிஜன் நைட்ரஜன் போன்ற தனிமங்களை உருவாக்குவதைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இது ஒரு புனைவு தான் என்றாலும், இதன் வழியாக, பிக்பேங்குக்கு சற்று முன்னரோ பின்னரோ தான், இன்று இருக்கும் 118 தனிமங்கள் (118 பூதங்கள்?) உருவாகியிருக்கின்றன என்பதை மனம் சற்று ஏற்றுக்கொள்கிறது.
பிறகு, இந்த செயற்கை நுண்ணறிவு. இந்தக் கதையில், செயற்கை நுண்ணறிவு என்பது ரொம்ப ஆரம்பத்திலேயே வந்து, கதை அதைத் தாண்டி எவ்வளவோ துாரம் சென்று விட்டது. இத்தனைக்கும், இந்தக் கதை எழுதப்பட்ட 2004 வருடம், இந்த AI என்ற சொல்லாடலே உருவாகியிருந்ததா எனத் தெரியவில்லை. ஆச்சரியம் தான். அபூர்வ சகோதரர்கள் படத்தில் போலீஸ் சொல்வது போல, “நீங்க எங்கயோ போய்ட்டீங்க சார்”.
அன்புடன்,
வி. நாராயணசாமி.