வகுப்புகள் வழியாகக் கற்றல்

ஆசிரியருக்கு

அண்மையில் இருவாரத்திற்கு முன் கம்பராமாயண வாசிப்பு குழுமத்தில் கிட்கிந்தை காண்டத்தில் சீதையை தேடி வானர வீரர்கள் புறப்படும் நாட விட்ட படலம் வாசித்தோம். இப்படலம் ஒருபுறம் சீதையை கடத்தி சென்ற இராவணனின் இலங்கை மாநகரை தேடுவதாகவும் மறுபுறம் இராமன் அனுமனுக்கு சீதையின் தோற்றத்தை விவரிப்பதுமாக இரு பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது. இராவணனின் இலங்கை மாநகர் தென்திசையிலேயே அமைந்திருக்க வாய்ப்பு அதிகம் என சுக்கிரீவன் எண்ணுவதால் விந்தியமலை தொட்டு தென்குமரி கடல் வரையிலான நிலபரப்பை தேடி செல்வதற்கான விரிவான வரைபடத்தை முன்மொழிகிறார். படலத்தின் முற்பகுதி முழுக்க நில வர்ணனையும் பிற்பகுதியில் தேவியின் தோற்றமும் சொல்லப்படுகிறது. இப்படல முடிவில் வாசித்தவற்றை ஒட்டுமொத்தமாக தொகுத்து கொள்ளும் பொருட்டு எவராவது ஒருவர் உரையாற்றவும் பின்னர் கலந்துரையாடல் நடக்கும் என்ற ஏற்பாடு குழுவில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறாக இம்முறை நாட விட்ட படலம் குறித்து நான் பேசினேன்.

அக்கலந்துரையாடலில் நடந்த விவாத பகுதிகளை கூறுவதற்கு முன் இப்புதிய ஏற்பாட்டு திட்டத்தை பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டும். கம்பராமாயண குழுவை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்லும் முதன்மை விசை ஶ்ரீனிவாஸ் அண்ணாவின் ஊக்கமே. ஒவ்வொரு காண்டத்தின் முடிவிலும் சில முதன்மை தலைப்புகளின் அடிப்படையில் பாடல்களை தொகுத்து கொள்வதற்கு அப்பால் பெரும்பாலும் அன்றன்றைக்கான பாடல்களில் தனிக்கவனம் மட்டுமே விழுகிறது. காவிய வாசிப்புக்குண்டான முழுமை நோக்கை அடைய இயலவில்லை என்ற தன் மனக்குறையை ஶ்ரீனி அண்ணா நம் ஜாஜா அவர்களிடம் சொல்ல, ஜாஜா இந்த கலந்துரையாடல் வடிவத்தை பரிந்துரை செய்துள்ளார். இது முன்னெடுக்கப்பட்டு தொடக்கமாக அண்மையில் குழுவில் இணைந்து தொடர்ச்சியாக வாசிப்பு அமர்வுகளில் பங்குபெறும் புதிய நண்பர் பரிமித்தாவும் அடுத்து நானும் பேசினோம். வரும் வாரம் கமலநாதன் அண்ணா அவர்கள் பேசுவதாக உள்ளார்.

மீண்டும் படலத்திற்கு வருகிறேன். நாட விட்ட படலத்தில் புறத்தில் ஒவ்வொரு இடமாக தேடி எங்கே இலங்கை அமைந்துள்ளது என கண்டுபிடிக்குமாறு சுக்கிரீவன் கூறுகிறான். மறுபுறம் இராமன் சீதையின் ஒவ்வொரு அங்கத்திற்கும் பிற பெண்களுக்கு சிறப்பாக சொல்லப்படும் உவமைகளை கூறி, சீதையின் அழகிற்கு அவை இணையல்ல என்று தன் அகத்தே உள்ள சீதையை அனுமனுக்கு உணர்த்த முற்படுகிறான். புறமும் அகமும் என பிணைந்த இப்பாடல்களின் சந்திப்பு முனையே நாட விட்ட படலத்தை முழுமையுற செய்கிறது. அந்த சந்தி முனையை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன். படலத்தை மீண்டும் சிலமுறைகள் நிதானமாக வாசிக்க வேண்டும். இப்படலம் கிட்கிந்தை காண்டத்தின் விரிவான பரப்பில் வைத்து வாசிக்கப்படும் போதே தன் முழுப்பொருளை எட்டும். மேலும் மொத்த கம்பராமாயணத்தில் வைத்து நோக்கப்படுகையில் செறிவும் கூரும் மிகும். இது ஒரு தொடர் கற்றல் என்பதும், நான் கிட்கிந்தை காண்டத்திலேயே விடுபட்டு போன பகுதிகளை வாசிக்க வேண்டியுள்ளதாலும் முந்தைய காண்டங்களிலும் நிறைய பகுதிகளை வாசிக்க வேண்டியுள்ளதாலும் வாசிப்பு அமர்வுகளில் எழுந்த  வினாக்களுக்கு பதில் சொல்லும் விதமாக மட்டும் உரையை குறுக்கி அமைத்து கொண்டேன். அது ஓரளவு மட்டுமே மன நிறைவை அளித்தது. எந்த வகையில் என்றால் நாடுவிட்ட படலத்தில் எழுந்து வந்த சில கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக அனுமப் படலத்தை மீள் வாசிப்பு செய்தேன். அப்படலத்தில் கம்பன் நிகழ்த்தும் மானுட உணர்வுகளின் மகத்தான கவித்துவ தருணங்களை வாசகனாக எளிய அளவிலேனும் உணர முடிந்ததும் கலந்துரையாடலில் தொட்டு காட்ட முடிந்ததும் ஒரு சிறு நிறைவை அளித்தது. மற்றபடி நாட விட்ட படலத்திற்கு நியாயம் செய்யுமளவு வாசிப்பை கொண்டு செல்லவில்லை என்ற குற்றவுணர்ச்சி இருக்கிறது. வாசித்து கட்டுரை எழுதுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அதை செய்து முடிக்க வேண்டும்.

வாசிப்பு அமர்வுகளில் எழுந்த கேள்விகள் அனைத்தும் இராமன் அனுமனுக்கு சீதையின் உருவத் தோற்றத்தை வர்ணிக்கும் பிற்பகுதியை குறித்தே. பங்குபெறும் நண்பர்கள் அனைவரும் இலக்கிய அழகியலில் பரிச்சயம் கொண்டவர்கள் என்பதால் நவீன காலத்து மேலோட்டமான ஒழுக்க ரீதியான நிராகரிப்புகள் எழவில்லை. ஆனால் அனுமனுக்கு இவை சொல்லப்படுவதை எவ்வண்ணம் புரிந்து கொள்வது என்பதில் நீடித்த குழப்பமே நிலவியது. அடிப்படையான ஐயம் என்னவென்றால் மாற்றனுக்கு – அனுமனுக்கு – இராமன் தன் மனைவி சீதை குறித்து இத்தனை அந்தரங்கமாக வர்ணிப்பது எப்படி பொருத்தமுடையதாக இருக்கும் ? இந்த வினாவிற்கு பின்னால் இருக்கும் முற்கோள் அனுமன் அனுசரிக்கும் பிரம்மச்சாரிய குறித்த நம் பொது புரிதல். பிரம்மச்சாரியம் என்ற சொல்லை அதன் நேர்ப்பொருளில் பிரம்மத்தை ஆச்சரிப்பவன் என்பதற்கு மாறாக பாலுணர்வு ஒடுக்கம் என்று குறுகிய புரிதலாக அமைந்துவிடுவது. ஏன் இப்படியான பிழை புரிதல் ஏற்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்படியாக உள்ளது என்பது அனுபவப்படுகிறது.

மேற்சொன்ன குழப்பங்கள் அனைத்தும் எனக்கும் இருந்தன. குமரகுருபரன் விருது விழாவில் குருஜீயை சந்தித்து பேசியது எனக்கு மிக பெரிய திறப்பை அளித்தது. அனுமனை மரபு த்ருஷ்டோ ஃபாவ என்று குறிப்பிடுகிறது. அதாவது அவன் ஒரு சாமனியனை போல சொல்லை\மந்திரத்தை வெறும் ஒலிகளாக கேட்பவன் அல்ல, மந்திரத்தை காட்சியாக,தரிசனமாக உணரும் ரிஷியானவன் என்றே மரபு அனுமனை குறிப்பிடுகிறது. எனவே இராமன் சீதையின் தொடையையோ அல்குலையோ வர்ணித்தால் அங்கே சென்று பார்க்கவா முடியும் என்ற வகையில் தட்டையான பொருளில் பார்த்தல் பிழையான நோக்கையே சென்றடைவோம். இராமன் சொல்வதை தன் அகக்கண்ணால் கண்டுவிடும் அனுமன் இலங்கையில் சென்று சீதை யாரென்று தேடப்போவதில்லை. எங்கே என்று மட்டுமே தேடப்போகிறான். இந்த விளக்கம் தெளிவாகவே அனுமனை பிரம்மத்தை ஆச்சரிக்கும் பிரம்மச்சாரியாக தான் மரபு பார்க்கிறது என காட்டுகிறது. இக்கருத்தை குருஜீ விளக்கிய மாத்திரம் பின்வரும் பாடல் நினைவில் மெல்லிய தீற்றலாக மின்னி சென்றது.

மின்உருக் கொண்ட வில்லோர்
வியப்புற வேத நல் நூல்
பின் உருக்கொண்டது என்னும் பெருமை
ஆம் பொருளும் தாழ
பொன் உருக் கொண்ட மேரு
புயத்திற்கு உவமை போதாத்
தன் உருக்கொண்டு நின்றான்
தருமத்தின் தனிமை தீர்ப்பான்

மின்னலின் வேகத்தை தங்களின் வில்லில் ஏந்திய இராம இலக்குவர்கள் வியப்புறும்படியாக வேதமே இவன் உருவாகி வந்தது எனும் சொல்லாட்சியும் மாற்று குறைவானதாக தோன்றும்படியும் பொன் மேருவை ஒத்த பெருந்தோள்களை கொண்ட அனுமன் தன் பேருருவை எடுத்து நின்றான். தருமத்தின் தலைவனாகிய இராமனின் தனிமை துயரை தீர்க்க வல்லவன் அனுமன். இந்த உரை மரபாக உரையாசிரியர்கள் சொல்வது. மொத்த காவியத்தில் இருந்து பாடலை தனியாக உருவி எடுத்து தனிப்பொருள் முறை. அடிப்படையான வாசிப்புக்கு மிக அவசியமானது. ஆனால் காவியத்தில் வைத்து விரிவான வாழ்க்கை நோக்குடன் அழகியல் உணர்வுடன் விரிவாக்கம் செய்து கொள்ள வேண்டியது வாசகனின் கடமை. நம் பௌராணிக வியாக்கியானம் சொல்லும் ஆசிரியர்கள் அனுமனின் பேருருவை நேர்ப்பொருள் கொடுத்து மிகை புனைவாக்கி விடுவார்கள். குழந்தைக்கு கதை சொல்கையில் இம்முறை உகந்தது. நாம் வளர இப்புனைவும் வளர்வதே அகத்தே வளர்ந்துள்ளோம் என்பதன் குறியீடு.

மேற்காணும் பாடல்களுக்கு முன்னால் இருபது பாடல்களுக்கு ஏறக்குறைய அனுமனின் பேருருவம் நிகழ்வதற்கான களம் உருவாகி வருகிறது. இரு அயலவர்கள் வருவது வாலியின் ஒற்றர்களாக இருக்குமோ என ஐயுற்று அஞ்சி, தன் படையுடன் ருசியமுக பர்வதத்தில் மறைந்து கொண்டு அனுமனை ஆய்ந்து அறிந்து வரும்படி கூறுகிறான். அனுமன் இராம இலக்குவர்களை எட்ட நின்று பார்த்து அவதானித்து இயல்பறியும் அனுமன் யாரென்று காட்டி விடுகிறது. அனுமன் இராம இலக்குவர்களை பற்றி எண்ணுவதை கூறும் பாடல்களில் இரண்டு எனக்கு மிக பிடித்தவை.

தருமமும் தகவும் இவர் தனம்
எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஓர் பொருள் கருதி
அன்று அது கருதின்
அரு மருந்து அனையது இடை
அழிவு வந்துளது அதனை
இருமருங்கினும் நெடிது
துருவுகின்றனர் இவர்கள்

இவர்கள் அறத்தையும் நல்லொழுக்கத்தையும் இயல்பாக கொண்டவர்கள். அறமற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்லர். அப்படிப்பட்ட இவர்களுக்கு அவர்களால் அரிதென்று கருதப்படும் ஒரு பொருளுக்கு ஆபத்து நேர்ந்திருக்க வேண்டும். அதை தேடி தீவிரமான அலைச்சலில் உள்ளனர்.

கதம் எனும் பொருண்மை இலர்
கருணையின் கடல் அனையர்
இதம் எனும் பொருள் அலது ஓர்
இயல்பு உணர்ந்திலர் இவர்கள்
சதமன் அஞ்சுறு நிலையர்
தருமன் அஞ்சுறு சரிதர்
மதனன் அஞ்சுறு வடிவர்
மறலி அஞ்சுறு விறலர்

கோபம் எனும் குணம் இல்லாதவர்கள். கருணை கடலுக்கு ஒப்பானவர்கள். நன்மையே இயல்பாக அமைந்தவர்கள். இந்திரன் அஞ்சும் நிலையும் தருமன் அஞ்சும் அறத்தின் பால் அமைதலும் மன்மதனே அஞ்சி மயங்கும் வடிவழகும் யமனை அச்சுறுத்தி விரட்டும் விற்திறனும் கொண்டவர்கள் இராம இலக்குவர்கள் என்றவாறு அனுமன் எண்ணுவதை இருபாடல்களில் கம்பன் சொல்கிறார்.

நான் எழுதியிருக்கும் பொருள் விளக்கம் நேரடியாக உரையாசிரிகளிடமிருந்து பெற்று எழுதியது. ஒரு வசதிக்காக இவற்றை எழுதமால் பேச இயலவில்லை.மேற்காணும் எண்ணத்தை அனுமன் வந்தடையும் போது அவன் இராமனை நெருங்கவில்லை. அவர்களின் இருப்பிடத்தையும் செயல்பாடுகளையும் பார்த்தே இயல்புகளை கணிக்கும் திறன் அதுவே அனுமனை தனித்துவமாக்குகிறது. மதனன் அஞ்சுறு வடிவர் என்பதை சுக்கிரீவன் வந்து சொல்லக்கூடும். ஆனால் கதம் எனும் பொருண்மை இலர் என்பதையோ தருமன் அஞ்சுறு சரிதர் எனவும் தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் என்ற நுட்பமான அவதானிப்பையோ அனுமன் மட்டுமே சொல்ல இயலும். செயலில் இருந்து இயல்பை உணரும் பேராற்றல்.

மேலும் இப்பாடல்களில் கம்பன் பயன்படுத்தும் சொற்கள். அவை கவிதை வாசகனாக விரித்தெடுத்து கொள்ளப்பட வேண்டியவை. இருமருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள் என்கிறான். துருவி துருவி தேடினாலும் என்ற பேச்சு வழக்கு மொழியில் என் செவி கேட்டது. அதன் பொருள் தீவிர விருப்புடன் எண்ணி ஏங்கி தேடுதல். துருவுகின்றனர் என்ற ஒற்றை சொல் அனுமன் அத்தீவிரத்தை உணர்ந்தமையை உணர்த்தி விடுகிறது. இன்னொன்று கதம் என்ற சொல். உரையாசிரியர்கள் கோபம் என பொது பொருள் எடுத்தாலும் அந்த சொல் தன்னளவில் சினத்தில் தனித்துவமான ஒரு படிநிலையை சுட்டுவதாகவே தோன்றுகிறது. அது என்னவென்று சரியாக சொல்ல தெரியவில்லை. தகவு என்ற சொல் குறித்து நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார். தக்கார் தகவிலார் என தொடங்கும் குறளை முன்னிட்டு விரிவான சொல்லாராய்ச்சி செய்திருப்பார். மீள ஒருமுறை கட்டுரையை வாசித்தால் ஏதேனும் புதிதாக கிடைக்கும் என தோன்றுகிறது.

இத்தகைய திறன்மிக்க அனுமன் தன் அறிமுகம் செய்தபின் தான் தேடி வந்த நோக்கத்தை சொல்கையில் சுக்கிரீவனை பற்றி இவ்வண்ணம் கூறுகிறான். தேவ நும் வரவு நோக்கி விம்மல் ஊற்று அனையன் ஏவ என்கிறான். நடந்தது என்னவோ தெவ்வர் ஆம் என வெருவி என்பதே. அனுமனின் இம்மதியாள்கை உணர்ந்த கணம் இராமன் இலக்குவனிடம் அனுமனின் கல்வி சிறப்பை மெச்சி கூறுகிறான். இராமனின் சொற்கள் முடிந்த கணம் சுக்கிரீவன் வாலி பிரச்சினையை கூறி அறத்தின் பக்கம் நின்றுள்ள சுக்கிரீவனுக்கு உதவுமாறு வேண்டுகிறான். சுக்கிரீவனுடன் இருக்கும் அனுமனும் சேர்த்து அவர்கள் மொத்தமாக ஒரு கடும் நெருக்கடியில் உயிர் பிழைத்தலுக்கான போரட்டத்தில் இருக்கிறார்கள். எனவே தான் இராமனின் இயல்பை உணர்ந்து நெருங்கிய அடுத்த கணம் அனுமன் உதவிக்காக கைநீட்டுகிறான்.

மறுகணம் இராமன் பணிக்க இலக்குவன் தங்கள் கதையை சொல்ல தொடங்குகிறான். குல தொன்மையில் ஆரம்பித்து பம்பை வாவி படலத்தை கடந்து வந்தது ஈறாக சொல்லி முடிக்கையில் இராமனின் வாழ்வை உணர்ந்த அனுமன் அவனது தாள் பணிகிறான். அந்த சந்தர்ப்பம் மானுட விழுமியங்கள் சந்தித்து கொள்ளும் ஒரு தருணம். வாலியுடனான போராட்டத்தில் அனுமனும் ஒரு துயரத்தில் இருக்கிறான். நாம் துயரப்படுகையில் பிறர் துயரை உணர்ந்திருக்க மாட்டோம். அறிமுகமே இல்லாதவன் துயர் நமக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் அந்த தடையை அனுமன் கடக்கிறான். அதற்கடுத்தே இராமனின் துயரை உணர்கிறான். க்ஷத்திரிய குடியில் பிறந்து வளர்ந்த இராமனுக்கு மனைவியை மாற்றான் கவர்ந்து செல்லுதல் என்பதும் அதுவும் காதல் மனைவியை இழத்தல் என்பது இறப்பு நிகரானது. நரகத்தின் வாயில் தனை திறந்து வைப்பது. அனுமன் கண்டது இராமனின் அந்த பெருந்துயரை, இன்னும் ஆழமாக சென்றால் அத்தகைய ஆளுமையை பிறழ செய்யும் துயரத்திலும் தன் நல்லியல்புகளை இழக்காது அறத்தின் மூர்த்தியாக விளங்கும் மேன்மையை அல்லவா! அந்த கணம் இராமனின் திருவடிகளில் பணிகிறான். அவனது அந்தண தன்மையை வேள்வி நூல் மறைவளாள என்று இராமன் கூறி தோள் அணைத்து தூக்குகையில் நானும் குரங்கு இனத்தில் ஒருவனே என தாள் பணியும் அனுமன் தொடுவது இராமனின் பாதங்களை மட்டுமல்ல, மானுட துயரை வென்று நிலை கொள்ளும் பிரம்மத்தின் உருவென நிற்கும் இராமனை என்றே வாசித்தெடுத்தேன். அனுமன் கொள்ளும் பேருரு இதுவென்று உணர்ந்தது என் காவிய வாசிப்பு.

மின் உருக்கொண்ட வில்லோர் வியப்புற என்ற பாடலுக்கு அடுத்தே இராமன் சொல்கிறான்.

தாள்படாக்கமலம் அன்ன தடங்
கணான் தம்பிக்கு அம்மா
கீழ்ப்படா நின்ற நீக்கி கிளர்
படாது ஆகி என்றும்
நாட்படா மறைகளாலும் நவை
படா ஞானத்தாலும்
கோட்படாப் பதமே ஐய
குரக்கு உருக்கொண்டது என்றான்

அனுமனின் அப்பேருருவை கண்ட இராமனும் தன்னில் அனுமன் கண்டதை தான் அனுமனில் கண்டு அனுமன் என்ற குரங்கு உருவத்தில் வந்தது. பூரணம் பூரணத்துடன் இணைந்தது என்ற தத்துவ சாயல் மானுட வாழ்வில் நடக்கும் உச்சக்கட்ட நாடகீய தருணங்களில் ஒன்று இது. பிரம்ம ஞானத்தின் உருவாக அமைந்த அனுமனிடமே சீதையை குறித்து இராமன் கூறுகிறான். எனவே வாசிப்பு அமர்வுகளில் எழுந்த ஐயம் முக்கியமற்றது என விளக்கினேன்.

ஆக குருஜி சௌந்தர் எனக்கு கொடுத்த விளக்கத்தை கம்பனின் இக்காவியத்திற்கு பக்கத்தில் வைத்து பார்க்கையில் மரபு சொல்லும் தத்துவார்த்தமான நிலையை காவிய ஆசிரியன் எவ்வண்ணம் வாழ்க்கையில் பொருத்தி கவித்துவத்தை எட்டுகிறான் என்பதை விளங்கி கொள்ள முடிந்தது. வாசிப்பு அமர்வுகளில் துளிகளில் மட்டுமே கவனத்தை குவிப்பதால் காவியத்தை முழுமையாக பார்த்து விரித்து கொள்ளும் பார்வை மங்கி பலாவித குழப்பங்களை உண்டு பண்ணுகிறது. குரு சௌந்தர் போன்று கற்றறிந்த ஒருவரிடம் உரையாடி வாசிப்பில் ஈடுபட்ட போதே இத்தெளிவு கிடைக்க பெற்றது.

ஆனால் நாடுவிட்ட படலத்தில் சீதையின் தோற்ற வர்ணனைகளுக்கு பிறகு உரையாசிரியர்கள் ஒரு பக்கம் அளவிற்கு இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கோவலன் அந்தப்புரத்தில் கூறும் கண்ணகியின் அங்க வர்ணனையே இதன் மூலம் என்றும் புலவர்களின் வரம்பு மீறிய ஒழுக்கக் கேடான கொடும் திறம் என்றே கம்பனின் இப்பாடல்களை எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று எழுதியுள்ளனர். நம் உரையாசிரியர்கள் மிக சிறந்த மொழியாசிரியர்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் மறுப்பும் இல்லை. அவர்களின் உரைகள் இல்லையேல் எளிய வாசகனாக கம்பராமாயணத்திற்குள் நுழைந்திருக்க இயலாது. இதை அங்கீகரிக்கும் அதே நேரம் உரையாசிரியர்கள் தேர்ச்சியில்லாத புனைவிலக்கிய வாசகர்கள் என்பதை சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. நம் சூழலில் இவர்களிடம் இருந்து மட்டுமே மரபிலக்கியத்தைஅறிவது துரதிஷ்டவசமானது.

இதன் மறுபக்கமாக கலந்துரையாடல் அமர்வில் ஒரு கேள்வி எழுந்தது. அங்க வர்ணனை குறித்த இப்பாடல்கள் அக்காலத்தில் பாலியல் படங்கள் போன்ற ஒரு தேவையை நிறைவு செய்ய எழுந்தவையாக இருக்குமா ? கேட்டவர் தேர்ந்த வாசகர் என்பதால் எனக்கு அக்கேள்வி எழுந்து வரும் பொதுசமூக மனநிலை மேல் எரிச்சல் வந்தது. இக்கேள்வியின் ஊற்று அண்ணாவின் கம்பராசத்தில் இருந்து தொடங்குகிறது. அக்கேள்விக்கு பதிலளிக்கையில் வேண்டுமென்றே பின்வரும் பாடல் வரிகளை தேர்ந்தெடுந்தேன்.

பார் ஆழிப் பிடரில் தாங்கும்
பாந்தளும் பனி வென்று ஓங்கும்
ஓர் ஆழித் தேரும் ஒவ்வா

இவ்வரிகள் சீதையின் அல்குல் குறித்து கூறுகையில் இடம்பெறுகின்றன. நீலப்படத்தில் ஒரு பெண்ணுறுப்பு வெறும் சதையின் தினவு தீர்க்கும் உறுப்பு மாத்திரமே. அப்படங்களின் நோக்கமே உடலை வெறும் உடலாக இன்னும் ஒருபடி கீழ் சென்று தசைப்பகுதிகளாக காட்டுவது மட்டுமே. மாறாக ஆதிசேடனது படமும் ஒற்றை சக்கரத்தில் சுழலும் சூரியனின் தேரும் வெறும் தசைக்கு அப்பால் உள்ளம் உணரக்கூடிய ஒரு நுண்மையை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. நீலப்படத்தையும் கம்பனின் இப்பாடல்களையும் ஒன்றாக பார்ப்பது சேற்றையும் தாமரையையும் ஒன்றென்று சொல்வதற்கு சமானமானது.

ஒரு சமூகம் அதன் காவியங்களையும் அவற்றின் அழகியல் முறைமைகளை அச்சமூகத்தின் கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் ஆகியோரிடமிருந்து அல்லவா அடைய வேண்டும். நாமோ அரசியல்வாதிகளின் கையில் இருந்து கூத்தாடும் குறைக்குட அறிவை பெற்று வைத்திருக்கிறோம். அன்று உண்மையில் ஆதங்கமாக இருந்தது, தத்துவார்த்த முழுமை நோக்கும் அழகியல் பார்வையும் கொண்ட உங்களிடமிருந்து கம்பராமாயணத்தை பாடம் கேட்டால் எத்தனை நன்றாக இருக்கும் என்று. ஏனெனில் நான் கம்பராமாயணத்தில் மேற்சொன்ன அனுமப் படலத்தின் பகுதியை வாசித்த விதத்திற்கு ஊற்றுக்கண் கள்ளூறும் மலர் கூந்தல் சானகியை என்ற கம்பராமாயண பாடலுக்கு தாங்கள் கொடுத்திருந்த இலக்கிய வாசிப்பேயாகும்.

இப்படியாக அன்றைய காரசார விவாதங்கள் முடிவடைந்த பின் ஶ்ரீனி அண்ணா சீதையின் அங்க வர்ணனையை அனுமனின் கோணத்தில் இருந்து நீக்கி விட்டு இராமனின் நோக்கில் இருந்து பார்க்கும் கோணத்தை முன்வைத்தார். அதுவே அன்றைய அமர்வின் உச்சமாக இருந்தது. கிட்கிந்தை காண்டம் முழுக்கவே இராமன் தனித்து அமரும் போதெல்லாம் சீதையின் பிரிவு துயர் வந்து கவிவதை காண்கிறோம். பம்பை வாவிப் படலத்தில் தொடங்கும் அது, கார்க்கால படத்தில் உச்சத்தை அடைகிறது. அவ்வகையில் காவிய வாசிப்பில் பார்க்கையில் இராமன் சீதையின் இன்மையை உணரும் தன் வலியில் இருந்து தன் உள்ளே ஊறிய சீதையின் இருப்பை கண்டடையும் தருணமாக பாதாதி கேச வருணனையை பார்க்கலாம் என்றார். அது மிக பொருத்தமாகவும் இருந்தது.

இன்று காலையில் இசை,சிற்பங்கள் இலக்கியத்திற்கு தேவையா என்ற கட்டுரையை படித்தவுடன் இவற்றை உங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் ஒருமுறை மிக விரிவாக இந்த வகுப்புகளுக்கு வந்து கற்றுக்கொள்ளும் அவசியத்தை உணர்த்தியுள்ளீர்கள். அக்கட்டுரையில் மரபிலக்கியத்தை சொல்லி கொடுப்பதற்கும் இளையவர்களில் ஒருவரை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்தீர்கள். அவ்வரியே மரபிலக்கியத்தில் ஒன்றான கம்பராமாயணத்தை வாசிக்கும் என் அனுபவத்தையும் அதனூடாக அந்த தேவை எந்தளவு வலுவாக உள்ளது என்பதை தெரியப்படுத்தவே எழுத தொடங்கினேன்.

இன்னொன்று இதுபற்றி எண்ணுகையில் ஜாஜா வாரம் இருமுறை செவ்வாய் மற்றும் வியாழனில் கிளப் ஹவுஸில் நடத்தும் திவ்ய பிரபந்தம் குறித்து கவிதை வாசிப்பு உரைகள் பிரபந்த பாடல்களை அவற்றின் மொழியழகு, நாடகீய தருணம், புராண மற்றும் தத்துவ பின்னணியுடன் புரிந்து ஒரு முழுமை நோக்குடன் அணுக மிக உதவியாக உள்ளது. இவ்வருடம் குரு நித்யா காவிய முகாமில் நடத்திய ஜாஜாவின் அதன் தொடர்ச்சியே என்று அறிந்திருப்பீர்கள். கிளப் ஹவுஸில் உள்ள மணிநீலம் குழுவின் இணைப்பை பகிர்கிறேன். உங்களுக்கு நேரம் இருக்கையில் கேட்டு பாருங்கள். ஜாஜா போன்ற நவீன இலக்கிய அழகியலிலும் மரபிலக்கியத்திலும் பயிற்சி பெற்ற ஒருவரே என்னை போன்ற இளையவர்கள் பிரபந்தத்தில் தோய வழிக்காட்டி செலுத்தும் விசையாக உள்ளார்.

சென்ற நூற்றாண்டில் நடந்த தனித்தமிழ் இயக்க அலை இன்று இல்லை. மேலும் நவீன காலத்தில் இன்றைய வாழ்க்கையில் இருந்து சாரமான விஷயத்தை தொட்டெடுத்து மரபிலக்கியத்தின் கவித்துவத்தை உணர்த்தும் ஆசிரியரே உள நெருக்கத்தை கொடுக்கக்கூடியவராக இருக்கிறார்.

வகுப்புகளின் முக்கியத்துவத்தை இன்றைய கட்டுரை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியது. எனக்கு சிலவகை பயண சிக்கல்கள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு அடுத்த ஆண்டில் கட்டாயம் பங்குபெற்று கற்றுக்கொள்ள தயாராகி விடுவேன். உங்களிடம் சொல்வதற்கு காரணமே, எனக்கு நானே இதை உறுதி கொள்வது தான் ஜெ.

இக்கடிதத்தில் கூறிய அனுமப் படலம் குறித்து ஒரு கட்டுரையும் நாட விட்ட படலம் குறித்த ஒரு கட்டுரையும் எழுத வேண்டும். நாட விட்ட படலத்தில் முற்பகுதியில் வரும் நிலவரைபடத்தின் காட்சி வருணனையும் விரிவாக பேசப்பட வேண்டியது. இக்கடிதத்தின் முதன்மை நோக்கம் அது இல்லை என்பதாலும் அப்பகுதியை தீவிரமாக வாசித்து சரியான புரிதலை உருவாக்கி கொள்ள வேண்டியிருப்பதாலும் விடுபட்டு போய்விட்டது. விரைவில் இவற்றை படித்து எழுத வேண்டும்.

அன்புடன்

சக்திவேல்

மணிநீலம் கிளப் ஹவுஸ் இணைப்பு

https://www.clubhouse.com/house/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE

முந்தைய கட்டுரைவாளும் கவசமும் -கடிதம்
அடுத்த கட்டுரைபி.எஸ்.ராமையா