தமிழ் விக்கி தூரன் விருது, பாவண்ணன்

தமிழ் விக்கி தூரன் விருதுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி ஈரோட்டில் வழங்கப்படுகின்றன. ஆகஸ்ட் 5 சனிக்கிழமை மாலை முதல் விழா தொடங்கும். ஆகஸ்ட் 5 ஞாயிறு மாலை இலக்கியச் சந்திப்புகள், உரையாடல்கள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. தங்குமிடமும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 6 ஞாயிறு காலை 9 முதல் உரையாடல்கள் நிகழும். ஆகஸ்ட் 6 மாலை 6 மணிக்கு பரிசளிப்பு விழாவுடன் நிகழ்ச்சிகள் நிறைவடையும். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தமிழ்விக்கி – தூரன் விருது 2023

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம். நலம்தானே?  இயல் விருது விழாப்பயணம் இனிதே நிறைவுற்றது. மூத்த எழுத்தாளரும் நண்பருமான அ.முத்துலிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில் விழா கச்சிதமாக நடந்து முடிந்தது. எந்தப் பதற்றமும் இல்லாமல் மிக இயல்பாக சரியான நேரத்தில் தொடங்கி சரியான நேரத்தில் நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாளும் நண்பர்களுடன் உரையாடியதில் உற்சாகமாக இருந்தது. நாட்கள் கழிந்ததே தெரியவில்லை. எல்லோரும் அன்போடு உபசரித்துக் கவனித்துக்கொண்டனர். அவர்களுடைய நினைவு என்றென்றும் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

இங்கு திரும்பியதும் தூரன் விருது அறிவிப்பு பற்றிய செய்தியைப் படித்து மகிழ்ந்தேன். பேராசிரியரும் நண்பருமான மு.இளங்கோவன் தூரன் விருதுக்கு முற்றிலும் தகுதியானவர்.  தமிழறிஞர்கள் தொடர்பாக அவர் தொடர்ச்சியாக சேகரித்துத் தொகுத்துவரும் தகவல்கள் மிகமுக்கியமானவை. ஒவ்வொருவரையும் நேரில் சென்று சந்தித்து உரையாடி அத்தகவல்களைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க பணி. இசைத்தமிழ்க்கலைஞர்களைப்பற்றிய தொகைநூலும் மிகமுக்கியமானது. ஆவணமாக்கும் பணியில் அவர் காட்டும் ஆர்வத்துக்கு இணையாக ஆய்வுத்துறையிலும் அவர் ஆர்வமுள்ளவர். அவர் தம் நூல்களில் கடைபிடித்திருக்கும் பகுப்புமுறையையும் தொகுப்புமுறையையும் கவனித்தாலே,  ஆய்வுகள் தொடர்பாக அவர் கொண்டிருக்கும் நாட்டத்தையும் வேகத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

ஆய்வாளர் என்னும் தகுதிக்கும் அப்பால், மு.இளங்கோவன் வேறு சில களங்கள் சார்ந்தும் செயல்பட்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னால் துரையன் ’விடுதலைப்போராட்ட வீரர்  வெ.துரையனார் அடிகள்’ என்னும் நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். அது மிகவும் குறிப்பிடத்தக்க பணி. காந்தியத்தில் ஈடுபாடு கொண்டு அவர் வழியில் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர் துரையனார். ஒருமுறை அவர் சிறையில் இருந்தபோது அவருடைய மனைவி இறந்துவிடுகிறார்.  மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்தால் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியேறலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் சொந்த இழப்பைவிட நாட்டின் கெளரவமே மேல் என்று முடிவெடுத்து தண்டனைக்காலம் முடியும் வரை சிறையில் கழித்த பெருமகன் அவர்.  காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் தொடங்கிய காலத்திலேயே அவருடைய அணியில் நின்று அவருடனேயே சிறையில் தண்டனையை அனுபவித்தவர். தென்னாப்பிரிக்காவிலும் காந்தியடிகளுடன் களத்தில் நின்று, இந்தியாவிலும் அவருடன் களத்தில் நின்ற விடுதலைப்போராட்ட வீரர். மிக அரிய மனிதர்.                  அவர்  எழுதிவைத்த தன்வரலாற்றுக்குறிப்பை மாணவப்பருவத்தில் தற்செயலாகப் படித்து, அதன் மீது ஈடுபாடு கொண்ட இளங்கோவன் பிற்காலத்தில் பேராசிரியரான பிறகு அப்பிரதியைப் பெற்று நூல்வடிவம் கொடுத்தார்.  அச்செயலும் அரிதானது.

எளிய தனித்தமிழ்ச்சொற்கட்டுடன் குழந்தைகளுக்கான பாடல்களைப் புனைந்து  பெருஞ்சித்திரனார், ம.இலெ.தங்கப்பா கொடிவழியின் தொடர்ச்சியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட பெருமையும் நண்பர் மு.இளங்கோவனுக்கு உண்டு. அவருடைய ’மணல்மேட்டு மழலைகள்’  சிறந்த தொகுதி.

தூரன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் மு.இளங்கோவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

சிறப்பு விருதுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இளம் ஆய்வாளரான எஸ்.ஜே.சிவசங்கருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

பாவண்ணன்

மு.இளங்கோவன் – தமிழ் விக்கி

மு.இளங்கோவன் தொலைபேசி 9442029053

மின்னஞ்சல் [email protected]

முந்தைய கட்டுரைவெண்முரசு நாட்கள்
அடுத்த கட்டுரைசெங்கோல்,இந்து -கடிதம்