கலையுள்ளமும் தியானமும் -நானறிந்தவை

இசையும் ஓவியமும் இலக்கியத்திற்கு எதற்காக?

யோகமும் தியானமும் எதற்காக?

அன்புள்ள ஜெ

நீண்ட கடிதம் கண்டேன். கடைசியாக ஒரே ஒரு கேள்வி. நான் எழுத விரும்புபவன். எழுத்தாளனுக்குரியது கொந்தளிப்புதான். யோகம் -தியானம் வழியாக நான் கொந்தளிப்புகளில்லாமல் ஆகிவிட்டால் எனக்கு இலக்கியம் வராமல் போய்விடும் அல்லவா? இதை பல பேட்டிகளில் பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே கேட்டேன்

அன்புடன்

ரவி ராஜ்

*

அன்புள்ள ரவி,

நாம் இங்கே நிறுத்திக்கொள்வோமே. நீண்ட உரையாடல்.

நான் சொல்பவை என் வாழ்க்கையில் நான் செய்து வென்றவை. ஆகவே என் வரையில் உண்மையானவை. இவற்றை நான் உணர்கிறேன் என்றே சொல்லமுடியும். விவாதிக்கமுடியாது. என்னைவிட எழுதி, அல்லது வேறேதும் கலையில் சாதித்த ஒருவர் மட்டுமே என்னிடம் இதை மறுக்கவும் ஒப்புக்கொள்வேன். உதாரணமாக, இளையராஜா சொன்னால் ஏற்பேன். ஆனால் அவர்தான் நான் சொல்லவிருப்பவை அனைத்துக்கும் மிகமிகச் சிறந்த உதாரணம்.

இளையராஜா தியானமும் யோகமும் செய்பவர். ஒவ்வொரு நாளும், பலமணி நேரம், பல ஆண்டுகளாக. அவரிடமிருந்து கலைஞனுக்குரிய எந்தப் பண்பு அகன்றுள்ளது? அவரளவுக்கு நம் காலகட்டத்தில் தன் கலைக்கு தன்னை அளித்து முழுமையாக வெளிப்பட்டவர் எத்தனைபேர்?

இலக்கியத்துக்கே வருகிறேன். உங்கள் கேள்விகளும் கொந்தளிப்பும் ஓர் அரைமணிநேரம் யோகமோ தியானமோ செய்து உங்களை நீங்களே கூர்ந்து கவனித்தால் தீர்ந்துவிடுமளவுக்கு எளிமையானவை என்றால் நீங்கள் அவற்றைக் கஷ்டப்பட்டு எழுதவேண்டுமா என்ன? அவற்றால் என்ன பயன்?

இதையே தர்க்கபூர்வ அணுகுமுறைக்கும் சிலர் சொல்வார்கள். தர்க்கபூர்வமாக அணுகினால் பிரச்சினைகள் தெளிவடைந்துவிடும், அதன்பின் எழுத ஒன்றுமிருக்காது, ஆகவே உணர்ச்சிகரமாகவே எழுதவேண்டும் என்பார்கள். தர்க்கபூர்வமாக யோசித்தால் தீரும் விஷயங்களை உணர்ச்சிகரமாக குழப்புவதா இலக்கியம்?

என் பார்வையில் முடிந்தவரை தர்க்கபூர்வமாக, புறவயமாக அனைத்தையும் சொல்லிவிடவே எழுத்தாளன் முயலவேண்டும். அவ்வளவு சொன்னபின்னரும் எஞ்சும் கனவும், பித்தும்தான் கலையில் இருந்தாகவேண்டிய மெய்யான தர்க்கமற்ற தளங்கள். அங்கே சென்றடையும்போதுதான் மொழி மெய்யான மயக்கநிலையை அடைகிறது. அவ்வாறன்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட அதர்க்க நிலைகள் வெறும் மொழிச்சிடுக்குகள், மொழிக்குழப்பங்கள், தர்க்கச்சிக்கல்கள் மட்டுமே. அவற்றை கலைக்கு எதிரான கூடைமுடைதலாகவே நான் மதிப்பிடுவேன்.

அதேபோல உங்களுடைய முழுப்பிரக்ஞையையும் கூர்மையாக்கி முன்னால் செலுத்திய பின்னரும் உங்களிடம் விடையற்று எஞ்சும் வினாவும் அது உருவாக்கும் கொந்தளிப்புமே இலக்கியத்துக்கு உரியது. எளிய அன்றாட உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அல்ல. அவை சில்லறை இலக்கியமாக ஆகும். சில்லறை வாசகர்களையும் உருவாக்கியளிக்கும். ஒருபோதும் உயர்ந்த இலக்கியமாகாது.

தியானம் – யோகத்தால் உங்கள் சித்தம் தெளியும், உணர்வுகள் ஒழுங்காகும், கவனம் குவியும். அந்நிலையில் அடிப்படை வினாக்கள் இன்னும் கூர்மையாகவே முன்னால் வந்து நிற்கும். அதன் விளைவான அகக்கொந்தளிப்பு மேலும் பலமடங்கு ஆழமானதாக ஆகும். அகத்தே பெருகும். அது மேலோட்டமான கொந்தளிப்பு அல்ல. அது உணர்ச்சிக்கொந்தளிப்பே அல்ல. ஆன்மிகக்கொந்தளிப்பு, தத்துவ அலைக்கழிப்பு. அதன் விளைவாக உருவாகும் உணர்வுக்கொந்தளிப்புதான் சாதாரணமாக நமக்குத் தெரியும்.

அந்த மெய்யான ஆன்மிக, தத்துவக் கொந்தளிப்பு இல்லாதவர்களே குடியால் அல்லது செயற்கைக் கலகங்களால் அல்லது மிகையுணர்ச்சி நாடகங்களால் அமையும் சில்லறைக் கொந்தளிப்புகளை இலக்கியவாதியின் இயல்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியவாதி என்பவன் மேல்பரப்பில் கொப்பளித்துக் கொண்டிருப்பவன் அல்ல. மேலே அமைதியும் ஒழுங்கும் கொண்டிருந்தாலும் அகம் கொதித்துக் கொண்டிருப்பவன்.

தமிழில் மகத்தான கலைஞர்களாக நீங்கள் பார்க்கும் எவருக்கும் மேலோட்டமான கொப்பளிப்புகள் இல்லை. அசோகமித்திரனோ, சுந்தர ராமசாமியோ, தேவதேவனோ, தேவதச்சனோ, அபியோ நீங்கள் எண்ணுவதுபோல கொப்பளித்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல. அவர்களின் கொந்தளிப்புகளை அவர்களின் கலையிலேயே நாம் காணமுடிகிறது.

கலைஞனின் உருவாக்கக் காலகட்டத்தில் ஓர் அலைக்கழிப்பு தவிர்க்க முடியாதது. அது தான் யார் என அவன் கண்டடைவதன் பொருட்டு அவன் அடையும் தவிப்பு. தன் வெளிப்பாட்டு வடிவை கண்டடைய, அதில் ஓரளவேனும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அளவு தேர்ச்சிபெற அவனுக்கு ஒரு காலம் தேவை. அதுவரை அந்தக் கொந்தளிப்பு இருக்கும். கலைஞர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அதை அவர்கள் அடைந்ததுமே இயல்பாக அவர்கள் கூர்கொண்டு விடுவதை, அமைதி கொண்டு விடுவதைக் காணலாம்.

எந்தக் கலைக்கும் அதை முழுமையாக வெளிப்படுத்த ஒரு தவம் தேவைப்படுகிறது. அகம் ஒருமுகப்படுதல். உடல் உள்ளத்திற்கு சரியான ஊர்தியாக ஆதல். உச்சங்களை அடைந்தபின் இயல்பாகக் கீழிறங்கி அமைவதற்குக்கூட ஒரு பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்கு யோகமும் தியானமும் பெரிதும் உதவுமென்றே நான் நினைக்கிறேன்.

ஆனால் படைப்புக் கலைஞர்களுக்கு அவை முழுமையாக உதவுமா என்றால் அது இயல்வதல்ல என்பதே என் பதில். ஏனென்றால் ஒன்றை அடைந்து அமைந்ததுமே அதன் அறுதியெல்லையை மீறி அடுத்தகட்டத்தை நாடுவதே கலையின் இயல்பு. ஆகவே புதிய இடங்களும் புதிய தவிப்புகளும் அவனுக்கு அமைந்து கொண்டே இருக்கும்.

இருந்தாலும் விசையுறு பந்தென உள்ளம் விரும்பியபடிச் செல்லும் உடல் என்பது எல்லா கலைஞர்களுக்கும் தவிர்க்க முடியாதது. சென்றகால பெருங்கலைஞர்கள் அப்படித்தான் வாழ்ந்தனர். இன்று ஒவ்வொருவரிடமும் இந்த யுகம் மேலும் மேலும் பணிகளையும் பங்களிப்பையும் கோருகிறது. எஞ்சிய நேரத்தையும் பிரக்ஞையையும் திரட்டி கலையை உருவாக்கவேண்டியிருக்கிறது. அதற்கு தன்னை ஒழுங்கமைத்துக்கொண்டே ஆகவேண்டும்.

உலகப்புகழ்பெற்ற கலைஞர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் எவரும் அதை அறியமுடியும். இன்றைய எழுத்தாளர்களிலேயே ஓரான் பாமுக் அல்லது முரகாமி என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்.

அவ்வாறு உடலையும் உள்ளத்தையும் பயிற்றுவித்து, சரியான கருவியாக்கி, அகம் செல்லத்தக்க உச்சகட்ட சாத்தியம் வரைச் செல்வதே இலக்கியவாதியின் முன் உள்ள சவால் என நான் நம்புகிறேன். உடல்நலமின்மை, உள ஒத்திசைவின்மை உடனடியாக இயலாமையை உணரச்செய்யும். இயலாமை கசப்பை அளிக்கும். அக்கசப்பையே ஒரு தத்துவ தரிசனமாக ஆக்கி படைப்பு முழுக்க பரப்பி வைப்பவர்கள் பலருண்டு. அதேபோன்ற இயலாமை கொண்ட சிலருக்கு அவை உவப்பாகவும் இருக்கலாம். மிக எளிதாகவே நல்ல வாசகர்கள் அந்த உள்ளீடின்மையை கண்டடைந்து தவிர்த்துச் செல்வார்கள்.

ஆகவே அனைவரும் யோகம் செய்யவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். நான் அதன் முகவர் ஒன்றும் அல்ல. அவரவருக்குண்டான வழியை அவரவர் கண்டடையவேண்டும் என்று மட்டுமே சொல்வேன். இது என் வழி. அதை நான் பரிந்துரைப்பேன், அவ்வளவுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைநா. சின்னத்துரை
அடுத்த கட்டுரைமணிநீலம்