வாசகர் கடிதங்கள் வழியாக நிகழ்வதென்ன?

அன்புள்ள ஜெ

அண்மையில் ஒரு நண்பருடன் விவாதம். அவர் தன்னை இடதுசாரி என சொல்லிக்கொள்பவர். ஆனால் திமுக ஆதரவாளர். குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பின் அதி தீவிரமாக இருக்கிறார். பெரிய அளவில் வாசிப்பவர் அல்ல. ஆனால் எல்லாவற்றையும் சமூக ஊடகம் வழியாக பொதுவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.

அவர் உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்கள், கேள்விகள் எல்லாம் நீங்களே எழுதிக்கொள்வதுதான் என்று சொன்னார். சமூக ஊடகங்களில் எழுத்தாளர் மாதிரி தோற்றமளிப்பவர்கள் பலர் அதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். என்ன ஆச்சரியமென்றால் எழுத்தாளர்கள் சிலரும் தனிப்பேச்சில் இதைச் சொல்லியிருக்கிறார்கள்.  ஓர் எழுத்தாளர் என்னிடம் “தமிழ் எழுத்தாளனுக்கு ஆண்டுக்கு அஞ்சு லெட்டர் வந்தாலே ஜாஸ்தி. இவருக்கு மட்டும் எப்டி தினமும் லெட்டர் வந்துட்டே இருக்கும்?” என்று கேட்டார்.

வெங்கடேஷ்குமார்

*

அன்புள்ள வெங்கடேஷ்,

சமூக ஊடக பூஞ்சைக் காளான்களை பற்றி கவலை இல்லை. எழுத்தாளரிடம் நீங்கள் கேட்கவேண்டியது ஒன்றே. எந்த எழுத்தாளர் தமிழில் இலக்கிய நிகழ்வுகளை முப்பதாண்டுகளாக தொடர்ச்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்? எவர் உலகளாவிய இலக்கிய அமைப்பை உருவாக்கி பதிமூன்றாண்டுகளாகத் தொடர்ந்து வாசக ஆதரவாலேயே நடத்தியிருக்கிறார்? எவர் வாரந்தோறும் இலக்கிய, கலைநிகழ்வுகளை நடத்தியிருக்கிறார்? எவருக்கு அந்த அளவுக்கு வாசகர் ஆதரவு இருந்துள்ளது?

இதெல்லாம் கண்கூடு. ஒவ்வொரு நிகழ்வுக்கும் திரளும் வாசகர்களை எவரும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களில் பத்தில் ஒருவர் கூட கடிதங்கள் எழுதுவதில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். கடிதங்கள் எழுதிய பலர் பின்னர் எழுத்தாளர்களாக ஆனதையும் அனைவரும் அறிவார்கள். எழுத்தாளர்கள் வாசகர்களிடம் பெறும் ஏற்பு என்பது இலக்கியப்படைப்புகள் உருவாக்கும் ஆழ்ந்த செல்வாக்காலும், அந்த எழுத்தாளர் உருவாக்கும் தொடர் உரையாடலாலும் நிகழ்வது. மேலோட்டமான, சாதாரணமான சில படைப்புகளை எழுதிவிட்டு, கூட்டுக்குள் ஒடுங்கிக்கொண்டு, அங்கீகாரத்திற்கான புழுக்கமும் வம்புகளுமாக வாழ்பவர்கள் வாசகர்களின் ஆதரவை எதிர்பார்க்கமுடியாது.

எங்கள் நிகழ்வுகளுக்குக் கூடும் வாசகர்கள், குறிப்பாகப் புதிய வாசகர்கள் இங்கே வெவ்வேறு அரசியலியக்கங்களின் இலக்கிய அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்குக் கூடுபவர்களைவிட மிகுதி. இங்கே பொதுவெளியில் அரசியலை உமிழும் பலர் உண்மையில் தன்னந்தனியாக கூச்சலிட்டுக்கொண்டிருப்பவர்கள். அவர்களின் எதிர்மறைத்தன்மையே அவர்களை நோக்கி இளைஞர் வராமலாக்குகிறது. அதுவே இந்த வம்புகளுக்குக் காரணமாகிறது. இரவுபகலாக பல லட்சம் ரூபாய் செலவிட்டும் வராத திரள் இவருக்கு எப்படி வருகிறது என திகைக்கிறார்கள். அதற்கு ஒன்றும் செய்யமுடியாது. எங்கள் நிகழ்வுகளில் மெய்யான இலக்கிய -தத்துவ அறிமுகம் நிகழ்கிறது. நாங்கள் எவரையும் எங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு திரட்டுவதில்லை. எவரையும் எதைநோக்கியும் இழுப்பதுமில்லை. எங்கள் நோக்கம் அறிவியக்கம் ஒன்றை உருவாக்குவது மட்டுமே.

வாசகர் கடிதங்களுக்கென சில நெறிகளைக் கொண்டிருக்கிறேன். மின்னஞ்சலை வெளியிடுவதில்லை. ஏனென்றால் மின்னஞ்சல்திரட்டிகள் உடனே அவற்றை கவ்விக்கொள்கின்றன. தனிநபர்களும் மின்னஞ்சலை சேகரிக்கிறார்கள். அதன்பின் அந்த மின்னஞ்சல்களை பயன்படுத்தவே முடியாத நிலை உருவாகிவிடும். கடிதங்களை பெரும்பாலும் சற்று பிழைதிருத்தி, நடை மேம்படுத்தி வெளியிடுகிறேன். ஆங்கிலச் சொற்றொடர்கள் நடுவே ஊடுருவுவதை, ஆணியே பிடுங்கவேண்டாம் போன்ற பொதுவெளித் தேய்வழக்குகளை அனுமதிப்பதில்லை. தேவையற்ற தாக்குதல்களையும் அனுமதிப்பதில்லை. அவற்றை வெட்டிவிடுவது வழக்கம்.

இந்த மின்னஞ்சல்கள் வழியாக நிகழும் உரையாடல் முதன்மையாக எனக்கு முக்கியம். தொடர்ச்சியாக என் வாசகர்கள், இளம் நண்பர்கள் என்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறுதான் நான் இந்தக் காலகட்டத்துடன் அணுக்கமாக இருக்கிறேன். அவர்களின் ஐயங்கள், பதற்றங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்திருக்கிறேன். எனக்கு வரும் கடிதங்களில் கால்வாசி கடிதங்கள் தனிப்பட்ட முறையிலானவை. அவற்றை வெளியிடுவதில்லை.

மறுபக்கம் சமகால எழுத்தாளர் ஒருவருடனான தொடர் உரையாடல் என்பது அடுத்த தலைமுறையின் அறிவார்ந்த வளர்ச்சிக்கு மிக உதவியாக உள்ளது. இளந்தலைமுறையில் எழுதும் பலர் அவ்வாறு என்னுடன் உரையாடி உருவானவர்களே. எல்லா காலகட்டத்திலும் இந்த உரையாடல் நிகழ்ந்துகொண்டேதான் இருந்தது. க.நா.சுவுக்கும் சுந்தர ராமசாமிக்கும், எனக்கும் சுந்தர ராமசாமிக்கும் அந்த உரையாடல் இருந்தது. நான் நூற்றுக்குமேல் கடிதங்கள் சுராவுக்கு எழுதியுள்ளேன். அவரும் சலிக்காமல் எழுதியுள்ளார். ஆண்டுக்கணக்கில் என்னிடம் பேசியுள்ளார். இன்று தொழில்நுட்பம் இன்னும் விரிவான உரையாடலுக்கு வாய்ப்பளிக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்கிறோம்.

சு.ரா ஒவ்வொரு நாளும் வாசகர்களுக்கு கடிதங்கள் எழுதினார். கி.ராவும் அசோகமித்திரனும் எழுதினர்இது காலந்தோறும் நீடிக்கும் ஓர் அறிவுச்செயல்பாடு. இதற்கு வெளியே உள்ள எளிய வம்புக் கும்பலுக்கு இதை புரிந்துகொள்ள முடியாது, திகைப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கக்கூடும். இன்று எனக்கு எழுதுபவர்களில் கணிசமானவர்கள் இளம் பெண்கள். அவர்களின் தயக்கம், குழப்பம் ஆகியவற்றை உரையாடல்கள் வழியாகக் களைந்துகொண்டிருக்கிறேன். இந்த வாய்ப்பு நம் சூழலுக்கு முக்கியமானது என நினைக்கிறேன்.

நான் ஓர் அறிவியக்கத்தை உருவாக்கியுள்ளேன் என உணர்கிறேன். மைய அதிகாரம் அற்ற ஓர் அமைப்பு இது. எவரும் உள்ளே வந்து, தேவையானவற்றை கற்று, விரும்பியபடி வளர வாய்ப்பளிப்பது.அதை மெல்லமெல்ல திரட்டியது என்னுடைய தொடர் உரையாடல்தான். இவ்வாறு நான் திரட்டிய வாசகர்களின் சமூகத்தை தமிழின் மூத்த படைப்பாளிகள் முதல் இளம் படைப்பாளிகள் வரை அனைவரையும் நோக்கித் திருப்பி விடுகிறேன். சென்ற முப்பதாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் அறிஞர்கள், படைப்பாளிகளை முன்னிறுத்திக்கொண்டே இருக்கிறேன். தமிழ்ச்சூழலில் பிறிதெவரும் இதைச் செய்வதில்லை.

ஏறத்தாழ முப்பதாண்டுகளாக இது நிகழ்கிறது. இருபதாண்டுகளாக இணைய ஊடகத்தில் நிகழ்கிறது. ஒருநாள் கூட விடாமல். கொஞ்சம் யதார்த்த உணர்வு கொண்டவர்களுக்கு தெரியும். எவராலும் முப்பதாண்டுகள் தனக்கு முக்கியமெனத் தோன்றாத ஒன்றில் தீவிரமாக ஈடுபட முடியாது.

ஜெ

முந்தைய கட்டுரைதிருவருட்செல்வி
அடுத்த கட்டுரைஞானி- கடிதம்