சுராவும் ஞானியும் -கடிதங்கள்

சு.ரா நினைவின் நதியில் வாங்க

அன்புள்ள ஜெ

நலம்தானே?

அண்மையில் சுந்தர ராமசாமி நினைவின் நதியில் மற்றும் ஜே.ஜே.சில குறிப்புகள் இரண்டையும் வாசித்தேன். அங்கிருந்து உடனே சென்று ஞானி நூலையும் இவர்கள் இருந்தார்கள் நூலையும் வாசித்தேன். நீங்கள் எழுதிக்குவித்துள்ள புனைவு, கட்டுரைகள் மற்றும் விவாதங்கள் நடுவே அதிகம் கவனிக்கப்படாமல் போய்விட்ட அற்புதங்கள் என்று இந்த ஆளுமைக்குறிப்புகளைச் சொல்வேன்.

தமிழில் சுந்தர ராமசாமி எழுதிய நினைவோடை நூல்கள் இதற்கு முன்னோடிப் படைப்புகள். ஆனால் அவற்றில் ஆளுமைகளைவிட சுந்தர ராமசாமியின் ஜட்ஜ்மெண்ட் சில இடங்களில் ஓங்கியிருக்கிறது. ஆளுமைச்சித்திரங்களை அவர் நினைவுகுறைய ஆரம்பித்த நாட்களில் எழுதியிருக்கிறார். பல நினைவுகளில் மைக்ரோ டீடெயில்கள் குறைவு.

அதற்கு முன்பு உதிரியாக சில நூல்களும் குறிப்புகளும் உள்ளன. எம்.வி.வெங்கட் ராமின் என் இலக்கிய நண்பர்கள் முழுக்க நல்லெண்ணத்துடன் எழுதப்பட்டது என்று சொல்லமுடியாது. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு முழுமையானது அல்ல. வ.ரா எழுதிய பாரதியார் வரலாறும் கனகலிங்கம் எழுதிய எனது குருநாதர் நூலும் எல்லாமே சுருக்கமானவை. புகழ்பாடும் மரபு கொண்டவை. செல்லம்மாள் பாரதி எழுதிய பாரதி நினைவுகளும் மேலோட்டமானதுதான். யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுக்குறிப்புகள் நுணுக்கமானவை. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியை மட்டுமே சொல்லுபவை.

அற்புதமான நினைவுக்குறிப்புகள் என்பவை உ.வே.சாமிநாதையர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றி எழுதிய குறிப்புகள்தான். ஆனால் உ.வே.சாமிநாதையரைப்பற்றி கி.வா. ஜகந்நாதன் எழுதிய குறிப்புகள் மிகமிக உலர்ந்ததகவல்கள்.

இந்தச் சூழலில் சு.ரா நினைவின் நதியில் வாசிப்பது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. திட்டமிட்ட நூல் அல்ல. ஒரு நினைவுக்கொப்பளிப்பு. ஆனால் சுந்தர ராமசாமியுடனான ஒரு தொடர் உரையாடல் அதிலுள்ளது. சுந்தர ராமசாமியின் வெவ்வேறு கருத்துத்தரப்புகள் மிக அற்புதமாக அதிலுள்ளன. குறிப்பாக காந்தி பற்றி சொல்வதெல்லாமே கிளாஸிக். இன்றைக்கும்கூட பலரால் அந்நூல்பகுதிகள் மேற்கோள் காட்டப்படுகின்றன.

ஆனால் என்னை கூடுதலாகக் கவர்ந்தது சுந்தர ராமசாமியின் கிரியேட்டிவான மனநிலைகளை அதில் சொல்லியிருக்கும் விதம்தான். அதை இன்னொரு க்ரியேட்டிவ் எழுத்தாளர்தான் எழுதமுடியும். அதை எழுத கொஞ்சம் புனைவும் தேவை. வழக்கமான நினைவுக்குறிப்புகளில் சம்பவங்கள் மட்டும்தான் இருக்கும். அந்த சம்பவங்களுக்கு எழுத்தாளர் விஷயத்தில் பெரிய மதிப்பு ஏதுமில்லை. புரட்சியாளர்கள், சேவை செய்பவர்களின் வாழ்க்கை வரலாற்றில்தான் சம்பவங்கள் முக்கியமானவை. எழுத்தாளர்கள் மனசுக்குள் வாழ்பவர்கள். ஆகவே அவர்களின் மனசு வெளிப்படும் இடங்களை எழுதிக்காட்டினால் மட்டுமே அவை உண்மையானவையாக இருக்கும். அந்தவகையில் சு.ரா.நினைவின் நதியில் ஒரு கிளாஸிக்.

நான் இந்த புத்தகத்தை 2007 லேயே வாசித்துவிட்டேன். எனக்கு சுராவை 30 ஆண்டுகளாக தெரியும். பெரிய பழக்கமில்லை. தொடர்சியாக வாசிப்பவன் நான். முதல் வாசிப்பில் நீங்கள் சுரா பக்கத்தில் நிற்கமுயலும் புத்தகம் என்ற எண்ணம் எனக்கிருந்தது. அதை பலருக்குச் சொல்லியிருக்கிறேன். அந்தக் கருத்துள்ள வேறுபலரும் உண்டு. ஏனென்றால் அன்று சுரா பெரிய ஆளுமை. நாங்கள் உங்கள் எழுத்தை பெரியளவில் வாசித்ததுமில்லை. நான் அப்போது ரப்பர், திசைகளின் நடுவே இரு நூல்களை  மட்டுமே வாசித்திருந்தேன்

இன்றைக்கு வாசிக்கும்போது சுராவை விட மிகப்பெரிய ஆளுமை நீங்கள் என அறிந்தபின் வாசிக்கிறேன். ஓரளவு இலக்கியவாசிப்புள்ள எவரும் இதை மறுக்கப்போவதில்லை. பழையகால நஸ்டால்ஜியாக்களில் உழன்று மேற்கொண்டு வாசிக்காமலிருப்பவர்கள் சொல்லலாம்.சுராவை மாபெரும் ஆளுமையாக மனதில் வழிபடுபவர்கள் நினைக்கலாம். நானும் அப்படி இருந்தேன்.  ஆனால் இந்த ஆறு ஆண்டுகளில் விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் வாசித்தேன். கொற்றவை முடிக்கப்போகிறேன். வெண்முரசு இருக்கிறது. ஓய்வுபெற்றபிறகுதான் இப்படி படிக்கமுடிகிறது. கிரியேட்டிவ் எழுத்தில் சுரா எட்ட விரும்பி, எட்டமுடியாது போன உயரம் என்று பின்தொடரும் நிழலின் குரல் நாவலைச் சொல்லமுடியும்.

இன்றைக்கு வாசிக்கையில் அவருடன் உரையாடி நீங்கள் உருவான சித்திரம் இந்த புத்தகத்தில் உள்ளது. நுணுக்கமான விவாதங்கள் உள்ளன.  சுந்தர ராமசாமியின் சிரிப்பும் சட்டென்று சிந்தனிக்கு தாவும் அவருடைய லாவகமும் உள்ளது. இப்படி எழுத்தாளுமைகளைப் பற்றி ஏன் பதிவுசெய்யவேண்டும்? மேலை இலக்கியத்தில் இப்படி ஏராளமாக எழுதப்பட்டுள்ளது. இவைதான் எழுத்தாளனை காலத்தில் நிறுத்துபவை. இவை வழியாக நாம் எழுத்தாளனின் அகத்தை நுணுக்கமாக அறிகிறோம். அது அவர்களின் எழுத்தை இன்னும் அணுக்கமாக ஆக்கிவிடுகிறது.

எம்.சுந்தரராமன்

ஞானி நூல் வாங்க

ஞானி மின்னூல் வாங்க

ஞானி – தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ

அண்மையில் நீங்கள் ஞானி பற்றி எழுதிய நூலை வாசித்தேன். அதில் ஞானியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஒன்றுமே இல்லை. அவருக்கும் எஸ்.வி.ஆர் உட்பட பலருக்கும் மோதல்களும் இருந்துள்ளன. அவர் பலரைப்பற்றி கடுமையாகப் பேசியுள்ளார். என்னிடமும் பேசியுள்ளார். கடிதமும் எழுதியுள்ளார். அவை எதுவுமே இல்லை. அது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமளித்தது. ஞானியை நீங்கள் வெள்ளைபூச நினைக்கிறீர்கள் என தோன்றியது.

அதேபோல சு.ரா நினைவின் நதியில் புத்தகத்திலும் அவருடைய குடும்பம். வியாபாரம் பற்றியெல்லாம் ஒன்றுமில்லை. 1992ல் கோவை வந்தபோது அவருடன் நாங்கள் உரையாடியபோது ஜெயகாந்தன் பற்றி கடுமையாகப்பேசினார். அந்தவகையான எந்தக் கருத்துக்களும் அதில் இல்லை. ஞானி சுந்தர ராமசாமியின் வியாபாரம் பற்றி கடுமையாகச் சொல்லியிருக்கிறார். அதையும் நீங்கள் எழுதவில்லை.

நீங்கள் ஒரு வெள்ளைச்சித்திரத்தை மட்டுமே அளிக்கநினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

ஆர்.சுப்ரமணியம்

அன்புள்ள ஆர்.சுப்ரமணியம்,

நான் நினைவுக்குறிப்புகள் எழுதுவது சிந்தனையாளர்களையும் கலைஞர்களையும் அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்ய. என்றுமுள்ள நினைவுகளாக சிலவற்றை பதிவுசெய்ய. ஆகவே எது முக்கியம் என நினைக்கிறேனோ அவற்றையே பதிவுசெய்திருக்கிறேன். வம்புகள் பூசல்களை எழுதுவதில்லை. தனிப்பட்ட செய்திகளையும் எழுதுவதில்லை. அவை வரலாற்றுக்குரியவை அல்ல.

என் தரப்பை விரிவாக எழுதியிருக்கிறேன். பாருங்கள்

அவதூறுகளும் நினைவுக்குறிப்புகளும்

ஜெ

முந்தைய கட்டுரைகாதலிப்பவர்களின் அழகு
அடுத்த கட்டுரைமு. சாயபு மரைக்காயர்