யோகம் ,கடிதம்

அன்பு ஜெ

வணக்கம். சென்ற வாரம் நடைபெற்ற யோகா முகாமில் பங்குகொண்டேன். அதன் அனுபவங்களை உங்களுக்கு எழுதும் பொருட்டு இந்த மின்னஞ்சல்.

முதலில் என் வாழ்வில் மகத்தான மூன்று நாட்களை வழங்கியமைக்காக கோடானுகோடி நன்றிகள் ஆசானே. எம் தலைமுறைக்கு குரு சிஷ்யன் என்ற அனுபவமே கிடைத்ததில்லை. அறைக்கு வெளியில் இருக்கும் நீங்களும் குரு நித்யாவும் இருக்கும் ஓவியம் பரவசத்தை கொடுத்தது, இதுதான் நீ இருக்க வேண்டிய குரு பாதம் என்று சொல்லிக்கொண்டு உள் நுழைந்தேன். சௌந்தர் குருஜியிடம் இருந்து சுவாமி நிரஞ்சனா நந்த சரஸ்வதி, சத்யானந்த சரஸ்வதி, சிவானந்த சரஸ்வதி என்று பல குருமார்களின் ஞானத்தை கற்றுணர்ந்தோம். சதா சர்வகாலமும் வேலையை பற்றியே சிந்தித்து கொண்டு கணினித்திரையில் கட்டுண்டு இருக்கும் எனக்கு நித்தியவனம் நல்லதொரு மீட்பை வழங்கியது. வகுப்புகள் முடிந்து ஞாயிறு மதியம் மலையை விட்டு இறங்கிக்கொண்டிருக்கும்போது புதிய பிறப்பெடுத்ததாக உணர்ந்தேன்.

உண்மையில் குரு நித்யா Meeting Hall ஒரு ஞானபீடம். குருஜி யோகா இன்றைய வாழ்க்கைக்கு எந்தளவு relevant ஆக இருக்கிறது என்று விளக்கினார். நாம் செய்யும் சாதகங்கள் அன்றாடம் செய்யும் செயல்களில் எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை விளைவிக்கும் என்று எடுத்துரைத்தார். ஆசனங்களை காட்டிலும் அதற்கு முன்னும் பின்னும் குருஜி சொல்லும் விளக்கங்கள் பெரிய திறப்பாக அமைந்தன. ஆயுர்வேதத்தை குறித்த அறிமுகம், உபநிஷத்களில் இருந்து குறிப்புகள், பஞ்சமா கோஷங்கள், நான்கு வகையான யோகங்கள் என்று சுவாரஸ்யமாக வகுப்புகள் அமைந்தன.

அவ்வப்போது வெடி சிரிப்புகள். நேர்மறையான விவாதங்கள் கேள்வி பதில்கள் என்று திளைத்திருந்தோம். வெள்ளி இரவு ரெங்கா நாலாயிர திவ்ய பிரபந்தங்களை குறித்து உரை நிகழ்த்தினார். சனி இரவு அந்தியூர் மணி சைவ சித்தாந்த உரை நிகழ்த்தினார். வாழ்நாள் முழுவதும் என்னுடன் பயணிக்க போகும் இந்த மூன்று நாட்களை சாத்திய படுத்திய உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும்.

அன்புடன்,

மனோஜ்

முந்தைய கட்டுரைஅகழ்,சுகுமாரன்
அடுத்த கட்டுரைசாமுவேல் மெட்டீர்