சாதியை இந்துமதம்தான் உருவாக்கியதா?

இந்துமதத்தில் மட்டும்தான் பிறப்புசார்ந்த பிரிவினை உள்ளதா? (முந்தைய கட்டுரை)

சிந்தனைக் களத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று உண்டு. எந்த சிந்தனையும் அது உருவான காலகட்டத்தைச் சேர்ந்தது. சிந்தனை உருவான விதம், அதன் தர்க்கமுறை ஆகியவற்றைக் கொண்டே சிந்தனையைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த சிந்தனையை தொடர்ச்சியாக காலந்தோறும் வரும் புதிய பார்வைகளைக் கொண்டு மறுபரிசீலனை செய்துகொண்டும் இருக்கவேண்டும்.

இந்தியாவில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் வந்தபோது இங்கிருந்த சாதிமுறையைக் கண்டார்கள். அவற்றை ஆராய்ந்தபோது சாதிமுறையை ஆதரித்தவர்கள் வர்ணாசிரம முறையை வலியுறுத்தும் இந்துமத நூல்களை அவர்களுக்குக் காட்டினார்கள். அன்றைய ஆய்வாளர்கள் வர்ணாசிரம முறையை இந்து நூல்கள் முன்வைத்தன என்று புரிந்துகொண்டனர். வர்ணாசிரம முறையே சாதியாகியது என்று வரையறை செய்தனர்.

இது நடந்து இருநூறு ஆண்டுகள் ஆகின்றன. அதன் பிறகு சமூகவியல் (sociology), மானுடவியல் (Anthropology)  போன்ற பல அறிவுத்துறைகள் வந்துவிட்டன. ஏராளமான புதிய கொள்கைகள் வந்துவிட்டன. உலகம் முழுக்க இருந்து தகவல்களை பெற்று ஒன்றாகச் சேர்த்து ஆராயும் வசதி வந்துவிட்டது.

ஆனால் இன்றும் அந்த பழைய ஐரோப்பிய ஆய்வாளர்களின் கருத்துக்களை ஒட்டியே நம்மில் பலர் சிந்திக்கிறார்கள். வேண்டுமென்றே பேசும் மதவெறியர்களையும் அரசியல்வாதிகளையும் சொல்லவில்லை. பொதுவாகப் பேசுபவர்களைச் சொன்னேன்.

மார்க்ஸிய ஆய்வுமுறை கொண்டவரான டி.டி.கோசாம்பி என்னும் ஆய்வாளர் மிக விரிவாக இந்தியச் சாதிமுறையை ஆராய்ந்துள்ளார். அவரை ஒட்டி ஒரு சித்திரத்தை அளிக்கிறேன்.

இந்தியாவிலுள்ள பழங்குடிகளின் சமூக வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம். வெரியர் எல்வின் என்னும் ஆய்வாளர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். ஒவ்வொரு பழங்குடி இனமும் தனித்த அடையாளம் உடையது. இன்னொரு பழங்குடி இனத்துடன் அவர்கள் கலப்பதில்லை. பல பழங்குடி இனங்கள் இன்னொரு பழங்குடி இனத்தவரை தொடுவதுகூட இல்லை. தங்கள் தனித்தன்மையை பேணுவதிலேயே குறியாக இருப்பார்கள்.

நானே கண்டிருக்கிறேன். மேற்குமலைப் பழங்குடியினரான பளியரும் குறும்பரும் ஒருவர் கையால் ஒருவர் சாப்பிட மாட்டார்கள். அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருவரை ஒருவர் தொடுவதில்லை என்று கே.பானூர் என்னும் ஆய்வாளர் பதிவுசெய்துள்ளார். இன்றும்கூட, ஈரோடு பர்கூர் மலைப்பகுதிகளில் சோளகரும் பிற பழங்குடிகளும் ஒருவருக்கொருவர் தண்ணீர் வாங்கிக் குடிப்பதில்லை. பொதுக்கிணறுகூட கிடையாது. ஊரில் தீண்டாமை ஒழிப்பு பேசும் அரசு பழங்குடிகளிடையே அவற்றைச் சொல்ல முடியாது.

பழங்குடிகளிடம் தூய்மைப்படுத்தும் சடங்கும் உண்டு. இன்னொரு இனத்தவரை தொட்டாலோ, அல்லது இன்னொரு இனத்தவர் தங்கள் இடத்தில் அமர்ந்தாலோ சாணி கரைத்து ஊற்றி தூய்மை செய்வார்கள். இன்றும் தமிழகப் பழங்குடிகள் இதைச் செய்கிறார்கள்.

மோட்டார் வாகனங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை மலைக்காடுகளுக்குள் எவரும் போகவே முடியாது. பழங்குடிகளுடன் மற்றவர்களுக்கு தொடர்பே இல்லை. அவர்களின் மொழியே வேறு. இந்தியாவில் இன்றும்கூட ஒரிசாவில் ஆடை அணியாத பழங்குடிகள் இருக்கிறார்கள். நானே பார்த்திருக்கிறேன். அவர்களிடம் இந்த பிரிவுகளும் தீண்டாமையும் தூய்மைச் சடங்குகளும் எப்படி வந்தன? மனுநீதி சொல்லிக்கொடுத்ததா? பிராமணர் சொல்லிக்கொடுத்தார்களா?

இந்தியாவின் சமூக வரலாற்றை மிக எளிதாக புரிந்துகொள்ளலாம் என்று கோசாம்பி சொல்கிறார். இந்தியாவில் ஆடை அணியாத பழங்குடிகள் உள்ளனர். அவர்கள் ஐம்பதாயிரம் வருடம் முன்புள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள். மும்பையில் அதிநவீன வாழ்க்கை வாழ்பவர்கள் உள்ளனர். அவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறார்கள். இந்த இரு எல்லைகளுக்கும் நடுவே பல படிநிலைகளில் மக்களின் வாழ்க்கை உள்ளது. அவற்றை வரிசையாக அடுக்கிப்பார்த்தால் ஐம்பதாயிரம் ஆண்டுக்கால சமூகவளர்ச்சியை புரிந்துகொள்ள முடியும்.

அப்படிப் பார்த்தால் சாதி எங்கிருந்து வந்தது என்று எளிமையாக கண்டுபிடிக்கலாம். பழங்குடிகளிடையே பல குழுக்கள் உள்ளன. அவற்றை இனக்குழு (tribe) என்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் சாதி இல்லை, இனக்குழுக்கள்தான் உள்ளன. அந்த இனக்குழுக்கள் நடுவே இன்றுவரை கடுமையான பூசல்கள் நிகழ்கின்றன. அரசு கொஞ்சம் வலுவிழந்தால் ஒருவரை ஒருவர் கொன்றொழிக்கின்றனர்.

இந்த அழித்தொழிப்பு பல ஆயிரமாண்டுகளாக நிகழ்ந்து வந்தது. ஆகவே முன்பெல்லாம் ஓர் இனக்குழு தன் எண்ணிக்கையை வளர்ப்பது மட்டுமே உயிர்வாழ்வதற்கான ஒரே வழி. ஆகவே தொன்மைக்காலப் பழங்குடிகள் பிறரை தங்களுக்குள் வரவேற்று இணைத்துக் கொண்டனர். பெண்களை திருடிக்கொண்டு வந்தனர். பிற சிறிய இனக்குழுக்களை போர்செய்து வென்றோ, திருமண உறவுகள் வழியாகவோ இணைத்துக்கொண்டனர்.

அதாவது, தங்கள் இனக்குழு அடையாளத்தை வைத்துக்கொண்டே அத்தனை பேரையும் உள்ளே சேர்த்துக்கொண்டு எண்ணிக்கையில் பெருகினர். அவர்களே சாதிகளாயினர். அப்படி பெருகாதவர்கள் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். தப்பிப்பிழைத்தவர்கள் அடர்காடுகளில் வாழ்ந்த மக்கள் மட்டுமே. அவர்கள் பழங்குடிகளாகவே நீடிக்கின்றனர்.

அதாவது இனக்குழுக்கள் இணைந்து காலப்போக்கில் சாதி என்று ஆகி நீடிக்கிறது. ஆகவேதான் இந்தியாவில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியான பண்பாட்டு அடையாளம் இருக்கிறது. சடங்குகளும் ஆசாரங்களும் தனித்தனியாக உள்ளன. சாமிகள் தனித்தனியாக உள்ளன. முக அமைப்புகள் தனித்தன்மையுடன் உள்ளன. சாப்பிடும் உணவில்கூட வேறுபாடு உள்ளது.

இந்தியாவில் ஒரு வேடிக்கை உண்டு. எல்லாருமே சாதி அமைப்பை திட்டுவார்கள். தங்களை சாதியமைப்பு ஒடுக்கிவிட்டது என்பார்கள். ஆனால் எவருமே சொந்தச் சாதியை விட்டுக்கொடுக்கவும் மாட்டார்கள். சாதிப்பெருமிதத்தை குறைக்கவே மாட்டார்கள்.

சாதியை உங்களுக்கு பிராமணன் சதிசெய்து அளித்தான் என்றால் அதை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை மனுநீதிதான் அளித்தது என்றால் தூக்கி போடவேண்டியதுதானே? போட முடியாது. ஏனென்றால் சாதி உங்கள் அடையாளம் என்றும் தோன்றுகிறது இல்லையா?. அடிநிலைச் சாதிகள்கூட சாதியடையாளத்தை விடுவதில்லை என்பதல்லவா உண்மை?

ஆகவே இங்கே மக்கள் எதிர்ப்பது சாதியை அல்ல,  சாதியின்  அடுக்குமுறையைத்தான் எதிர்க்கிறார்கள். இது மேல்சாதி, இது கீழ்சாதி என்று இருக்கும் அமைப்பைத்தான் மறுக்கிறார்கள். ஒவ்வொரு சாதியும் தங்களை விட கீழே இருக்கும் சாதியில் இருந்து தங்களை விலக்கிக் கொள்கிறது. தங்களுக்கு மேலே உள்ள சாதியை எதிர்க்கிறது. இதை பிராமணர்களும் செய்கிறார்கள். அவர்களுக்கிடையேகூட மேல்கீழ் அடுக்கு உண்டு. அவர்களுக்குள்ளேயே அடிதடி நிகழ்வதையும் காணலாம்.

அந்த அடுக்குமுறை எப்படி வந்தது? அதையும் நாம் வடகிழக்கே பார்க்கலாம். அங்கே பழங்குடிகள் நடுவே வன்முறையும், எண்ணிக்கை பலமும் கொண்ட இனக்குழுக்கள் மேலானவர்கள் என கருதப்படுகிறார்கள். சிறிய இனக்குழுக்கள் கீழானவர்கள். சிறிய இனக்குழுக்கள் பெரிய இனக்குழுக்களுக்கு அடங்கி, ஒடுங்கி நடக்கவேண்டும். இல்லாவிட்டால் நேரடியான கடும் வன்முறை. இது நடந்துகொண்டே இருக்கிறது. பலர் இறந்தால்தான் செய்தியாகிறது. இந்த இனக்குழு அடுக்குமுறை அப்படியே ஆயிரம் வருடம் நீடித்தால் அது சாதிமுறை ஆகிவிடும்.

நமக்கே தெரியும், ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல கூட்டங்கள் இருக்கும். ஒவ்வொன்றும் தனித்தனியான அடையாளம் கொண்டவை. இப்போதுகூட பல சாதிகளில் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்துடன் திருமணம் செய்துகொள்வதில்லை. ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை கீழாகக் கருதுகிறது. இங்கே ஒவ்வொரு சாதிக்குள்ளும் ஐம்பது அறுபது கூட்டங்கள் உள்ளன இல்லையா?

யோசித்துப் பாருங்கள் இத்தனை பிரிவுகளையும், துணைப்பிரிவுகளையும் உருவாக்கியவன் பிராமணனா? மனுநீதி என்ற ஒரே ஒரு புத்தகம் இந்தியா முழுக்க இப்படி பல ஆயிரம் பிரிவுகளை உருவாக்கியதா? அப்படி நடக்க முடியுமா? அப்படி பலகோடிப்பேரை பிரிக்கவும் சாதியை உருவாக்கவும் அவர்களெல்லாம் என்ன தெய்வங்களா?

சரி, அவர்கள் சொன்னதுமே இப்படி ஆயிரக்கணக்காக பிரியுமளவுக்கு நம் முன்னோர் என்ன அறிவே இல்லாத மண்ணாந்தைகளா? என் மூதாதையரைப் பற்றி நான் அப்படி சொல்லமாட்டேன்.

சிறிய இனக்குழுக்கள் இணைந்து பெரிய இனக்குழுக்கள் ஆயின. இனக்குழுக்கள் சாதிகள் ஆயின. காலப்போக்கில் சாதிகளும் இணைந்தன. 1910 ல் வெள்ளையர் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தபோதுதான் சமானமான சாதிகள் இணைந்து பொதுவான பெயர்களைச் சூட்டிக்கொண்டன. ஆனால் உள்ளே தனித்தன்மையுடனும் இருக்கின்றன.

அதாவது மக்கள் சாதியாக பிரிக்கப்படவில்லை. சாதிகளாக ஒருங்கிணைந்தார்கள். அவ்வாறுதான் இந்திய சமூகம் உருவாகியது. இது நடந்துகொண்டே இருக்கிறது. சென்ற முப்பதாண்டுகளில், நம் கண்முன்னாலேயே பல இணையான சாதிகள் ஒன்றாகியிருப்பதை நாம் காணலாம். இனியும் சாதிகள் ஒருங்கிணையும்.

இன்று சாதிக்கு ஒரு பொருளியல் அடிப்படை உள்ளது. சாதியடையாளம் நம் சமூகத்தில் தனிநபர் அடையாளமாகவும் உள்ளது. இவையிரண்டும் காலப்போக்கில் மறையுமென்றால் சாதிமுறை அழியும். கொஞ்சம் அடிப்படை மார்க்ஸியம் கற்றவரே இதைச் சொல்லிவிட முடியும். சாதி என்பது மேல்கட்டுமானம். பொருளியலே அடித்தளம். அடித்தளம் மாறினால் மட்டுமே மேல்கட்டுமானம் மாறும்

நான் சாதிமுறைக்கு ஆதரவாளன் அல்ல. இன்றைய வாழ்க்கையில் சாதி அடையாளம் தேவை இல்லை என நினைப்பவன், என் சொந்த வாழ்க்கையையும் சாதியை மீறித்தான் அமைத்துக் கொண்டேன். ஆனால்  சாதி என்பதை சரித்திரத்தில் வைத்துப்பார்ப்பேன். அது இந்தியச் சமூகம் பழங்குடி வாழ்க்கையில் இருந்து திரண்டு வந்தபோது உருவான ஒன்று. அதை எவரும் உருவாக்கவில்லை. அதை உருவாக்கியது மதம் அல்ல.

இந்துமதம் – தொகுப்பு

முந்தைய கட்டுரைரிச்சர்ட் நீல்
அடுத்த கட்டுரைவெண்முரசு இசைக்கோலம்