அறியாமையின் பொறுப்பு
அன்புள்ள ஜெ
நான் இதை அமெரிக்காவில் இருந்து எழுதுகிறேன். என் பெயர் வேண்டாம். என் உறவினர்களும் உங்கள் வாசகர்கள். ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும்.
நான் அமெரிக்கா வந்து இருபத்தேழு ஆண்டுகளாகின்றன. அமெரிக்காவில் படித்து இங்கேயே தொழில்நுட்பப் பணியில் இருக்கிறேன். என் மனைவியும் இங்கே படித்து, இங்கேயே பணியாற்றுபவர். இங்கே ஓர் உயர்நடுத்தரவர்க்க வாழ்க்கையை வாழ்கிறோம்.
என் குழந்தைகளை ஓரு நவீனச் சூழலில் வளர்க்கவேண்டுமென நினைத்தேன். அவர்களுக்கு அறிவியல் போதும் என்று எண்ணிக்கொண்டேன். ஆகவே முழுக்க முழுக்க மதமும், ஆன்மிகமும், தத்துவமும் இல்லாத சூழலிலேயே அவர்களை வளர்த்தேன். அறிவியல் மட்டுமே எல்லா கேள்விகளுக்கும் விடை என நம்பியவன் நான். எனக்கு மதநம்பிக்கை இல்லை என்பதை எல்லா சந்திப்புகளிலும் சொல்வேன். என்பெயர் இந்து தெய்வத்தின் பெயர். அதை அடையாளம் தெரியாதபடி மாற்றி வைத்துக்கொண்டேன்.
ஆனால் என் பிள்ளைகளுக்கு அந்த அறிவியல்சூழல் போதவில்லை. பணம் இருக்கும்போது கேளிக்கைகளிலும் நுகர்விலும் திளைக்காமலிருப்பதற்கு ஒரு கட்டுப்பாடு தேவைப்படுகிறது. அதை ஒழுக்கம் (morality) என்று சொல்லலாம். அந்த ஒழுக்கத்துக்கு ஓர் அறம் (Ethics) தேவை.அந்த அறம் நிலைகொள்வது ஆன்மிகத்தில். (Spirituality). அதை நான் புரிந்துகொள்வது மிகத்தாமதமாக.
எனக்கே மதம் கடந்த ஆன்மிகம் என நீங்கள் சொல்லும் எதைப்பற்றியும் எதுவும் தெரியாது. நான் அறிந்ததும் நிரூபணவாத அறிவியலைக்கொண்டு மதத்தை கேலிசெய்யும் நாத்திகம் மட்டும்தான். அதில் ஆன்மிகம் இல்லை. அது அமெரிகாவின் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு போதுமானது அல்ல என்று இன்று நினைக்கிறேன்.
அமெரிக்காவின் இளைஞர்களின் சூழல் இரண்டுதான். ஒன்று அர்ப்பணிப்புடன் கற்கும் சிறுபான்மை. இன்னொன்று, ’பார்ட்டி-டேட்டிங்’ கலாச்சாரத்தில் திளைக்கும் தலைமுறை. பத்து வயதிலேயே நவீனத் தொழில்நுட்பம், நவீன ஊடகம் ஆகியவை அறிமுகமாகிவிடுகின்றன. அது மிகப்பெரிய கடல்அலை போல இளம் வயதினரை அடித்துச் சுருட்டிச் சென்றுவிடுகிறது. அதற்கு எதிராக நிற்பது மிகமிகக் கடினம்.உயர்தர நுகர்பொருட்கள், கண்மூடித்தனமான சில பற்றுகள், மோஸ்தர்கள் இதெல்லாமில்லாமல் இங்கே வாழமுடியாது.
என் மகனுக்கு போதைப்பழக்கம் இருப்பதை நான் மிகவும் பிந்தித்தான் கண்டுபிடித்தேன். அவன் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். பார்ட்டிகளில் மூத்த நண்பர்கள் கட்டாயப்படுத்தி கொடுத்து அப்படியே பழகிவிட்டது அது இல்லாவிட்டால் பெண்களை நெருங்கமுடியாது என்று அவன் நம்பினான். மிகச்சீக்கிரமே கண்டடைந்ததனால் எட்டுமாதம் ஒருங்கிணைந்த சிகிச்சைக்குப்பின் அவன் மீண்டுவந்தான். ஆனால் அவனை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவன் கண்ட ஒரே வழி இஸ்லாமியனாக மாறிவிடுவது.
இங்கே மதப்பிரச்சாரம் மிக உச்சக்கட்டமாக நடைபெறுகிறது.ஓராண்டில் அவனை வெவ்வேறு மதப்பரப்புநர்கள் சந்தித்து பேசி மனமாற்றம் செய்திருக்கிறார்கள். அவனுக்கு 18 வயதாகவில்லை. ஆனால் எந்த தகவலும் தெரிவிக்காமல் மதம் மாறிவிட்டான். இப்போது அவனுடைய தங்கையையும் பலவிதமாகப் பேசி, பயமுறுத்தி மனம் மாற்றிவிட்டான். அவளும் மதம் மாறப்போவதாகச் சொல்கிறாள். அவளுக்கு 14 வயது.
அமெரிக்காவில் இது சட்டபூர்வமாக இல்லை. ஆனால் அவர்கள் வீட்டைவிட்டுச் செல்லமுடியும். என்னையும் என் மனைவியையும் மதம் மாறும்படிச் சொல்லி உணர்வுமிரட்டல் செய்கிறான். காஃபிர்கள் என்று சொல்கிறான். அவன் மதம் மாறியதுகூட பிரச்சினை இல்லை. அவனுடையது மிக மூர்க்கமான வஹாபிய நம்பிக்கை. அது தூய்மைவாத இஸ்லாம் அல்லாத எல்லாவற்றையும் வெறுக்கிறது. எல்லாமே பாவம் என்று சொல்லி ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையை முன்வைக்கிறது.
இதேதான் எனக்கு தெரிந்த ஒரு இன்னொரு குடும்பத்திலும் நிகழ்ந்தது. அவர்கள் பிராமணர்கள். ஆனால் இந்து மதம், வழிபாடு எல்லாவற்றையும் கேலி செய்பவர்கள். அவர்களின் மகன் செவெந்த் டே அட்வென்டிஸ்ட் என்னும் அதிதீவிர கிறிஸ்தவ அமைப்புக்குள் சென்றுவிட்டான். அவர்கள் ஒரு மூடிய சமூகம் போன்றவர்கள். மிகத்தீவிரமான நம்பிக்கை கொண்டவர்கள். அவனும் மைனர்தான். இது உண்மையிலேயே மிகப்பெரிய பிரச்சினை. பல அமெரிக்கக் குடும்பங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக தென்னிந்திய இந்துக்குடும்பங்களில்.
இதை உண்மையில் எப்படி எதிர்கொள்வது என்பது மிகப்பெரிய சிக்கல். இங்கே குடும்பங்களில் எதிலும் மதமோ ஆன்மிகமோ இல்லை. ஏனென்றால் இங்கே வருபவர்களின் பெற்றோருக்கே மதப்பயிற்சியோ ஆன்மிக ஞானமோ இருப்பதில்லை. பிள்ளைகளை மதம், ஆன்மிகம் எதுவுமே தெரியாமல் பொத்தி வளர்ப்பார்கள். படிப்பு மட்டுமேதான் அவர்களுக்கு கொடுக்கப்படும். அதாவது தொழில்நுட்பக்கல்வி. வேறு எந்த ஈடுபாடும் படிப்பில் இருந்து திசைதிரும்பச் செய்துவிடும் என்று பெற்றோர் நினைத்திருப்பார்கள்.
நானோ என் நண்பர்களோ இந்தியாவில் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு இந்துத் திருவிழாவைக்கூட பார்த்தது இல்லை. ஒரு இந்துக்கோயிலைக்கூட நெருக்கமாக பார்த்தது இல்லை. இந்து ஆன்மிகம் சார்ந்த ஒரு சொற்பொழிவைக்கூட கேட்டதுமில்லை. எங்கள் வீட்டில் இந்து மெய்ஞானம் சார்ந்த ஒரு புத்தகம்கூட இருந்தது இல்லை. இப்படியே படித்து அமெரிக்கா வந்த தலைமுறை நாங்கள். எங்களுக்கு இந்து மதத்தில் வேரே இல்லை.திராவிட இயக்கம் சார்ந்த பின்னணி கொண்ட பலருக்கு கடுமையான இந்துவெறுப்பும் உண்டு.
எங்கள் பெற்றோர் இப்போது கடமையெல்லாம் முடிந்தது என நினைத்து ஆன்மிகவாதிகளாகி கோயில்கோயிலாக செல்கிறார்கள். பிள்ளைகளுக்கு இந்துப்பண்பாட்டை கொடுக்க எங்களிடம் சொல்கிறார்கள். அது குடும்பத்தில் இயல்பாக இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது முந்தைய தலைமுறையிலேயே இல்லாமலாகிவிட்டது. இனி அதை உருவாக்குவது எப்படி? அதற்கான எந்த அடிப்படைப் பயிற்சியும் எங்களுக்கு இல்லை.
இங்கே அமெரிக்காவில் கோயில்கள் உள்ளன. அங்கே இங்குள்ள முதியவர்கள் செல்வது வழக்கம். அந்தக் கோயிலுக்கு இளைய தலைமுறையை கூட்டிச்சென்றால் அவர்களுக்கு இந்துமதத்தின் தத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றை விளக்க எங்களுக்கு தெரியாது. கும்பிட்டுவிட்டு பிரசாதம் வாங்கிவிட்டு திரும்பி வருவோம்.
ஆன்மிகத்தை அறிமுகம் செய்யலாம் என்றால் அதற்கான அமைப்புகளுமில்லை, ஆசிரியர்களுமில்லை. அதற்கான முயற்சிகள் எல்லாமே பெருங்கேலிக்கூத்து. இந்தியாவிலிருந்து பட்டிமன்றப்பேச்சாளர்களை அழைத்து மதம் அல்லது ஆன்மிகம் பற்றிப் பேசவைக்கிறார்கள். அதைத்தான் இங்குள்ள பெற்றோரால் கேட்கமுடிகிறது. ஏனென்றால் இவர்களுக்கு தரமான எதையும் வீட்டில் அறிமுகம் செய்திருக்கவில்லை. அடிப்படை அறிவுத்தரமே அவ்வளவுதான். எளிமையான புராணக்கதைகளும் நகைச்சுவைகளும்தான் அங்கே கேட்கும். அங்கிருந்து இங்கே படித்து வளரும் இளைய தலைமுறையினர் என்ன கற்றுக்கொள்ள முடியும்?
இன்னொரு பக்கம் ஆன்மிக குருக்கள் நிகழ்த்தும் வகுப்புகள் உள்ளன. இவை கொஞ்சம் அமெரிக்க மனதுக்கு உகந்தவையாக உள்ளன என்பதை மறுக்கமுடியாது. நவீன மொழியில் பேசுகிறார்கள். ஆனால் கடைசியில் அவையும் தனிமனித வழிபாடாக மாறிவிடுகின்றன. ஆன்மிகம் இரண்டாமிடம் ஆகிவிடுகிறது. அதுவும் இளைஞர்களை கவர்வதில்லை.
சம்பிரதாயவாதிகளை கொண்டுவந்து இங்கே மத உபன்யாசம் செய்து ஆன்மிகத்தை பரப்பலாமென நினைக்கும் ஒரு கூட்டமும் இங்குண்டு. இங்கே நவீன ஜனநாயகச் சூழலில் வளர்ந்த குழந்தைகள் அந்தச் சம்பிரதாயவாதிகளின் ஆசாரங்களையும், சாதிமனநிலைகளையும் கேட்டால் அருவருப்புதான் அடைவார்கள்.
மொத்தத்தில் வேறேதுவழியும் இல்லாமல் சிக்கிக்கொண்டிருக்கும் நிலைமையே இங்கே உள்ளது. இதே சூழ்நிலைதான் இந்தியாவிலும் உயர்நடுத்தர வர்க்கத்திலும் இருக்கும் என நினைக்கிறேன்.
இந்த கடிதத்தை 2020ல் கொரோனா காலகட்டத்தில் எழுத ஆரம்பித்தேன். மனச்சோர்வால் எழுதி முடிக்க முடியவில்லை. பல பகுதிகளாக எழுதி அனுப்பியிருக்கிறேன்.
ஆர்