கிறிஸ்தவப்பாடல்கள், கடிதம்

ஜான் பால்மர்

ஜெ ,

தமிழ் விக்கியின்ஜான் பால்மர்பற்றிய பதிவுகள் படித்தேன். அவர் எழுதிய கீர்த்தனைகளின் பட்டியல் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள் போதகர் தினகரன் அவர்கள் பாடியிருப்பார். அவைகள் எல்லாம் இந்தப் பட்டியலில் இருந்தது. ஏறக்குறைய ஒரு இருபத்தேழு வருடங்களாக இந்தக் கீர்த்தனைகளைக் கேட்டும் பாடியும் வருகிறேன். ஆனால் இவைகள் யாரால் எழுதப்பட்டவை என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன். இன்னும் நிறையக் கீர்த்தனைகளை அப்படியே எளிய தமிழில் பாடல்களாய் மாற்றி இருக்கிறார்கள். 

உதாரணமாய்ஆரினிடத்தில் ஏகுவோம் என் ஆண்டவனேஎனும் பாடலையாரிடம் செல்வோம் இறைவாஎன்று எளிமைப்படுத்தியதால் அனைவரும் விரும்பிப் பாடக்கூடிய பாடலாக இருக்கிறது. ‘உந்தன் சுயமதியேஎனும் கீர்த்தனை நடராஜ முதலியார் என்பவர் பாடியிருப்பார். அவரே எழுதியது என்றுதான் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.

ஓசன்னா பாடுவோம், ஒரு மருந்தரும் குருமருந்து, திருமுகத் தொளிவற்று, தேன் இனிமையதிலும், நெஞ்சமே தள்ளாடிஉந்தன் சுயமதியேபெத்தலையில் பிறந்தவரைஇவைகள் எல்லாம் எல்லா நேரங்களிலும் கேட்க இனிமையான பாடல்கள். 

நன்றி சார்.

டெய்ஸி பிரிஸ்பேன் 

*

அன்புள்ள ஜெ

பெத்தலையில் பிறந்தவனை…. சுசீலா பாடிய அருமையான பாடல். அதை வெத்தலையில் பிறந்தவனை என்றுதான் எங்களூரில் அனைவருமே பாடுவார்கள். நாங்கள் சின்ன வயதில் பார்த்த கிருஷ்ணனின் படமும் அப்படித்தான் இருக்கும். ஆகவே ஏசுவும் அப்படித்தான் என நினைத்துக்கொண்டோம். பெரியவர்களும் அப்படித்தான் நினைத்தார்கள். அந்த அருமையான பாடலின் யூ டியூப் வடிவை உங்கள் குறிப்பை தொடர்ந்து சென்று படித்தபோது அடைந்தேன்.

அந்தப்பாடலை பாடியவர் பால்மர் என்னும் குமரிமாவட்டத்து கவிஞர் என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன். அவர் பெயர் இங்கே கிறிஸ்தவர்களுக்கே தெரியாது. தமிழ் விக்கியிலுள்ள கிறிஸ்தவக் கவிஞர்கள், கிறிஸ்தவ ஊழியர்களின் வரலாறுகளையே தனியாக வாசிக்கவேண்டுமென நினைக்கிறேன்.

நன்றி

சில்வியா சுந்தர்

முந்தைய கட்டுரைவெண்முரசொலி
அடுத்த கட்டுரைமண்வீடுகள்- கடிதம்