இசையும் ஓவியமும் இலக்கியத்திற்கு எதற்காக?

அஜிதன் இசை- தத்துவ வகுப்பு

அன்புள்ள ஜெ

பீத்தோவன் இசை வகுப்பு பற்றிய அறிவிப்பைப் பார்த்ததும் இதை எழுதுகிறேன். நான் ஓர் இலக்கிய வாசகன். முக்கியமாக இலக்கியம்தான் எனக்கு வேண்டும். அந்த இசை வகுப்பில் நான் கலந்துகொண்டால் என்ன நன்மை என்று யோசித்தேன். நான் புனேவிலிருந்து அவ்வளவு தூரம் வரமுடியுமா என்பது வேறு விஷயம். ஆனால் இசையறிமுகம் எதற்கு பயன்படும் என்ற சந்தேகம் வந்தது. இதை உங்களுக்கு விரிவாக எழுதவேண்டுமென நினைத்தேன். ஆனால் இவ்வளவுதான் என் கேள்வி என்று இப்போது தோன்றுகிறது. இலக்கியவாசிப்புக்கு இசையறிமுகம் அவசியமானதா?

ரவிராஜ்

ஜெயக்குமார், அஜிதன் மற்றும் மாணவர்கள்

அன்புள்ள ரவிராஜ்,

பொதுவாக இலக்கியவாதிகள் மற்றும் அறிவுத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு இசை அவசியம். அது மூளையை குளிப்பாட்டுவதுபோல. ஒரு நாள் முழுக்க மூளையால் வேலைசெய்பவர்கள் எவருக்கும் இசை என்பது  பெரிய இளைப்பாறல். அதிலும் கலையிலக்கியத்தில் இருப்பவர்கள் கூடவே உணர்ச்சிகரமாகவும் அதில் ஈடுபடுகிறார்கள். உணர்ச்சிகள் எளிதில் உள்ளத்தை களைப்புறச்செய்பவை. இசையுடன் ஓய்வு என்பதே அதற்கான சிறந்த வழி. அந்த பாதை எல்லா முன்னோடிகளும் நமக்குக் காட்டியது.

மிகமிகக் குறைவாகவே எனக்கு இசை ரசனை உள்ளது. அது என் பின்னணியில் இருந்து அமைந்தது. எந்த இசைரசனைப் பயிற்சிக்கும் வழியற்றவனாகவே நான் வளர்ந்தேன். என் இசை ரசனை அருண்மொழியை மணம் செய்துகொண்டபின் அவளிடமிருந்து ஒட்டிக்கொண்ட மெல்லிய சாயத்தீற்றல் மட்டுமே. அதை முன்னெடுக்குமளவுக்கு பின்னர் எனக்குப் பொழுதும் இல்லை. வரலாறு, தத்துவம் என்றே என் பக்கவாட்டு விரிவுகள் அமைந்தன. ஆனாலும் இசை ஓரளவேனும் தேவையாக உள்ளது. ஒருநாள் கூட இசையில்லாமல் தூங்கவும் முடிவதில்லை. மிகமிகக்  கொஞ்சம் என்றும் சொல்லியாகவேண்டும்.

நாம் அனைவரும் கேட்கும் இசை என்பது சினிமாப்பாடல். நம் சூழலில் இருந்து நம்மை வந்தடைந்தது அது. எந்தப்பயிற்சியும் தேவையற்றது. அத்துடன் அது கதைச்சந்தர்ப்பங்களுடன் இணைந்து நமக்கு வந்து சேர்கிறது, ஆகவே தொடர்புறுத்தல் எளிது. உணர்வுகளை கதை சார்ந்து உருவாக்கிக்கொண்டு அந்த இசைக்குள் செல்ல முடிகிறது. சினிமாப்பாடல்கள் இப்போது காட்சிகளுடன் இணைந்தே கிடைக்கின்றன. நாம் வெறும் பாடலாக இசை கேட்பது மிக அரிதாகிவிட்டிருக்கிறது.

சினிமா இசை என்பது குறைவானது அல்ல. அது தன்னுள் உலக இசையின் எல்லா கூறுகளையும் எடுத்து உள்ளடக்கிக்கொண்டிருக்கும் ஒன்று. சினிமாப்பாடல் வழியாகவே செவ்வியல் இசை முதல் பரப்பிசை, நாட்டாரிசை என அனைத்தையும் அடையமுடியும். ஆனால் அது நேர அளவு கொண்டது. அது இசை அல்ல, இசைத்துளிதான். தொடர்ச்சியாக இசை கேட்பவர்களால் சினிமா இசைக்குள் அதிகதூரம் செல்ல முடியாது. மிக விரைவிலேயே தரைதட்டிவிடும்.

அத்துடன் நாம் சினிமாப்பாடல்களை வெறும் இசையாகக் கேட்பதில்லை. நினைவுகளுடன் இணைத்துக் கொள்கிறோம். பெரும்பாலும் கடந்தகால ஏக்கம் சார்ந்தே பாடல்களைக் கேட்கிறோம். இது பொதுவாக உணர்வுச்சீண்டல்களை அளிப்பது. சமயங்களில் நிலைகுலைவும் உருவாகலாம். எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்களுக்கு தேவை உணர்வுகளில் இருந்து விடுபடும் ஓய்வு. சினிமாப்பாடல் நேர் எதிராக அழுத்தமான நினைவுக்கொந்தளிப்பை உருவாக்கிவிடக்கூடும். சமயங்களில் சோர்வை உருவாக்கலாம். நாம் செய்துகொண்டிருக்கும் பணியின் உணர்வுநிலையை மாற்றி நம்மை வேறு ஒன்றுக்கு கொண்டுசென்றுவிடலாம்.

சினிமாப்பாடலின் இசை என்பது ஓர் அகவைக்குப்பின் நமக்குப் பெரும்பாலும் நினைவுகளின் வழியாக கடந்தகாலத்துக்குச் செல்வதுதான். அது பின்னகர்வு. செயலில் இருந்து நம்மை விலக்குவது. சலிப்பும் சோர்வும் அளிப்பது. செயலூக்கமுடன் வாழ நமக்கு தேவை முன்னகர்வு. அது செவ்வியல் இசையிலேயே உள்ளது. செவ்வியலிசை புதிய சாத்தியங்களை அளித்தபடியே உள்ளது. ஆகவேதான் இசை கேட்பவர்கள் செவ்வியலிசைக்குச் செல்கிறார்கள். சினிமாப்பாடலில் இருந்து கர்நாடக இசை, அங்கிருந்து இந்துஸ்தானி இசை – இதுதான் பெரும்பாலானவர்களின் முன்னகர்வாக உள்ளது. சினிமாப்பாடல்களில் இருந்து மேலை பாப் இசை. அங்கிருந்து  மேலைச் செவ்வியல் இசை. அது இன்னொரு வகை முன்னகர்வு.

*

இளைப்பாறுதல் என்பதற்கு அப்பால் மேலைச்செவ்வியல் இசையை தெரிந்துகொள்வதற்கான பண்பாடு சார்ந்த சில காரணங்கள் உள்ளன. இங்கே நாம் நவீன இலக்கியத்திற்கான விளைநிலமாக மேலையிலக்கியத்தையே கொண்டிருக்கிறோம். நமது நவீன இலக்கியத்தின்  ‘செவ்வியல் பின்புலம்’ ஐரோப்பிய இலக்கியமே. ஐரோப்பியப் பேரிலக்கியங்கள் மீதான வாசிப்பும் ரசனையும் எந்த அளவுக்குக் கூர்கொள்கின்றன என்பதை ஒட்டியே ஒருவரின் இலக்கியத் தகுதி உருவாகிறது என்பதே உண்மை.

ஆனால் இங்கே ஐரோப்பிய இலக்கியங்களை வாசித்து, ரசிப்பதாகச் சொல்லிக்கொள்பவர்கள் பெரும்பாலானவர்களின் ரசனை மிகமிக குறைவுபட்டது. நமக்கு ஐரோப்பிய இலக்கியம் சார்ந்து முறையான அறிமுகத்துக்கான வாசல் இல்லை. நமக்கு தோன்றியபடி, கைக்குக்கிடைப்பதன் அடிப்படையில் உள்ளே நுழைகிறோம். பெரும்பாலும் புரிவதில்லை. புரியாததை நம் எல்லைக்குட்பட்டு, கற்பனையால் உருவாக்கிக் கொள்கிறோம். ஆகவே இங்கே ஐரோப்பிய இலக்கியம் சார்ந்து பெரும்பாலானோருக்கு பிரமைகள் மட்டுமே உள்ளன.

கிராமப்பின்னணி கொண்ட பலருக்கு ஐரோப்பிய இலக்கியங்கள்  புரிவதில்லை. ஆகவே புரியாமையே இலக்கியத்தின் உச்ச அழகியல் என எண்ணிவிடுகிறார்கள். அந்தப் புரியாமையை தாங்களும் உருவாக்க முயல்கிறார்கள். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு தேர்ச்சியற்ற மொழி கொண்டவர்கள் செய்யும் மொழியாக்கம் வழியாக உருவாகும் சொற்றொடர்ச்சிடுக்குகளை ஐரோப்பிய இலக்கியம் என எண்ணி அதை தாங்களும் முயலும் எழுத்தாளர்கள் உண்டு. ஐரோப்பிய இலக்கியங்களின் நுணுக்கமான பண்பாட்டு உள்ளடுக்குகளை அறியாமல் அவற்றை வாசித்து அதன் விளைவான பொருள் மயக்கத்தை தாங்களும் செய்துபார்ப்பவர்களும் உண்டு. அத்துடன் ஐரோப்பிய இலக்கியப் படைப்புகளை ஒன்றுமே தெரியாமல் உள்ளூர் வாசிப்பை நிகழ்த்தி, அந்த ’மோட்டார் மெக்கானிச’ வாசிப்பையே சிறந்த வாசிப்பாக நினைப்பவர்களுமுண்டு.

எனக்கு, நல்லூழாக ஐரோப்பிய தத்துவம் மற்றும் வரலாற்றில் ஆழ்ந்த பயிற்சி கொண்ட ஆசிரியர்கள் அமைந்தனர். நான் அவர்களை தேடித்தேடிச் சென்றேன். நல்லூழ் என்பது அவ்வாறு தேடிச்செல்லவேண்டும் என எனக்குத் தோன்றியதுதான். பெரும்பாலும் எழுத்தாளர் பலருக்கு அப்படித் தோன்றுவதில்லை. தமிழ்ச்சூழலில் ஒரு புத்தகம் வெளிவந்துவிட்டதென்றால் அதன்பின் எவரும் எதையும் கற்பதில்லை. அந்த மனநிலையை முழுமையாக இழந்துவிடுவார்கள். கருத்துக்களைச் சொல்வதும், அங்கீகாரங்களுக்காக ஏங்கி காலப்போக்கில் கசப்படைவதுமாக காலம் செலவிட்டு, கடைசியில் வம்புகளில் நீந்தும் முதியோராக மாறி அமர்ந்திருக்கிறார்கள்.

பெரும்பாலானவர்களுக்கு இங்கே முதலில் நேரடியாக அரசியல்தரப்புகள் மட்டுமே அறிமுகமாகின்றன. அரசியல் தரப்புகள் அதன் விசுவாசிகளுக்கு அளிப்பது ஒருவகை மிகையான தன்னம்பிக்கையை. பிறருக்கு தெரியாத பலவிஷயங்கள் தங்களுக்குத் தெரியும் என்றும், ஆகவே பிறரிடம் விவாதிப்பது மட்டுமே மேற்கொண்டு செய்யவேண்டியது என்றும் அவை அந்த விசுவாசிகளை நம்பச்செய்கின்றன. அதன் வழியாக அவர்களை ஒருவகை மதப்பரப்புநர்கள் போல ஆக்கிவிடுகின்றன. அதன்பின் அவர்கள் தாங்களறிந்த சிலவற்றை இடைவிடாமல் கூவிக்கொண்டிருப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். வாழ்நாள் முழுக்க அவர்கள் விவாதித்துக்கொண்டே இருப்பார்களே ஒழிய எதையும் எவரிடமிருந்தும் கற்றுக்கொள்வதில்லை.

ஐரோப்பிய இலக்கியங்களின் பின்னணியை இப்படி சுருக்கமாக விளக்குகிறேன். ஐரோப்பிய வரலாற்றை விட்டுவிட்டு ஐரோப்பிய இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பிய வரலாறென்பது அரசியல், மதம்  ஆகியவற்றுக்கு இடையேயான பூசல் மற்றும் காலப்போக்கில் உருவாகி வந்த முரணியக்கம் ஆகியவற்றாலானது. அதை ஐரோப்பிய தத்துவம் வழியாகப் புரிந்துகொள்ளலாம். ஐரோப்பிய தத்துவம் பரிணாமம் அடைந்து வந்ததை அறியாமல் ஐரோப்பியப் பேரிலக்கியங்களை சரியாகப் புரிந்துகொள்ளவே முடியாது. மதமும் அரசியலும் அவர்களின் வரலாற்றை எப்படி கட்டமைத்தன என்பதை தத்துவார்த்தமாக அறிந்தே ஆகவேண்டும்.

மிகப்புகழ்பெற்ற செவ்வியல் நாவல்களையே எடுத்துக் கொள்வோம். போரும் அமைதியும் நாவலில் பியர் கொள்ளும் தத்துவச் சிக்கல்கள், ஆன்ட்ரூ அடையும் அரசியல் வினாக்கள் எல்லாமே அந்த பெரும்பின்னணியில் இருந்து எழுபவை. கரமசோவ் சகோதரர்களில் அந்த ஒவ்வொரு சகோதரரும் ஐரோப்பாவில் அன்றிருந்த வெவ்வேறு கருத்தியல் நிலைபாடுகளின் பிரதிநிதிகள். அந்த அடிப்படை விவாதங்களை தவிர்த்துவிட்டு அந்நாவல்களை வாசிப்பது வெறுமே தொட்டுப்பார்ப்பது மட்டும்தான்.

மேலைத்தத்துவம் வழியாக ஐரோப்பாவின் விவாதங்களையும், பண்பாட்டின் முரணியக்கத்தையும் அறியலாம். மறுபக்கம் ஐரோப்பாவின் ஒருங்கிணைவையும் இசைவையும் அறிய மேலையிசையை அறிந்தாகவேண்டும். ஐரோப்பா அதன் இசை வழியாகவே ஒற்றைக் கலாச்சாரப் பரப்பாக ஆகியது. ஐரோப்பிய இசையின் பண்பாட்டுக்களங்கள் பொதுவாக மூன்று. ஜிப்ஸிகள் மற்றும் தொல்குடிகளால் பாடப்பட்ட நாட்டாரிசை ஓர் ஊற்று. மதம்வழியாக வந்த தோத்திர இசை (காஸ்பல்) இன்னொரு ஊற்று. அரசசபைகளில் உருவாகி வந்த  அவையிசை இன்னொரு ஊற்று. இவை  முதன்மையான மேதைகள் வழியாக மிகச்சிறந்த படைப்பூக்கத்துடன் ஒன்றாயின. அதுவே நாம் அறியும் மேலைச்செவ்வியல் இசை. அது ஐரோப்பாவின் மூன்று பண்பாட்டு சரடுகளின் இணைவுதான். அதிலிருந்தே ஐரோப்பியச் நவீன அழகியல் கலை உருவாகியது. இலக்கியம், ஓவியம் அனைத்திலும்.

இசை பண்பாட்டின் நுண்வடிவாக, ஒலிக்குறியீடுகள் மட்டுமே கொண்டதாக, பொதுவாக ரசிக்கப்படுகிறது. குறைவாகவே அதில் இலக்கியம் உள்ளது – இசைப்பாடல் வடிவாக.  அரிதாக இசைநாடகம் இசையுடன் அமைந்த இலக்கியமாக உள்ளது. அப்போதுகூட அது இசையின் துணையமைப்பாக, தனித்தே திகழ்கிறது. இசையாக நேரடியாக பண்பாட்டுக்கூறுகளும் இலக்கியமும் வெளிப்படுவதில்லை. ஆனால்  மேலைச்செவ்வியல் இசையில் அவை இசையாகவே வெளிப்படுகின்றன. அந்த தொடக்கம் நிகழ்ந்தது பீத்தோவனில் எனப்படுகிறது. ஓப்பரா, சிம்பனி போன்றவை இசையிலமைந்த காவியங்கள். அதாவது, இசையமைக்கப்பட்ட காவியங்கள் அல்ல, இசையெனும் கலைவடிவிலேயே நிகழ்ந்த காவியத்துக்குச் சமானமான கலைநிகழ்வுகள். இசையே காவியம்போல விரிவும் ஒத்திசைவும்கூடிய கலைவடிவாகிறது. அப்படியொரு கலைவடிவம் வேறெங்கும் உருவாகவில்லை.

ஓப்பரா, சிம்பனி எனும் இரு கலைவடிவங்களின் அடிப்படை இயல்பே ஒத்திசைவுதான். பல்வேறு பண்பாட்டுக்கூறுகள் இசை வழியாக ஒன்றாகி உருவாகின்றவை அவை. நான் சொல்லும் இக்கருத்துக்கள் எல்லாமே நித்ய சைதன்ய யதியுடனான உறவு வழியாகவும், அவர் சொல்லி வாசித்த ழீன் கிறிஸ்தோஃப் (ரோமெய்ன் ரோலந்த்) என்னும் நாவல் வழியாக எனக்குக் கிடைத்தவை. இவ்வடிவுகளில் எனக்கு பழக்கமோ தேர்ச்சியோ இல்லை. ஏனென்றால் அதற்கான தொடக்கமே எனக்கு அமையவில்லை. என் வாழ்க்கையில் அதற்கான வாய்ப்பே இல்லை. மேலையிசையையும் மேலைத்தத்துவத்தையும் ஒன்றோடொன்று இணைத்து ஓர் ஒட்டுமொத்தப் புரிதலை அடையாமல் மேலையிலக்கியத்தை வாசிப்பது என்பது மிகக்குறைபட்ட வாசிப்பு. கிரெய்ட்ஸர் ஸொனெட்டா என்னும் தல்ஸ்தோய் நாவலை ஸொனெட்டா என்றால் என்னவென்றே தெரியாமல் வாசிப்பதன் குறைபாடை எண்ணிப்பாருங்கள்.

எனக்கு மேலைத்தத்துவ அறிமுகம் மேலையிலக்கிய புரிதலுக்கு மிக உதவியது. என் புரிதலைவிட மிகமிகப் பிற்பட்ட புரிதலே தமிழ்ச்சூழலில் பலருக்கு, முன்னோடிகளாகிய பெரிய வாசகர்களுக்குக்கூட, இருந்தது என்பதை கண்டிருக்கிறேன். என் தத்துவப்பயிற்சியே எனக்கு பல படிகள் மேல்நிலையை அளித்தது. ஆயினும்கூட மேலையிசை அறிமுகமின்மை பெரிய குறை என மேலையிசையில் தேர்ச்சி பெற்ற நித்ய சைதன்ய யதியுடனான தொடர்பு ஒவ்வொரு கணமும் உணர்த்திக்கொண்டிருந்தது. நான் செல்லும்போது ஊட்டி குருகுலத்தில் இசை சார்ந்த வகுப்புகளோ அறிமுகநிகழ்வுகளோ ஏதும் இல்லை. ஆகவே எனக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை. நித்யாவுடனான உரையாடல்கள் மட்டுமே ஓரளவு உதவின.

எப்படி ஐரோப்பிய செவ்வியல் இலக்கியத்தை அறிய தத்துவமும் இசையும் முக்கியமோ அதேயளவு ஐரோப்பிய நவீனத்துவ இலக்கியத்தை அறிய ஐரோப்பிய ஓவியக்கலையை அறிவது தவிர்க்கமுடியாதது. ஐரோப்பியக் கலையில் முதன்மையான நவீனத்துவ அழகியல்முறைகள் பெரும்பாலும் ஓவியத்தில் தோன்றி இலக்கியத்துக்குள் நுழைந்தவை. ஆகவே நவீனஓவிய அறிமுகம் இன்றி அவற்றை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. ஓவியக்கலை நிபுணரும், சிறந்த ஓவியருமான நித்ய சைதன்ய யதியும், ஊட்டியில் சந்திக்க நேர்ந்த ஐரோப்பிய நவீன ஓவியர்களும் எனக்கு வழிகாட்டிகளாயினர். மிக முக்கியமான நூறு ஓவியநூல்கள் ஊட்டி குருகுலத்தில் இருந்தன. நானே பல ஆயிரம் ரூபாய் செலவில் ஓவிய நூல்களைச் சேகரித்தேன். (என்னால் அவற்றை பேணமுடியவில்லை – அவற்றை சுந்தர ராமசாமிக்கு விற்றுவிட்டேன்).

ஆயினும்கூட என் ஓவியக்கலை பயிற்சி போதுமானது அல்ல என்று உணர்கிறேன். ஓவியத்தை நுணுகியறிய வரைந்தாகவேண்டும் என்று நித்ய சைதன்ய யதி என்னிடம் சொன்னார். அவை மோசமான ஓவியங்களாக இருந்தாலும் சரி, ஓவியம் வரைவதே ஓவியத்தை உணர்வதற்கான வழி. செவ்வியல் ஓவியங்களை நகல் செய்யவேண்டும். நிலக்காட்சிகளை வரைந்து பார்க்கவேண்டும். மிக மோசமாக இருந்தால் நாம் வரைந்தவற்றை அப்போதே கிழித்துவிடலாம். ஆனால் வண்ணக்கலவையை முறையாகக் கற்றுக்கொள்ளவேண்டும். தூரிகை பழகவேண்டும். காட்சிகளை பல பரிமாணங்களில் வரைந்துபார்க்க வேண்டும். வரையும்போதுதான் நாம் ஓவியங்களை மிகக்கூர்ந்து நோக்கி அவற்றுக்குள் வாழ்கிறோம். இயற்கைக்காட்சியை ஓவியச்சட்டங்களாக ஆக்கிப்பார்க்கிறோம். ஆனால் நான் அப்போது அவற்றைச் செய்யவில்லை. அதற்கு எனக்கு பயிற்சியளிக்கவும் எவருமில்லை.

இந்திய எழுத்தாளன் ஒருவன் இந்திய இசையையும் இந்திய சிற்பக்கலையையும் அறிந்தாகவேண்டும். இல்லையேல் இந்தியப் பேரிலக்கியங்களை அவனால் உள்ளுணர்ந்து அறியமுடியாது. ஶ்ரீவில்லிப்புத்தூர் மோகினிச் சிலையை அறியாமல் கம்பராமாயண ரசனை முழுமையுறாது. மதுரையின் ஒரு சிற்பத்தூண் என்பது ஒருவகையில் ஓர் இந்தியக் காவியம் போன்றது. அதில் முதல்விஷயமான இசையை என்னால் அடைய முடியவில்லை. என் இசைரசனை குறைபட்டது. ஆனால் சிற்பங்களை நான் பத்தாண்டுகள் முழுமூச்சாக அலைந்து அறிந்தேன். அது என் கற்பனையை பலமடங்கு வீச்சு கொண்டதாக ஆக்கியது.

*

தமிழகத்தில் இன்று இலக்கியம் மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு மேலையிசையையும் மேலைத்தத்துவத்தையும் இணைத்துக் கற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை. மேலையிசையின் இசையிலக்கணங்களைக் கற்றுக்கொண்டு ஓர் இசைக்கலைஞனாக ஆகலாம், ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் தத்துவத்துடன் இணைத்து அறிய முடியாது. அதேபோல மேலை ஓவிய மரபை மேலைத்தத்துவக் கொள்கைகளுடன் இணைத்து உணர்ந்துகொள்ள எந்த பயிற்சியமைப்பும் இல்லை. நம் கல்விக்கூடங்களில் அதற்கான ஆளுமைகளோ, பாடத்திட்டங்களோ இல்லை. இந்தியச் சிற்பக்கலையை அறியக்கூட நமக்கு மரபான அமைப்புகளோ அல்லது நவீன அமைப்புகளோ இல்லை. தொல்லியல்துறை நடத்தும் வகுப்புகளில் தொழில்நுட்பக் கல்வி கிடைக்கும், நமக்குத்தேவை அழகியல் பயிற்சி. அழகியல் என்பது தத்துவத்திலிருந்து பிரிக்க முடியாதது.

ஆகவேதான் அந்தந்த துறைகளில் தேர்ச்சி கொண்டவர்களைக் கொண்டு வகுப்புகளை ஒருங்கிணைக்கிறேன். ஏற்கனவே சிற்பவியல், ஓவியம், இசை, தத்துவம் ஆகியவற்றில் அனுபவம் கொண்ட முந்தைய தலைமுறையினரை அழைத்து சில வகுப்புகளை ஒருங்கிணைத்தோம். ஆனால் அம்முயற்சிகள் மிகப்பரிதாபமான தோல்விகளாக அமைந்தன. அவர்கள் எவருக்கும் ஒருங்கிணைந்த பயிற்சியோ முழுமைநோக்கோ இருக்கவில்லை. தங்கள் துறைகளில் அவர்கள் பல தீவிர முன்முடிவுகள் கொண்டவர்களாகவும், குறுக்கல்நோக்கு கொண்டவர்களாகவும் இருந்தனர். எதிர்மனநிலைகளும் வலுவாக இருந்தன. அவர்களால் அடுத்த தலைமுறையினரிடம் உளத்தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவர்களின் கற்பிக்கும் முறையே ஒருவகை மதபோதனை போலிருந்தது.

அது நம் பண்பாட்டு மரபு, நாம் எல்லாவற்றையும் மதமாக ஆக்கிக்கொள்கிறோம். மத எதிர்ப்பே இங்கே ஒரு மூர்க்கமான மதம்தான். ஆகவே இளைய தலைமுறையினரே இளைய தலைமுறையினருக்குக் கற்பிக்க முடியுமென நினைத்தேன். அந்த முயற்சி மிக வெற்றிகரமானது என இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது  இந்தியச் சிற்பக்கலை வகுப்புகள் ஜெயக்குமாரால் நிகழ்த்தப்படுகின்றன. அத்துறையில் ஒரு நிபுணர். ஓவியக்கலை அறிமுகம் நண்பர் ஏ.வி.மணிகண்டனால் ஆகஸ்ட் முதல் நிகழ்த்தப்படவுள்ளது. மேலையிசை – மேலைத்தத்துவம் இரண்டையும் விரிவாக அறிந்தவன், இணைத்துக் கற்பிக்கும் தகுதி கொண்டவன் அஜிதன். ஆகவே அஜிதனின் வகுப்புகள் நிகழ்கின்றன. மரபிலக்கியம் சார்ந்தும் மிக இளைய ஆசிரியர்களையே தேடுகிறேன். 

இவற்றை கற்கவும் கற்பிக்கவும் தகுதி பெறுவதற்கு முழுமையாக அதில் ஈடுபட்டாகவேண்டும். பல ஆண்டுகள் முழுநேரத்தையும் அளித்தாகவேண்டும். இந்தியாவில் ஒவ்வொருவரும் தங்கள் உலகியல் வாழ்க்கைக்கான  கல்விக்காகவும், அதற்கான வேலைக்காகவும் இளமையை ஏறத்தாழ முழுமையாகவே செலவிட்டாகவேண்டிய சூழல் உள்ளது. கலை, இசை, தத்துவம் சார்ந்த அறிவுகளுக்கு இங்கே உலகியல் மதிப்பே இல்லை. கல்வித்துறைக்குள்ளேகூட அவர்கள் நுழைய முடியாது. ஆகவேதான் நமக்கு தேர்ச்சி கொண்டவர்கள் அனேகமாக இல்லை என்னும் நிலை உள்ளது. ஜெயக்குமாரோ, அஜிதனோ, மணிகண்டனோ  இளமையில் முழுவாழ்க்கையையும் தங்கள் விருப்பத்துறைகளில் செலவிடும் நல்லூழ் கொண்டவர்கள், அல்லது அதற்கான தியாகத்தைச் செய்யுமளவுக்கு மனஉறுதி கொண்டவர்கள்.  

ஆனால் வகுப்புகள் தொடங்கியபின் நண்பர்கள் கூறிய அளவு இவற்றில் இளைய தலைமுறையினர் பெருவாரியாக ஈடுபடவில்லை. கேளிக்கை சார்ந்த செயல்பாடுகளிலும், அரசியல் சர்ச்சைகளிலும் மட்டுமே இளைஞர்களில் பெரும்பாலானவர்களின் ஈடுபாடு உள்ளது. கொஞ்சம் ஆர்வமுள்ளவர்களிலேயே கூட காட்சிக்கலை, அதாவது சினிமா மட்டுமே பெரும்பாலானவர்களின் ஆர்வம். வெளியாகும் எல்லா வணிகசினிமாக்களையும் பார்த்து அவற்றைப்பற்றி கூர்நோக்கு அலசல் செய்யும் சாமானியர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. கொஞ்சம் ரசனை கொண்டவர்கள்கூட நவீனகாலத்தில் பெருநிறுவனங்கள் வணிகநோக்குடன் உருவாக்கி, பெரும் விளம்பரத்துடன் வெளியிடும்  சினிமாக்களையே உலகசினிமா என மாய்ந்து மாய்ந்து பார்த்து செயற்கைநுட்பத்துடன் விவாதிக்கிறார்கள்.

உண்மையில் அந்த சினிமாக்களை விவாதிக்கவேகூட அவை உருவான கலாச்சாரம் சார்ந்த அறிதல் தேவை. அதற்கு இலக்கியவாசிப்பும் கொஞ்சம் தத்துவ வாசிப்பும் தேவை. அந்த ரசனை இல்லாமையால் பல படங்களை அப்படியே கடந்துசென்றுவிட்டு மோஸ்தர் மட்டுமே கொண்ட போலி சினிமாக்களை கொண்டாடுகிறார்கள். உதாரணம் மலையாள சினிமாவான இயோபின்றே புஸ்தகம். அது மிகவிரிவான பைபிள் குறிப்புகள் கொண்ட படம். (ஜோப் என்பது இயோப் என்ற அராமிக் வார்த்தையின் கிரேக்க வடிவம். அரேபிய மொழியில் அயூப்) அத்துடன் தஸ்தயேவ்ஸ்கியின் பிரதர்ஸ் கரமஸோவ் நாவலின் மீதான ஒரு மறுவாசிப்பு அந்த புகழ்பெற்றபடம். அது ஒரு வணிகப்படம். ஆனால் கலைமதிப்பு கொண்ட இடைநிலை சினிமா. ஓரளவு தொன்மமும் இலக்கியமும் அறிந்தவர்களுக்கு அது வேறொரு சினிமா.

மேலைநாட்டு ஓவியங்களுக்கு கண்பழகாமல் மேலைநாட்டு சினிமாக்களின் காட்சிச் சட்டகங்களை சரியாக உள்வாங்க முடியாது. மேலையிசை பழக்கமில்லாமல் மேலைநாட்டு சினிமாக்களை ரசிப்பதே மிகக்குறைபட்ட ரசனைதான்.  உதாரணமாக The Book of Eli ஒரு பொதுரசனை படம்தான். ஆனால் முற்றழிவு பற்றிய ஐரோப்பியத் தொன்மங்கள், இலக்கியங்கள், ஓவியகளை சற்று அறிந்த ஒருவர் அப்படத்தினூடாகச் செல்லும் தூரம் மிகுதி.

புக் ஆஃப் ஏலி படத்துக்கு அட்டிகஸ் ரோஸ் (Atticus Ross) அமைத்த இசையில் வாக்னரின் செல்வாக்கு மிகுதி எனப்படுகிறது. அதை உணரும் ஆற்றல் கொண்ட ஒருவர் அந்தப்படத்தை மேலும் பலமடங்கு ஆழ்ந்தறியமுடியும். பொதுவாகவே மேலைநாட்டு சினிமாப் பின்னணி இசையில் மேல்நாட்டு செவ்வியலிசையின் செல்வாக்கு மிகுதி. செவ்வியலிசை அறிமுகம் உடைய ஒருவர் பார்க்கும் சினிமாவே முற்றிலும் வேறு.

இங்கே சினிமா ஆர்வத்தால் தகிப்பவர்கள்கூட அதற்குத் தேவையான பிற அடிப்படைகளை அறிந்திருப்பதில்லை, அதற்கு ஆர்வமும் காட்டுவதில்லை. ஆனால் எங்கோ சிலர் இருக்கலாமென்பது ஒரு நம்பிக்கை. ஆகவேதான் எல்லா கற்றல் வாய்ப்புகளையும் முடிந்தவரை உருவாக்கலாமென நினைத்தேன். நண்பர்கள் சொன்ன அளவு வரவேற்பில்லை. இளம் எழுத்தாளர்கள் பொதுவாக ஆர்வம் காட்டவேயில்லை. இங்கே ஒரு கதை எழுதிவிட்டால் அதன்பின் அங்கீகாரம் பெறுவது எப்படி, கருத்து உதிர்ப்பது எப்படி என்று மட்டுமே யோசிக்கிறார்கள். அதேசமயம் நான் அஞ்சிய அளவு குறைவாகவும் இளைஞர்கள் வரவில்லை. புதியவர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு இப்பயிற்சிகள் பயனளிக்கக்கூடும். விளைவுகள் எதிர்காலத்திலேயே தெரியும்.

விளைவுகளை கணக்கிட்டு எதையும் செய்யலாகாது என்பது நமக்கு மாடோட்டி சொல்லித்தந்த  பாடம்.

ஜெ

முந்தைய கட்டுரைபாவண்ணன்
அடுத்த கட்டுரைவெண்முரசு, நிகழ்வுகள் காணொளிகள்