இசை,பீத்தோவன், கடிதம்

இசைரசனை அறிமுகம் – கடிதம்

இசைரசனை வகுப்பு – கடிதம்

மேற்கத்திய இசைரசனைப் பயிற்சி முகாம், என்? அஜிதன்

அன்புள்ள Brüder அஜிதனுக்கு,                                  

தாங்கள் நடத்திய என்று சொல்வதை விட நிகழ்த்திய பீத்தோவன் இசை அறிமுகம் நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிகரமான தருணம். பீத்தோவன் இசை மற்றும் மேற்கத்திய இசையை சில முறை கேட்டுள்ளேன் என்பதை தவிர பெரிய அறிமுகம் இல்லாமலேயே இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன் . நான் அங்கே பகிர்ந்து கொண்டது  போல ஹாலிவுட் படங்களின் பின்னணி இசையின் மூலமே பீத்தோவனை வந்தடைந்தேன்.நீங்கள் பீத்தோவன் சிம்பொனி குறித்த தரவுகளை நிகழ்வுக்கு முன் அனுப்பிய உடனே என் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது . அந்த ஒரு வாரமும் பீத்தோவன் இசையிலேயே இருந்தேன். நிகழ்வில் நீங்கள் மேற்கத்திய இசையின் வரலாறு ,வாத்தியங்கள் என் அடிப்படைகளை மிக செறிவாக  விளக்கி பீத்தோவணை வந்தடைந்து பிறகு பீத்தோவனின் சிம்பொனிகள் குறித்து விளக்கிய விதம் மிகவும் பொருத்தமாக இருந்தது.

சிம்பொனியின் அடிப்படை வடிவம், அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும், குறிப்பாக பீத்தோவனின் ஓவ்வொரு சிம்பொனியையும் நீங்கள் எவ்வாறு அர்த்தப்படுத்தி, எவ்வகையான வாழ்க்கை அனுபவத்துடன், தரிசனத்துடன்  அதை இணைத்து ரசித்தீர்கள் என்று பகிர்ந்து கொண்டீர்கள். உங்களின் அர்த்தப்படுத்துத்தலை அனைவர்க்கும் பொதுவாக பகிரலாமா, இது ரசனையை ஒற்றை படுத்திவிடுமா என்று ஐயப்படுவதாக கூறினீர்கள். எனக்கு ஓரளவு இலக்கிய வாசிப்பு இருந்தும் பீத்தோவன் இசையை கேட்டிருந்தும் நீங்கள் கூறிய விதத்தில் இதுவரை சிம்பொனி இசையை ரசித்தது இல்லை. ஆதலால் உங்களின் இந்த முயற்சி மிகவும் தேவையான மற்றும் பொருத்தமான ஒன்று. 

பீத்தோவன் இசை மட்டும் இல்லாமல், அவரின் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள், அவர் காலத்து அரசியில் அது பீத்தோவனின் இசையில் எப்படி வெளிப்பட்டது, உதாரணமாக Eroica சிம்பொனி மற்றும் Napolean க்கு  உள்ள தொடர்பு என்பது போல. நிகழ்வின் முடிவில் அனைவரும் சொன்னதுபோல ஒவ்வொரு சிம்பொனியை கேட்டவுடன் இது தான் பீத்தோவனின் சிறந்த சிம்பொனி என்று நினைக்க வைத்தீர்கள். நீங்கள் சிம்பொனி ஐ  வரிசை படுத்திய விதமும் மிகவும் பொருத்தமாக இருந்தது. கடைசி பகுதியாக  பெர்லின் சுவர் உடைக்கப்பட்ட அந்த வரலாற்று தருணத்தில் Leonard_Bernsteinனின் இயக்கத்தில் நடத்தப்பெற்ற பீத்தோவனின் சிம்பொனி 9ஐ கேட்டது நிகழ்வின் உச்சம். இப்போது நினைத்தால் அந்த தருணத்தில் வந்த கண்ணீரை அடக்காமல் Leonard_Bernsteinனுடன் இணைந்து அழுதிருக்கலாம் என்று தோன்றுகிறது. 

இந்த நிகழ்வில் நான் ரசித்த இன்னொன்று நீங்கள் இசையை ரசித்த விதத்தை ஒவ்வொரு சிம்பொனியின் உணர்ச்சி மிக்க பகுதியிலும் உங்கள் முகம் சிவந்து கண்கள் கலங்கிவிடும். நீங்கள் அடைந்த அந்த உணர்வை அல்லது அந்த உணர்வ, உச்சத்தை அடையும் வழியை எப்படியாவது எங்களுக்கு கடத்தி விட நீங்கள் எடுக்கும் முயற்சியே இந்த நிகழ்வு. மிக்க நன்றி. இனி பீத்தோவனின் இசையுடன் இந்த நிகழ்வும், நண்பர்களும், நீங்களும், நித்யவனமும் எப்பொழுதும் என்னுடன் இருக்கும்.

அனைத்திற்கும் நன்றி,

பிரதீப்

முந்தைய கட்டுரைமு.இளங்கோவன்,எஸ்.ஜே. சிவசங்கர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகீரனூர் ஜாகீர்ராஜா