தமிழ்விக்கி – தூரன் விருது 2023
இனிய ஜெயம்
சில ஆண்டுகள் முன்னர் ஒரு துறவியை பார்க்கச் சென்றிருந்தேன். இங்கதான் இருக்கார், அவரை படிச்சிருக்கோம் ஆனா அவரை பார்க்காமலேயே இருக்கிறோமே என்று தோன்ற கிளம்பி சென்றேன். வேறு பிற மடங்களில் இருந்து வந்த முக்கியஸ்தர்கள் சிலருக்கு ஏதோ பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.
காத்திருந்து கிடைத்த சில நிமிடங்களில் சில வார்த்தைகள் பேசினேன். அவர் அரிய நூல்கள் பல கொண்ட நூலகம் வைத்திருக்கிறார் அதை பார்க்க அனுமதி கேட்டேன். நேரமில்லை மற்றொரு சமயம் வாருங்கள் என்று சொல்லி விட்டார். அந்த மற்றொரு சமயம் வருவதற்கு முன்னர் அவர் இயற்கை எய்தி விட்டார்.
அவர் பெயர் ஊரன் அடிகள். வள்ளலார் சன்மார்க்க வழி துறவி. ஊர் வடலூர். அவர் இயற்கை எய்திய சேதி கடலூர் மாவட்ட செய்திகளில் கூட இடம்பெறவில்லை. ஊடகங்களுக்கு அஜித்தை தெரியும் வலிமை அப்டேட் போட தெரியும், ஊரன் அடிகளையும் அவர் வாழ்வையும் பணியையும் மறைவையும் மக்களுக்கு சொல்வதா ஊடகங்களின் பணி. ஊரன் அடிகள் மறைந்த சேதியை மு .இளங்கோவன் இணையதள பதிவு வழியாகவே அறிந்தேன்.
இன்று இரவு புதுவையில் அவரது இல்லத்தில் இளங்கோவன் அவர்களை சந்தித்த முதல் உரையாடலாக இதைத்தான் சொன்னேன்.
இன்று மாலை 6.30 மணிக்கு மேல் நான் வேலை முடிந்து வந்ததும் இளங்கோவன் சாரை நாம் போய் பார்ப்போமா என தாமரை கேட்க, உடனே ஏற்பாடுகள் துவங்கின. இளங்கோவன் இரவு 7 மணி முதல் வீட்டில்தான் இருப்பேன் வாங்க என்றார். இந்தியாவில் எங்குமே காண இயலாத புதுவை மட்டுமே அறிந்த பைத்யக்காரத்தனமான டிராபிக் வழியே தவளை போலும் தாவி தாவி நான் தாமரை, திருமாவளவன், ஹரிக்ரிஷ்னன் நால்வரும் 7.30 கு அவர் இல்லம் சென்று சேர்ந்தோம். மாடியில் அவரது பெரிய நூலகத்தில் எங்கள் சந்திப்பு. ஒரு பக்கம் முழுக்க நூல்கள் கொண்ட அலமாரி, மறு பக்கம் முழுக்க பெட்டி பெட்டியாக முக்கிய ஆளுமைகள் பேசிய ஆடியோ வீடியோ மற்றும் ஆவண பதிவுகள். பக்கத்து அறை முழுக்க முனைவர் இப்போது செய்து கொண்டிருக்கும் பணி சார்ந்த கச்சாக்கள்.
பரஸ்பர பூச்செண்டு சால்வை மரியாதைக்கு பிறகு, நான் விட்ட ஊரன் அடிகள் இடத்தில் இருந்து இளங்கோவன் தொடர்ந்தார். ஊரன் அடிகளை அவர் ஆவணம் செய்த விதத்தை விரிவாக விளக்கினார். பின்னர் ஜெயமோகனை அவர் நாகர்கோயில் தேடி சென்று சந்தித்ததை, ஜெயமோகனோடு சேர்ந்து வேத சகாய குமார் அவர்களை சந்தித்ததை நினைவு கூர்ந்தார். நான் அவர் பூர்வீக கிராமம் குறித்து கேட்டேன். இப்போதும் அங்கே ஒரு நல்ல நூலகம் கிடையாது நீங்கள் எப்படி எதையும் வாசிக்காமல் 4 வருடம் விவசாயம் செய்ய திரும்பி விட்டீர்கள் என வினவினேன். அவர் சிரித்தபடி புத்தகம் வழியா படிக்கல மத்தபடி கழனி ஆளுக வழியா படிச்சேன். எத்தனை எத்தனை நடவுப் பாட்டு, ஒப்பாரி,தாலாட்டு,கும்மி எவ்ளோ அழகான மெட்டு, எவ்ளோ எவ்ளோ வட்டார வழக்கு சொற்கள் …எல்லாம் அப்ப படிச்சதுதான் என்றார்.
தாமரையின் இசை சார்ந்த கேள்வி வழியே, இளங்கோவன் அவர்கள் குடந்தை சுந்தரேசனார் ஆவண பணிகள் குறித்து சொன்னார். சுந்தரேசனார் மூன்று வெவ்வேறு பெரிய கல்வி நிலையங்களில் பேராசிரியராக இருந்தவர். மூன்று குழந்தைகள், மனைவி அனைவருமே தவறி விட்டனர். அவருக்கென ஒரே ஒரு துண்டு நிலம் கூட சொந்தமாக இல்லை. இசை இசை என தன் வாழ்வில் அது தவிர வேறு எதற்கும் அவர் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவர் மேற்கொண்ட பண்ணிசை ஆய்வுகள் குறித்து முனைவர் விரிவாக விளக்கி, தான் ஆவணம் செய்த சுந்தரேசனார் குரலில் பண்ணிசையில் பாடிய ஆழ்வார் பாடல்கள் சிலவற்றை ஒலிக்க விட்டார். ஹரி திகைத்து விட்டார். என் வாழ்வில் இப்படி ஒன்றை இப்போதுதான் முதன் முறை கேட்கிறேன் என்றார்.
மு. இளங்கோவன் அகப்பக்கம் : http://muelangovan.blogspot.com/
மு.இளங்கோவன் முகநூல் பக்கம்ன்https://www.facebook.com/muelangovan
மு.இளங்கோவன் – தமிழ் விக்கி
மு.இளங்கோவன் தொலைபேசி 9442029053
மின்னஞ்சல் [email protected]
அங்கிருந்து பேச்சு நகர்ந்து இத்தகு பணிகளில் சோர்வு எழும் தருணங்கள் எவை என்று முனைவர் சொன்னார். குறிப்பிட்ட விஷயத்தில் இவர் முயற்சி தெரிந்து, அதில் எந்த ஈடுபாடும் அற்ற சிலர் அவரது முயற்சியை வெறும் பேருக்காக புகழுக்குகாக்க பணம் கொண்டு இவருக்ககு முன்னர் அதை முந்தி முடிப்பது, சில எளிய அனுமதியை கூட அதில் ஏதோ கோடிகள் புழங்க போவதாக எண்ணி குறிப்பிட்ட ஆளுமைகள் வாரிசு தர மறுப்பது, தனது பெயரை எங்குமே குறிப்பிடாமல் தனது கட்டுரையை சிலர் பயன்படுத்திக் கொள்வது என பலவற்றை வருத்தம் ஏதும் இன்றி குறிப்பிட்டார்.
தொடர்ந்து விபுலானந்தர் குறித்து நான் கேட்க, அவரை இலங்கை சென்று ஆவணம் செய்த விதத்தை முனைவர் விரிவாக விளக்க, ஆமா நீங்க கல்லூரி போவீங்களா மாட்டீங்களா என்று கேட்டேன். முனைவர் சிரித்துக்கொண்டே தனது வேலை நேர பகிர்மான அட்டவணையை விவரித்தார். வியப்பூட்டும் கச்சிதமான நேர நிர்வாகம். எவரும் பயில வேண்டிய ஒன்று.
பேச்சு சுவாரஸ்யம் நேரத்தை 7.30 இல் இருந்து 9 க்கு நகர்த்திய மாயம் மெல்ல விளங்க, மீண்டும் சந்திப்பதாக சொல்லி, அடுத்த வாரம் நிகழும் வெண்முரசு கூடுகைக்கு அவருக்கு அழைப்பு விடுத்து, கட்டி அணைத்து விடை பெற்றோம். மிக மிக மகிழ்ச்சியான சந்திப்பதாக இன்றைய இரவு சந்திப்பு அமைந்தது.
கடலூர் சீனு
எஸ்.ஜே.சிவசங்கர்- தமிழ் விக்கி
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100003825246295