தூரன் விருதுகள், கடிதங்கள்

தமிழ்விக்கி – தூரன் விருது 2023

அன்புள்ள ஆசிரியருக்கு,

தூரன் விருது 2023 பேராசிரியர் இளங்கோவனுக்கும், எழுத்தாளர் சிவசங்கருக்கும் வழங்கப்படுவதை கண்டு அவர்களை பற்றி படித்து தெரிந்துக் கொண்டேன்.

செயலூக்கமும், அர்ப்பணிப்பும் கொண்டு தமிழில் ஆய்வு பணியாற்றும் அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவர்கள் பணியினை படித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் என்னை போல பலருக்கும் வந்திருக்கும்.

அன்புடன்

நிர்மல்

மு.இளங்கோவன் – தமிழ் விக்கி

மு.இளங்கோவன் தொலைபேசி 9442029053

மின்னஞ்சல் [email protected]

அன்புள்ள ஜெ

தூரன் விருது பெறும் மு. இளங்கோவன், எஸ்.ஜே.சிவசங்கர் இருவருக்கும் வாழ்த்துக்கள். இன்றைய நாளில் இந்த விருதுகளின் இடமென்ன என்று சிந்திக்கிறேன். பொதுவாக நாம் புனைவுகளையும் கட்டுரைகளையும் கவனிக்கிறோம். ஆய்வுகளை கவனிக்க வாய்ப்பில்லை. ஆய்வுகள் இன்னொரு ஆய்வாளரின் கவனத்துக்கு மட்டுமே உரியவை.அந்த ஆய்வுச்சூழல் ஆரோக்கியமாக இல்லை என்றால் உருப்படியான ஆய்வுகள் அப்படியே கவனிக்கப்படாமலேயே போய்விடும்.

இன்றைக்குள்ள சூழல் என்னவென்றால் ஆய்வுகள் ஒரு படிப்பாக, தொழிலுக்கான தயாரிப்பாகவே செய்யப்படுகின்றன. கல்லூரி ஆசிரியர் பணிக்கு இன்றைக்கு முனைவர் பட்டம் கட்டாயம். அதற்காகவே ஆய்வுகள் செய்யப்படுகின்றன. பழைய காலத்தில் முனைவர் பட்டம் ஓர் ஆர்வத்தால் செய்யப்பட்டது. அ.கா.பெருமாள், வேதசகாயகுமார் போன்றவர்களெல்லாம் முதிய வயதில்தான் முனைவர் ஆனார்கள். இன்று 25 வயதில் முனைவர் பட்டம் பெற்றுவிடுகிறார்கள். அதன்பின் வாழ்நாள் முழுக்க ஆய்வு ஏதும் செய்வதில்லை. வாசிப்பதே இல்லை.

உண்மையில் சரியான ஆய்வு என்பது ஒரு துறையில் பல பத்தாண்டுகள் தொடர்ச்சியாக ஆய்வுசெய்தாலொழிய அமையாது. அப்போதுதான் பரந்துபட்ட பார்வையும், அனுபவமும் அமையும். ஆய்வாளர்கள் ஐம்பது வயதுக்குமேல் செய்யும் ஆய்வுக்கே மதிப்பதிகம். ஆனால் அவர்கள் அதை இருபதாண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஆய்வுகள் இங்கே மிகமிகக்குறைவு.

அப்படி ஆய்வை ஒரு இலட்சியத்துடன் செய்யும் மு.இளங்கோவன் போன்றவர்களை சுட்டிக்காட்டுவதும் கௌரவிப்பதும் மிக மிக இன்றியமையாத செயல்பாடு. இது தமிழ்ச்சூழலில் ஆழமான ஆய்வுகள் வருவதற்கு வழிவகுக்கும். நன்றி.

பாலகுமார் மகாலிங்கம்

எஸ்.ஜே.சிவசங்கர்- தமிழ் விக்கி 

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100003825246295 

முந்தைய கட்டுரைவெண்முரசு இசைக்கோலம்
அடுத்த கட்டுரைமத அடையாளங்கள், அரசியல் -கடிதம்