தேவர் மகனும் சாதியமும்
அன்புள்ள ஜெ,
நேற்று நீங்கள் தேவர் மகன் திரைப்படம் குறித்து எழுதியிருந்த விளக்கத்தை படித்தேன். மிக முக்கியமான, நுட்பமான அவதானிப்புகள் கொண்டதாக அது இருந்தது. திரைப்படம் மட்டும் அல்லாது எந்த கலைக்கும் அதில் சில கருத்துக்கள் பொருந்தும். அதே நேரம் திரைப்படத்துக்கு மேலதிகமாக இருக்கும் சில பலம்/பலவீனம் குறித்தும் அது கிட்டத்தட்ட முதல்முறையாக பேசுகிறது. நீங்கள் திரைப்படக்கலை குறித்து மிக அரிதாகவே எழுதினாலும் நான் தமிழில் வாசித்த மிகக் கூர்மையான திரைப்படக்கலை குறித்த அவதானிப்புகள் உங்களிடம் இருந்தே பெற்றுக் கொண்டிருக்கிறேன்.
நேற்றைய கட்டுரைக்கு பின் நான் தேவர் மகன் திரைப்படம் குறித்து சிந்தித்து பார்த்தேன். அதில் ஒரு வெகுஜன சினிமாவில் அத்தனை எளிதாக நாம் கண்டுகொள்ள முடியாத நுட்பங்கள் இருப்பது இப்போது என் கண்களுக்கு படுகிறது. அதை சொல்வதற்கு முன் நான் எந்த விதத்திலும் கமலுக்கு ரசிகனல்ல என்பதை சொல்ல வேண்டும். தேவர் மகன் திரைப்படத்திலும் கலைரீதியாக குறைகள் உண்டு. ஆனால் அது பேசும் சமூக யதார்த்தத்தை, அதன் பிரதான Crisis-ஐ முழுதாக உள்வாங்காமல் அதை நாட்டாமை போன்ற எளிய சாதிப்பெருமித படமாக சித்தரிப்பது மேம்போக்கான பாவனையே.
முதலில் அந்த படத்தின் பிரதான crisis என்பது பெரிய தேவருக்கும் அவர் மகன் சக்திவேலுக்குமானது. ஒரு தனிமனிதவாதிக்கும் சமூகவாதிக்குமான முரண் அது. இரண்டாவது crisis பெரியதேவருக்கும் அவர் தம்பிக்குமானது. பூடகமாக இதில் காட்டப்படும் ஒரு சித்திரம் என்னவென்றால் பெரிய தேவர் ஒத்துமொத்தமாக முக்குலத்தோர் சமூகத்தையும் தன் மக்களாக பார்க்கிறார், அவர் தம்பியோ மறவர் சமூக அடையாளத்தை பெருமையாக கருதும் மேட்டிமைவாதி.
இது மதுரைப் பகுதியின் யதார்த்தம். இதில் பெரிய தேவர் பழமைவாதியா என்று கேட்டால். ஆம். அவர் தன் சமூகத்தின் மீது பற்று கொண்டவராகவே வருகிறார். ஆனால் அந்த சமூகம் அவர் தம்பியை விட மேலும் உள்ளடக்கியது. இதே போல சாதிய சீர்த்திருத்தவாதிகள் பலர் ஒவ்வொரு சமூகத்திலும் தோன்றிருள்ளனர். ஆங்கிலேயர் கணக்கெடுப்பில் பிரிந்து கிடந்த பல உபசாதிகள் சுதந்திரத்திற்கு பின் ஒன்றாக திரண்ட போது ஒவ்வொரு சாதிக்குள்ளும் ஏற்றதாழ்வுகளும் ஏழைகளும் இருந்தனர். பல சாதிய சீர்திருத்தவாதிகள் அந்த சமூகத்தின் மேல்தட்டில் தோன்றி அடித்தட்டிற்கு உதவினர். காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உதவியுடன் அவர்களுக்கு அரசியல் பாதுகாப்பு அளித்தனர். தேவர்களில் கள்ளர்களோ, நாடார்களில் கீழ்ப்பிரிவினரோ இந்த சீர்திருத்தவாதிகளாலேயே உயர்ந்தனர்.
இன்று சில சாதிய அடிப்படைவாதிகளால் அல்லாது இவர்கள் பெரும்பகுதி அந்த சமூகத்தவர்களால் சமமாகவே நடத்தப்படுகின்றனர். (இன்றும் திருமண உறவுமுறை பெருமளவில் இல்லை என்பது வேறு விஷயம்). ஆனால் இந்த சீர்திருத்தத்தை நாம் எந்த அளவீட்டில் வைப்பது என்பது ஒரு நவீன சமூகத்தில் இருக்கும் அடிப்படை கேள்வி.
உங்கள் வணங்கான் கதையின் நாயகர் நேசமணி இத்தகைய தலைவரே. நேசமணிக்கு ஒரு மகன் வந்து ”நீங்கள் ஏன் இந்த சாதிமீது பற்றோடு இருக்கிறீர்கள், இது என்ன உங்கள் தலையெழுத்தா?” என்று கேட்பது போன்ற முரண் தான் தேவர் மகன் படத்தில் அடுத்தக்கட்டமாக இருப்பது. சக்திவேலுக்கு சாதி என்ற அமைப்பே விமர்சனத்துக்கு உரியதாக இருக்கலாம். ஆனால் அவன் அதற்கு பதிலாக என்ன பொறுப்பேற்றுக்கொள்கிறான் என்ற கேள்வி எழுகிறது. ஒரு முதலாளித்துவ பிரஜையாக கிராமப்புரத்தை அறுவருத்து விலகிச்செல்வதே அவன் முதலில் நினைப்பது. அதிலிருந்து அவனது நகர்வு, அதற்காக அவன் இழப்பவை எல்லாமே படத்தில் உரையாடலுக்கு சாத்தியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய சாதிய சீர்திருத்தவாதிகளை நாம் இன்றைய பார்வையில் வெறும் சாதியவாதிகளாக எளிதாக புறந்தள்ளும் முன் நாம் அதற்கு பதிலாக எந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்ற கேள்வி இன்னமும் நம் சமூகத்தில் தீவிரமாக எழும் ஒன்றாகவே நீடிக்கிறது.
துரைவேல்