அன்புள்ள ஜெ,
இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் வெளியான பிறகு செங்கோல் குறித்த விவாதம் தேசிய அளவில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நேரடியாக உங்களைக் குறிப்பிடாவிட்டாலும், ஒரு வார இடைவெளிக்குப் பின் இந்தத் தலைப்பை மீண்டும் ஆங்கில ஊடகங்கள் பேசுபொருளாக்கி உங்கள் கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றி வருகின்றன.
குறிப்பாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கீழ்க்காணும் சுட்டியில் தன் வழக்கமான பொய்களை அழுத்திச் சொல்லி வருகிறார். மேலும் இதன் தொடர்ச்சியாக நாளை (இரண்டாம் பகுதியில்) ஏதோ அதிரவைக்கும் தகவல்களை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவரது கட்டுரை இங்கே:
மேலும் ஒரு காங்கிரஸ் கட்சி உறுப்பினரிடம் இந்தக் கட்டுரையைப் பெற்று அவசரமாக இன்று வெளியிட்டுள்ளது: சுட்டி இங்கே
இந்த விவாதம் மீண்டும் கவனம் பெறுவதிலும் தங்கள் எழுத்து புதிய வாசகர்களைச் சென்றடைவதிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்,
ஐஸ்வர்யா
அன்பு ஜெ
உங்களுடைய செங்கோல் கட்டுரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு திரு. குருமூர்த்தி The New Indian express நாளிதழில் ஆங்கிலத்தில்இரு கட்டுரைகளாக செங்கோல் பற்றி விளக்கமாக எழுதி இருக்கிறார்.மற்ற இந்துத்துவா ஆதரவாளர்களைப் போல நேருவியோ காந்தியோ எப்போதும் மட்டமாக விமர்சனம் செய்யாதவர் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு
நேருவை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தாலும் தனிப்பட்ட முறையில் அவரை பற்றி தரக்குறைவாக எங்கும் எழுவது எழுதுவதில்லை . ஆகவே அந்த நீண்ட இரு கட்டுரையும் படித்த பிறகு அவர் சொல்ல வருவது என்னவென்றால் 1940 வரை இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு இந்து நம்பிக்கை உள்ள நாடாகவே இந்தியா முழுவதும் இருந்த தேசத் தலைவர்கள் அனைவரும் இருந்தார்கள் . பிறகு முகமது அலி ஜின்னா தனிநாடு கோரி பிரிவினையை தூண்டிய பின் இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஒரு நாடாக இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையை அனைவரும் நேரு உட்பட நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர் என்கிறார்
அதற்கு அவர் சொல்கின்ற காரணங்கள் காந்தி நேரு சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பல தலைவர்களும் விவேகானந்தரை அவர்களை வழிநடத்தும் சக்தியாகவே ஏற்றுக் கொண்டார்கள் .பின்னர் சுதந்திரம் பெற்ற பிறகு அந்த ( secular ) நிலைப்பாட்டில் இருந்து நேருவோ மற்ற தலைவர்களோ மாற்றிக்கொள்ள முயலவில்லை.இன்று திரு நரேந்திர மோடி அவர்கள் செங்கோலை நிறுவியதன் மூலம் 1940 க்கு முன்னால் நாம் ஆன்மீகத்தினால் வழிநடத்தப்பட்டவர்கள் என்ற நிலைக்கு இந்த நாட்டை கொண்டு செல்ல முயல்கிறார் அதுவே மோடியின் எண்ணம் என்கிறார்
மேலும் அந்தக் கட்டுரையில் செங்கோல் பற்றி பல தரவுகளையும் அளிக்கிறார்.இது பற்றி வரலாற்று ஆசிரியர்கள் கூறியது ஏதாவது இருக்கிறதா?இந்த விஷயத்தில் உங்களுடைய கருத்தையும் நான் எதிர்பார்க்கிறேன்.குருமூர்த்தியின் இரண்டு கட்டுரைகளையும் உங்களுக்கு நான் அனுப்பி வைக்கிறேன்
நன்றி
எஸ் நடராஜன் கோவை
Sengol – Obliterate history, deny after discovery
Recalling the pre-March 24, 1940 Idea of India
Recalling the pre-March 24, 1940 Idea of India –
அன்புள்ள ஐஸ்வரியா, நடராஜன்,
அரசியல்வாதிகள் உருவாக்கும் தொன்மங்களுடன் நம்மால் போராட முடியாது. அவர்களுக்கு அது ஒரு முதலீடு. அதிலிருந்து லாபம் பெறுகிறார்கள். ஆகவே ஒரு போதும் ஒரு வகை உண்மையையும் அவர்களால் ஏற்கவியலாது. பலரைக்கொண்டும் திரும்பத் திரும்ப எழுத வைக்க அவர்களால் முடியும். உண்மையைச் சொன்னபின் நாம் நின்றுவிட வேண்டியதுதான். இதேதான் மதத்தொன்மங்கள், சாதியத் தொன்மங்களுக்கும்.
முந்தைய அனுபவங்களைச் சொல்கிறேன். ஈ.வெ.ராவின் வைக்கம் போராட்டம் சார்ந்தும் இதேதான் நடந்தது. ஈவெரா வைக்கம்போராட்டத்தின் முதன்மைத் தலைவர் அல்ல, அவர் அதை தொடங்கவில்லை, நடத்தவில்லை, முடிக்கவில்லை. அவர் பங்கேற்றவர்களில் ஒருவர். அவருடைய வயது அப்போது குறைவு, அரசியல் இடம் வரதராஜுலு நாயுடுவின் ஆதரவாளர் என்பது மட்டும்தான். இது நான் சொன்னது. ஆனால் அவர் அங்கே செல்லவேயில்லை என்று நான் சொன்னதாக பாவனை செய்து அவர் போனதற்குச் சான்றுகளாக காட்டி என்னை தோற்கடித்துவிட்டதாகக் கொக்கரித்தனர்.
புனித தாமஸ் இந்தியாவுக்கு வரவில்லை, அதற்கு ஆதாரமே இல்லை, மிகப்பிற்காலத்தில் கானாயி தாமஸ் என்ற சிரியன் மதப்பரப்புக்குழு தலைவரே வந்தார், அந்த ஆதாரங்களே தாமஸ் வந்ததாக மாற்றப்பட்டன என்று நான் விரிவாக எழுதினேன். தாமஸ் என்பவர் வந்தார் என்ற ஆதாரங்களை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
செங்கோல் அனுப்பப்படவில்லை என நான் சொல்லவில்லை. இந்தியாவின் அதிகாரம் அதன்வழியாக அதிகாரம் கைமாறியது என்பது பொய் என்றேன். இப்போது குருமூர்த்தி அளிக்கும் எல்லா சான்றுகளும் செங்கோல் அனுப்பப்பட்டமைக்கான சான்றுகள். அனுப்பியவர்கள் இந்திய அதிகாரக் கைமாற்றம் நிகழ்வதன் பொருட்டு அதை அனுப்பினர். அதை அவர்கள் ஒரு வாழ்த்தாக, ஆசியாக அனுப்பியிருக்கிறார்கள். அது பெற்றுக்கொள்ளப்பட்டது. அவ்வண்ணம் பல சடங்குகள் அன்று நடைபெற்றிருக்கலாம். ஆனால் அதிகாரம் கைமாற வழி தெரியாமல் அப்படி ஒன்றை ராஜாஜி அவர்களிடம் கேட்டார், அது செய்து அனுப்பப்பட்டது, அதன் வழியாக இந்திய அதிகாரம் கைமாறியது என்பதற்கான ஒரு சான்றுகூட இன்றுவரை இல்லை. அது சோழச்செங்கோல் அல்ல. அப்படி ஒரு அதிகாரக் கைமாற்றம் செய்யும் அதிகாரமோ மரபோ திருவாவடுதுறை உட்பட்ட எந்த ஆதீனத்திற்கும் இல்லை. ஆனால் அனுப்பப்பட்டதையே சான்றாகக் காட்டி பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
அதிகாரம் கையில் உள்ளது. மிக எளிதாக 1947ல் அந்நிகழ்வுடன் இருந்த முதிய அதிகாரிகள் போன்ற சிலரைக் கண்டுபிடித்து வாய்மொழிப்பதிவுகூட பெற முடியும். ராஜேந்திரப்பிரசாது, பட்டேல், நேரு, ராஜாஜி,மௌண்ட்பாட்டன் உட்பட அனைவருமே பொய்யர்கள் என்றும் பாவலா செய்பவர்கள் என்றும் நம்பும் சிலர் அதைச் சொல்லலாம். சொல்லிச் சொல்லி நிறுவி விடுவார்கள். பாடநூல்களிலும் ஏற்றிவிடுவார்கள்.
ஒரு பொய்யை எதிர்ப்பவர்கள் இன்னொன்றை தங்கள் சார்பில் நிறுவிவிடுவார்கள். நாம் உண்மையை சார்ந்தே நின்றாகவேண்டிய மிகச்சிறுபான்மையினர்.
ஜெ