அல் கிஸா- சில சொற்கள்- அஜிதன்

அல் கிஸா வாங்க

அல் கிஸா நாவலின் பின்னுரையில் இருந்து….

ஒரு நவீன எழுத்தாளன் இப்படி ஒரு மதம் சார்ந்த ஆன்மீகப் படைப்பை எழுதலாமா? என்ற கேள்வி இயல்பாக எழுவது. மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது என்றும், நவீனத்துவம் எப்போதும் நம்பிக்கைகளை விமர்சனம் செய்யும் போக்கு கொண்டது என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது. இந்த எதிரீட்டுக்கு அடிப்படையாக உள்ள ’நவீனத்துவம்’ மற்றும் ’மரபு’ எனும் பிரிவே ஒருவகையில் நம்பிக்கை சார்ந்ததே என பின்நவீனத்துவ நோக்கு நமக்கு சொல்லும். ’சுதந்திர சிந்தனை’ ‘பிழையில்லா தர்க்கம்’ ‘தூய புறவயம்’ போன்ற நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே நவீனத்துவம் இயங்குகிறது.

அதே நேரத்தில் நம்பிக்கை என்பது தர்க்கமில்லாமை மட்டுமல்ல, தர்க்கம் கடந்தவற்றையும் உள்ளடக்கியதே. மதம் ஆன்மிகத்திற்கு மேலதிகமாக அளிப்பது என்ன என்ற கேள்விக்கு, ’நம்பிக்கை’ என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட முடியும். நம்பிக்கையே ஒரு தனித்த அறிதல் முறையாக இங்கு மாறுகிறது. மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் ஓர் உரையில் ‘முடிவின்மையை நாம் அறிந்து கொள்ள மதமே நமக்கு இருக்கும் வழிமுறை’ என்கிறார். எனில் இவ்விரு கூற்றையும் இணைத்து பார்க்கும் போது சட்டென்று ஒரு வெளிப்பாடு தோன்றுகிறது. “நம்பிக்கையின் வழியாகவே நாம் முடிவின்மையை அறிய முடியும்”

இங்கு முடிவின்மை என்பது கால-வெளியின் முடிவின்மை மட்டுமல்ல, அது இரண்டாம் பட்சமானது, இது அதற்கும் மேலாக விழுமியங்களின் முடிவின்மை. அளவற்ற அன்பு, முடிவில்லா கருணை, எல்லையில்லா அழகு, நிகரற்ற முழுமை என்றெல்லாம் மதம் அதை நமக்கு சொல்லித்தருகிறது. மதம் சொல்லும் நம்பிக்கை என்பது இதை அறிந்துணர்ந்த பின் அடைவது அல்ல; மாறாக, நம்பிக்கை கொள்வதின் மூலமே இவ்வறிதல் என்பது சாத்தியமாகும்.

நவீனத்துவம் பெரும்பகுதி நம்பிக்கையை, மதத்தை வெளியில் இருந்து ஒரு ஆய்வுப்பொருளாகவே அணுகப் பார்த்துள்ளது. விளக்கை கொண்டு நிழலை தேடுவது போன்றது இது. உண்மையில் இதன் வழியாக மதத்தை நாம் அறிந்து கொண்டதை விட அதன் மீதான நம் நம்பிக்கையின்மையைத் தான் மீண்டும் மீண்டும் அறிகிறோம். நம்பிக்கையின் வழியில், அதன் மொழியில் பேசும் நவீனப் படைப்புகள் மிக அரிதாகவே இங்கு நிகழ்ந்துள்ளன. அதிகபட்சமாக நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான போராட்டமாக சில பெரும் படைப்புகள் உள்ளன. உதாரணமாக தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை சொல்லலாம்.

ஆனால் இந்நாவலில் ஒரு கணத்தில் கூட எந்த கதாபாத்திரத்திற்கும் இறைவனின் இருப்பை பற்றிய கேள்வி எழுவதில்லை என்பது மட்டுமல்ல, அவன் நிகரற்ற அன்பாளன், பெரும் கருணையாளன் என்பதிலும் எவ்வித சந்தேகமும் வருவதில்லை. அத்தகைய நம்பிக்கையே நான் அஜ்மீரில் கண்டது. அங்கு தினம் வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தஸ்தயேவ்ஸ்கியின் எந்த அலைக்கழிப்பும் பொருள்படாது.

அதே நேரம் மத ஆன்மீகம் தன் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் அறிவித்துக்கொள்ளும், அதற்கு சான்றுகளைக் காட்டும், சத்தியங்கள் செய்துகொள்ளும். இந்த நாவல் முடிவடைவதும் அப்படியொரு சந்தர்ப்பத்தில்தான். ஆனால் நவீனத்துவம் ஆய்ந்து கண்டடைவது போல இதன் பொருள் அவர்களுக்கு உள்ளூர அதன் மீது நம்பிக்கை இல்லை என்பதல்ல. மாறாக அது அந்த நம்பிக்கையை நிகழ்த்திக்கொள்வதற்கான வழிமுறையே. தீ சுடும் என்பதை ஒருமுறை கைவைத்து பார்த்தால் தெரிந்து விடும் என்பது ஒரு குறுகிய அறிவே. தீ சுடும் என்பதை முழுதறிய அதை நிதம் தீண்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே மத ஆன்மீகம் சொல்வது. காதலன் தன் காதலை மீண்டும் மீண்டும் சொல்வது அதை தனக்கு தானே தன் சந்தேகத்தின் மீது நிறுவிக்கொள்வதற்காக அல்ல, அது அந்த காதலை நிகழ்த்திக்கொள்ளும் வழிமுறை, அதனூடாகவே அவன் அக்காதலை அறிகிறான்.

சூஃபியின் ஆன்மீகமோ தத்துவமோ அறியாத வயதில் என்னை முதல் முதலாக தொட்டது சூஃபி உணர்வே. அது திரையிசையின் வழியிலேயே நிகழ்ந்தது. எனக்கென்று தனியாக ஒரு இசைப்பொறி கிடைத்த அந்த பதின்வயதில், இரவுகளில் நான் கேட்ட இசையில் தான் நான் முழுமையான தனிமையை முதலில் உணர்ந்தேன். அந்த தனிமையுணர்வே உண்மையில் ஆன்மீகத்திற்கும் தத்துவத்திற்கும் ஊற்றாக இருக்கமுடியும். அதை எனக்கு அளித்தவை ஏ. ஆர். ரஹ்மானின் சூஃபி திரையிசைப் பாடல்கள், பின் அவரது பிற பாடல்களிலும் அந்த தனிமையை, ஏக்கத்தை உணர ஆரம்பித்தேன். ”நெய்னா நீர் பஹாயே” பாடலோ “ரெஹ்னா தூ” பாடலில் வரும் இறுதியிசையோ அதே ஆழத்தில் இருந்து வருபவையே. பின் நான் நுஸ்ரத்திலும், பஷீரிலும், இபின் அரபியிலும் கண்டுகொண்ட சூஃபி மரபெல்லாம் அதன் தொடர்ச்சியே. எனவே இப்படைப்புக்கு நான் என் முதல் இசைநாயகனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சமீக காலமாக என் தேடல் அதிகமாக இஸ்லாமிய கிறிஸ்தவ மரபின் மறைஞானிகளை நோக்கியதாகவே இருக்கிறது. மேஸ்ட்டர் எக்ஹார்ட் (Meister Eckhart), இபின் அரபி (Ibn Arabi), மாக்டிபர்கின் மெக்டில்ட் (Mechthilde of Magdeburg), பஸ்ராவின் ராபியா (Rabia of Basra) போன்றவர்கள் சென்றடைந்த இடம் என்னை மேலும் நான் உணரும் அத்வைத உண்மைக்கு அருகில் கொண்டு செல்கிறது. அந்த உண்மைக்கு நான் சென்று நெருங்கிய பாதை பிளேட்டோ-ஷோபன்ஹாவர் வழியானது. இது எனக்கு பெரிய விடுதலையையும், என் தேடலில் உறுதியையும் தருகிறது. நான் செல்வது அத்வைத தரிசனம் நோக்கி என்றால் அதற்கு உபநிடதங்களோ, இந்து மரபோ கட்டாயமில்லை. இந்த மரபும், மறைபிரதிகளுமே இவ்வுண்மையின் எல்லை என நான் வகுத்துக்கொண்டால் நான் அடைவது ஒரு பிரபஞ்ச தரிசனமும் அல்ல.

நான் தேடுவது எதுவாயினும் அதை எனக்கு அளித்துக்கொண்டிருக்கும் சூஃபி ஞானியருக்கும், இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் கொடைகளில் ஒன்றான ஏழைகளின் காவலன் குவாஜா மொயினுத்தீன் சிஷ்டிக்கும் இச்சிறிய நாவலை சமர்ப்பிக்கிறேன்.

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும், அஜிதன் எழுதிய இரண்டாவது நாவலான அல் கிஸா வின் பின்னுரையின் சில பகுதிகள்)

அல்கிஸா முதல் அத்தியாயம்  அகழ் இதழ்

முந்தைய கட்டுரைசி.கமலநாதன்
அடுத்த கட்டுரைசென்னை விளம்பரம், கோவை புத்தகக் கண்காட்சி, துபாய் இலக்கியவிழா…