தமிழ் விக்கி விருது, கடிதங்கள்

 

தமிழ் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியரும், தமிழிசை ஆய்வாளரும் , பாரதியியல் ஆய்வாளரும், குழந்தைக் கவிஞருமான பெரியசாமித் தூரன் கொங்குநாட்டின் முதன்மை அறிவாளுமை. ஆனால் கொங்குநாட்டில் அவருக்கென ஒரு சிறந்த நினைவுச்சின்னம்கூட இல்லை.

தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில் ஒருவரான அவரை நினைவுகூரும்பொருட்டு 2022 முதல் தமிழ் விக்கி- தூரன் விருது அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான விருது ஆகஸ்ட் 5-6 தேதிகளில் ஈரோட்டில் நிகழும்.

இவ்வாண்டுக்கான விருது  ஆய்வாளர் மு.இளங்கோவனுக்கு வழங்கப்படுகிறது. சிறப்பு விருது இளம் ஆய்வாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கு வழங்கப்படுகிறது.

மு.இளங்கோவன் – தமிழ் விக்கி

மு.இளங்கோவன் தொலைபேசி 9442029053

மின்னஞ்சல் [email protected]

அன்பு ஜெ,

ஆய்வாளர் மு. இளங்கோவனின் வலைதளம் தமிழ்விக்கியின் தமிழறிஞர்கள் பலரின் பதிவுகளுக்கான உசாத்துணைகளில் இருப்பதை தமிழ்விக்கி நண்பர்கள் அறிவர். இத்தகைய அறிஞர்கள் தன்னார்வத்தால் தொகுத்தல் பணிகளையும், ஆய்வுப்பணிகளையும், அறிவுச் சேகரங்களையும் செய்கின்றனர். அவர்களுக்கான உரிய அங்கீகாரமாக தூரன் விருது வந்தமைந்துள்ளது மகிழ்வளிக்கிறது.

சமீபத்தில் கணினித்தமிழ் அறிஞர்கள் பற்றிய பதிவுகளுக்காக நீங்கள் கொடுத்த இணைப்புகளின் வழி கணினியில் தமிழை பரவலாக்க முயற்சி செய்த ஆளுமைகளை அறியமுடிந்தது. இலக்கியவாதிகளை விடவும், தமிழறிஞர்களை விடவும் கூட யாரும் பெரிய அளவில் நினைவுகூரப்படாதவர்கள் இவர்கள். எத்தனை கூட்டு முயற்சி. பெரும்பான்மை தமிழ்ச் சமூகமும், இலக்கிய உலகமும் எளிதாக இன்று தமிழை இணையத்தில் கையாள்கின்றனர். நீங்கள் எப்போதும் சொல்லும் எறும்புப் புற்று உவமை தான் நினைவுக்கு வந்தது கணினித்தமிழ் அறிஞர்களைப் பார்க்கும் போது. அவர்கள் அமைத்த அடித்தளத்தில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையே அப்பதிவுகளிடும் போது தான் உணர்ந்தேன். முதன் முறையாக புவீஈர்ப்பு விசை பற்றி அறிந்தபோது கால்களை அழுத்தி அழுத்தி ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தது நினைவிற்கு வருகிறது. அறிதோறும் உலகம் விசாலமடைந்து கொண்டே செல்கிறது. இந்த அறிதலுக்கான தளத்தை ஏற்படுத்தியதற்காக நன்றி ஜெ.

தமிழ்விக்கி பணி ஆரம்பிக்கும் போது இத்தனை பெரிய சித்திரம் எங்களுக்கு கிடைத்திருக்கவில்லை. ஆனால் இந்த ஒன்றரை வருடத்தில் குமரிமாவட்டத்தில் மட்டுமே முயங்கி இணைந்து நகர்ந்து சென்ற அபுனைவு, புனைவு சார்ந்த ஆளுமைகளை நீங்கள் தமிழ் பேசும் அனைத்து தளங்களிலும் ஒருங்கிணைப்பது போன்ற பிரமை ஏற்பட்டுள்ளது.

இன்னும் கூட அனைத்துக் கலைகளும் இயைந்து இயங்கும் ஒரு தளம் உருவாக வேண்டும். நாடகம், ஓவியம் என அனைத்துக் கலைகளும் முயங்கும்போதே இலக்கியம் வேறொரு தளத்தை அதன் உச்ச சாத்தியத்தை நோக்கி சென்றடையும் என்று தோன்றுகிறது. சரியாக இன்னும் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் தூரன் விருது வழி செய்வது புறமாகச் செய்யும் ஒரு வலைபின்னல் என்பதை உணரமுடிகிறது ஜெ. நன்றி. தமிழ்விக்கி தூரன் விருது பெறும் முனைவர் மு. இளங்கோவன் மற்றும் சிறப்பு விருது பெறும் எஸ்.ஜே. சிவசங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ரம்யா

அம்பேத்கர் கடிதங்கள்:

விஞ்ஞானத்தில் தன் சாதனைகள் பற்றி ஐசக் நியூட்டன் தான் செய்தது பெருங் கடலின் கரையில் சில கூழாங்கற்களைப் பொறுக்கியதே என்றார். வரலாற்று தேடலிலும், அறிதலும் என் போன்ற சாமான்யன் அதையும் கூட சொல்ல முடியாத எளிய நிலை என்று மீண்டும் உணர்ந்த நாள் “அம்பேத்கர் கடிதங்கள்” புத்தகத்தை வாங்கியவுடன் சில கடிதங்களைப் படித்த இன்றைய நாள்.

பட்ஜட் பற்றி. அம்பேத்கர் உரையாற்றுவது பற்றி மே மாதம் 1952-இல் உதவி ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஒரு கடிதமெழுதுகிறார். மே 6 ஆம் தேதி கொலம்பியா பல்கலைக் கழகம் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தில் கொலம்பியா பல்கலைக் கழகம் “மதிப்புறு முனைவர்” பட்டம் (Honoris Causa) வழங்கியதை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவிக்கிறார். கவனிக்கவும் அதே கொலம்பியாவில் 1917-இல் ஒரு ஆய்வு மாணவராகவே முதல் முனைவர் பட்டம் பெற்றவர் அம்பேத்கர். இந்த முனைவர் பட்டம் கொலம்பியாவால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அம்பேத்கர் ஆற்றிய பங்குக்காக என்று ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். “அபரிமிதமான” பங்களிப்புக்கு “மிகச் சரியான” பாராட்டு என்கிறார்.

தன்னுடைய பதிலில் அம்பேத்கர் ராதாகிருஷ்ணனின் வாழ்த்துக்கு, “வழங்கப்பட்ட அங்கீகாரத்தை பாராட்டும் அளவுக்கு இந்தியாவில் சில பேர் தயாராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார். அர்த்தம் பொதிந்த வரிகள்.

காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்கள் தங்கள் தந்தையாகவும், வழி காட்டியாகவும் கருதிய காந்தியை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்த போதும் நேரு, படேல், ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் அம்பேத்கரிடம் மதிப்பும், கனிவும் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை. 1951 செப்டம்பரில் அம்பேத்கர் நேரு அமைச்சரவையில் இருந்து வெளியேறியப் பின்பும் அத்தகைய உறவே இருந்தது என்று இக்கடிதம் (1952-இல் எழுதப்பட்டது) ஒரு சான்று.

இக்கடித தொகுப்பு காலச்சுவடின் மற்றுமொரு சிறந்த பங்களிப்பு. பதிப்பாசிரியர் ஜெகநாதனும் மொழி மாற்றம் செய்த எஸ்.ஜே. சிவசங்கரும் பெரும் பணி செய்திருக்கிறார்கள். அம்பேத்கரை ஆளுமையாகவும், மனிதராகவும் அறிந்துக் கொள்ள முக்கிய நூல்.

எஸ்.ஜே.சிவசங்கர் உடல் நலம் தேறி மீண்டு வரவேண்டும். அவருக்கு உதவித் தேவைப்படுகிறதென்பதையும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன்.

இந்நூலை ஆங்கிலத்தில் வெளியிட்ட ஆசிரியரின் குறிப்பு சொல்லும் இது போன்ற நூல்களை இந்தியாவில் வெளியிடுவது எத்துணை துயரமான காரியம் என்று.

அரவிந்தன் கண்ணையன்

எஸ்.ஜே.சிவசங்கர்- தமிழ் விக்கி

 

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100003825246295 

 

முந்தைய கட்டுரைதலதொட்டப்பன்
அடுத்த கட்டுரைஜான் பால்மர்