தமிழ்விக்கி – தூரன் விருது 2023
இனிய ஜெயம்,
புதுச்சேரி விஷ்ணுபுரம் நண்பர்கள் இன்று மு.இளங்கோவனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டோம். அரிகிருஷ்ணன், திருமாவளவன், தாமரைக்கண்ணன் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன்
கடலூர் சீனு
அன்பு நிறைந்த ஜெ. அவர்களுக்கு,
வணக்கம்.இன்று மாலை என் இல்லம் மகிழ்வில் திளைத்தது.
ஆம். கடலூர் சீனு, அரிகிருஷ்ணன், தாமரைக்கண்ணன், திருமாவளவன் ஆகியோர் ’தமிழ் விக்கி- தூரன் விருது’ பெற உள்ள என்னை நேரில் வந்து பார்த்து வாழ்த்துரைத்தனர்.பல்வேறு செய்திகளை உரையாடல் வழியாகப் பகிர்ந்துகொண்டோம்.தங்கள் படைப்புகள் குறித்தும், அறிவார்ந்த தங்களின் வாசகர்கள் குறித்தும் நீண்ட நாழிகை உரையாடினோம்.
தங்கள் அறிவிப்புக்குப் பிறகு என் வலைப்பதிவுப் பக்கத்திற்கு வந்தோர்களின் எண்ணிக்கை பல்லாயிரமாக உயர்ந்தது.தொலைபேசி, மின்னஞ்சல், வாட்சப் வழியாகத் தங்கள் வாசகர்கள் பலரும் வாழ்த்துரைத்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.பலருக்கும் என் பணிகளை அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இன்றைய நாளில் நினைவுக்கு எடுத்துக்கொண்ட படத்தைத் தங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
மு.இளங்கோவன்,
புதுச்சேரி
மு. இளங்கோவனுக்கு தமிழ் விக்கி தூரன் விருது. மலேசியாவுக்கு அடிக்கடி வருகை தரக்கூடியவர் மு. இளங்கோவன். இங்குள்ள தமிழியக்க அமைப்புகளுடன் அணுக்கமான தொடர்பு வைத்துள்ளவர். தமிழ் விக்கி கட்டுரைகள் தயாரிப்பின் போதுதான் மலேசிய ஆளுமைகள் குறித்து அவர் தேடிச் சேகரித்த கட்டுரைகளை அவர் தளத்தில் காணக்கிடைத்தது. அவர் சேகரித்து வழங்கிய தகவல்கள் போல மலேசியாவில் கூட அதுவரை யாரும் செய்திருக்கவில்லை.
பாவலர் குறிஞ்சிக் குமரனார், அ.பு.திருமாளனார், சி.வேலுசுவாமி, முரசு நெடுமாறன் என முக்கியமான அறிஞர்கள் குறித்து தேடித் தேடி சேர்த்திருந்தார். அவருக்கு தமிழ் விக்கி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. மலேசியத் தமிழ் ஆய்வுலகம், அறிவுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.
மு. இளங்கோவன் அகப்பக்கம் : http://muelangovan.blogspot.com/
மு.இளங்கோவன் முகநூல் பக்கம்ன்https://www.facebook.com/muelangovan
மு.இளங்கோவன் – தமிழ் விக்கி
மு.இளங்கோவன் தொலைபேசி 9442029053
மின்னஞ்சல் [email protected]
ம.நவீன்
வல்லினம்
அன்புள்ள ஜெ
தூரன் விருது மு. இளங்கோவனுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி
‘வறுமைச் சூழலால் படிக்க இயலாமல் மூன்றாண்டுகள் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தபின் துணிக்கடை ஒன்றில் பகுதிநேரப் பணியையும் செய்தார். பின்னர் புலவர் ந. சுந்தரேசன் என்னும் தமிழாசிரியரின் வழிகாட்டலில் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பயின்றார் கல்லூரிப் பருவத்தில் முதல் வகுப்பில், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்’
என்ற வரி அவரைப்பற்றிய தமிழ் விக்கி இணையப்பக்கத்தில் உள்ளது. அது என்னைப் போன்றவர்களுக்கு அளிக்கும் ஊக்கம் மிகப்பெரியது.இன்றைய வாழ்க்கையில் நாம் எல்லாவற்றையும் அடைந்தபின்னரும் நம்முடைய கனவுகளை எண்ணி ஏங்கிக்கொண்டே இருக்கிறோம். அப்படி ஆகவேண்டும், அங்கே போகவேண்டும் என்றெல்லாம் மிகையான ஆசைகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் மனச்சோர்வால் எதையும் உருப்படியாகச் செய்யாமலும் இருக்கிறோம். ஆனால் முந்தைய தலைமுறையில் கட்டாந்தரையை பிளந்துகொண்டு மேலே வரும் விதைகளைப்போல பெரிய மனிதர்கள் கிளம்பி வந்திருக்கிறார்கள்.
மு.இளங்கோவனுக்கும் அவருக்குக் கல்விகற்க உதவிய திருப்பனந்தாள் ஆதீனத்திற்கும் நன்றி, வணக்கம்
செல்வன் முருகேசன்
அன்புள்ள ஜெ
எஸ்.ஜே.சிவசங்கருக்கு இதையநோய் இருப்பதாகவும், நிதியுதவி செய்யும்படியும் கோரிக்கைகள் அண்மையில் வந்தன. நீங்களும் உதவிசெய்தீர்கள். இப்போது அவருடைய பட்டியலில் பல நூல்கள் சேர்ந்துள்ளன. தொடர்ச்சியாக புதிய ஊக்கத்துடன் எழுதி வருகிறார். அந்த தீவிரம் வியக்கச்செய்வது. அவருடைய அந்த ஊக்கத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ராஜகுரு
சென்னை
எஸ்.ஜே.சிவசங்கர்- தமிழ் விக்கி
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100003825246295