தமிழ்விக்கி – தூரன் விருது 2023
இந்த ஆண்டுக்கான தூரன் விருதை புதுச்சேரி பேராசிரியர் மு.இளங்கோவனுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. பேராசிரியர் மு.இளங்கோவனை எனக்கு 15 ஆண்டுகளாகப் பழக்கம். ஒருமுறை சிங்கப்பூரில் நடைபெற்ற உலகலாவிய தமிழாசிரியர் மாநாடு ஒன்றில் நாட்டுப்புறப் பாடல் பற்றிய கட்டுரையை சமர்ப்பித்துக்கொண்டிருந்தபோது அவர் திறமையை நேரில் கண்டேன். அருமையாகப் பேசியும், கும்மி அடித்துப் பாடிய ஆற்றலைக் கண்டறிந்த பிறகு அவரை மலேசியாவுக்கு வருமாறு கேட்டுக்கொண்டேன்.
பிறிதொரு தருணத்தில் மலேசியா வந்து என் தலைமையில் அதே நாட்டுப்புற இலக்கியத்தை விரிவாகப் பேசினார். மலையகச் செலவு- மு. இளங்கோவன்
பொதுவாகவே அவருக்கு வரலாறு தொடர்பான ஆர்வம் அதிகம். ராஜேந்திர சோழன் ஆண்ட பூஜாங் பள்ளத்தாக்கு என்று இன்றைக்கு அழைக்கப்படும் ராஜேந்திர சோழன் ஆண்ட கடாரம் நிலப்பகுதியைப் பார்க்க ஆசைப்பட்ட அவரை அங்கு அழைத்துச் சென்றேன். அது தொடர்பாக தன் வலைத்தளத்தில் ஒரு விரிவான கட்டுரையையும் எழுதினார். கடாரம் கண்டேன் மு. இளங்கோவன்
மலேசியாவுக்கும் அவருக்கும் தாய்ப்பிள்ளை உறவு. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது வருகை புரிவார். கணினி தொடர்பான வகுப்புகள் நடத்தவும் , பல்கலைக் கழகங்களில் தான் கண்டறிந்த ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கவும் வருவதுண்டு. தான் ஒரு சலைக்காத உழைப்பாளி என்பதை நிறுவிக்கொண்டே இருப்பவர். தமிழ் விக்கி மூலம் பெரியசாமி தூரன் விருது வழங்கி அவரை அடையாளப்படுத்துவதும் கொண்டாடுவதும் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது என்று உளமாற நம்புகிறேன்.
பேராசிரியர், அயராத ஆய்வாளர் மு. இளங்கோவனுக்கு என் அன்பும் பாராட்டும் என்றும் உண்டு.
கோ.புண்ணியவான்,
மலேசியா.
மு. இளங்கோவன் – தமிழ் விக்கி
மு.இளங்கோவன் தொலைபேசி 9442029053
மின்னஞ்சல் [email protected]
ஜெ,
தமிழ் விக்கி தூரன் விருது அறிவிப்பு கண்டேன். இன்னும் சில மாதங்களில் விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு வரும். ஒரு விருது அளிக்கப்பட்டதுமே அடுத்த விருது. விஷ்ணுபுரம் அறக்கட்டளை ஓர் ஆண்டில் நான்கு ஆளுமைகளை அறிமுகம் செய்கிறது. விரிவாக அவர்களை தமிழ் வாசகர்களின் முன் வைக்கிறது. முக்கியமான ஒரு தமிழ்ப்பணி இது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவர்களில் மு.இளங்கோவன், எஸ்.ஜே.சிவசங்கர் இருவரையுமே நான் இதுவரை அறிந்ததில்லை. விருது அறிவிப்பு கண்டபிறகு அவர்களைப்பற்றி இணையத்தில் தேடினேன். மு.இளங்கோவனின் இணையப்பக்கம் ஒரு பெரிய சுரங்கம் போல் இருக்கிறது. அவருடைய பணி பற்றிய பிரமிப்பு ஒரு பக்கம். தமிழகத்தில் இவ்வளவு தமிழறிஞர்கள் வாழ்ந்திருக்கிறார்க்ள், வாழ்கிறார்கள் என்பது இன்னொரு பக்கம். பலரை எவருமே கவனிக்கவில்லை என்பது ஒரு சோர்வுதான். ஆனாலும் இந்த ஆவணப்படுத்தல் எதிர்காலச் சந்ததிக்கான ஒரு பயன்கருதாத உழைப்பு. அவருக்கு என்னுடைய மனம் கனிந்த வணக்கம்
ஜெ.ஆர். குமாரசாமி
அன்புள்ள ஜெ,
மு.இளங்கோவன், எஸ்.ஜே.சிவசங்கர் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அ.கா.பெருமாள்– செந்தீ நடராசன் கூட்டமைப்புடன் இணைந்து நாட்டார் மொழியியலில் சிவசங்கர் பணியாற்றியதாக வாசித்தேன். அவருடைய உடல்நிலை மேம்பட்டு அவருடைய பணி சிறக்கட்டும்.
ராஜேஷ்
எஸ்.ஜே.சிவசங்கர் தமிழ் விக்கி
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100003825246295