தமிழ்விக்கி – தூரன் விருது 2023
அன்புள்ள ஜெமோ
திராவிட இயக்கத்துக்கு அறிவுச்செயல்பாடு இல்லை என்று முழக்கமிட்ட தாங்கள் திராவிட இயக்கத்தின் அறிவியக்கத்தைச் சேர்ந்தவருக்கு விருது அளிக்கும் நிலைக்கு வந்துவிட்டது மூளை தெளிவடைந்து வருவதை காட்டுகிறது. வாழ்த்துக்கள். இன்னும் பலபேர் உங்கள் கண்களுக்குப் படவேண்டும். அப்படியே இடதுசாரி– தலித் ஆய்வும் கண்ணுக்குப்பட ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ்காரரான தூரன் பெயரிலேயே விருது அளிக்கப்படுவது மேலும் சிறப்பு. நீங்கள் இனி மேடையில் முழக்கமிடும்போது யோசிக்கலாம்.
செல்வக்குமார் ராசமாணிக்கம்
அன்புள்ள செல்வக்குமார்
உங்கள் உற்சாகத்துக்கு நன்றி. எவராயினும் தமிழ் விக்கியின் கோரிக்கை ஒன்றே. எதையேனும் செய்து காட்டுங்கள். எவராலும் மறுக்கமுடியாததாக. நீங்களும் செய்துகாட்டலாம். உங்களையும் தேடி வருவோம்.
ஜெ
மு.இளங்கோவன் – தமிழ் விக்கி
மு.இளங்கோவன் தொலைபேசி 9442029053
மின்னஞ்சல் [email protected]
அன்புள்ள ஜெ,
மு.இளங்கோவன் பொன்னி இதழ்களை மீட்டு தொகுத்தார் என்னும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பொன்னி இதழ்களை என் இளமைக்காலத்தில் கடலூர் நூலகத்திலே வாசித்துள்ளேன். அட்டையில் வண்ணப்படத்தில் பொங்கல் கொண்டாட்டம் எல்லாம் வரையப்பட்டிருக்கும். அட்டைப்படம் தவிர இப்போது எதுவும் ஞாபகமில்லை. அதிலுள்ள செய்யுள்களை சத்தம்போட்டு வாசிப்பேன். என் அப்பா தமிழாசிரியர். அவர் அவற்றை உரக்க பாடிப்படிக்கவேண்டும் என்று சொல்வார். இன்றைக்கு பொன்னி பற்றியெல்லாம் எவருக்குமே ஞாபகமில்லை. அரிய பணி செய்த இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள்.
அருணை மாசிலாமணி
அன்புள்ள ஜெ
மு.இளங்கோவன் , எஸ்.ஜே சிவசங்கர் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒருவர் அரிய பணி செய்த சாதனையாளர். ஒருவர் மேலும் பணிகள் செய்யவிருப்பவர். இருவருமே சிறப்புற பணியாற்றவேண்டும். தூரன் பெயரால் இந்த விருது அளிக்கப்படுவது மேலும் சிறப்பு. கொங்கு மண்ணின் தலைமை அறிஞர் என்றால் தூரன் அவர்கள்தான். அவர் பெயரில் ஒரு நினைவுச்சின்னம்கூட தமிழகத்திலே கிடையாது. அவர் பெயரில் ஒரு விருது அவர் வாழ்ந்த ஈரோட்டிலேயே அளிக்கப்படுவது மிகுர்ந்த மனநிறைவை அளிக்கிறது.
செந்தில்ராஜ்
எஸ்.ஜே.சிவசங்கர்- தமிழ் விக்கி
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100003825246295