மணிநீலம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

கடந்தவருடம் நடந்த குருபூர்ணிமா நிகழ்வன்று பங்குபெற இயலாமல் போயிற்று. Zoom மிலும் தங்களை காணப்போவதில்லை என்பது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. எனவே கம்பராமாயணம் குழுவில் சிலபேர் இணைந்து அன்று வெண்முரசின் சிலபகுதிகளைக் கண்களைமூடிக்கொண்டு பக்கங்களை தேர்ந்தெடுத்து வாசிப்பது என முடிவு செய்துகொண்டு வாசித்தோம். ஒருவருக்கு இரு பத்திகள் வீதம் 5 அத்தியாயங்கள் வாசிக்க முடிந்தது.அதனைத்தொடர்ந்து கோகுலாஷ்டமி தினத்தன்று நீலம் வாசிக்கலாம் என முடிவு செய்தோம். ஏனெனில் எந்த விவாதமும் கலந்துரையாடலும் இல்லாமல் வெவ்வேறு குரல்வழி நம் மனதிற்கு அணுக்கமான ஒரு  நாவலை கேட்பதென்பது எவ்வளவு இனிமையானதென்று அப்போது உணர்ந்திருக்கவேண்டும். மீண்டும் மீண்டும் வாசித்த நாவல் எங்கோ தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருப்பதுபோல். அதுவும் குறிப்பாக நீலம் அவ்வாறு வாசிக்கப்பட்டபோது அதன் மொழி அவ்வளவு மயக்கத்தைக்கொடுத்தது. ஒரு புல்லாங்குழலின் இசைபோல ..

அன்று வாசித்துமுடித்தவுடன் அது மற்ற வெண்முரசு நாவல்கள்போல் அல்லாமல் மிகக் கவிதைத்தனமான மொழியுடனும் புரிந்துகொள்ள முடியாத ஒரு உணர்வுநிலையை மட்டுமே தந்து தங்களை உள்ளிழுத்துக் கொள்வதாகவும் ஒன்றுபோல அனைவரும் கூறிக்கொண்டோம். எனவே நீலம் வாசிப்புக்கு ஒருகுழு ஆரம்பித்து அதனை clubhouse ல் கம்பராமாயணம் அமர்வு அல்லாத இருநாட்கள் உரையாடலாம் என முடிவெடுத்து தொடங்கினோம். முதல் இரு அமர்வுகளிலேயே அதன் மொழிஅழகைத்தாண்டி செல்லமுடியாத போதாமையை உணர்ந்த நேரத்தில் திரு. ராஜகோபாலன்  (ஜாஜா)அவராகவே வந்து இணைந்தார்.வாசிப்பில் அது மிகப்பெரும் திருப்பமாக அமைந்தது. இப்படி கூறுவதன் காரணம் வி. பு நண்பர்களின் அனைத்து குழுக்களிலும் அவர் இருந்தாலும் நேரமின்மை காரணமாக அதிகமாக அவர் விவாதங்களில் பங்கெடுப்பதில்லை. ஆனாலும் நீலம் வாசிப்பைப் பொருத்தவரை அதன் மிகமுக்கியமான தளத்தில் நிகழவேண்டும் என்ற அவரின் விருப்பமே இந்த வருகைக்கான காரணமாக அமைந்தது. ஜாஜாவின் வருகைக்குப் பிறகு நீலம் எத்தனை வண்ணங்களின் கலவை என புரிந்துபோயிற்று. கண்நிறைக்கும் வண்ணங்களை கண்டுகொள்ளமுடிந்தது. கடம்பமும் மருதமும் கம்சனும் யார் எனத் தெளிந்தது. நீலம் நிறைவுற்ற போது அதில் ராதையும் கம்சனுமன்றி வேறொன்றும் இல்லாததாயிற்று..

நீலத்தில் கண்ணனைத் தேடி வாசிக்க வந்தவர்களுக்கு ராதை மட்டுமே தெரிந்ததனால்.. அடுத்து கண்ணனைத் தேடியப் பயணத்தில் இருக்கிறோம்.பிரபந்தம் எடுத்திருக்கிறோம். மார்கழியில் தொடங்கியதால் முதலில் ஆண்டாள் வாசித்துவிட்டு இப்போது பெரியாழ்வார் திருமொழி வாசிப்பில் உள்ளோம். ஜாஜாவின் வழிநடத்தலில் சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. சென்னை மருத்துவர் முத்துகிருஷ்ணன் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து அமர்வுகள் தடையற்று நடைபெற உறுதுணையாக உள்ளார் .நண்பர்கள் மதுபாலா, அமுதா, திருப்பூர் ஆனந்தகுமார் ஆகியோர் தொடர்ந்து பங்கெடுக்கின்றனர்.

அமெரிக்காவிலிருந்து பங்கேற்கும் ஜமீலாவின் பங்கெடுப்பு  முக்கியமானது. நீலம் வாசிப்பின் ஜாஜாவின் உரைகளை மட்டும் தனியாக YouTube ல் பதிவேற்றி இருக்கிறார். இப்போது பிரபந்த வாசிப்பிற்கும் தொடங்கியிருக்கிறார். வெவ்வேறு நாடுகளிலிருந்து நம் இலக்கியவட்டத்தைத் தாண்டிய நண்பர்கள் பலரும் பங்குகொள்கின்றனர். சிலருக்கு வெண்முரசின் அறிமுகம் கிடைத்து ‘மகாபாரதத்தைத் தழுவி தமிழில் இவ்வளவு பெரிய நாவலா? ‘ என்ற வியப்பும்கூட.

திரு. ராஜகோபாலன் அவர்கள் வாரத்தில் இரண்டுநாட்கள் 2 மணி நேரத்திற்குக் குறையாமல் இந்த பிரபந்த வாசிப்பில் பங்கெடுப்பதற்கு எங்கள் மணிநீலம் குழுவின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  வழிநடத்துதல் இல்லாத மரபிலக்கிய, பக்தி இலக்கிய வாசிப்புகளில் அத்தனை நிறைவு கூடாது எனத் தோன்றுகிறது. அதனை உரைகளாக பதிவேற்றிக் கொண்டிருக்கும் தோழி ஜமீலாவுக்கும் நன்றி.

இத்தனை நண்பர்குழுக்களை சாத்தியமாக்கியிருக்கும் ஆசிரியருக்கு

வணக்கங்கள்.

நன்றி ஜெ

விஜயலஷ்மி 

சென்னை.

மணிநீலம் யூ டியூப் பக்கம்

முந்தைய கட்டுரைகலையுள்ளமும் தியானமும் -நானறிந்தவை
அடுத்த கட்டுரைகமலாதாஸ் – கடிதங்கள்