அன்புள்ள ஜெ
வெண்முரசு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி என்னுடைய எண்ணங்கள் இவை. சென்ற இரண்டு ஆண்டுகளில் மகாபாரதம் சார்ந்து பேசப்பட்ட எல்லா உரைகளிலும் வெண்முரசின் தாக்கம் இருந்தது. கதைகள் மாறிவிட்டிருந்தன. குறிப்பாக பாரதி பாஸ்கர் வெண்முரசின் கதைகளைச் செவிவழியாக பெருமளவுக்கு எடுத்துச் சென்றிருந்தார். அதைக்கேட்டவர்கள் அதிலிருந்து மீண்டும் கதைகளைச் சொன்னார்கள். பல கதைகளை அப்படியே வெண்முரசுக்கதை என்று சொல்லலாம்.
ஆனால் கதைகளின் மாற்றம் அல்ல. அதற்கு முன் மகாபாரதம் கதைகளைச் சொன்னவர்கள் அதை ஒரு வகை புராணத்தன்மையுடன் சொன்னார்கள். அத்துடன் மகாபாரதம் பற்றி ‘பகுத்தறிவாளர்கள்’ சொன்ன குற்றச்சாட்டுகளை மழுப்பவும் செய்தனர். ஐந்துபேரை திருமணம் செய்துகொள்வதெல்லாம் நமக்கு ஒப்புதலில்லை, இருந்தாலும்… என்றெல்லாம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அந்த விஷயமே மாறிப்போய் மகாபாரதத்திற்கு நம் பேச்சுகளில் ஒரு கிளாஸிக்கல் தன்மை வந்துவிட்டது. அது நேரடியாகவே வெண்முரசின் தாக்கம்.
தெய்வலீலை என்றே சிலது உண்டு. அண்மையில் வெண்முரசிலே தனித்தமிழ் பற்றி ஒரு சர்ச்சை ஓடியது. திமுகவினர் இணையதளங்களிலும் யூடியூபிலும் வசைபாடித்தள்ளினார்கள். அந்த அலை அடங்கியபோது மேலும் பலநூறுபேர் வெண்முரசுக்கு வந்தார்கள். நான் சந்தித்த பலபேர் வெண்முரசை கேள்விப்பட்டதே அதன் வழியாகத்தான். நாலைந்துபேர் வாசிக்க ஆரம்பித்து பல நூல்களைக் கடந்துவிட்டார்கள்.
வெண்முரசுக்காக வாழ்த்துக்கள்
எஸ்.அனந்தநாராயணன்