கவிஞனுடன் இருத்தல்
அன்புள்ள ஜெ
கல்பற்றா நாராயணன் பற்றிய கட்டுரை கண்டேன். என் மனதுக்கு மிக உகந்த கவிஞர் அவர். அவரை சந்திக்க அழைப்பு விடுத்தபோது நான் வரவேண்டும் என நினைத்தேன். ஆனால் வழக்கமான தயக்கம். டிக்கெட் போட்டு கிளம்பவேண்டும் என்பதே முதல் தயக்கம். அதன்பின் நானே ஒவ்வொன்றாக உருவாக்கிக் கொண்டேன். மலையாளம் தெரியாது. அவரை சந்தித்தால் என்ன பேசுவது?. ஒரு கவிஞனின் கவிதைதான் முக்கியம், கவிஞன் முக்கியமல்ல. இப்படி பல வரிகளை உருவாக்கிக்கொண்டேன். யோசித்துப்பார்த்தால் நீங்கள் எழுதியதுபோல காரணம் என் அகந்தைதான். நான் என்னை வெறும் வாசகன் என அறிமுகம் செய்துகொள்ள கொஞ்சம் தயங்கினேன். அதுதான் உண்மை. அந்த தயக்கம் உங்களுக்கு இல்லாமலிருந்திருக்கிறது. உங்கள் கட்டுரை ஒரு அறை போல என் மேல் விழுந்தது.
கல்பற்றா நாராயணன் கவிதைகளில் ஒரு கேரளக்கலாச்சாரம் உள்ளது. பீடியைப் பற்றிய கவிதை 99சதவீதம் மலையாளி மட்டுமே எழுதக்கூடியது. அதிலுள்ள புறவுலகமே அந்த மலையாளத்தன்மையை உருவாக்குகிறது. தமிழுக்கும் மலையாளத்துக்குமான வேறுபாடு முக்கியமகா இதுதான். தமிழ்க்கவிதையில் அகம் மட்டும் அந்தரத்தில் நின்றுகொண்டிருக்கிறது.
சரவணன் மகா
அன்புள்ள ஜெ
கவிஞனுடன் இருத்தல் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்கிறது. கவிஞர்கள் எழுத்தாளர்களை எல்லாம் நேரில்சந்திக்கக்கூடாது, படிப்பதோடு நின்றுவிடவேண்டும் என ஒரு கும்பல் அடிக்கடிச் சொல்வதுண்டு. அவர்கள் படிப்பதும் இல்லை. அவர்களுக்கு இருப்பதெல்லாம் அரசியல் மட்டும்தான். அப்படிச் சொன்ன ஓர் அண்ணன் ஓர் அரசியல் (சாதி)தலைவரைச் சந்திக்க முண்டியடித்ததை கண்டபிறகுதான் எனக்கு தெளிவு வந்தது. ஒரு கவிஞனின் கவிதையளவுக்கே அவனுடைய பேச்சும் தோற்றமும் முக்கியம்தான். அவனுடன் இருப்பது ஒரு கவிதையை நாம் வாங்கிக்கொள்ளும் அனுபவம்தான்.
ராஜன் .கே