இரா முருகனும் இருபதாண்டுகளும் – கடலூர் சீனு

ராயர் காபி கிளப் வாங்க

இரா.முருகன்

இனிய ஜெயம்

இரா.முருகன் அவர்கள் எழுதிய சஞ்சீவனி நாவல் முன்பதிவில் சலுகையாக கிட்டத்தட்ட பாதி விலைக்கு கிடைக்க, அது என் கைக்கு வந்து என் நூலகத்தில் இரா முருகன் நூல்கள் வரிசையில் அதை வைக்கப் போகையில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ராயர் காப்பி கிளப் கைக்கு சிக்க, சும்மா மீண்டும் ஒரு புரட்டு புரட்டினேன்.

இரா முருகன் எழுதிய கவிதை தொகுப்பு தொட்டு அவரது ஆக்கங்கள் அனைத்தையும் நான் வாசித்திருந்தாலும் முதன் முதலாக அவரது ராமோஜியம் நாவல் குறித்துதான் எழுதினேன். காரணம் உண்டு. இரா முருகன் பிரபஞ்சன் போன்ற சில எழுத்தாளர்கள் போல தன் குடும்பம் மீது விட்டேற்றியான விலகல் கொண்டவர் அல்ல. உறவுகள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர். எனில் அத்தகு உறவுகள் பிரியும் போது எவ்வளவு வலி எழும். தனது மனைவி புற்று நோய் கண்டு பிரிந்த சூழலில் அந்த ஆண்டே அவர் எழுதிய நாவல்தான் ராமோஜியம். சுய வரலாற்றுப் புனைவு போன்ற அழகியல் கொண்ட கதையை சிதறடித்து அதன் வழியே எழும் கதையினூடாக வாழ்வை பரிசீலனை செய்த நாவல் அது. சொந்த துயர் எதுவும் வந்து தீண்டிவிடாத  வீசும் தொடர் தென்றல் போலும் தனது படைப்பாற்றலை அவ்விதமே பத்திரப்படுத்தி வைத்திருந்தார் இரா முருகன். அந்த மகிழ்வில் இருந்தே ராமோஜியம் குறித்த வாசிப்பனுபவத்தை எழுதினேன்.

1980 முதல் தீவிர இலக்கியத்தில் இயங்கி, ராமோஜியம், 1975, இரட்டைத் தெரு, டியூப்லெக்ஸ் வீதி, அரசூர் வம்ச வரிசை நாவல்கள், என ஒவ்வொரு நாவல் சார்ந்தும் வெவ்வேறு வடிவ அழகியல் வழியே சுவாரஸ்யமான வாசிப்பின்பம் கொண்டு வாழ்க்கை விசாரம் மேற்கொள்ளும் இரா முருகன் இந்த சஞ்சீவனி நாவலில் ஃபாண்டஸியை கையில் எடுத்திருக்கிறார். அடுத்து எழுதப்போகும் இரண்டு நாவல்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

ராயர் காப்பி கிளப் நூலில் ஒரு தனி தாளில் அந்த நூல் வழியே அறிய வந்து நான் வாசிக்க வேண்டிய நூல்கள் பார்க்கவேண்டிய படங்கள் குறித்து எழுதி வைத்திருந்த குறிப்பை எடுத்து வாசிக்கையில் திடுக்கிடும் வண்ணம் ஒன்றை அறிந்தேன். அந்த நூலை இன்றிலிருந்து இருபது வருடம் முன்னர் (இதே மாதத்தில்) வாசித்திருக்கிறேன்.  இருபது வருடங்கள். இரா முருகன் அவர்களுக்கு வயசாகிப்போச்சே என்று சோகத்துடன் எண்ணிக்கொண்டேன்.  நீலி ரம்யா சின்ன பிள்ளைதானே இப்போதுதானே தீவிர வாசிப்பு உலகிற்குள் நுழைகிறார் இவரை கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு என்று எண்ணி இரா முருகன் கட்டுரை ஒன்றை வெட்டி ஒட்டி ரம்யாவுக்கு அனுப்பி from, eramurukan.in (இப்படித்தான் இரா முருகன் தள முகவரி இருக்கும் ) என்று குறிப்பிட்டு அனுப்பினேன். வாசித்தவர் பதிலில்  “நல்லா இருக்கு சீனு. அது என்ன புனைப் பெயரா ஈர முருக்கன்” என்று கேட்டிருந்தார் சீரியஸாக.

மொழி வழியே எழும் இத்தகு குழப்பங்கள், மொழி நடை போன்றவை இந்த நூலில் ஆசிரியரை ஈர்க்கும் முக்கிய விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது.  இரவெல்லாம் இருமித் தளர்ந்த ஆசாமியின் மனைவி வசம் காலையில் பாலக்காடு தமிழில் பாட்டி ஆதூரத்துடன் விசாரிக்கிறார் ” உன் ஆத்துக்காரர் ராவெல்லாம் குரைச்சிண்டு இருந்தாரே டாக்டர் கிட்ட போனாரோ?”  அடுத்து என்ன நடந்திருக்கும் என்பது யூகிக்கக் கூடியதுதானே.

வீரமா முனிவர் துவங்கி வீராசாமி செட்டியார் உரை நடை வரை பேசும் கட்டுரைகள் ஒன்றினுள் ஒரு கிளி கதை ஒன்று வருகிறது. ஜெயமோகன் கதை ஒன்றில் சாமியார் வளர்க்கும் கிளி போன்று விவகாரம் பிடித்த கிளி. தேவாலயம் ஒன்றில் கைக்கு எட்டா உயரத்தில் அமர்ந்து ப்ரார்தனைப் பாடல் எழும் நேரம் எல்லாம் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை பொழிகிறது. லண்டனில் உண்மையாக நிகழ்ந்த இந்த சம்பவத்தை 50 ஆண்டுக்கு முந்தய இதழியல் தமிழில் எழுதிக் காட்டுகிறார் இரா. மு.

ஆசிரியரின் அடுத்த ஈர்ப்பு பெண் ஆளுமைகள். லெனி ரைப்பேன்ஸ்தால் எனும் உலக சினிமாவின் ஜெர்மனியை சேர்ந்த முதல் பெண் இயக்குனரின் வாழ்வு முக்கியமானது. சாதனைப் பெண். ஹிட்லரின் நிழல் விழுந்து நிரந்தர இருளில் 101 வயது வரை  வாழ்ந்து மறைந்தவர். குந்தவை எனும் இலங்கைப் பெண் எழுத்தாளர் வாழ்வு, கோன் பனே கா க்ரோர்பதி லண்டன் நிகழ்வில் மோசடியாக கோடியை வெல்லும் டயானா எனும் பெண் இப்படிப் பலர்.

லண்டனில் ஆசிரியர் வசிக்க நேர்ந்த நகரின், மக்கள் சூழல் இவற்றின் வர்ணனை அடுத்த ஈர்ப்பு. குறிப்பாக சதாம் மீதான போரை பிரிட்டன் ஊடகம் பதிவு செய்த விதம். அன்றைய சூழலில் நிகழ்ந்த கிரிக்கெட் போன்ற விஷயங்கள். இங்கும் ஈழ இறுதி போரை தொ கா வில் விளம்பரதாரர் நிகழ்ச்சி போலத்தானே ( இலங்கயனுக இன்னுமா தடவிக்கிட்டு கிடக்காணுக)  நாம் பார்த்தோம். கூடவே கிரிக்கெட்டும் பார்த்தோம். எல்லா இடத்திலும் காலத்திலும் சமூக உளவியல் ஒரே விதம்தான்.

இந்த பொது விஷயம் அளவே கத்தோலிக்க பாதிரியார்கள் போப்புக்கு எதிராக அமைத்த தனி சங்கம் போல சுவாரஸ்யம் மிக்க லண்டனின் தனி விஷயங்களும்  கட்டுரைக்குள் உண்டு. இத்தகு விஷயங்கள் முழுத்தே இரா முருகனின் லண்டன் டைரி நூல் உருவானது என்று சொல்ல முடியும். உதாரணத்துக்கு லண்டன் டைரி நூலில் ஒரு சம்பவம். இரா மு இயந்திரம் வழங்கும் ஒரு பொருளினைப் பெற வரிசையில் நிற்கிறார். அவர் முறை வரும்போது இயந்திரத்தின் வாயில் அது கேட்ட பென்சை திணித்துவிட்டு அது கக்கும் பொருள் வேண்டி நிற்கிறார். இயந்திரம் பொருளுக்கு பதிலாக காசை திரும்ப துப்பி விடுகிறது. இரா மு வழிமுறை அனைத்தையும் சரி பார்த்து மீண்டும் காசை திணிக்க, மீண்டும் அதே நிகழ்வு. குழம்பி நிற்க, பின்னால் நிற்கும் ஒரு அகதி அந்த நாணயத்தை ஆசிரியரிடம் இருந்து வாங்கி அதை இரு புறமும் நாக்கால் நக்கி பின்னர் இயந்திரத்தில் திணிக்கிரார். இப்போது இயந்திரம் சரியாக வேலை செய்கிறது. ஆசிரியர் ‘ங்கே’ என விழிக்கிறார்.

P a கிருஷ்ணன் எழுதிய புலி நகக் கொன்றை, யெஸ் பொ எழுதிய வரலாற்றில் வாழ்தல் போன்ற பிரபல நூல்களுடன் எவருமே அறியாத வல்லிக்கண்ணன் எழுதிய சம்பங்கிபுரத்து பொம்பளைகள் எனும் விவகாரமான நாவல் குறித்த அறிமுகங்கள் இதில் உண்டு. எடுவர்ட் மனே யின் புல்வெளியில் மதிய உணவு ஓவியம் குறித்தும், ரெம்பரண்ட் வரைந்து காணாமல் போன பால ஏசுவின் விருத்த சேதனம் ஓவியம் குறித்தும் சுவாரஸ்யமான கட்டுரைகள் இடம்பெற்றிருக்கிறது.  (இதே சுவாரஸ்யத்துடன் இரா முருகன் உணவருந்தும் ஹோட்டலில், ஒரு வேளை உணவுக்கான காசுக்கு இரா முருகனை வரைந்து தந்து அந்த காசில் உணவு உண்டுவிட்டு வெளியேறும் ஓவியன் ஒருவன் குறித்த கட்டுரையும் உண்டு)   பின்னர் இந்த பால ஏசுவின் விருத்த சேதனம் குறித்து வாசிக்கையில் அறிந்தேன் மத்திய காலங்களில் ஏசுவின்  அந்த உதிர்ந்த முன் தோல் குறித்து நம்பிக்கையாளர்கள் மத்தியில் விரிவான தள்ளு முள்ளுகள் நிகழ்ந்திருக்கிறது. ஏசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து  விண் ஏகும் போது அந்த முன் தோலும் விண் ஏகி விட்டது என்று போப் ஒருவர் அடிதடிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். வரலாறு :).

இன்று இந்த நூல் எனக்கு அளிக்கும் சுவாரஸ்யம் இது கொண்டுள்ள 20 ஆண்டுக்கு முந்தைய தடங்கள். இந்த நூலையே ஒரு புத்தக கடையன்றி ஒரு ஹைவே ஹோட்டலின் கேஷ் கவுண்ட்டரில் இருந்துதான் நான் வாங்கி இருக்கிறேன். கிழக்கு பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரி மாபெரும் முதலீட்டில் இப்படி ஒரு பரிசோதனை ஒன்றில் ஈடுபட்டார். புத்தக கடை மட்டும் என்றல்லாமல் துணிக்கடை, ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள் என பொது ஜனம் கூடும் இடத்தில் எல்லாம் புத்தகம் கிடைக்கும் எனும் நிலையை உருவாக்கினார். எங்கெங்கும் அசோகமித்ரன் வண்ண நிலவன் இவர்களின் நூல்கள் பொது மக்கள் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கும் நிலை ஒன்றை கால் நூற்றாண்டு முன்னர் பத்ரி உருவாக்கினார். தோல்விகரமான முயற்சிதான், ஆனாலும் அப்படி ஒரு பொற்காலத்தை சில ஆண்டுகள் பத்ரி உருவாக்கினார். இதே போல 20 ஆண்டுகள் முன்னர் 180 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை 60 ரூ. இன்று இந்த நூலை இதே தரத்தில் இதே தாளில் இதே அச்சில் இதே எண்ணிக்கையில் பிரதிகள் என கொண்டு வந்தால் அந்த நூலின் விலை 220 ரூ ஆகும்.

அடுத்து நூலின் தலைப்பான ராயர் காபி கிளப். 25 ஆண்டுகள் முன்னர் இணையப் புரட்சி வெடித்த காலத்தில் இப்படி வெவ்வேறு  கிளப் புகள் தோன்றின. உலக அறிவு ஜீவிகள் ஒரே இடத்தில் கூடி அகப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் ஆய்ந்தனர். எல்லாமே கொஞ்ச காலம். ஜனநாய ரீதியாக முட்டாள்கள் இவற்றில் புகுந்து அனைத்தையும் கீழிறக்கி வைக்க, இன்று ஜனநாயக முட்டாள்கள் இயங்கும் முகநூல் மட்டும் எஞ்சி நிற்கிறது. அந்த வகையில் மண் மறைந்த க்ளப் ஒன்றின் அப்படி ஒன்று இங்கே இருந்தது என்பதற்கான ஒரே ஒரு சாட்சியம் இந்த நூல்.

பால்யத்தில் கிரிக்கெட் விளையாட்டை பாதியில் விட்டுவிட்டு சக பாலகர்களுடன் ஓடி சென்று தெரு முனையில் உள்ள வீட்டுக்கு வந்திருக்கும் சினிமாவில் பிரபலமாக இருக்கும் அந்த பாலகனை  பார்த்த சம்பவத்தை ஆசிரியர் ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார். பின்னர் அந்த உலக நாயகன் சினிமாவில் தான் வசனம் எழுதுவோம் என்று இந்த நூல் எழுதும்போது கூட நூலாசிரியர் உத்தேசித்திருக்க மாட்டார்.

20 வருடம் முன்பான தூர தேச விமான பயணங்கள், அதை அளிக்கும் நிறுவனங்கள் உபரியாக அவை அளிக்கும் இம்சைகள், பட்ஜட் விமான பயணம் சார்ந்த கனவுகள் இவற்றை பேசும் கட்டுரைகள் எல்லாம் இன்று வாசிக்க வினோதமாக இருக்கிறது. ஒட்டாண்டி நானே இரண்டு உள்ளூர் விமான பயணங்கள் செய்து விட்டேன். கொரானா அடங்கலுக்குப் பிறகு விமான பயண செலவு எகிறி விட்டதாக, விமான டிக்கட்கு செய்யும் செலவில் ஒரு விமானமே வாங்கி விடலாம் என அடிக்கடி பறக்கும் என் தம்பி சொன்னான்.25 வருடம் முன்னர் தகவல் தொடர்புக்கு பேஜர் ஃபாக்ஸ் போன்ற மண் மறைந்த கற்கால கருவிகளை மனிதர்கள் நம்பி இருந்ததாக இந்த நூல் வழியே அறிய முடிகிறது.

நூலின் முக்கிய அம்சங்களில் ஒன்று யெஸ் பொ தமிழ் இலக்கிய விழா 2004 எனும் விழா குறித்த பதிவு. விழாவில் இரா முருகன் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குறிப்பிட்ட புனைவு ஒன்றை குந்தர் க்ராஸ் உலகுடன் ஒப்பிட்டு பேச, பின்னர் மேடை ஏறும் பிரபல எழுத்தாளர் அது எப்டி சொல்ல போச்சி என்று வெளுத்து வாங்குகிறார். பின்னர் அந்த எழுத்தாளருடனான மாலைத் தேநீர் அரட்டையில் இரா மு அறிகிறார் அந்த ஏழுத்தாளர் இரா மு குறிப்பிட்டு பேசிய  இந்திரா பார்த்தசாரதியின் அந்த நூலை வாசித்திருக்கவே இல்லை. என்னய்யா இது அநியாயம் என மனுஷன் சிணுங்கி இருக்கிறார் ஒரு கட்டுரையில். தீவிர இலக்கியக் களத்தில் ஒரு எழுத்தாளரை குறித்து பேச வேண்டும் என்றால் அவரது நூலை வாசித்திருக்க வேண்டும் என்று சொல்வது ஒரு வகை பாசிசம். ஒரு வகை கலாச்சார பயங்கரவாதம் என்று இந்த 20 வருடத்தில் இரா முருகன் புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன் :)

மொழியால் சம்பவ தேர்வால், அதன் விவரிப்பால் புன்னகை விரவிய இந்த கட்டுரைத் தொகுப்பில் அந்தப் புன்னகையும் வாசிப்பு உத்வேகமும் வண்ணம் மங்காமல் இன்றும் அவ்வாறே நீடிக்கிறது என்பதே இந்த நூலின் பிரதான அழகு.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஇளமையின் துயர்
அடுத்த கட்டுரைதேவதேவன்