கமலாதாஸ் – கடிதங்கள்

மகாத்மா காந்தியும் மாதவிக்குட்டியும் – கே.சி. நாராயணன்

அன்புள்ள ஜெ

மாதவிக்குட்டி (கமலாதாஸ்) பற்றிய கே.சி.நாராயணனின் கட்டுரை மிக அழகாக இருந்தது. ஒரு இலக்கியவிமர்சனக்கட்டுரை படைப்பையும் படைப்பாளியையும் பீராய்ந்து கொன்று கிழிப்பதாக இல்லாமல் அவர்களை உயிருடன் கொண்டு வந்து நிறுத்துவதாக இருக்கவேண்டும். இங்கே படைப்பாளிக்கு ஒன்றும் தெரியாது, எனக்கு கோட்பாடு தெரியும் என்ற பாவனையில் நிகழ்த்தப்படும் அதிகப்பிரசங்கித்தனங்கள்தான் இலக்கியவிமர்சனம் என்ற பேரில் அதிகமும் வெளியாகின்றன. எழுத்தாளன் எப்படி எழுதியிருக்கவேண்டும் என்று கற்பிக்கும் அசட்டுத்தனங்கள், எழுத்தாளன் என்ன எழுதியிருந்தாலும் அதில் சொந்த அரசியலை தேடி எடுக்கும் மழுமட்டைத்தனங்களையே கண்டுகொண்டிருக்கிறோம். (என்றைக்காவது ராஜன் குறை என்ற நபரை பார்த்தால் இந்தக்கட்டுரையை அவர்மேல் கொஞ்சம் தொடும்படி வைக்கவேண்டும். கொஞ்சமாவது நுண்ணுணர்வு அவருக்கு வருகிறதா என்று பார்க்கவேண்டும்)

மாதவிக்குட்டியின் மீறல் அவருடைய குடும்பம், அதன் வழியாக காந்தி, அதற்குமப்பால் இந்துமதம் என்று எப்படி நீள்கிறது என்பதை அழகாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். மாதவிக்குட்டி மீறல் வழியாகவே உருவாகி வந்தவர். அந்த மீறல்தான் கடைசியில் அவர் இந்துமதத்தை துறப்பது வரை சென்றது என இக்கட்டுரை காட்டுகிறது. அந்த மீறலின் தொடக்கமாக இருப்பது சிறுமியாக அவருக்கு அழகின்மேல் இருந்த ஆசைதான் என்பது ஒரு அருமையான நுணுக்கம்.

சிறப்பு

செந்தில்குமார்

அன்புள்ள ஜெ,

கமலாதாஸ் பற்றிய கே.சி.நாராயணனின் கட்டுரை அருமை. அழகிய மணவாளன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருந்தார். நான் பொதுவாக விமர்சனங்கள் படிப்பதில்லை. மலையை கொல்லி எலியைப்பிடிப்பது மாதிரி அந்த சிக்கலான மொழிநடையை படித்து கடைசியில் எந்த அடிப்படை வாசகனும் வாசிக்கும் சல்லிசான அரசியல் கருத்தை வெளியே எடுக்கவேண்டியிருக்கும் என்பதே என் அனுபவம். இக்கட்டுரை மாதவிக்குட்டியை மிக அணுக்கமானவராக ஆக்கிவிட்டது. அருமையான வாசிப்பனுபவம்

பாஸ்கர் எம்

முந்தைய கட்டுரைமணிநீலம்
அடுத்த கட்டுரைஅடிப்படைவாதம், கடிதம்