கவி சதீஷ்குமார் சீனிவாசன் குமரகுருபரன் விருது விழா நிகழ்வு ஏற்பாடுகள் துவங்கும்போதே அதன் ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இளம் கவிக்கு அந்த விருது அவர் தன்னை சுடர் பொருத்திக்கொண்ட கவியான மனுஷ்யபுத்திரன் கையால் அளிக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினேன். நீங்கள் இருவரும் பரஸ்பரம் மன வருத்தம் கொண்டிருந்ததாக நான் நம்பி இருந்ததால் இதை உங்கள் வசம் முன் வைக்கவில்லை.
விழாவில் கவி மனுஷ்ய புத்திரன் இருப்பு என்பது எனக்கு மிகுந்த உவகை அளித்தது. மனுஷ்ய புத்ரனுக்கும் எனக்குமான உறவு எப்போதுமே ஹேட் அண்ட் லவ் ஆல் ஆன ஒன்றாகவே இருந்திருக்கிறது. நீராலானது போன்ற கவித்தொகுதி ஒன்றை அளித்தவரை எப்படி லவ் பண்ணாமல் இருக்க முடியும். உண்மையில் மனுஷ்ய புத்திரன் கட்சி அரசியலில் நுழைந்ததுதான் எனக்கு பிடிக்கவே இல்லை. அவரில் எழும் தார்மீகம் நியாய சீற்றம் இனி கட்சி அரசியல் கறை படிந்த ஒன்றாக மட்டுமே பார்க்கப்படும். உண்மையில் அதுதான் எனக்கு பிடிக்கவில்லை. அந்த ஆதங்கமே அவர் மீதான என் எதிர்வினைகளுக்கு மூலமேயன்றி அவர் ஜெயமோகன் உடன் சண்டை போடுகிறார் என்பதல்ல.
மற்றபடி இலக்கிய செயல்பாடுகளில் பொது வாழ்வில் தினசரி நடைமுறைகளில் மனுஷ்ய புத்திரன் கொண்டிருக்கும் i will எனும் மூர்க்கம் அதன் ஆராதகன் நான்.
விழாவில் அவர் குமரகுருபரனை சந்தித்த தருணத்தை மீண்டும் நினைவு கூர்ந்தார். பல முறை அவர் சொல்லி கேட்டதுதான் என்றாலும் எப்போதும் மனம் கசியாது அதை நான் கேட்டது இல்லை. நானும் வாழ்வில் அன்றைய மனுஷ்ய புத்திரன் போல அமரந்திருந்த தருணங்கள் உண்டு. குமர குருபரன் போல அக்கணம் என்னை வந்து மீட்டவர்கள் உண்டு. என் நல் விதி அவர்களை நான் இழக்கவில்லை. மனுஷ்ய புத்ரனுக்கும் அந்த நல் விதி அமைந்திருக்கலாம். விதி அவரது நினைவில் மட்டும் குமரனை வாழ விட்டுவிட்டது.
விடை பெறும் முன்பாக கவி மனுஷ்ய புத்திரனை அறிமுகம் செய்து கொண்டேன். அவரது எப்போதும் வாழும் கோடை நூலில் அவரது கையெழுத்து பெற்றுக்கொண்டேன். கையெழுத்து போடும் முன்பாக எனக்கென ஏதேனும் எழுதி கையெழுத்திட்டு தர கோரினேன். இவ்ளோ எழுதிருக்கேன் எல்லாம் உங்களுக்கு தானே அப்பறம் என்ன என்றார். மேலதிக சொற்கள் என்பது மேலதிக பிரியமன்றோ.
உங்க பேர் என்ன என்று கேட்டார். சொன்னேன். திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார்.
“நீங்கதான் கடலூர் சீனுவா?”
“ஆமா சார். அடிக்க ஏதும் போறீங்களா”
சிரித்தபடி “இல்லல்ல இதுவரைக்கும் எழுத்துல மட்டும்தான் உங்களை பாத்திருக்கேன் இப்பதான் நேர்ல பாக்குறேன் அதான்” என்றார்.
என் பெயர் கீழே “தீராத அன்புடன்” என்று குறிப்பிட்டு கையெழுதிட்டுத் தந்தார்.
தீராத அன்பு… பெற்றுக்கொள்ள இடமிருக்கிறதா என்னிடம்? பேணிக்கொள்ளத் தெரியுமா எனக்கு? தெரியவில்லை கவிகள் மீதான காதல்தான் அதற்கு வழி காட்ட வேண்டும்.
கடலூர் சீனு