வெண்முரசின் அண்மைக்கால வாசகர்கள் பலர் அதை வாசித்தவர்கள் அல்ல, கேட்டவர்கள். வாசிப்பு என்பது சற்று அகவை முதிர்ந்தவர்களுக்கு கண்களை வேலைவாங்குவதாக உள்ளது. அவர்களுக்கு கேட்பதே உகந்ததாக உள்ளது. அவர்களில் பலர் வெண்முரசை ஒலிவடிவில் கேட்ட்க்ருக்கிறார்கள்.
நண்பர் இலக்கிய ஒலி சிவக்குமார் வெண்முரசு பெரும்பகுதியை வாசித்து ஒலிநூலாக யூடியூபில் ஏற்றியிருக்கிறார். மாதங்கி வாசிக்கும் கதைகளும் வாழ்வும் என்னும் யுடியூப் சானலிலும் வெண்முரசு ஒலிவடிவில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பொதுவாக வாசிப்புப் பழக்கமில்லாதவர்கள் பலர் கதைகளை கேட்டு அந்த உலகுக்குள் நுழைந்தபின் நூல்களை வாங்கி வாசிப்பதுமுண்டு. மகாபாரதம் கதைசொல்லல் வழியாக நிலைகொண்ட படைப்பு. ஆகவே அதை கேட்பது உகந்ததே.
மகாபாரதத்தை ஒட்டிய வெண்முரசு ஒட்டுமொத்தமாகவே நம் புராண உலகம், நம் மதக்கொள்கைகள் ஆகியவற்றைச் சார்ந்து ஒரு தெளிவை அளிப்பதாகும். அதை இளையதலைமுறையினர் வாசிக்கவேண்டும். பலருக்கு தமிழில் மொழிப்பழக்கம் குறைவென்பதனால் வாசிப்பது எளிதாக இல்லை. அவர்களுக்கும் வெண்முரசு ஒலிவடிவங்கள் உதவக்கூடும்.
வெண்முரசு முழுமையாகவே jeyamohan.in தளத்தில் உள்ளது. முழுமையாகவே இணையத்தில்https://venmurasu.in/என்னும் தளத்தில் உள்ளது. வெண்முரசு நாவல்களை மின்னூல் பக்கங்களை வாசித்துக் காட்டும் மென்பொருளை நிறுவிக்கொண்டால் ஒலிவடிவில் கேட்கமுடியும்.
அனைவருக்கும் ஏதேனும் வடிவில் வெண்முரசு உடனிருக்கட்டும்