வீழ்ச்சியின் இயக்கவியல்

கன்யாகுமரி வாங்க

கன்யாகுமரி மின்னூல் வாங்க

மனம் சார்ந்த நம் நிலைப்பாடுகளில் நாம் தருக்கி நிமிர்ந்து நிறைவுக் கொள்வது அத்தனை எளிதல்ல.ஏனெனில் அது சூழலும் தருணங்களும் மெய்யுணர்வுகளும் நின்றாடும் சூட்சும விதியின் களம்.எத்தனை இனிதாக அன்பு நிறைந்திருக்கிறது நம் மனம் என சற்றே அகங்காரம் கொண்டிருக்கும் அந்த ஒற்றை தருணத்து பலவீனத்தில் கூட அதன் நேர் எதிரான கீழ்மைகளை நம் மனம் கட்டமைக்க வாய்ப்புள்ளது.

அத்தனை விந்தையும் ஆழமும் கொண்டதல்லவா நம் மனம்?நன்மையும் தீமையும் அன்றாட எதார்த்தங்களின் ஆடல்களில் இன்றியமையாத மாறுதல்கள் என எந்த தர்க்கங்களுக்கும் உட்படாத மனம் கொண்டவர்கள் மட்டுமே குற்றவுணர்வு கொண்டு வீழும் வாய்ப்பற்றவர்கள்.மாறாக அன்பு சார்ந்த வாழ்வியல் நம்பிக்கைகளின் மீதும் மெய்யுணர்வுகளின் அழகியல்களின் மீதும் தங்கள் அது நாள் வரையான வாழ்வை மிகுந்த நம்பிக்கையோடு வாழ்ந்தவர்களுக்கு அவர்கள் மனம் அவர்களுக்குள் நிகழ்த்தி ஆடும் கீழ்மைகளின் எண்ணவோட்டங்கள் கிட்டதட்ட மனப்பிறழ்வுக்கு நிகரான வீரியம் கொண்டது.அதிலிருந்து மீள அவர்கள் மீண்டும் மீண்டும் தங்களின் சிறந்த ஆற்றலை பொதுவெளியில் முன் வைக்கிறார்கள்.அதன் வழி தங்களை தங்களின் கீழ்மைகளிலிருந்து மீட்க முயல்கிறார்கள் என்றே தோன்றுகிறது.அது எத்தனை அதிதீவிர உளநெருக்கடி என்று உணர்ந்தவர்களுக்கே அந்த ஆழமான கருவெளியின் இருள் தெரியும்.

ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவல் மானுட துக்கங்களையும் வலியையும் முன்னிறுத்தி காலம் அதை சார்ந்தவர்களின் மீட்சிக்கும் வீழ்ச்சிக்கும் எங்ஙனம் சான்றாகிறது என்பதாக விரிகிறது.மீளமுடியாத ஓர் கடும் துக்கம் அதனை சார்ந்த ஒருவரை சாவின் விளிம்பு வரை கொண்டு சென்று இறுதியாக மெய்யான மன தெளிவினை பரிசளிக்கிறது. மாறாக அதுவே பிறிதொருவரை கடும் கசப்பையும் வஞ்சத்தையும் கைக்கொள்ள செய்து கொடும் கீழ்மைகளின் சேற்றில் அவன் அகத்தினை புதைத்து அழிக்கிறது.

ரவி புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். அவனது முதல் படைப்பானது மலையாளத்தில் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.

அதற்கு பிறகான அவனது திரைப்படங்கள் தோல்வி வெற்றி என்று‌ ஏற்றத்தாழ்வுகளில் சிக்கி தடுமாற இப்போது தொடர்ந்து திரைத்துறையில் நிலைப்பெற ஒரு சிறந்த வெற்றிப் படத்தைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் ரவி கதை விவாதத்திற்கு கன்னியாகுமரி வருகிறான்.சிறு வயதிலிருந்து கன்னியாகுமரி அவன் மனம் கவர்ந்த இடமாகவிருக்கிறது.கன்னியாகுமரி தேவியின் மேல் பெரும்பற்று கொண்டிருக்கும் ரவி அவளில் அவனுணர்ந்த உக்கிரமான காத்திருப்பின் வழி வெளிப்படும் கன்னிமையை தன் திரைக்கதையின் கருவாக்க விரும்புகிறான்.அவனோடு உடன் வேணுகோபால் என்னும் கதாசிரியனும் பிரவீணா என்னும் துணை நடிகையும் இருக்கின்றனர்.கன்னியாகுமரியில் ரவி தன் முன்னாள் காதலியை பார்க்க நேர்கிறது.கடந்தகாலத்தில் இருவருக்கும் இடையேயான காதல் ஒரு‌ மிகக் துயரமான சம்பவத்தின்‌ விளைவாக முடிவுக்கு வருகிறது.அதில் பாதிக்கப்பட்ட விமலாவை கருணையோடு அரவணைத்திருக்க வேண்டிய‌ ரவி தன் இயலாமையின் விளைவாக‌ மாறா வஞ்சம் கொண்டு அவளை குற்றம்சாட்டி பிரிகிறான்.இப்போதும் விமலாவை வீழ்த்துவதை பற்றியே சிந்திக்கும் அவன் மனம் அவளது மிக இயல்பான முதிர்ந்த மன தெளிவின்‌ முன் குறுகி நிற்கிறது.

விமலாவுக்கும் பிரவீணாவுக்கும்‌ இடையான உரையாடல்களின் முடிவில் கடும் மன கொந்தளிப்பிற்கு உள்ளாகும்‌ ரவி அவன் அகப்போராட்டத்தில் அவளை வீழ்த்தும் இறுதி முயற்சியாக மிகக் கீழ்மையான ஒரு செயலுக்கு தூண்டுக்கோலாகிறான்.ஆனால் விமலா தன்‌ இயல்பான தாய்மை பண்பால் அதிலிருந்து காயப்படாமல் மீண்டு அவன் அகக் கீழ்மையை‌ மீண்டும்‌ வீழ்த்துகிறாள்.அவன் கீழ்மைகள் அனைத்தையும்‌ தெளிதென உணரும் பிரவீணா அவனால் மீண்டும் ‌ஒரு‌ உன்னதமான திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பில்லை என்றுரைத்து கதாசிரியன்‌ வேணுவோடு விலகிச் செல்கிறாள்.அனைவராலும் தனித்து‌ விடப்பட்டு தன்னை‌ உணரும் ரவியை அவனுக்கு பிரியமான கன்னியாகுமரி தேவியும்‌ கைவிடுவதான ஒரு‌ மாயத்தோற்றத்தோடு நாவல் முடிகிறது.

ஜெயமோகனின் எழுத்துக்கள் அறம்‌ தொகுப்பில் இருந்து தான் எனக்கு அறிமுகம்.அது முழுக்க மானுட‌த்தின் அரிதான மேன்மைகளையும் அறவுணர்ச்சியையும் முன்வைத்தது.கன்னியாகுமரி அதன் நேரெதிர் படைப்பு.யுகம்யுகமாய் தன் காதலுக்காக காத்திருக்கும் கன்னியாகுமரி தேவியின் உக்கிரமான‌ காத்திருப்பின் வலிமையையும்‌ தனிமையையும் ஒரு‌ சிறுவனாக இருக்கும் போதே உணரும்‌ கலைஞனான நாயகன் தான் பின்னாளில் தன்னை‌ முழுவதுமாக நெகிழ்த்திக் கரைத்த முதல் காதலை தன் இயலாமையின் வழி விளைந்து கடும் விஷத்தினை கொண்டு‌ கொல்கிறான்.

மிகச்சிறந்த கலைப்படைப்பினை படைக்கும்‌ தேர்ந்த கலைஞனான அவனே தான் தன்னை தாண்டி‌ச் செல்லும் ஒவ்வொரு பெண்ணின் அறிவாற்றலையும் மன முதிர்ச்சியையும் ஏற்க முடியாது அவர்களிடம் தீராத வஞ்சம் கொள்கிறான்.கிட்டத்தட்ட‌ ஒரு மனதின் இரு வேறு எல்லைகளின் ஆடல்கள் இந்த நாவல்.கன்னியாகுமரி தேவியை உபாசிக்கும் அதே மனிதன் தான் தன் வாழ்வில் வரும் அத்தனை‌ தேவிகளையும்‌ வேசிகளாக நினைத்து நடத்துகிறான்.இந்த முரண்பாடுகளையும் மனதின் நுணுக்கமான பிறழ்வுகளையும் இந்த நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது.விஷ்ணுப்புரம் பதிப்பகம் ‌வெளியீட்டின் முன்னுரை ஜெயமோகன் அவர்களின் சில கூர்ந்த,கவனத்தில் நிற்கக் கூடிய மிகச் சிறந்த வரிகளை உள்ளடக்கியுள்ளது.

திவ்யா சுகுமார்

கன்னியின் காலடியில்

முந்தைய கட்டுரைதூரன் விருது- இசை நிகழ்வு
அடுத்த கட்டுரைகாதல், மீண்டும்