குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா. உரைகள்
இளம் படைப்பாளிகள் அரங்கம்: உரைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

நான் தீவிரமாக போகன், அகரமுதல்வன், மோகனரங்கன், இசை, மதார் ஆனந்த குமார் என்று தமிழ்க் கவிதைகளைத் தொடர்ந்து  படிக்க துவங்கி சில மாதங்கள் ஆகி இருக்கையில்தான் சதீஷ் குமார் ஸ்ரீனிவாசனுக்கு குமரகுருபரன் விருது என அறிவிப்பு வந்தது.

கவிதைகளை  உக்கிரமாக வாசிக்க ஒரு காரணம் இருந்தது. கல்லூரி மலரொன்றில் நான் ஆசிரியராக இருந்தேன். அதில் பிரசுரிக்க வேண்டிய மாணவர்களின் கவிதைகள் என் மேசைக்கு வரும். சில மாதங்களுக்கு முன்பு அப்படி வந்திருந்த சுமார் 70 கவிதைகளில் 10 கவிதைகளை தேர்ந்தெடுத்து மலரில் வெளியிட வேண்டி ஒவ்வொன்றாக வாசித்துக்கொண்டிருந்தேன் எதுவுமே புதிதில்லை எதுவுமே கவிதைகளுமில்லை அவற்றின் பேசுபொருள் காதலை தவிர வேறு ஏதுமில்லை, எவற்றையுமே பிரசுரிக்கவும் முடியாது எனினும் சில வருடங்களாக அவற்றில் சிலவற்றை மலரில் வெளியிட்டோம்.

இந்த முறை வந்திருந்தவற்றில்  ஒரு கவிதை :

//கண்ணே கார்த்திகா
உன்னை காதலித்த பாவத்திற்கு
நான் தற்கொலை செய்து கொள்கிறேன்
என் கல்லறை இருக்கும் கடற்கரைக்கு
நீ வந்து கண்ணீர் விடாதே ஏனென்றால்
கண்ணீரும் உப்புத்தான்
கடல்நீரும் உப்புத்தான்
உன்னை நான் காதலித்தது
தப்புத்தான் தப்புத்தான் தப்புத்தான்//

இதை   வாசித்ததும் முதல் தளத்திலிருக்கும்  என் துறையிலிருந்து இறங்கி சென்று முதல்வரின் அறைக்கும் முன் வெகுநெரம் காத்திருந்து அவரை சந்தித்து என்னை அம்மலரின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவிக்கும்படி மன்றாடினேன். ’’ஏன் மேடம் ஏதாவது பர்சனல் காரணமா’’ என்றார். அந்த ’’தப்புத்தான் தப்புத்தான்’’ கவிதையை மனதில் மீண்டும் கொண்டு வந்து ’’ஆமாம் பர்சனல் காரணம்தான்’’ என்றேன், விடுவிக்கப்பட்டு விட்டேன்.

அப்படியான கவிதைகளை பல வருடங்கள் தொடர்ந்து வாசித்து, அவற்றில் சிலவற்றை பிரசுரமும் செய்ததற்கான பிழையீடாக இப்படி நல்ல கவிதைகளாக  தொடர்ந்து வாசிக்க துவங்கியிருந்தேன். என்றேனும் ஒரு நல்ல கவிதை எழுதிவிடனும் என்னும் கொதியும் இருக்கிறது.

தளத்தில்  அறிவிப்பு வந்ததில் இருந்து சதீஷின் கவிதைகளையும் வாசிக்க துவங்கினேன் அவற்றை குறித்து கடிதம் எழுதும் எண்ணம் வரும்போதெல்லாம் அவரின் மற்றுமொரு கவிதையை வாசித்து அதில் ஆழ்ந்து போய்விடுவதுண்டு.

மற்ற யாரைக் காட்டிலும் இப்படியான நல்ல கவிதைகள் எனக்களிக்கும் ஆசுவாசம்  மிகப்பெரிது என்பதை நம்ப மறுப்பவர்களுக்கு  கல்லூரி ஆண்டுமலர்களின் சில பிரதிகளை வாசிக்க தருகிறேன்.

சதீஷுக்கு இவ்விருது மிகப் பொருத்தம்.  சதீஷின் சில கவிதைகளை  வாசித்தபின்பு அந்த நாளே அக்கவிதையால் ஆகிவிட்டதுண்டு, இன்னும் சில கவிதைகள் பெரிதும் தொந்தரவு செய்திருக்கின்றன.

கண் கொண்டு காண முடியாத வெயிலில்
 நம் சந்திப்பின் கானல் தடங்கள்

*

விழிப்புக்களில் சதா புரளும்
என் பிறவிகளை வீணடிக்காமல் 

*

இரவு வந்து கவிந்த குளம்மதிரிதான்
இந்த கணத்தில் நீ தோற்றமளிக்கிறாய்

*

ஒரு நீதி போல உன்னை காதலிக்கிறேன்
எல்லா அநீதிகளிலிருந்தும் என்னை காப்பாற்றும்
ஒரு தீரா சடங்கு போல

போன்ற கவிதைகளும், அவற்றில் இருக்கும் ’’இருளார்ந்த குளிர்மை’’  போன்ற  சொற்களும் வெயிலின் உப்பு படிந்த உடலை குறித்த கவிதைகளும் மிக கனம் கொண்டிருந்தன. கவிதைகளின்  எடை தாளமுடியாத சில நாட்களில் ’’தம்பி சதீஷ் கொஞ்சம் சும்மா இரேன்’’ என்று அதட்டி இருக்கிறேன்.

சதீஷ் கவிதைகளின் கட்டமைப்பில் இருந்த தளர்வுதான் என்னை கவர்ந்தது. மிக இயல்பாகவும் மிக தளர்வாகவும் இருந்தன அவரது கவிதைகள். கூடவே துல்லியமும். மலர் மஞ்சரிகளில் சில அடர்த்தியாக அரும்புகள் ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு, மலருகையில் மிக நெருங்கி அடர்ந்த பூக்களின் கூட்டமாக இருக்கும் அவையும் அழகுதான் எனினும் தளர்வாக, நல்ல இடைவெளிவிட்டு சுதந்திரமாக சிறு மலர்கள் அமைந்திருக்கும் மஞ்சரிகள் எனக்கு எப்போதுமே ஆசுவாசம் அளிக்கும். அச்சிறு மலர்கள் எந்த அழுத்தமுமின்றி நன்கு சுவாசித்து கொண்டு இருக்கும் எனத் தோன்றும்.

அப்படி சதீஷின் கவிதைகளில் இருந்த தளர்வு எனக்கு பெரும் ஆசுவாசம் அளித்தது. சொற்கள் ஒன்றுடன் ஒன்று முறுக்கிக்கொண்டு இறுக்கமாக இணைந்து கொண்டிருக்காமல் தளர்வாய் இயல்பாய் அப்படியே எங்கிருந்தோ வந்து அங்கு விழுந்து சரியாக பொருந்திப்போவது போல கவிதைகள் அமைந்திருந்தது.

இதுவரை குமரகுருபரன் விழாவுக்கு வந்ததில்லை, இம்முறை செல்ல முடிவெடுத்து ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்தேன்.

எனக்கு இப்போது கல்லூரி விடுமுறை காலம் என்பதால் வெள்ளியன்று சென்னை புறப்பட்டேன் வந்தே பாரத் ரயில் அனுபவம் எப்படி இருக்கும் என்று பார்க்க அதில் வந்தேன். இந்திய ரயில்வேதானா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ளுமளவுக்கு சுத்தமாக சுகாதாரமாக இருந்தது. நல்ல சுவையான உணவும் அளித்தார்கள்.

உடன் பயணித்த  குடும்பத்தின்  சொல் திருந்தா சிறுமி ஒருத்தி அவளது பெற்றோர்களிடம் ’’நாம போகப் போற ஊழ் எப்போ வரும்’’ என்று தொடர்ந்து கேட்ட படி இருந்தாள். ரயில் எதாவது ஸ்டேஷனில் நிற்கையில் ”அம்மா, நம்ம ஊழ் வந்துருச்சா, இதான் நம்ம ஊழா’’ என்று கேட்டு எனக்கு பீதி உண்டாக்கினா. கடந்த வார ரயில் விபத்தை நினைவூட்டிக்கொண்டே இருந்தாள் அச்சிறுமி. எப்படியோ நான் ஊழை சந்திக்காமல் தப்பித்து சென்னை வந்து சேர்ந்தேன்.

சென்னை வெயிலில் நெற்றியிலிருந்து துளித்துளியாக வியர்வை சொட்டியது சதீஷ் சொல்லியிருந்தது போல ’’வெயிலொரு பிரிவுணர்ச்சி போல எங்கும் பரவி இருந்தது’’ அகரமுதல்வன் மற்றும் அ.வெண்ணிலா வீடுகளில் தங்கி இருந்துவிட்டு காலை ஒரு கார் அமர்த்தி கவிக்கோ மன்றம் வந்தேன். காளி, சிவாத்மா இன்னும் சில நண்பர்கள் இணைந்து பேனர் கட்டி கொண்டிருந்தார்கள். கவிதா, ஜாஜா, குவிஸ் செந்தில், மீனா, குருதிப்பலி செந்தில், ஆவடி தேவி, சுபா, கதிர், அகரமுதல்வன், சக்திவேல் என்று விஷ்ணுபுரம் குடும்ப நண்பர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து அரங்கு நிறைந்தது. ’’குடும்பத்தில் எத்தி’’ என்னும் என் வழக்கமான மகிழ்வு வந்தது.

கல்பனா ஜெயகாந்தன், க சிவா, மற்றும் வைரவன் ஆகியோரின் இலக்கிய அமர்வுகள் சிறப்பாக இருந்தன. காளிபிரசாத்தும், கவிதாவும், விக்னேஷும் முழு நாளின் நிகழ்ச்சிகளையும் சிறப்பாக தொகுத்து வழங்கினர்.

கே சி நாராயணன் சாரின் அமர்வு மிக சிறப்பு. அவரது மலையாளம்  சங்கீதம் போல் இனிமையாக இருந்தது. அவருடன் அமர்வு முடிந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்

மாலை  சரியான  சமயத்துக்கு விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது.கே.சி. நாராயணன் சார் விழா துவங்கும் முன் என்னிடம் மேடையில் இருந்த போஸ்டரை காட்டி அதிலிருந்த ’’சதீஷ்குமார் குமரகுருபரன் விஷ்ணுபுரம் போன்ற சொற்களை உச்சரிக்க சொல்லிக்கேட்டு அவற்றை தமிழுக்கிணையான சொற்களில் மலையாளத்தில் எழுதிக்கொண்டார்.

பின்னர் அதை மேடையில் மிக்சரியான உச்சரிப்புடன்  வாசித்தார். அவர் எளிதாக அவற்றை  ஆங்கிலத்தில் எழுதி வாசித்திருக்கலாம், ஆனாலும் தமிழ் நிகழ்ச்சியொன்றில் தமிழில்தான் அவற்றை சொல்ல வேண்டுமென்னும் அவரின் அந்த வாசி எனக்கு பெரும் வியப்பளித்தது. அந்த ஆர்வம்தான் அவரை மலையாள இலக்கியத்தில் பெரும்படைப்புகளை படைக்க செய்திருக்கிறது.

மனுஷ்யபுத்திரன் உரையும் சிறப்பு. குமரகுருபரன் குறித்த  அவரது நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

நீங்கள் ஒவ்வொரு உரையிலும் ஒரு புதிய விஷயத்தை சொல்லி இருப்பீர்கள். இம்முறை nightmare on the elm street திரைப்படங்களில் வரும் கனவை நிஜமென்று நம்பும் பயந்தவனை கொல்லும் பேய்களையும், இல்லை நீ என் கனவில் இருக்கிறாய் என சொன்னதும் விலகிப்போகும் பேய்களையும் உருவகமாக சொன்னது மிக சிறப்பாகவும் புதியதாகவும் இருந்தது.

புகைப்படங்களில் இருந்ததை காட்டிலும் நேரில் இளையவராக இருந்த சதீஷ்குமார் ஸ்ரீனிவாசன், ஏற்புரையில் மிக இயல்பாக நண்பர்களிடம் பேசும் தொனியில் பேசினார்.

உங்களுக்கு ’’நன்றியை காட்டிலும் மேலான சொல்லொன்று கிடைத்தால் அதை சொல்லுவேன்’’  என்னும் அந்த ஒற்றை வரியில் அடங்கி விட்டிருந்தது அவரின் ஏற்புரை.

மேடையில் அமர்ந்தபடியே அரங்கில் அமர்ந்திருந்த நண்பர்களிடம் கண்களால் உரையாடிக்கொண்டிருந்தது, நீங்கள் மலையாளத்தில் மொழிமாற்றிய அவரது  சில கவிதைகளை கே சி சார் மேடையில் வாசிக்கையில் கண்களை மலர்த்தி கேட்டுக்கொண்டிருந்துவிட்டு மனுஷ்யபுத்திரனிடம் தானெழுதியதை காட்டிலும் அந்த மலையாள கவிதைகளே நன்றாக இருப்பதாக சொல்வதுமாக தனக்குள்ளிருந்த  சிறுவனை அவர் இன்னும் இழக்காமலிருந்தார். அச்சிறுவனை அவர் ஒருபோதும் இழக்காமலிருக்கட்டும்.

கே சி சாரிடம் விடைபெற்றுக் கொள்ளுகையில் ’’மேடம் ஹேப்பி அல்லே’’ என்றார் ’’ஆம்’’ என்றேன் ’’அது மதி’’ என்றார். அது எங்கள் எல்லாருக்குமான ஆசியென்றெடுத்துக் கொண்டேன்.

நிகழ்விலிருந்து பிரிய மனமின்றி அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு குளிரூட்டப்பட்டிருந்த அவ்வரங்கிலிருந்து வெளியே வந்தேன். சதீஷ்குமார் அனைவருக்கும் ஒரு கீற்று அரிந்து கொடுத்திருந்த வெயில் முதத்தில் அறைந்தது.

கவிக்கோ அரங்கின் வாசலில் ஒரு மஞ்சாடி மரத்தின் பவளம்பொன்ற சிவப்பு விதைகளை நிகழ்வின் நினைவுகளாக வைத்துக்கொள்ள சேகரித்துக் கொண்டேன். இரவு ரயிலுக்கு புத்தகக்கடை செந்தில் கொண்டு வந்து விட்டார்,

காலை வீட்டுக்கு வந்த போது முந்தைய நாளின் சிறுமழையில் வாசல் நனைந்து சில்லென்றிருந்தது, விஷ்ணுபுரம் விழாக்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது என்பது  வீட்டிலிருந்து வீட்டுக்கு வருவது போலத்தான்.

மிக்க அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைரஸ்ஸல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுருவிக்கரம்பை வேலு