சதீஷ்குமார் சீனிவாசன்- 13 கவிதைகள்

வந்துற்ற இரவு

இரவு வந்து கவிந்த
குளம் மாதிரிதான்
இந்த கணத்தில் நீ
தோற்றமளிக்கிறாய்
எனக்கு எதைப்பற்றியும் தெரியாது
உன் இருளார்ந்த குளிர்மையில்
என்னை அனுமதி
அறிதலிலிருந்து என்னை விடுவி

*

சூரியன் தீரும் காத்திருப்பு

ஒரு நிராகரிப்புபோல
கண்கொண்டு காணமுடியாத வெயில்
இத்தனை அனலுக்குப்பிறகும்
நீ மனமிறங்கவில்லை
சூரியன் தீரவா காத்திருக்கிறாய்
கண்கொண்டு காணமுடியாத
வெயிலில்
நம் சந்திப்பின் கானல் தடங்கள்

*

என் இளமைபோல உன்னை விரும்புகிறேன்

என் இளமைபோல
உன்னை விரும்புகிறேன்
சதா களிப்பை வேண்டும்
தெய்வம் என் இளமை
என் காமம் போல
உன்னை நினைத்துக்கொள்கிறேன்
ஒருபோதும் அணையாத சுடரென
தகித்து அலைய
ஒரு நீதிபோல
உன்னை காதலிக்கிறேன்
எல்லா அநீதிகளிலிருந்தும்
என்னைக் காப்பாற்றும்
ஒரு தீரா சடங்குபோல

*

உவர்ப்பின் கோடை

இந்தக் கோடையில்
ரொம்ப உப்பாகிவிட்டது
உன் உடல்
எங்கு தீண்டினாலும் உப்பாயிருந்தாய்
நீ தீர்வதாக இல்லை
உவர்ப்பும் தீராது பெருகுகிறது
இந்தக் கோடை செய்த
சில நன்மைகள்
உன் உடலை உப்பாக்கியதும்
நானுன் அருகிருந்ததும்.

*

ஔிகளின் நடனத்தில்

இன்றுதான் கண்டேன்
நெருப்புகள் சாம்பலாவதை
வழிநெடுக ஔிகளின் நடனத்தில்
லயித்த பொழுதுகளை
இழுத்துவருகிறேன்
ஞாபக வெளிக்கு
நான் நம்பியிருந்தேன்
இந்த ஔிகளின் பாதைகளை
நான் கதகதப்பை விரும்பி
வேறெங்கும் செல்லாதிருந்தேன்
யாருக்காகவும் அல்ல
எனக்காக மட்டுமே
எல்லாவிதத்திலும்
தவிர்த்து நகர்ந்தேன் காணக்கூடாதென
ஆயினும்
இன்று கண்டேன்
நெருப்புகள் சாம்பலாவதை

*

நீர்கொண்ட மனது

காற்று இன்று வெயிலால்
நிறைந்திருந்தது
துண்டு துண்டாக
அவ்வளவு வெயில்
உயிரில் அத்தனை தாகம்
அருகில் நீரில்லை
நீர்கொண்ட மனதில்லை
வெயிலின் ஒரு துண்டை அருந்தி
இந்த நாளின் தாகத்தை முடித்து வைத்தேன்

*

இன்றென் வழிகள்

யாரோ பாதியில் துப்பிய விக்ஸ் மிட்டாயில்
இன்று சில எறும்புகள் மொய்ப்பதை பார்த்தேன்
சற்று வெயில் குறைவான
சாலையோரத்தில்
அந்த இனிப்பிருந்தது
அந்த எறும்புகள் இருந்தன
எறும்புகளுக்கும் எனக்கும்
எந்த தொடர்பும் இல்லை
ஆனால்
எறும்புகள் போலத்தான்
அனுமதிக்கப்பட்டிருந்தேன்
காதலின் பாதி இனிப்பில்
காமத்தின் பாதி இனிப்பில்
அமைதிகளின் பாதி இனிப்பில்
நீதியின் பாதி இனிப்பில்
உயிரின் பாதி இனிப்பில்
அனுமதிக்கப்பட்டிருந்தேன்
மேலும்
யார் துப்பிய இனிப்போ இந்நாள்
வேறு மார்க்கங்களின்றி
அதில் மொய்த்தன என் எறும்புகள்

*

சாரமற்ற அந்தியில்

சாரமற்ற மனது வாய்த்தபோது
மிகவும் குடிக்கத்தொடங்கியிருந்தேன்
மறதி எனக்கு உதவவில்லை
மயக்கம் போதுமானதாக இல்லை
நினைக்க நினைக்க அப்படியொரு
வேதனையில் துடித்தேன்
ஏன் என
இன்னொரு கோப்பை
நிரப்பப் படுகிறது
மயக்கம் இல்லை
மறதி இல்லை
வெயில் பொழிந்த அந்தியில்
பாதி உணர்வுடன்
வீடு திரும்புகிறேன்
வாவென ஒரு குரல் இல்லை
அதன் பிறகுதான்
நான் என்
பிரார்த்தனைகளை நிறுத்திக்கொண்டேன்
சாரமற்ற அந்தி
மயக்கமற்று கவிந்தது

*

நகர்கிற குரல்

காற்று அமைதியை
விரும்புவதாக இல்லை
எதுவோ சதா படபடக்கிறது
நாமிருந்தோம்
காற்றில்
படபடப்பில்
அமைதி அமைதி என்றொரு குரல்
அமைதி வெகுதூரம் நகர்கிறது

*

பாழ் நதி

எனதிந்த மாயங்கள் நீங்க
நீதான் ஒரே வழி
எப்படியாவது வா
வந்தவுடன் திரும்பியும் செல்
எனது மாயங்களில்
நீ
ஒரு மீன்
என் வெட்பங்களின் மனது
பாழ்பட்ட நதி

*

தாபங்களின் அந்தி

இன்று வந்திருந்த அந்திக்கு
உன் சருமத்தின் நிறம்
மணம் கூட உன்னுடையதுபோலத்தான்
நாமெங்கோ தூரங்களில்
வழிதவறியும்விட்டோம்
அந்தியே
அவளுக்கும்
இதை ஞாபகமுட்டேன்
இந்த தாபத்தின் அந்தியை
ஞாபகமூட்டேன்

*

பலர் கொய்த மலர்

நான் யாருடைய மலர்
இப்படி வாடிப்போக
நறுமணங்கள் மறந்துபோய்விட்டன
வேர்களின் மணமாவது
எஞ்சியிருக்க வேண்டும்
நான் பூத்தேன் ஒரு வேரில்
சதா பிடுங்கி நடுகிறார்கள்
எனைக் கைகொள்ளும் கரங்கள்
மாறிக்கொண்டே இருந்தன
கரங்களின் வாசனைகளில்
பிறழ்ந்தும் போனேன்
யாருடைய மலரோ
இப்புவி
இவ்வானம்
வாடிப்போய்
நறுமணங்கள் மறக்க

*

நிழலை வெட்டுகிறார்கள்

நூறுவயதான அந்த மரத்தை
மூன்று நாட்களில்
பகுதி பகுதியாக வெட்டி முடித்திருந்தார்கள்
அதன் பிறகு
உருவாகியிருந்தது ஒரு வெட்டவெளி
அதிலிருந்து
நீக்கமற நிறைந்திருந்திருந்த வானை காண முடிந்தது
வெயில் திரைகளற்று விழுந்தது
முன்பெல்லாம்
நிழலுக்கொதுங்கும் உயிர்களின் இடமது
அந்த இடத்தில்
இவ்வுயிர்களின் பொருட்டு
மரம் தன் நிழலையாவது வெட்டுப்படாமல் காப்பாற்றியிருந்திருக்க வேண்டும்
ஆனால்
வழியில்லை
நிழலை வெட்டுகிற காலம்

*

சித்திரக் கோடு

கவிதையை
மனதை
தனிமையை
பகிர முடிகிறதா
எதைத் தொட்டாலும்
பாழ் செய்கிறார்கள்
பாழ்செய்ய வேண்டி செய்த
எத்தனைகள்
நானின்று சில கவிதைகள் எழுதுவேன்
அறிய முடியாதெனினும்
சொல்லலாம் அல்லவா
சித்திரத்தின் ஒரு விளிம்பை
சித்திரம் என்கிறார்கள்

*

முந்தைய கட்டுரைபிரயாகையில் சங்கமித்தல்
அடுத்த கட்டுரைஅரசியல், கடிதங்கள்