பெண்,அறம்,பொறுப்பு

அன்புள்ள ஜெ

முகநூலில் இதை வாசித்தேன். கார்த்திகேசன் எழுதியது

*

“ஆமா அறம்தான். ஆனா அது அவகிட்ட இல்ல இருந்தது…” என்றார். ‘என்று முடிகிறது ஜெயமோகனின் “அறம்” சிறுகதை.

உண்மைதான் ஒரு குடும்பத்தின் அறமும் அரணும் அக்குலப் பெண்களுடேனே அடங்கியுள்ளது.

அவர்கள் அறம் தவறும் போது அவமானக்களும் அவர்கள் அரண் தவரும்போது பலவீனங்களும் ஏற்படுவது இதனாலேயே.

அது என்னவோ இந்த சிறுகதையை மறுமுறை வாசிக்கத் தொடங்ககியபோதே என கண்கள் குளமாகத் தொடங்ககிவிட்டன..

தமிழின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்று.

Karthi Kesan

*

அறத்தின் பொறுப்பை பெண்கள்மேல் ஏற்றிவிட்டு தப்பித்துக்கொள்ளும் வழி இது என்பது என் எண்ணம். அது பெண்களின் பொறுப்பாக எப்படி ஆகியது?

சவிதா ராகவ்

அறம் ஆங்கில மொழியாக்கம்- அமேசான்

அறம் வாங்க  

அறம் மின்னூல் வாங்க

அன்புள்ள சவிதா,

பெண்ணியம் என்றல்ல, எந்த உரிமை இயக்கமானாலும் இரண்டு அணுகுமுறைகள் உள்ளன. பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், பொறுப்புகளை துறத்தல்.

பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் தரப்புக்கு நேர்நிலைப் பார்வை இருக்கும். ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் இருக்கும், அதில் வெற்றியும் தோல்வியும் இருக்கும். ஆகவே சோர்வுக் காலகட்டங்களும் உண்டு. அவர்களே கற்றுக்கொண்ட பாடங்களும் அவர்களிடம் காணப்படும். ஆகவே அவர்களிடம் எப்போதும் ஒரு யதார்த்தவுணர்வும் அதன் விளைவான நிதானமும் இருக்கும்.

பொறுப்புகளை துறக்கும் தரப்பு என்பது வெறும் எதிர்நிலை மட்டுமே. அதற்குத் தேவை கசப்பும், கோபமும் மட்டுமே. எந்த ஆக்கபூர்வமான திட்டமும் செயலும் இருக்காது. பிறிதொன்றுக்கான எதிர்வினையாகவே அவர்களின் செயல்பாடு இருக்கும். அந்த எதிர்வினையுடன் அவர்களின் பொறுப்பு முடிந்துவிடுவதனால் அவர்களால் தொடர்ச்சியாக, சலிக்காமல் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கமுடியும். இவர்களுக்கும் களத்திற்கும் தொடர்பில்லை. ஆகவே நடைமுறை யதார்த்தம் தெரியாது. இவர்களிடமிருப்பவை எல்லாமே இவர்கள் அங்கிங்கு படித்தவை, விவாதங்களில் கேள்விப்பட்டவை, பெரும்பகுதி ஊகங்கள் – அவ்வளவுதான்.

இந்த அந்தரநடையால் இவர்கள் ஒரு செயற்கையுலகில் வாழ்வார்கள். எனவே அதீத இலட்சியவாதம், அதீத கோட்பாட்டு விளக்கம் செய்வார்கள். எல்லாவற்றையும் விமர்சிக்கும் உரிமையை, அனைத்தையும் மறுக்கும் நிலைபாட்டை எடுத்துக் கொள்வார்கள். சதா கொதித்துக்கொண்டே இருப்பார்கள். அக்கொதிப்பன்றி செயலென ஏதுமிருக்காது. அவற்றை வெளிப்படுத்த ஊடகங்களை நம்பியிருப்பார்கள். ஆகவே பெரும்பாலும் ஊடகவெளியிலேயே வாழ்வார்கள். அதற்கு அப்பால் இவர்களுக்கு இருப்பு இல்லை.

ஆனால் ஊடகங்களில் இருந்துகொண்டிருப்பதனால் இவர்களே அதிகம் கண்ணுக்குப் படுவார்கள். இளமையில் கருத்துலகுக்குள் நுழைபவர்கள் அதிகமாகக் கவனிப்பதும் , பின் தொடர்வதும் இவர்களையே. இவர்கள் வெறும் எதிர்க்குரல்கள் என புரிந்துகொண்டு, ஆக்கபூர்வமான பணியாளர்களை அடையாளம் காண மிகவும் பிந்திவிடுகிறது.

அனேகம் பேருக்கு அதற்குள் இளமைகடந்து, ஆர்வங்கள் வற்றிவிடுகின்றன. பொதுக்களத்தில் ஒரு முகத்தை காட்டினால் மட்டும் போதுமென அவர்களும் எண்ணிவிடுகிறார்கள். ஆகவே அவர்களும் அந்த இரண்டாவது கூட்டத்தில் ஒருவராக ஆகி ஊடகங்களில் கசப்பும் எதிர்ப்புமாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அந்த அணி மட்டும் நாளும் பெருகிக்கொண்டே இருக்கிறது.

முகநூலில் ஒரு பதிவு, நாலைந்து அபிப்பிராயங்கள், நாலைந்து ’ஆமாம் தோழர்’ ஆமோதிப்புகள். முற்போக்கு முகம் அமைந்துவிடுகிறது. அது வாழ்வில் ஒரு சிறிய பகுதி. எஞ்சிய வாழ்க்கை வழக்கம்போல உழைப்பு, நுகர்வு, கேளிக்கை, குடும்ப உறவுகள், வம்புகள் – அவ்வளவுதான். இதுதான் இங்குள்ள சூழல்.

*

நீங்கள் கேட்டகேள்வி இந்த இரண்டாம் தரப்பின் மனநிலை. இதை எங்கிருந்தோ பெற்றுக்கொண்டிருக்கலாம். சரி,நான் இப்படி கேட்கிறேன். ஏன் பெண்கள் அறத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது? அது ஓர் ஆற்றல், ஓர் ஆயுதம் என ஏன் அவர்கள் எண்ணக்கூடாது? அவர்கள் அதன் வழியாக அமையும் அதிகாரத்தை ஏன் அடையக்கூடாது? அறம் என்பது ஒரு சுமை, ஒரு தளை என எவர் சொன்னார்கள்?

உலகிலுள்ள அத்தனை போராட்டங்களும் அறத்தின் பெயராலேயே நிகழ்கின்றன. எந்த ஒரு போராட்டத்திலும் ‘இது நீதியா?’ ‘இது முறையா?’ என்றுதான் அப்போராட்டத் தரப்பு பொதுச்சமூகத்திடம் கேட்கிறது. அந்தக் கேள்விக்கு பொதுச்சமூகத்தின் நீதியுணர்வும் அறவுணர்வும் ‘ஆம், இது நீதியல்ல, முறையல்ல’ என பதில் சொல்லும்போதுதான் அப்போராட்டம் வெல்கிறது.

அறப்போராட்டங்கள் மட்டுமல்ல, ஆயுதப்போராட்டங்களின் வழியும் அதுவே. அத்தனை போராட்டங்களிலும் எழுதப்படும் கட்டுரைகள், பேசப்படும் உரைகள் அனைத்திலும் இருப்பது இந்த அறம் நோக்கிய, நீதி கோரும் குரல் மட்டுமே. ’எங்களுக்கு அறத்திலும் நீதியிலும் நம்பிக்கையில்லை’ என்று சொல்லிக்கொண்டு இன்று வரை உலகில் எந்த ஆயுதப் போராட்டமும் நிகழ்ந்ததில்லை.

கவனியுங்கள், எங்கள் சொந்த ஆற்றலால் மட்டுமே வெல்கிறோம், எங்களுக்குப் பொதுச் சமூக ஆதரவு தேவையில்லை என்றுகூட எந்த தரப்பும் சொன்னதில்லை. அப்படி ஒரு வெற்றி இயல்வதல்ல என தெரியாத எவருமில்லை. அறம், நீதி, மானுடநேயம் என சில விழுமியங்களின் அடிப்படையிலேயே எவரும் பொதுச்சமூகத்தின் ஆதரவைக் கோரமுடியும். அதை அறியாத களப்போராளி எவருமில்லை.

சாதி, இனம், மதம், மொழி என்னும் பேதங்கள் மானுடத்தில் இருந்தாலும் அதைமீறி மனித உள்ளத்தின் ஆழத்தில் உறையும் அறவுணர்வும் நீதியுணர்வும் ஒரு கட்டத்தில் சரியான தரப்புக்கு ஆதரவாக எழும் என்பதை தொடர்ச்சியாக மானுட வரலாறு காட்டுகிறது. உலகிலுள்ள மானுட விடுதலை இயக்கங்கள் அனைத்துமே அவ்வாறுதான் வென்றுள்ளன. கருப்பின மக்களின் விடுதலைக்கு வெள்ளையினம் உட்பட அனைத்து மானுட இனங்களில் இருந்தும் அறச்சார்புடையோரின் குரல் எழுந்ததே காரணம். அனைத்து உதாரணங்களும் காட்டுவது அதையே.

தன்னலம், பேராசை, அதன் விளைவான சுரண்டல், அதற்குரிய காழ்ப்புகள், வன்முறை எல்லாம் மானுடத்தில் வரலாறெங்கும் உள்ளன.  அவையே அடிப்படை விசை. ஆனால் வரலாறெங்கும் அவற்றை அறவுணர்வும் நீதியுணர்வும் வென்றும் வருகிறது. ஆகவே தான் நாம் ஒவ்வொரு ஐம்பதாண்டுகளிலும் அதற்கு முந்தைய காலகட்டத்தை விட அறவுணர்வும் நீதியும் ஓங்கிய காலகட்டத்தை அடைகிறோம். இதை மிக எளிய முறையில் வரலாற்றை வாசித்தாலே அறிய முடியும்.

இதை மறுப்பவர்கள் வரலாற்றுணர்வே அற்றவர்கள். ஒட்டுமொத்த மானுட சிந்தனையை, சிந்தனையாளர்களின் பெரும்பணியை நிராகரிக்கும் எதிர்மனநிலை கொண்டவர்கள். அவர்கள் இருவகை. தங்கள் சொந்த இயலாமையின் விளைவான சோர்வும் கசப்பும் கொண்ட எளிய மனிதர்கள். அறம், ஒழுக்கம் ஆகியவற்றை தன்னலத்திற்காக மீறிவிட்டு அதை நியாயப்படுத்துபவர்கள்.

முகநூல் உலாவி என உங்களை மதிப்பிடுகிறேன். ஒரு நாளில் எழுதப்படும் பதிவுகளில் 99 சதவீதம் நீதி கோரி எழுதப்படுபவை தானே? எது நீதி என வாதிட்டு, எது அறப்பிழை என சுட்டிக்காட்டி, அநீதிக்கு எதிராக அறைகூவி எழுதப்படுபவை அல்லவா எல்லா எழுத்துக்களும்? பெண்ணுரிமைக்காகக் குரலெழுப்புபவர்கள் பெண்கள் மட்டுமா? சிறுபான்மையினருக்காக பேசுபவர்கள் சிறுபான்மையினர் மட்டுமா? அது போலிக்குரலே என்றாலும் அது அறத்தை பாவனையாவது செய்கிறதே. அறம், நீதி, மானுடநேடம் ஆகியவை உட்கிடக்கையாக இல்லாமல் என்னென்ன எழுதப்படுகிறது?

ஆனால் கூடவே ‘அறம், நீதி, மனிதநேயம்லாம் வேஸ்ட்’ என்ற போலிக்குரலும் எழுந்துகொண்டே இருக்கும். அதை எழுப்புபவரே தனக்கு ஒரு சிறு பிரச்சினை என்றால் பொதுவெளிக்கு வந்து, பொதுச்சமூகத்தின் அறவுணர்வை நம்பி, நீதிகேட்பவராகவே இருப்பார்.

ஆகவே அறம், நீதி என்ற உடனே எதிர்மறையாகப் பார்க்கும் ‘சல்லிப்பார்வை’யை சிந்தனை வழியாக கடந்துசெல்லுங்கள். அது ஆற்றல், ஆயுதம். பெரும்போராளிகளின் கையில் இருப்பது. உரிமைப்போர்களை நிகழ்த்துவது. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் முதல் மேதா பட்கர் வரை அதை நம்பியே செயல்பட்டு தங்கள் அதிகாரத்தை அடைந்தார்கள்.

*

இனி அக்கதை பற்றி. அக்கதையில் அவ்வாசகர் அவ்வாறு ஒரு மையக்கருத்தை வாசிக்கிறார். அது அறம் பெண்களுக்குரிய பொறுப்பு என்று சொல்லவில்லை. அறவுணர்வு கொண்ட ஒருவரை அறிமுகம் செய்கிறது, அவ்வளவுதான். அந்த வாசிப்பில் இருந்து உடனடியாக ஒரு எதிர்மறை மனநிலைக்கு, whataboutery (அப்டியானா அது மட்டும் என்ன? நாங்கதான் செய்யணுமா?) மனநிலைக்குச் சென்ற உங்கள் சிந்தனையிலுள்ள குறைபாடென்ன என்று யோசியுங்கள்.

நடைமுறையில் ஒன்றுண்டு, பெண்களே குழந்தைகளுக்கு அணுக்கமானவர்கள். அன்னையரையே குழந்தைகள் முதன்மை உதாரணமாகக் கொள்கின்றன. அது உயிரியல்பு. எல்லா விலங்கும் அன்னையிடமிருந்தே கற்றுக்கொள்கிறது. ஆகவே கூடுதல் பொறுப்பு அன்னைக்கு வருகிறது. குழந்தைகளின் புறவாழ்க்கைக்கும் அகவாழ்க்கைக்கும். பெண்களின் அறச்சார்பு பற்றி அதிகம் பேசப்படுவது அதனால்தான். பெண்கள் கூடுதல் அறச்சார்புடனிருப்பதும் அதனாலேயே.

அக்கூடுதல் பொறுப்பு என்பது கூடுதல் சுமை அல்ல. கூடுதலான அதிகாரமாகவும் ஆகலாம். மொத்தச் சமூகத்தையே அமைக்கும் ,ஆளும் ஆற்றலாகவும் ஆகலாம். அதை ஏன் நீங்கள் யோசிக்கக் கூடாது? அப்பொறுப்பை உடனடியாகத் துறந்து நீங்கள் என்னவாக நிலைகொள்வீர்கள்? எதை வைத்து உரிமைகளை கோரி, அடைவீர்கள்? எதை உங்கள் அதிகாரத்தின் அடிப்படையாகக் கொள்வீர்கள்? வன்முறையையா? சுரண்டலையா? மோசடியையா? சூழ்ச்சியையா?

அறத்தை நீங்கள் ஆயுதமாகக் கொள்ளவில்லை என்றால்; நீங்களும் வன்முறையை, சுரண்டலை, சூழ்ச்சியை ஆயுதமாகக் கையாண்டு அதிகாரத்தை அடைவீர்கள் என்றால் இதுவரை நீங்கள் அடக்கப்படதும் கொடுமைப்படுத்தப்பட்டதும் இயல்பானதே என ஆகிவிடுகிறதே.அதன் பிறகு உங்கள் மீதான எதிர்தாக்குதல்கள் எல்லாமே நியாயமானவை ஆகிவிடுகிறதே.

அறச்சார்பு என்பதே மெய்யான அதிகாரம் நோக்கி கொண்டுசெல்கிறது. என் பார்வையில் அதுவே எல்லாவகை போராட்டங்களிலும் முதன்மை ஆயுதம். நான்  கொண்டாடும் பெண்கள் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாந்தன் முதல் கிணறுகள் தோண்டும் மதுமஞ்சரி வரையிலான பெண்களே. அவர்களே பெண்களை அதிகாரம் நோக்கிச் செலுத்துகிறார்கள்.

*

முகநூல் விவாதங்களை விட்டு யதார்த்தவாழ்வை நேரடியாகப் பார்த்தால் தெரியும். ஆண்கள் மிக இயல்பாக குழந்தைகளை உதறிவிட்டுச் செல்கிறார்கள். பெண்களால் அது பெரும்பாலும் இயல்வதே இல்லை. இங்கே குடிகாரர்கள் பெருகப்பெருக மொத்த குடும்பமே பெண்களால்தான் இன்று பேணப்படுகிறது. மொத்த சமூகமே அவர்களால்தான் உருவாக்கப்படுகிறது.

ஐரோப்பாவில் சென்ற நூறாண்டுகளாக சோட்டா சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் குடும்பத்தை ஒழிப்போம், அதுவே பெண்களுக்கு விடுதலை, குழந்தைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமப்பொறுப்பு என்றெல்லாம் ‘சவுண்டு’ விட்டார்கள். அவர்கள் நினைத்தது பெரும்பாலும் நடந்தது. குடும்ப அமைப்பு சிதைந்ததது. ஆனால் என்ன நடந்தது? ஆண்கள் மகிழ்ச்சியாக குடும்பத்தை விட்டு வெளியேறி விந்து வினியோகம் செய்து வாழ்கிறார்கள். பெண்களால் குழந்தைப்பேறை தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களின் அடிப்படையான மகிழ்ச்சியும் மனநிறைவும் அதில் இருக்கிறது.

பெண்களில் ஒருசாரார் குழந்தைப்பேறை தவிர்த்தால்கூட சமூகக் கட்டமைப்பு அடிவாங்குகிறது. விளைவாக அரசு ஆணுக்கு குழந்தையைப் பேணும் பொறுப்பைச் சட்டமாக்குகிறது. அந்தச் சட்டத்தை ஏமாற்ற ஆண்கள் சட்டபூர்வ உறவில்லாமல் சேர்ந்து வாழும் முறையை தெரிவு செய்கிறார்கள். சென்ற குடும்ப அமைப்பை விட இன்னும் கொடிய குடும்ப அமைப்பில் பெண்கள் சிக்கிக்கொண்டார்கள் – ஒற்றைப்பெற்றோர் குடும்ப அமைப்பு அது. பெண்ணே முழுப்பொறுப்பு அதற்கு. பெண்ணால் அதை தவிர்க்க முடியவில்லை.

ஆகவே எதையும் ஒட்டுமொத்தமான சரித்திரப்பின்னணியில், அன்றாட நடைமுறைப் பின்னணியில் பார்க்கப் பழகுங்கள். இதேபோன்ற ஒற்றைவரிகளைக் கொண்டு சிந்திப்பது சிந்தனையிலுள்ள ஒருவகை பக்கவாதம்.

அறத்தின் பொறுப்பல்ல, எல்லா பொறுப்பும் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது அதிகாரமாகவே ஆகும்.

ஜெ

பி.டி.ஆர், அறம்

அறம், Stories of the True, ஒரு சந்திப்பு

கிருஷ்ணம்மாள், அறம் – சிவராஜ்

அறம் அளிக்கும் நெகிழ்வு ஏன்? -கடிதம்

அறம் ஒரு பதிவு

அறம், ஆங்கில விமர்சனம்

அறம்- கடிதங்கள்

அறம் ஆங்கில மொழியாக்கம்- சுசித்ரா

முந்தைய கட்டுரைபி.எஸ்.ராமையா
அடுத்த கட்டுரைஅறம் ஒரு தொடர்விவாதம்