பனியும் தனிமையும் – கடலூர் சீனு

துணைவன்: மின்னூல் வாங்க

துணைவன் நூல் வாங்க 

இனிய ஜெயம்

விடுதலை படத்துக்குப் பிறகு துணைவன் கதையை இப்போது வாசிக்கையில் கதையின் மாணிக்கத்துக்கு நடிகர் சூரி முகமும், தளவாய்க்கு சேத்தன் முகமும், கார்மேக கோனார்கு விஜய் சேதுபதி முகமும் வந்து விட்டது. மனதுக்குள் கதை முன்னர் எழுப்பி இருந்த காட்சி இப்போது வேறு வடிவம் கொண்டு விட்டது. அடிக்க போறீங்களா அய்யோ பயமா இருக்கே என துவங்கும் கோனார் குணத்தின் அறிமுகம் உண்மையாகவே கோனார் பயந்து ஓடும் தருணத்தில் ஆழம் கொள்கிறது. மனிதனின் அடியாழத்தில் அவனது சாராம்சமாக இருப்பது அதிகாரத்துக்கான, கொல்வதற்கான, விருப்புறுதி என்பதை தனது உரையாடல்கள் வழியே பரிசீலிக்கும் கதை.

வேதாளம் சிறுகதை வாசித்து முடிக்கையில் சடாட்சரம் தாணுலிங்கம் இருவர் மீதும் பரிவே எழுந்தது. ஏண்டா இப்படி ஒரு வாழ்கைக்குள்ள வந்து மாட்டிக்கிட்டீங்க என்று தோன்றியது. இருவரையும் பிணைக்கும் அந்த விலங்கு இறுதியில் வேறு சில அர்த்தங்களை கூட்டிவிட்டது.

ஜடம். தனிப்பட்ட முறையில் என்னை துன்புறுத்தும் கதை இது. இந்த கதை பேசும் தருணம் சாரமற்ற பின்நவீன பிறழ்வு தருணமோ பீபத்சம் எனும் உணர்வை அடிப்படையாக கொண்ட தருணமோ அல்ல. எத்தகைய மனிதன் ஆயினும் சரி அவனுள் இறுதியாக எஞ்சி நிற்கும் அந்த சுடர் அணைந்த பின் எழும் ஆத்மீக இருள் தருணம் அது. சித்தயும் ஜடத்தையும் சமயன்வயம் கொள்ளவைக்கும் அந்த சுடரை சுடலைப்பிள்ளை காலால் எற்றி அணைக்கிறார். பின்னர் எழும் தருணம் அது. பொதுவாக தியான சாதகர்களில் தவறான முறையில் குண்டலினி ஆற்றல் ஏழப் பெற்றவர்கள் மேற்கொள்ளும் இருள்வழி சித்திரங்களை நான் அறிவேன். அப்படி ஒரு தருணம் அது. இந்த தருணத்தை நீங்கள் எழுதியது எனக்கு ஆச்சர்யமே இல்லை. ஆனால் குமரித்துறைவி போன்ற ஒன்றை எழுதிய பிறகு இந்த தருணத்தை எழுதி இருக்கிறீர்கள் என்பதே இதில் நான் அடையும் ஆச்சர்யம்.

பனி கதையில் அவர்களுடன் சேர்ந்து இணக்கமும் பிரிவுமான ஒரு வாழ்வே வாழ்ந்து முடித்து, தலைக்கு மேலாக அந்த பனி மலை சரிந்து மூட காத்திருந்த உணர்வு.

ஒரு தனி இடம் கதையை ஒரு high budjet குறும்படமாக எவரேனும் எடுக்கலாம். அப்படி ஒரு காட்சி மற்றும் நாடகிய தருண இன்பம் கொண்ட கதை. தனது முதுகு எலும்பை யாகத்தில் ஆகுதி ஆக்கி பூமிக்கு மழை கொண்டுவந்த ரிஷியை எழுதியவர்தான் இந்த கதையையும் எழுதி இருக்கிறார்.

மதம் கதை யானைக்கு மதம் பிடிப்பதை போல அப்பாவை மூதேவி பிடித்ததை சித்தரிக்கும் கதை. வெண்முரசில் இதன் விரிவும் ஆழமுமான சித்தரிப்பு நீலனை மூதேவி பிடிப்பதை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்ட பிறகும் தீவிரம் குன்றாமல் இருக்கிறது.

தாஸ்தாவெஸ்கியின் முகம் உங்களது துவக்ககால கதைகளில் ஒன்று. வடிவ ஒருமை குலைவு இருப்பினும் அப்பா கவுண்டர் சீரழியும் அந்த இறுதி தருணத்தை குங்கும நெற்றியும் முகமும் சுடர பார்த்து நிற்கும் கிரிஷ்ணம்மா வலிமையான சித்தரிப்பு.

எண்ண எண்ணக் கசப்பு கூடிக் கூடி வரும் கதை விளக்கு. ஒரு கலைஞனை இப்படி சித்தரிக்க உங்களால் எவ்விதம் முடிந்தது?

இந்த விளக்கு ஜடம் போன்ற கதைகளில் உள்ள இருளும் கசப்பும் என்னுள்ளும் இருக்கிறதா? அதற்கு இந்த கதைகள் வெறுமனே ‘முகம்’ மட்டும்தான் அளிக்கிறதா? இதையெல்லாம் நீங்கள் எழுதிக்’கடந்து’ செல்வது போல வாசகன் இவற்றை வாசித்துக் ‘கடந்து’ செல்ல முடியுமா?  இன்றைய அதிகாலைக் கனவில் நாகேஸ்வர ராவ் பிணமாக செல்லும் பீ வண்டியில் நானும் அமர்ந்திருக்கிறேன். தாள இயலா நாற்றம்.  எங்கேனும் செல்ல வேண்டும். நண்பர்களை எல்லாம் பார்க்க வேண்டும். கொஞ்சம் ஆசுவாசம் கண்ட பிறகு வேறு வாசிப்புக்குள் நுழைய வேண்டும்

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஇலக்கியவாதிகள் நல்ல கணவர்கள் இல்லையா?
அடுத்த கட்டுரைகாடும் நாடும் -கடிதம்