”என்னமோ மோனெட்டோ மானெட்டோ, படம் வரையற ஒருத்தனுக்குக்கு வெட்டைச்சீக்கு இருந்திச்சில்ல? அவந்தானே?”
சில ஆண்டுகளுக்கு முன் நான், வேதசகாயகுமார், அ.கா.பெருமாள் ஆகியோர் ஓரு மறைந்த தமிழறிஞரின் சொந்த ஊருக்கு, அவரைப்பற்றிய தரவுகள் சேகரிப்பதற்காகச் சென்றிருந்தோம். வாய்மொழியில் இருந்து வாழ்க்கைத்துளிகளை தொட்டுச்சேர்ப்பது நோக்கம். கதைகளிலெல்லாம் அப்படித்தானே செய்கிறார்கள்.
அறிஞர் வாழ்ந்து மறைந்து நாற்பதாண்டுகளே ஆகியிருந்தன. பேரறிஞர். ஐம்பது நூல்களுக்குமேல் எழுதியவர். திருவனந்தபுரம் மகாராஜாவின் பட்டும் வளையும் பரிசாகப்பெற்றவர். புகழ்பெற்ற பேச்சாளர், பாடகர். ஆகவே ஒன்றும் சிரமமில்லை.
குளித்து, விபூதிபூசி, காலையிலேயே கிளம்பிவிட்டோம். ஊருக்கு வெளியே ஓட்டலில் ரசவடை சாப்பிட்டோம். (க.நா.சு. ரசவடை சாப்பிட்ட புகழ் கொண்ட ஓட்டல்) ஊருக்குள் புகுந்து விசாரிக்கலானோம். அறிஞரின் பழைய கட்டிடம் சிதிலமானாலும் அப்படியே இருந்தது. ஆனால் அந்த தெருவிலேயே எவருக்கும் அவர் பெயர் தெரியவில்லை. சுற்றிச்சுற்றி வந்தோம். நூறுவயதான கிழம் ஒன்று அருகே இருப்பதாகச் சொன்னார்கள். அவரை தேடிச்சென்றோம்.
அவருக்கு 90 தான். தன் வயது நூறு என அவர் நம்பினார். செவி கூர்மை, கண் மங்கல். ஒருகாலத்தில் நல்ல பாடகர். பொற்கொல்லர். பூணூல் போட்டு, விபூதி பட்டைகளுடன் மங்கலமாக இருந்தார். எங்களை வரவேற்று, வேறு எவரோ என நம்பி மேற்கொண்டு பேசினார். எங்களை விளக்க நாங்கள் முயலவில்லை. செய்திதானே முக்கியம்?
”சத்தியமா லூசி, அவ சொன்ன அந்த பொறணிய அப்டியே நானே கூட ஒப்பிச்சுக்கிட முடியாதுன்னா பாரேன்”
ஆனால் நாங்கள் கேட்கக் கேட்க அவர் திகைத்துக்கொண்டே வந்தார். “சைக்கிள் கடை வச்சிருந்தாரே அவரா?” “. ”ஆ! மத்தவரு, மாட்டுத்தரகு செய்யுதவரு!” மறுத்து மறுத்து குறிப்பிட்ட நபரை விசாரித்தோம். ஒன்றும் பேரவில்லை. அப்படி ஒருவரை கிழத்துக்கு நினைவே இல்லை.
நாங்கள் செய்தி சேகரிப்பதை அறிந்து பொடிவாங்க காசு கிடைக்குமென நம்பி இன்னொரு கிழம் வந்துசேர்ந்தது. அவர் மரவேலைக்காரர். இருவரும் வாடாபோடா நண்பர்கள். பொடிபோட்டுக் கொண்டார். அவர் மூக்கு பொடியால் பரிணாம மாற்றம் அடைந்திருந்தது. நாங்கள் விசாரித்ததும் இவர் சட்டென்று பற்றிக்கொண்டார். “ஆ, மத்தவரு. கீழத்தெரு வேலம்மையை வச்சிருந்தவரு. அதாம்லே, ஆசுபத்திரியிலே வேலைசெய்யுதாள்லா கிருஷ்ணம்மை, ஏலே, மோருகடை நாராயணனுக்க தொடுப்பு, அவளுக்க அம்மைலே”
முதல்கிழவரும் அதிலிருந்து நினைவு பற்றிக்கொண்டு “ஹெஹெஹெ” என சிரித்தார்.
“ஆமா, நல்லா தெரியுமே. சரிகை மேல்துண்டை களுத்திலே சுத்தி போடுவாரே. வில்லுவண்டி வச்சிருந்தார். நல்ல பாண்டிமயிலக்காள ரெண்டு உண்டு. கம்பராமாயணம் கந்தபுராணம் பேசுவாரு. வீணைய வச்சுகிட்டு தேவாரமெல்லாம் பாடுவாரு” என ஆரம்பித்தார்.
“ஏலே மோணையா, அது தும்புராலே” என்ற இரண்டாம் கிழவர் எங்களிடம் “அறிவில்லாப் பயலாக்கும். தும்புரு ஏளு கட்டையிலே எடுக்கும்லா? நாதசரம் அமுங்கிப் போயிடுமே! அதெல்லாம் அந்தக்காலம்!” என்றார்.
எப்போதுமே நான் இதை கண்டுவருகிறேன். இவர்கள் ஈக்கள். எதிலும் அழுகிய பகுதி மட்டுமே இவர்களுக்கு ஆர்வமுடையது. இல்லையேல் அழுக வைப்பார்கள். அதைச்சுற்றிப் பறந்துகொண்டே இருப்பார்கள். அங்கே முட்டைபோட்டு பெருகி அடுத்த சந்ததியை உருவாக்குகிறார்கள். குறைசொல்லக்கூடாது, இவர்கள் மிக உயிர்த்துடிப்பானவர்கள். இவர்களின் செயல்வேகமும், நினைவாற்றலும் சாதாரணமாகக் காணக்கிடைப்பதில்லை.
இவர்களை நாம் ரசிக்கிறோம். ஏனென்றால் ரசிக்கவைப்பது இவர்களுக்கு அவசியம், இல்லையேல் இவர்களுக்கு இருப்பே சாத்தியமில்லை. ரசிக்கவைக்க என்னென்ன தேவையோ எல்லாவற்றையும் கற்றிருப்பார்கள். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்கள். நினைவுக் களஞ்சியமாக இருப்பார்கள். தகவல்களை குவிப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை நம்மிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் புகழ்வார்கள். நம்மை ஆமோதிப்பார்கள். கூடவே நம் பலவீனமான பகுதியில் முட்டைபோட்டுவிட்டு போய்விடுவார்கள்.
வம்பர்களின் மிகச்சிறந்த பணி என்பது நம்மையறியாமலேயே நம்மையும் வம்பர்களாக ஆக்கிவிடுவதுதான். வம்பு ஏன் அவ்வளவு கவர்கிறது? நமக்கு நம் இருண்ட பகுதிகள் தெரியும். ஆகவே அதைக்கொண்டு இன்னொருவரின் இருண்ட பகுதியை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இருளில் இருந்து இருளுக்கான ஒரு தொடர்புப்பாதையை இந்த ஈக்கள் உருவாக்குகின்றன. இணைத்து இணைத்து நாமறிந்த கலையிலக்கியம், அறிவியக்கம், அரசியல், மதம் என அனைத்தாலுமான உலகுக்குச் சமானமான ஒரு நிழல் உலகை உருவாக்கிவிடுகிறார்கள்.
”நம்பிச் சொல்லுங்க. நீங்க இங்க சொல்ற வம்பு ஒண்ணுமே வெளியே போகாது”
இந்த வம்பின் சுவைக்காக மட்டுமே அரசியல், சினிமா, கிரிக்கெட் பேசுபவர்கள் உண்டு. அலுவலகங்களில் வம்புகளை மட்டுமே உருவாக்கி அதில் வாழ்பவர்கள் உண்டு. பெரும்பாலும் இவர்கள் எல்லாவற்றிலும் ‘ஓரமாக’ நிற்பவர்கள். எதையுமே சாதிக்காதவர்கள். பலர் முயன்று தோற்றவர்கள். ஆகவே ஆளுமை அற்றவர்கள். ஒரு கூட்டத்தில் அவர்களை நாம் கவனிக்கவே மாட்டோம். பொதுவாக தோற்றம், கல்வி, பின்னணி காரணமாக தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். ஆனால் மிகக்கூரிய பொதுப்புத்தி கொண்டவர்கள். எந்நேரமும் முழு விழிப்பு நிலையில் இருப்பவர்கள்.
அவர்களால் வம்பு இன்றி வாழமுடியாது. ஏனென்றால் வம்பில்தான் அவர்களின் முழுப்புத்தியும் கூர்மை கொள்கிறது. அவர்கள் அப்போதுதான் வாழ்கிறார்கள். ஏன் திருடுகிறாய் என்ற கேள்விக்கு “because I am good at it” என்று எல்லா திருடர்களும் பதில் சொல்வார்கள். அதைப்போலத்தான். பொதுவாக, பெண்களின் வம்புப் பழக்கத்தையே அதிகமாக புனைவுகளில் சுட்டிக்காட்டுவோம். மந்தரை அதற்கு மிகச்சிறந்த ‘ஆர்க்கிடைப்’. ஆனால் பெண்களை விட ஆண்களில்தான் அதில் தொழில்முறை ‘மாஸ்டர்கள்’ உண்டு.
சினிமாவில் சென்ற தலைமுறையின் புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர் ஒருவரை திகைப்புடனும் அச்சத்துடனும் அவர் மறைந்து இன்றும் பேசிக்கொள்கிறார்கள். நாடகத்தில் இருந்து வந்தவர், சிறிய உடற்குறை கொண்டவர். எவருடனும் எவருக்கும் மனப்பிளவை உருவாக்கிவிடுவார். எதையும் வம்பாக ஆக்கிவிடுவார்.
நானறிந்த நடிகர் தோளைக் குலுக்கியபடிச் சொன்னார் “அய்யய்யோ, அவர் அதிலே ஒரு மாஸ்டர்ங்க…. இளையராஜா இசையிலே எப்டி ஒரு மேதையோ அதை மாதிரி….முழுநேரமும் அதிலேதான் மனசு இருக்கும். ஆனா நாம அவர விரும்புவோம். நம்ம கிட்ட அவர் பேசுறப்ப அய்யய்யோ என்ன பண்ணப்போறாரோன்னு திக்கு திக்குன்னும் இருக்கும். ஆனா சிரிச்சுக்கிட்டே பேசிட்டும் இருப்போம். யப்பா… அவரு ஒரு ஃபினாமினன்!”
இலக்கியத்திலும் அவ்வகையோர் உண்டு. சிற்றிதழ் காலகட்டத்திலேயே சிற்றிதழ்களை வம்புக்காகவே வாசிப்பவர்கள் எப்படியும் நூறுபேர் இருந்தனர். இவர்கள் ஒழுங்காகச் சந்தா கட்டிவிடுவார்கள் என்பதனால் சிற்றிதழ்கள் இவர்களுக்குத் தீனி போட்டே ஆகவேண்டும். எல்லாச் சிற்றிதழிலும் நாலில் ஒரு பங்கு வம்புகளாக இருக்கும், இவர்களை உத்தேசித்து.
இவர்கள் பெரும்பாலும் பெரிய அளவில் அமர்ந்து வாசிக்க மாட்டார்கள். ஆனால் எல்லா ஆசிரியர்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். எல்லா படைப்புகளையும் அறிந்திருப்பார்கள். ஆசிரியர்கள், நூல்கள் சார்ந்து கொஞ்சம் நுணுக்கமான கருத்துக்களைச் சொல்வார்கள். சூழலை சில ஆண்டுகள் உன்னிப்பாகக் கவனிப்பவர்களால் அப்படி கருத்துக்களை எடுத்து கோத்து வைத்துக்கொள்ள முடியும். எவர் சொல்வது நுட்பமான கருத்து என்று தெரிந்துகொள்ளும் சூதானம் இருந்தாலே போதும். அரிதாகச் சிலருக்கு உண்மையிலேயே சில எழுத்தாளர்கள் மேல் ஆர்வமும் அவர்கள் மேல் வாசிப்பும் இருக்கும்.
விளைவாக இவர்கள் பொதுச்சூழலில் ஓர் இலக்கியச் சுவைஞராக திகழ்வதற்கான எல்லா தகுதிகளையும் கொண்டிருப்பார்கள். இலக்கியத்தை நன்கறிந்தவர்கள் மற்றும் கூரிய வாசகர்களால் மட்டுமே இவர்களை மேலோட்டமான வாசிப்பு கொண்டவர்கள் என அடையாளம்காண முடியும். நீண்டகாலம் இலக்கியச் சூழலிலே இருந்தால், ‘இப்படித்தான் ஒருவாட்டி லா.ச.ராகிட்டே பேசிட்டிருந்தப்போ…’ என்று சொல்லும் தகுதி வந்துவிடுகிறது.
இவர்களுக்கு சமூகவலைத் தளங்கள் மிகப்பெரிய ஊடகம். முன்பெல்லாம் டீக்கடைகள், மதுக்கடைகள், அரட்டையறைகள்தான். முகநூலின் கட்டமைப்பே இந்த வம்புகளுக்கு மிக உகந்தது. இருநூறு வார்த்தைக் குறிப்புகளாக எழுதலாம். அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மறைமுகமாக அது சென்று சேர்வதும் உறுதி. முகநூலில் உலவுபவர்கள் பெரும்பாலும் சலித்துப்போய் பொழுதுபோக்க நினைப்பவர்கள். அவர்களுக்கான வாசிப்புகள் இவை. துளிச்செய்திகள், நினைவுகள், அரட்டைகள், கூடவே கலக்கப்பட்ட வம்புகள்.
ஆனால் இவர்கள் ஓயாமல் பேசி இலக்கியத்தை நிலைநிறுத்துகிறார்கள் என்பதும் உண்மைதான். பல ஆசிரியர்கள், நூல்களை இவர்கள் நினைவுகூர்ந்துகொண்டும் இருக்கிறார்கள். இயற்கையில் ஈக்களுக்கும் ஒரு பங்களிப்பு உண்டு.